இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு கலைஞனின் வாழ்க்கை என்பது வெறும் திரையில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல. அது நிஜ வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், பெற்ற வெற்றிகள் என பலவற்றின் தொகுப்பே ஆகும். அப்படிப்பட்ட பல அனுபவங்களையும் அதன் மூலம் பல திறமைகளையும் வளர்த்துக் கொண்ட ஒரு பன்முகக் கலைஞர்தான் சுஹாசினி மணிரத்னம். நடிகையாக மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், பின்னணி குரல் கலைஞர் எனப் பல பரிமாணங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் தனது முத்திரையை பதித்ததுள்ள இவர் அதில் பல சாதனைகளையும் செய்து காட்டியுள்ளார். குறிப்பாக தனது தனித்துவமான நடிப்பாலும், சமூக அக்கறையுள்ள செயல்பாடுகளாலும் பலருக்கும் உத்வேகம் அளித்து வரும் சுஹாசினி, இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகில் ஒரு புரட்சி நாயகியாக அவர் கடந்து வந்த பாதையை விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

திசை மாற்றிய கமல்

சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகையான சுஹாசினி, ஆகஸ்ட் 15, 1961 அன்று பரமக்குடியில், பிரபலமான வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்த சாருஹாசன் மற்றும் கோமளம் தம்பதியரின் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு சுபாஷினி, நந்தினி என இரண்டு அக்காக்கள் உள்ளனர். ஆண் வாரிசு வேண்டும் என்று விரும்பியிருந்த குடும்பத்தினருக்கு, சுஹாசினி பெண்ணாகப் பிறந்ததால், ஆரம்பத்தில் சில உறவினர்கள் வருத்தத்துடன் இருந்தனர். ஆனால், அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, அவர் மீது அளவற்ற அன்பையும், நம்பிக்கையையும் பொழிந்தனர். இந்த ஆழமான நம்பிக்கையும், அரவணைப்பும்தான் பிற்காலத்தில் சுஹாசினியை தைரியமான, புரட்சிகரமான பெண்ணாக மாற்றியது. சிறுவயது முதலே, ஆண் குழந்தைக்குரிய பயிற்சிகளான கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளை கற்ற சுஹாசினி, ஒருமுறை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவரது தந்தை சாருஹாசனுக்கு காயம் ஏற்படவே குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.


'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' படத்தின்போது கமலின் அண்ணன் மகள் என அடையாளம் காணப்பட்ட சுஹாசினி

அப்போதுதான் அவரது சித்தப்பாவான கமல்ஹாசன், சுஹாசினியை சென்னைக்கு அழைத்துச் சென்று படிப்பதற்கு உதவினார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படிக்கும்போது, தான், கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார். ஒருமுறை, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கல்லூரியில் நடந்தபோது, கமல்ஹாசன் சுஹாசினியை அவரது செல்லப் பெயரான "சுச்சு" என அழைத்தார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிய வந்தது. சுஹாசினியின் பெற்றோருக்கு அவரை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ, விஞ்ஞானியாகவோ உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், கமல்ஹாசனின் வழிகாட்டுதலின் பேரில், சுஹாசினி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்து, தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

நடிகையாக அறிமுகம்


‘நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் மோகன் மற்றும் பிரதாப் போத்தனுடன் சுஹாசினி

கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படி, திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்த சுஹாசினி, அப்போது புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான அசோக்குமாரின் உதவியாளராக ‘ஜானி’ போன்ற பல படங்களில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் மகேந்திரன் தனது ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் கதாநாயகியாக வேறு ஒரு பெண்ணை தேர்வு செய்து வைத்திருந்த போது, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சுஹாசினியை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார். திடீரென்று கிடைத்த வாய்ப்புதான் என்றாலும், முதல் படம் என்ற தயக்கமே இல்லாமல் அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சுஹாசினி. குறிப்பாக இளையராஜாவின் மயக்கும் இசையில் உருவான ‘பருவமே புதிய பாடல்’ என்ற பாடலில் மோகனுடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை. இந்தப் படம் வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. மேலும், சுஹாசினியின் தனித்துவமான கதாபாத்திர தேர்வுகள் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து, அவரது நடிப்பு பயணத்தில் அவரை யாருடைய சாயலும் இல்லாத ஒரு தனித்துவமான நடிகையாக உயர்த்தியது.

தனித்துவமான கதாபாத்திரங்கள்

‘நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகரன் இயக்கத்தில் உருவான 'பாலைவனச் சோலை' திரைப்படம், சுஹாசினியின் திரை வாழ்வில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில், ஐந்து நண்பர்களும் ஒரு நாயகியும் கொண்ட கதைக்களத்தில், ஆண் - பெண் நட்பின் ஆழத்தையும், புரிதலையும் மிக அழகாகப் பிரதிபலித்தார் சுஹாசினி. குறிப்பாக படம் முழுவதும் மென்மையான காட்டன் புடவைகளுடனும், முகத்தில் மெல்லிய புன்னகையும் சோகமும் கலந்த பாவனைகளுடனும் அவர் வலம் வந்தது ரசிகர்களின் மனதை தொட்டது. இதில் வரும் ‘’மேகமே மேகமே’’ பாடல் சுஹாசினின் கண்ணீர் துளிகளை இன்றும் நினைவுபடுத்துவதோடு, இந்தப் படத்தின் வெற்றி அவரை ரசிகர்கள் மத்தியில் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கும் அளவுக்கு உயர்த்தியது. பின்னர் இதே காலகட்டத்தில், இயக்குநர் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர்களான மனோபாலா மற்றும் மணிவண்ணன் ஆகியோரின் முதல் படங்களான 'ஆகாய கங்கை' மற்றும் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படங்களில் கதாநாயகியாக நடித்தார்.


'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தில் அப்பாவியான கிராமத்து பெண்ணாக...

இதில் குறிப்பாக, மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவந்த 'கோபுரங்கள் சாய்வதில்லை' திரைப்படம், நடிகை சுஹாசினிக்கு மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை படிப்பாளி, புத்திசாலி என நகரத்து கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுஹாசினி, இப்படத்தில் 'அருக்காணி' எனும் வெள்ளந்தி கிராமத்துப் பெண்ணாக நடித்து, தனது நடிப்புத் திறனின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். அதிலும் சாதாரணமான ஒரு கிராமத்துப் பெண்ணின் உணர்வுகளையும், ஏமாற்றங்களையும், துயரங்களையும் அருக்காணி கதாபாத்திரத்தின் மூலம் அநாயசமாக சுஹாசினி வெளிப்படுத்திய விதம் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டது. அதேபோல் ஒரு பெண்ணின் தியாகத்தையும், உளவியல் ரீதியான போராட்டங்களையும் மிக நுட்பமாக வெளிக்காட்டிய விதமும் பலரையும் கலங்க வைத்தது. குறிப்பாக, தனது கணவனின் மனமாற்றத்திற்காக பாடுபடும் அருக்காணி, ஒரு கட்டத்தில் தன் கணவனையே விட்டுக்கொடுக்கும் நிலை வரும்போது, சுஹாசினி காட்டிய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு ரசிகர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே இந்தக் கதாபாத்திரம் சுஹாசினிக்கு ஒரு நடிகையாக மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்று தந்தது.

‘சிந்து பைரவி’ கொடுத்த அங்கீகாரம்

தொடர்ந்து மாறுபட்ட கதை களங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்த சுஹாசினி, அறிமுக இயக்குநர்கள் மட்டுமின்றி, அனுபவமிக்க இயக்குநர்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அந்த வகையில், சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான 'லாட்டரி டிக்கெட்', ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ சகோதரிகள்' மற்றும் தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'தாய்வீடு' போன்ற திரைப்படங்கள் அவருக்கு ஓரளவு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. எனினும், இந்தப் படங்கள் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்திற்கு கிடைத்த அளவுக்கு பாராட்டைப் பெற்று தரவில்லை. இந்தச் சமயத்தில்தான், அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'சிந்து பைரவி' திரைப்படம் அமைந்தது.


'சிந்து பைரவி' படத்தில் இருவேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள்

இந்தப் படத்தில், சுஹாசினி ஏற்று நடித்த 'சிந்து' கதாபாத்திரம், ஒரு நாவல் பாத்திரத்தைப் போல் நம் மனதில் ஆழமாகப் பதிந்தது. பாரம்பரிய இசைக்கலைஞரின் தோழி, நவீன சிந்தனையுள்ள ஒரு புரட்சிக்காரி எனப் பல பரிமாணங்களைக் கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்திருந்த விதம் பலரால் பெரிதும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக உதட்டில் சிரிப்பையும் கண்களில் கண்ணீரையும் ஒருசேர வரவழைத்துக் கொண்டு இப்படத்தில் சுஹாசினி பேசிய வசனங்கள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. இந்த அழுத்தமான நடிப்புக்காகவே அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அப்போது கிடைத்தது. இதேபோல், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்திலும், ஒரு செவிலியராக குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணாக, திருமண முறிவு தோல்வியிலிருந்து மீள முயற்சிப்பவளாக, புதிய காதலை ஏற்க தயங்குபவளாக எனப் பல பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய சுஹாசினி மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். மேலும், மனோபாலாவின் 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', ஃபாசிலின் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' போன்ற படங்களும் இவரது நடிப்புக்கு சில சான்றுகளாக அமைந்தன.

சுஹாசினியின் பல பரிமாணங்கள்

நடிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் சுஹாசினி மணிரத்னம் தனது திறமைகளை வெளிப்படுத்தி ஒரு பன்முகக் கலைஞராக திகழ்கிறார். இவர், மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா', 'இருவர்', மற்றும் 'ராவணன்' போன்ற திரைப்படங்களில் ஒரு எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் எழுதிய 'பெண்' என்ற வலைத் தொடரும் இவரின் எழுத்துத் திறமைக்குச் சிறந்த சான்றாகும். ஒரு இயக்குநராகவும் முத்திரை பதித்த சுஹாசினி, தன் தங்கை அனுஹாசனை வைத்து 'இந்திரா' திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமூகத்தில் நிலவும் சாதிப் பாகுபாடுகள் மற்றும் அநீதிகளைக் கூர்மையாக வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் சமூகப் பிரச்சனைகளை அணுகிய விதத்திற்காக பரவலாக அப்போது பாராட்டப்பட்டது.


இந்திரா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான சுஹாசினி

இது தவிர ஏற்கனவே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றிருந்த சுஹாசினி துவக்க காலத்தில் சில படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், சில படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் டப்பிங் கலைஞராக, நடிகை ஷோபனா, ஹீரா, மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகளுக்கு ‘தளபதி’, ‘திருடா திருடா’ மற்றும் ‘உயிரே’ போன்ற திரைப்படங்களில் குரல் கொடுத்துள்ள சுஹாசினி அதிலும் தனித்துவம் கண்டுள்ளார். இப்படி திரைப்படம் தாண்டி, சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சுஹாசினி, பாதிக்கப்பட்ட மற்றும் தனிமையில் வாழும் பெண்களுக்காக "நாம்" என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பல பெண்களுக்கு உந்துசக்தியாகவும், ஆதரவு தளமாகவும் விளங்குகிறது. இவை தவிர, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வரும் சுஹாசினி அதிலும் முத்திரை பதித்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

சுஹாசினி, தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தை ஆகஸ்ட் 26, 1988 அன்று திருமணம் செய்து கொண்டார். பலரும் இதனை காதல் திருமணம் என்று எண்ணியிருந்தாலும், இது முழுக்க முழுக்க ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கித்தான் சுஹாசினி இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தாராம். இந்தத் தம்பதிக்கு, 1992-ஆம் ஆண்டு நந்தன் என்ற மகன் பிறந்தார். நந்தன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், ஸ்பானிஷ் மற்றும் அரசியல் போன்ற துறைகளைப் பயின்றார். தனது பெற்றோர் போல சினிமா துறையில் அவருக்கு ஆர்வம் இல்லை என்றாலும், தனது தாயின் சமூக சேவைப் பணிகளில் அவருக்குத் துணையாக இருந்து வருகிறார்.


கணவர் மணிரத்னத்துடன் சுஹாசினி

திறமையும் உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வரும் சுஹாசினி, இன்று வரை தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு புதிய பரிமாணத்தை காட்டி வருகிறார். இதனாலேயே, திரைத்துறையின் ஒரு புரட்சி நாயகியாக, பலருக்கும் உந்து சக்தியாகத் திகழும் சுஹாசினி மணிரத்னம் இன்றும் அதே இளமையோடும் உத்வேகத்தோடும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 15 அன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது கலைப் பயணம் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தட்டும்.

Updated On 12 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story