இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சர்வதேச கைக்கூலி என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு, தான் கைக்கூலி இல்லை, தினக்கூலி என பதில் அளித்துள்ள KPY பாலாவின் கருத்துகள், மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா வழக்கு... ரோபோ சங்கர் மரணம்... உண்மையில் பாலிவுட்டில் நடிக்க ரூ.530 கோடிக்கு சிட்னி ஸ்வீனி ஒப்பந்தம் செய்யப்பட்டாரா? உள்ளிட்ட சில முக்கிய சினிமா செய்திகளை இந்த வாரம் சினி பைட்ஸ் பகுதியில் பார்ப்போம்.


மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் மனு...

கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா திருமண சர்ச்சை. முதல் மனைவி இருக்கையில், அவரை விவாகரத்து செய்யாமல் ஜாய் கிரிசில்டாவை மாதம்பட்டி திருமணம் செய்ததற்கு ஆதாரமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனிடையே இந்த திருமணம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா. மேலும் தற்போது தன்னிடம் பேச ரங்கராஜ் மறுத்து வருவதாகவும், தனது குழந்தைக்கு பதில் தெரிந்தாக வேண்டும் எனவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணல் மூலம் ரங்கராஜும் தானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் வெளியாவதற்கு முன்பு ஜாய் கிரிசில்டாவை மட்டும் குற்றம்சாட்டி வந்த இணையவாசிகள் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜையும் வறுத்தெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பின் மௌனம் கலைத்த ரங்கராஜ், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு விசாரணையின்போது ஜாய் கிரிசில்டாவால் தனக்கு 12 நாட்களில் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கான ஆதாரத்தை சமர்பிக்கக் கோரி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்திய அணியின் ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

ஜெர்சி ஸ்பான்சரான அப்பல்லோ டயர்ஸ்!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதனால் இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம்11 விலகியது. இந்தச் சூழலில் புதிய ஸ்பான்சரை தேடும் பணியில் பிசிசிஐ இருந்தது. இதனிடையே ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியானது, ஸ்பான்சர் இல்லாமலே விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அப்பல்லோ டயர்ஸ், ஜேகே டயர்ஸ், பிர்லா ஓபஸ் போன்ற நிறுவனங்களுக்கு இடையில் பலத்த போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு போட்டிக்கு ரூ. 4.5 கோடி என்ற மதிப்பில், ஏலம் கேட்ட அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தெரு நாய்கள் பிரச்சனை குறித்து காட்டமாக பேசிய அம்பிகா

‘நாய்களிடமும் சாதி’ - நடிகை அம்பிகா ஆதங்கம்!

இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அண்மை நாட்களாக தமிழ்நாட்டில் தெருநாய் பிரச்சனை என்பது பட்டிமன்றம் வைத்து பேசும் அளவிற்கு வாக்குவாதமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதம்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அம்பிகா, நாங்கள் யாரும் நாய்களுக்கு விரோதி அல்ல. எங்களுக்கும் அவைகளை பிடிக்கும். ஆனால் ஒரு குழந்தையின் உயிரா? நாயா? என்று பார்த்தால் எனக்கு மனிதர்கள்தான் முக்கியம் என தெரிவித்தார். மேலும் நாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் குறித்து காட்டமாக விமர்சித்த அவர், நாய்களில் கூட சாதி பார்க்கப்படுவதாக கூறினார். வீட்டில் இருக்கும் ஒரு நாய் வெளியில் சென்று தெருவில் இருக்கும் ஒரு நாயிடம் கடிவாங்கிவிட்டால், “அறிவிருக்கா? தெருநாய்கிட்ட கடிவாங்கிட்டு வந்துருக்க” என அதை திட்டிவிட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். நாய்களிடமும் சாதி பார்க்கிறார்கள். நாய் பிரியர்கள் இரட்டை மனநிலையில் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.


தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த பாலா

“நான் சர்வதேச கைக்கூலியா?” - பாலா வேதனை!

கடந்த சில நாட்களாகவே கேபிஒய் பாலா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்திற்கும் மக்கள் பதில் சொல்வார்கள் எனக்கூறி பாலா அமைதியாக இருந்துவந்தார். இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் பாலா. “என் மீது ஏன் இவ்வளவு வன்மம்? நானும் இந்த சர்ச்சை இப்போ முடிந்துவிடும். அப்போ முடிந்துவிடும் என பார்த்தேன். ஆனால், சர்ச்சை முடிவதாகவே தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அதற்குள் இந்தளவு சர்ச்சைகள் கிளம்பும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஒரு ஆம்புலன்ஸின் நம்பர் பிளேட்டால் பிரச்சனை பண்றாங்க.

ஆனால், அந்த ஆம்புலன்ஸால் எத்தனை பேர் பயன் பெற்றார்கள் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை. பாலா ஒரு சர்வதேச கைக்கூலி என்று சொல்றாங்க. நான் சர்வதேச கைக்கூலி இல்லை, நான் ஒரு தினக்கூலி. வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறுகிறார்கள். யார் தருவார்கள்? நான் உழைத்த பணத்தில்தான் அனைத்தையும் செய்கிறேன். அதுபோல மருத்துவமனை கட்டுவதற்கும் விமர்சிக்கிறார்கள். இதுபோல விமர்சனங்கள் வந்தால் உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவ முன்வரமாட்டார்கள். எனக்கு யூடியூப் கிடையாது. ஆனால் என்னைப்பற்றி யூடியூபில் தப்பு தப்பாக பேசி பணம் சம்பாதிக்கிறார்கள். பிரச்சனை இருக்குறதுனாலத்தான் நல்லது பண்றோம். ஆனால், நல்லது பண்றதே ஒரு பிரச்சனை என்றால், என்னத்த சொல்றதுன்னு தெரியல. விமர்சனத்தை பார்த்து நான் ஓடமாட்டேன், எனக்குன்னு மக்கள் இருக்காங்க. அவங்களுக்காக நான் ஓடிக்கொண்டு தான் இருப்பேன்” என பாலா தெரிவித்துள்ளார்.


ஜனநாயகன் பூஜையின்போது வினோத் - விஜய்

“பக்கா farewell” - ஜனநாயகன் அப்டேட் கொடுத்த வினோத்!

கடந்த 2024-ல் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ஜனநாயகன் படம்தான் விஜய்யின் கடைசிப்படம். இதனால் விஜய் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படம் தொடர்பான புது அப்டேட் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குநர் வினோத். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வினோத், “விஜய் சாருக்கு ஒரு பக்கா farewell படம். மாஸ், கமர்சியல், ஆக்ஷன்.. இந்த மூன்றையும் எதிர்பார்த்து வாங்க. ஒரு complete meals ஆக இருக்கும்" என தெரிவித்தார். வினோத்தின் இந்த பேச்சால் விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி

பாலிவுட்டில் நடிக்க சிட்னி ஸ்வீனிக்கு ரூ.530 கோடி?

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தனது குளியல் நீரில் சோப்பு தயாரிக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உலகத்தையே திரும்பி பாரக்க செய்தார். இந்நிலையில் பாலிவுட்டை உலகெங்கும் கொண்டு செல்வதற்காக தயாரிப்பு நிறுவனம் ஒன்று சிட்னி ஸ்வீனியை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் சிட்னி நடிக்க ரூ.530 கோடி ஒப்பந்தத்துடன் அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் இந்த ப்ராஜெக்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. பல படங்களில் தான் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், பாலிவுட்டில் நடிக்க யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பாலிவுட்டில் நடிக்க சிட்னி ஸ்வீனி ஒப்புக்கொண்டால், திரைத்துரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சிட்னி ஸ்வீனி உருவெடுப்பார்.


அனுராக் காஷ்யப் - விராட் கோலி

கோலியின் பயோபிக்கை இயக்க மறுத்த காஷ்யப்!

இந்தியா மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களை கொண்டவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கோலியின் வாழ்க்கை வரலாறு படமாகப்போவதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், வாய்ப்பு கிடைத்தாலும், கோலியின் பயோபிக்கை இயக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அனுராக் காஷ்யப், “விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்க விரும்பவில்லை. ஏனெனில் பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஒரு ஹீரோவாக உள்ளார். ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமெனில் கடினமான விஷயத்தை, ஒரு நபரின் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பேன்” என தெரிவித்தார்.


மறைந்த நடிகர் ரோபோ சங்கர்

பிருந்தாவன் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம்...

ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி, நடிப்பு என தன்னுள் இருந்த திறமைகளால் மக்களை மகிழ்வித்தவர் நடிகர் ரோபோ சங்கர். தனது மிமிக்ரி திறமைமூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரோபோ சங்கர், தொடர்ந்து படங்களிலும் நடித்தார். அஜித், தனுஷ், ஜெயம்ரவி என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இளைத்து போயிருந்தார். பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிவந்த ரோபோ சங்கர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செப்.18 ம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு திரைத்துறையினர், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல், பிருந்தாவன் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Updated On 23 Sept 2025 10:31 AM IST
ராணி

ராணி

Next Story