இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஹீரோயின், வில்லி, கவர்ச்சி, பக்தி ரோல் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும் ஒரு நடிகையைக் கூறுங்கள் என்றால், சற்றும் யோசிக்காமல் ஒருவரை கைகாட்டி விடலாம். ஆரம்பத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சற்றும் தளராத தனது விடாமுயற்சியால் முன்னேறி இன்றுவரை, அதாவது 40 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து நம் நினைவில் நீங்கா இடம்பெற்றிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக, ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி, ‘பாகுபலி’படத்தில் ராஜமாதா சிவகாமி, ‘அம்மன்’ படத்தில் அம்மனாகவே, போன்ற கதாபாத்திரங்களை யாராலும் மறக்கமுடியாது. சமீபத்தில் வெளியாகி மெஹா ஹிட் அடித்திருக்கிற ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


`வெள்ளை மனசு’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்

திரையுலகில் ரம்யா கிருஷ்ணன்

14 வயதில் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ‘வெள்ளைமனசு’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். அந்தப் படம் பெரிதளவில் வெற்றிபெறாவிட்டாலும், ரம்யா கிருஷ்ணனை திரையுலகினருக்கு அடையாளப்படுத்தி காட்டியது. அதன்பிறகு பட வாய்ப்புகள் பல வந்தபோதிலும், ஆழம் அது ஆழம் இல்ல என்ற ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இவரை சாமானியரின் மத்தியில் கொண்டுசென்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரம்பகால நினைவலைகளை பகிர்ந்த ரம்யா கிருஷ்ணன், ”வெள்ளை மனசு படத்தில் நான் நடித்தபோது, நான் சிறந்த நடிகையாக இல்லை.

1988-ஆம் ஆண்டு, நான் நடித்த முதல் வசந்தம் படத்தை என்னுடைய அம்மா, இந்த நடிப்பை வைத்துக்கொண்டு எப்படி இவ்வளவு காலம் நடிகையாக நீடிக்கிறாய்? என்று கேட்டார். அந்த சமயத்தில் நான் முன்னணி நடிகையாக இல்லை. அந்த சமயத்தில் நான் நடித்த தெலுங்கு படங்களும்கூட எனக்கு கைகொடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.


ஆட்டமா தேரோட்டமா பாடலில்...

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில்தான் இவருக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில், ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு வந்தது. முதலில் இந்த பாடலுக்கு ஆட மறுப்பு தெரிவித்திருந்தாலும், முழுக்கதையை கேட்டபிறகே அதில் ஆட ஒத்துக்கொண்டாராம். அதுவே சினிமாத்துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் அப்போது நினைக்கவில்லை என்கிறார். ’அம்மன்’ ஹிட் படங்களை தமிழில் கொடுத்தபிறகு, தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு சில படங்கள் வெற்றியைக் கொடுத்தன.

ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமில்லாமல், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த ரம்யாவுக்கு படையப்பாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாயிருக்கும் என்று கூறியதே சூப்பர் ஸ்டார் தானாம். நீலாம்பரி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனை புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது. அழகு, திமிர், மிடுக்கு என அனைத்தும் கலந்த, சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது நீலாம்பரிதான். இதை ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன்

படையப்பா நெகட்டிவ் ரோல் குறித்து...

”முதலில் நெகட்டிவ் ரோல் என்றதும் நான் யோசித்தேன். ஆனால், அதற்கு முன்பு நான் திரையுலகில் பணியாற்றிய 15 ஆண்டுகளைவிட, நீலாம்பரியின் புகழ் எனக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. சில நேரங்களில் சில படங்களுக்கு நோ சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியாமல் போனதுண்டு. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த படங்கள் என்னை மேலே கொண்டுசென்றன. குறிப்பாக, நீலாம்பரி கேரக்டரில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதேபோலதான் பாகுபலியும்.

எனது மகன் பிறந்தபிறகு, அவனுக்கு 6 வயதாக இருக்கும்போது, முதன்முதலாக அவனைவிட்டுவிட்டு பாகுபலிக்காக பிரயாணம் செய்தேன். அந்தப் படம் இவ்வளவு பெரிய படமாக அமையுமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார் ரம்யா கிருஷ்ணன். மேலும், நீலாம்பரி ரோலுக்கு தன்னை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வேறு நடிகையைத்தான் அந்த ரோலுக்கு படத்தரப்பினர் யோசித்திருந்தார்களாம். ஆனால் தெலுங்கில் ஏற்கனவே நடித்திருந்த நெகட்டிவ் ரோலை வைத்தே தனக்கு நீலாம்பரி வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.


மல்டி ரோல்களில் நடித்த தருணங்கள்

மேலும், ”கிளாமர், அம்மன், ஐட்டம் பாடல், வில்லி, கால் கேர்ள் கதாபாத்திரம் என என்னுடைய கேரியரில் இசிஜி கிராப் போன்று மேடுபள்ளங்கள் இருக்கின்றன. ரம்யா கிருஷ்ணன் என்றால் இந்த ரோல்தான் என்று ஒரு வட்டத்திற்கு நான் அடங்கிவிடவில்லை. அதனாலேயே எனக்கு பலதரப்பட்ட ரோல்கள் கிடைத்தன” என்கிறார் பெருமையுடன்.

அன்றும் இன்றும் ரஜினியுடன்...

படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ரம்யா. அப்போது பார்த்த ரஜினிக்கும், படையப்பா ரஜினிக்கும், ஜெயிலர் ரஜினிக்குமான வித்தியாசம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த ரம்யா, ”எனர்ஜி, உற்சாகம் என அனைத்துமே அப்போது இருந்ததைவிட இப்போது அதிகமாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். எனவே அவருடனான ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக கழிக்கிறேன். படையப்பா படம் நடித்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதன்பிறகு, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், `வயசானாலும் உன்னுடைய ஸ்டைலும், அழகும் உன்னவிட்டு போகல’ என்ற டயலாக்கை சொல்லாமல் வீட்டிற்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இருக்கும்போது ஜெயிலர் படத்தின்போது அதனை சொல்லாமல் எப்படி?” என்கிறார் அவருக்கே உரித்தான கனீர் சிரிப்புடன்.


`ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியுடன்

ஜெயிலர் படத்தில் நீலாம்பரியாக இல்லாவிட்டாலும், விஜியாக, முத்துவேல் பாண்டியனின் அன்பான மனைவியாக, ஒரு நல்ல அம்மாவாக, பாசமான பாட்டியாக நடித்திருக்கிறார். மேலும், நெல்சன் வரும்வரை யாரும் தன்னை படையப்பாவுடன் ஜோடி சேரும்படி அணுகவில்லை எனவும், தற்போது அந்த வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி எனவும், இந்த நினைவுகள் வாழ்நாள் முழுக்க சேமித்துவைக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் சிலாகிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

Updated On 28 Aug 2023 7:02 PM GMT
ராணி

ராணி

Next Story