இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆர்.கே.செல்வமணியின் அறிமுகம் என்ற அடையாளத்தோடு ‘பொன் விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக காலடி எடுத்து வைத்தவர்தான் நடிகர் ரஞ்சித். ‘சிந்துநதி பூ’, ‘பாரதி கண்ணம்மா’, ‘மறுமலர்ச்சி’, ‘நினைவிருக்கும் வரை’, ‘பாண்டவர் பூமி’ என பல படங்களில் என்றுமே மறக்க முடியாத கதாபாத்திர வேடங்களை ஏற்று நம்மையெல்லாம் தன் எதார்த்தமான நடிப்பால் கட்டிப்போட்டவர். ஹீரோ தொடங்கி வில்லன், குணசித்திர நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களோடு சினிமாவில் வலம்வந்த அதேவேளையில் அரசியலிலும் பயணித்த இவர், தற்போது சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த 'பீஷ்மர்' படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் ஒரு நடிகராக மட்டுமே பயணித்து வந்தவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘கவுண்டம்பாளையம்’ என்றொரு படத்தை எடுத்துள்ளார். அந்த வகையில், இப்பட வெளியீட்டையொட்டி ராணி நேயர்களுக்காக அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் தனது சினிமா அனுபவம் குறித்த பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவரின் நேர்காணலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ரஞ்சித் என்பவர் யார்? அவருக்கான சினிமா அனுபவம் எங்கிருந்து தொடங்கியது?

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நான் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டேன். நான் ஒரே பிள்ளை என்பதால் வீட்டில் மிகவும் செல்லம். அப்பாவிடம் சென்று ஃபெயில் ஆன விஷயத்தை சொல்ல பயமாக இருந்தது. அதனால் அவரிடம் உண்மையை மறைத்து தேர்ச்சி பெற்றுவிட்டதாக சொல்லிவிட்டேன். அவரும் அதை நம்பி சந்தோஷத்தில் ஆடு வெட்டி ஊரில் உள்ளவர்களுக்கு விருந்தெல்லாம் வைத்தார். இந்த நிகழ்வு எனக்கு மிகப்பெரிய குற்றவுணர்வை ஏற்படுத்தியது. காரணம் அப்பா தொடங்கி உறவினர்கள் அனைவரும், மேற்கொண்டு என்ன படிக்க போகிறாய் என்று கேட்க ஆரம்பித்ததுதான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதாவது செய்து நாம் சொன்ன பொய்யை உண்மை ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என்னுடைய நண்பர் ரமேஷ், வா சென்னை வரை போய் வரலாம் என்று அழைத்து வந்தார். நானும் வீட்டில் அனுமதி பெற்று அவருடன் ரயிலில் வரும்போது எதேச்சையாக ஒருவர் படித்துக்கொண்டிருந்த பத்திரிகை எனது கண்ணில் பட்டது. அதனை எடுத்து பார்த்தபோது, அதில் நடிப்பு பயிற்சி கல்லூரி என்ற தலைப்புடன் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் 12-ஆம் வகுப்பு ஃபெயில் ஆகி இருந்தால் கூட பரவாயில்லை, 10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றும் போடப்பட்டிருந்தது. எனக்கு ஒரே சந்தோஷம். இது நமக்கான கல்லூரி. அப்பா, அம்மாவிடம் சொன்ன ஃபெயிலில் இருந்து தப்பித்துவிடலாம் என்று அந்த கல்லூரிக்கு நேராக சென்று விசாரித்து சேர்ந்துவிட்டேன். பிறகு ஊருக்கு சென்று அப்பாவிடம் நான் சென்னையில் பெரிய கல்லூரியில் சேர்ந்துவிட்டேன் என்று சொன்னதும் மறுபடியும் ஒரு கிடா விருந்தை நடத்தினார். இப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.


இயக்குநர் ஆர்.கே.செல்வமணி - 'பொன் விலங்கு' படத்தில் நடிகர் ரஞ்சித்

கல்லூரியில் வந்து சேர்ந்த பிறகும்கூட மற்ற மாணவர்கள் அவரவர் படிப்பு தொடர்பானவற்றில் கவனம் செலுத்துவார்கள். நான் ஏதோ கடமைக்கு வருவதுபோல் வந்து போவேன். இப்படியான நேரத்தில்தான் எனது நண்பரான முருகன் என்பவர் என்னை ஃபோட்டோ எடுத்தார். அந்த ஃபோட்டோவை பிரிண்ட் போட்டு எனக்கு கொடுக்கும்போது மாற்றி, நடிகர் பிரசாந்த் போட்டோவை என்னிடமும், எனது போட்டோவை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடமும் கொடுத்துவிட்டார். அப்படி மாறிய ஃபோட்டோவால் எனக்கு கிடைத்ததுதான் ‘பொன்விலங்கு’ திரைப்பட வாய்ப்பு. வாழ்க்கையில் நான் நடிகனாவேன் என்பதை துளியும் நினைத்து பார்க்காத நேரத்தில் என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர் ஆர்.கே.செல்வமணி. எனக்கு நடிப்பே வராது என்று சொல்லும்போது கூட, இல்லை இல்லை இதில் நீதான் நடிக்க வேண்டும். உன்னை நான் ஹீரோவாக தேர்வு செய்துவிட்டேன் என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது. எல்லோரும் சினிமாவுக்கு வருதற்கு முன்புதான் போராடுவார்கள். நான் சினிமாவுக்கு வந்து இரண்டு, மூன்று படங்கள் நடித்த பிறகுதான் போராட ஆரம்பித்தேன். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிய விஷயத்தை தொடங்கும்போது என் குருநாதரான ஆர்.கே.செல்வமணியை குத்துவிளக்கு ஏற்றி வைக்கக்கூட அழைப்பது இல்லை. காரணம் அவர் அறிமுகப்படுத்திய பையனான நான் இன்னும் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் அவருக்கு பிடிக்காது என்பதால்தான். ஒருநாள் பெரிதாக சாதித்து விட்டு அவரை அழைத்து பெருமை படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற பெரிய ஹிட் படங்களை ஆர்.கே .செல்வமணி கொடுத்திருந்த நேரத்தில், அவரது தயாரிப்பில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


'கேப்டன் பிரபாகரன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகாந்த் - நேர்காணலின்போது நடிகர் ரஞ்சித்

ஆர்.கே.செல்வமணி தயாரிப்பில் நடித்தது, எனக்கு மிகப் பெருமையான விஷயம். முதலில் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரும், எனது நண்பருமான பன்னீர்செல்வம்தான் ஷாட் வைத்தார். என்னை நடிக்க கூட சொல்லவில்லை, ஃபோட்டோ பிரேமிலேயே பார்த்துவிட்டு செல்வமணியிடம் பையன் சூப்பராக இருக்கிறான். இவனையே ஓகே செய்து விடலாம் என்று சொன்னார். அதை என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த சமயத்தில் பெரிய ஹீரோக்கள் நடிப்பதாக இருந்ததை ஓரம் தள்ளிவிட்டுதான் என்னை இதில் ஹீரோவாக தேர்ந்தெடுத்திருந்தார் செல்வமணி. ஆனால், இதில் என்னை போடக்கூடாது. எவ்வளவோ பெரிய ஹீரோக்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்து நடிக்க வைத்தால் நல்ல பிசினஸ் ஆகும். போயும் போயும் இவனை ஹீரோவாக போட வேண்டுமா? என்று பேசியவர்கள் எல்லாம் இன்றும் திரைத்துறையில் இருக்கிறார்கள். அன்று அவர் நினைத்திருந்தால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து மிகப்பெரிய பிசினஸ் படமாக எடுத்திருக்க முடியும். ஆனால், அவர் நேர்மையாக இருந்ததால்தான் கதைக்கு இந்த பையன் தேவை என்று அவர் தைரியமாக ஃபோட்டோ எடுத்தார். இது மிகப்பெரிய நன்றி கடன் எனக்கு. அவர் இல்லாவிட்டால், இந்த ரஞ்சித் இன்று இங்கு இல்லை. இன்னொரு அம்மா மாதிரிதான் எனக்கு அவர். இதுவரை அவரை பற்றி நான் எங்கும் பேசியது இல்லை. இதுதான் முதல் முறை.

இந்த படத்தில் நடிகர் ரகுமான், ரம்யா கிருஷ்ணன், சிவரஞ்சனி என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அவர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அன்றைக்கு நடிகர் ரகுமானும் மிகப்பெரிய ஹீரோ. எந்தவித ஈகோவும் இல்லாமல் நடிப்பதற்கு நிறைய ஸ்பேஸ் தருவார். சிவரஞ்சனி தங்கையாகவும், ரம்யா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாகவும் நடித்தனர். இருவருமே அன்று மிகப்பெரிய நட்சத்திரங்கள். எனக்கு ரம்யாவுடன் காதல் காட்சிகளில் நடிப்பது எல்லாம் சிரமமாக இருந்தது. முதல் நாளே ஏவிஎம் ஸ்டுடியோவில் பாடல் காட்சி ஒன்றில் நடிக்க வைத்து விட்டார்கள். நான் புதிது என்பதால் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது என்று தெரியாமல் வெட்கத்தில் என் கன்னம் எல்லாம் சிவந்துவிட்டது. கையெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது. உடனே புலியூர் சரோஜா என்னை பார்த்து என்னடா பொம்பள புள்ள மாதிரி வெட்கப்படுற என்றெல்லாம் கிண்டலடிதார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய நிஜ பெயர் செந்தில் குமார். செல்வமணிதான் பெயரை மாற்றி ரஞ்சித் என்று வைத்தார். அந்த பெயரை வைப்பதற்கு லிவிங்ஸ்டன் அவர்களும் மிக முக்கிய காரணம். அது ஒரு பசுமையான காலம். என்னுடைய முதல் பட அனுபவங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது.


'பொன் விலங்கு' திரைப்படத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில்

உங்களின் முதல் படம் வரும்பொழுது வீட்டில் அப்பா, அம்மா இருவரின் உணர்வும் எப்படி இருந்தது?

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். முதல் படப்பிடிப்பு பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. செல்வமணி சாருடைய பட பூஜை என்றாலே அது மிக பிரம்மாண்டமாக நடக்கும். அந்த நிகழ்வில் விஜயகாந்த் துவங்கி பெரிய பெரிய விஐபி-க்கள் கலந்துகொண்டார்கள். அப்போது எனது அப்பாவும் வந்திருந்து பூஜையில் கலந்துகொண்டார். நான் மேடையில் நிற்கும்போது, ஒரு மரத்திற்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் கவனித்து ரசித்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் எனக்கு ஒரு வரம். இந்த படத்துக்கு பிறகுதான் இரண்டாவதாக பல வெற்றிப்படங்களை அப்போது கொடுத்திருந்த கே.டி.குஞ்சுமோன் சார் தயாரிப்பில், எனது நண்பரான செந்தமிழன் இயக்கத்தில் ‘சிந்துநதி பூ’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன்.

‘சிந்துநதி பூ’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

உதவி இயக்குநராக இருந்த ராமமூர்த்தி என்பவர் எனது ‘பொன் விலங்கு’ பட போஸ்டரை பார்த்துவிட்டு இயக்குநர் செந்தமிழனிடம் சென்று சார் நான் ஒரு போஸ்டர் பார்த்தேன். அவன் குண்டாக இருக்கிறான். முக தோற்றமும் பொருத்தமாக தெரிகிறது. எனக்கென்னவோ அவன் இந்த கதைக்கு சரியாக இருப்பான் எனக் கூற அவரும் அந்த போஸ்டரை பார்த்து ‘சிந்துநதி பூ’ படத்திற்கு கதாநாயகனாக என்னை போட முடிவு செய்துவிட்டார். அதனை அப்படத்தின் தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோனிடம் சொல்ல, அவரோ முதலில் வேண்டவே வேண்டாம். புதுமுகங்களை எத்தனை பேருக்கு தெரியும். எத்தனையோ பெரிய ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மறுத்துவிட்டாராம். ஆனால், இயக்குநர் செந்தமிழன் பிடிவாதமாக இருக்கவே, ஒரு கட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி குஞ்சுமோனும் ஒப்புக்கொண்டாராம். அதன்பிறகு என்னை அவர்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து பேசி இப்படத்தில் நடிக்க வைத்தனர். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு நண்பராக அறிமுகமான வாசு விக்ரம், இயக்குநர் செந்தமிழன் நீதான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு மாதம் காத்திருந்து நடிக்க வைத்திருக்கிறார் என்று கூறினார். அதை கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அந்த செந்தமிழன்தான் இன்று நான் எடுத்திருக்கும் கவுண்டம்பாளையம் படத்திற்கு அசோஸியேட்டாக பணிபுரிந்திருக்கிறார். அதுமட்டுமின்றி 5 பாடல்களையும் எழுதியுள்ளார். அந்த அளவுக்கு நான் நன்றியையும், பழைய விஷயங்களையும் மறக்க மாட்டேன் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். 'சிந்துநதி பூ' வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு என்னை வேண்டாம் என்று சொன்ன அதே குஞ்சுமோன் சார் எனக்காக தமிழ்நாடு முழுவதும் பெரிய பெரிய கட்டவுட் வைக்க சொல்லி உத்தரவிட்டார்.


‘சிந்துநதி பூ’ படத்தில் மற்றும் தற்போதைய தோற்றம்

ஹீரோவாக வெற்றி கொடுத்த நீங்கள் உடனே அடுத்தபடியாக நெகட்டிவ் ரோலில் நடித்தீர்கள். அப்படி நெகட்டிவ் ரோலில் நீங்கள் நடித்த மறுமலர்ச்சி கதை உங்களை தேடி எப்படி வந்தது?

நானும், ‘மறுமலர்ச்சி’ படத்தின் இயக்குநர் பாரதியும் நல்ல நண்பர்கள். இந்த கதை குறித்து இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். இந்த படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், சரியான தயாரிப்பாளர் அமையவில்லை. ஒருநாள் பாரதி, தயாரிப்பாளர் ஹென்ரியிடம் கதை சொல்ல சென்று ஓகே ஆகிவிட்டது. அதே வேளையில் நான் ஹென்ரி தயாரிப்பில் சேரனுடைய ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் நடித்திருந்த போது அவருக்கு என்மேல் ஒரு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அப்படத்தில் நடித்தவர்களுக்கு சம்பள பிரச்சினை வந்தபோது எல்லோரும் ஹென்ரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். நான் மட்டும் அந்த லிஸ்டில் இல்லை. அதனால், என்னுடைய சம்பளத்தை கொடுப்பதற்காக என்னை அழைத்து வரச்சொல்லி இருந்தார். நானும் சென்றிருந்தேன். அப்போது பாரதியும் அங்கு இருந்ததால் நான் ஒருவரை உங்கள் படத்துக்கு தேர்வு செய்திருக்கிறேன் என்று கூறியிருந்தேன் இல்லையா அது இவர்தான். அந்த நெகட்டிவ் ரோலுக்கான கதையை அவரிடம் கூறுங்கள் என்று சொன்னதும், இயக்குநர் பாரதிக்கும் சரி, எனக்கும் சரி ஒரே சந்தோஷம். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. மீண்டும் புதிதாக கேட்பதுபோல் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படித்தான் ‘மறுமலர்ச்சி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. என்னால் மறக்க முடியாத ஒரு படம். இந்த படத்தின் வெற்றி தெரிந்து வேலை செய்ததால் இன்றும் என்னுடைய வாழ்க்கையில் மிகமுக்கிய படமாக ‘மறுமலர்ச்சி’ இருந்து வருகிறது.

‘மறுமலர்ச்சி’ படத்தில் நடிகர் மம்முட்டியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


மம்முட்டிக்கு என்னை மிகவும் பிடிக்கும் - நடிகர் ரஞ்சித்

மிகப்பெரிய நடிகர். அவருடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். இப்படத்தில் நானும் அவரும் அண்ணன், தம்பி போல் ஆகிவிட்டோம். நான் நடிப்பதை பார்த்துக்கொண்டே இருப்பார். குறிப்பாக சிலை உடைக்கும் காட்சியில் நடிக்கும் போதெல்லாம் என் நடிப்பை பார்த்துவிட்டு பிரமாதமாக நடிக்கிறாய். வாழ்த்துகள் என்று கூறினார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால், என்னுடன் நிறைய நேரம் செலவழிப்பார். பக்குவமான ஒரு மனிதர். அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நட்பின் அடிப்படையில்தான் ‘மறுமலர்ச்சி’ படம் வெளிவந்து 10-வருடத்திற்கு பிறகு என்னை அழைத்து அவருடைய மலையாளப் படமான ராஜமாணிக்கத்தில் நடிக்க வைத்தார். மிக முக்கிய வில்லனாக நான் அங்கு நடித்த அப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடம்வரை ஓடி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நம்மை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வதற்கு சில படங்கள் கைகொடுக்கும். அதில் இந்த படமும் மிக முக்கியமான ஒன்று.

Updated On 15 July 2024 6:08 PM GMT
ராணி

ராணி

Next Story