இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் 1980களில் இருந்து தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்ப ஆரம்பமாகின. முதலில் மேடை நாடகங்கள் தொடர்களாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிலையில், 1986களில் ஏவிஎம் மற்றும் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனங்களால் குடும்பம் சார்ந்த கதைக்களத்துடன் குறுந்தொடர்கள் தயாரித்து ஒளிபரப்பப்பட்டன. இந்த தொடர்கள் எல்லாம் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் புகழ்பெற்றவை. ஒரு குறிப்பிட்ட காலம்வரை இந்த தொலைக்காட்சி தொடர்கள் எல்லாம் ஒப்பனைகள், பிரம்மாண்டம் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தன. ஆனால் தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொடர்கள், படங்களை போல பிரம்மாண்டமாக எடுக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஹிந்தி சீரியல்களின் ஆதிக்கம் எனக் கூறுகிறார் நடிகர் ராஜ்கமல். இதுதொடர்பாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.


ரஜினிகாந்த், விஜய் பிடிக்கும் - ராஜ்கமல்

எம்.ஜி.ஆர், சிவாஜி வரிசையில் மிகவும் பிடித்த நடிகர்?

ரஜினி சார் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் உடனடியாக மண்டைக்குள் ஏறிவிடும். ஒரு படத்தில் புகை மற்றும் குடிப்பழக்கம் வேண்டாம் என்று கூறினார். நான் அதை செய்ததே இல்லை. லிங்கா படத்திற்காக எனக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். என்னுடைய ஷுட்டிங் பகுதி முடிந்துவிட்டது. ரவிக்குமார் சார், “நேற்றே நீ போயிருக்க வேண்டுமே. ஏன் போகவில்லை” எனக் கேட்டார். ரஜினி சாரை பார்க்க வேண்டும் எனக்கூறினேன். “எதுக்குடா, அதான் நாலு நாள் அவர்கூட இருந்தியே” எனக்கூறினார். சம்பளம் கொடுத்தார்கள், அவர் கையால் வாங்கணும் எனக்கூறினேன். சூப்பர் டா அப்போ காத்திரு எனக் கூறிவிட்டார். அன்றைக்கு ரஜினி சார் ஷுட்டிங்கில் இல்லை. அடுத்த நாள் காலையில் 8.30 மணிக்கு ரஜினி சார் வந்தபோது, ரவிக்குமார் சார் போட்டு கொடுத்துவிட்டார். “ஊருக்கு போக மாட்டேன் என்கிறான் சார், உங்கள பாத்துட்டுதான் போவானாம்” என. “என்ன என்ன ராஜ்கமல்? என்ன?” என ரஜினி சார் கேட்டார். இல்ல சார் சம்பளம். “சம்பளம் வாங்கிட்டீங்க குட் குட்” என்றார். இல்ல சார் உங்க கையால வாங்கணும் எனக் கூறினேன். “என் கையிலா” எனக்கூறி சட்டப்பையை தொட்டுப்பார்த்தார். நூறுரூபாய் வைத்திருந்தார். அய்யோ என்னிடம் இப்ப நூறு ரூபாய்தான் இருக்கிறது என்றார். நான் உடனே, அந்த 25 ஆயிரத்தை பிரித்து அவர் கையில் கொடுத்தேன். ரஜினி சார், அவர் கையில் இருந்த நூறு ரூபாயை, அந்த 25 ஆயிரத்துடன் வைத்துக் கொடுத்தார். அந்த காசை இன்றும் எனது வால்பேப்பரில் வைத்துள்ளேன். தூங்கும்போதும், எழும்போது அவரை பார்த்துதான் எழுவேன். அவரை பின்தொடர்ந்து இன்றைய தலைமுறையில் நடிகர் விஜய்யின் ரசிகன் நான்.


நாடக காட்சி ஒன்றில் நடிகர் ராஜ்கமல்

விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

ரசிகராக பார்க்கும்போது வருத்தத்திற்குரிய விஷயம்தான். ஏனென்றால் விதவிதமாக அவர் படம் செய்ய வேண்டும், அதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ரசிகனாக வருத்தம்தான். ஒரு குடிமகனாக பார்க்கும்போது நல்லது. இப்போது இருக்கும் தலைவர்கள் நன்றாகத்தான் செய்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களைவிட இவர் நன்றாக செய்வாரா? என்று எதிர்பார்க்கக்கூடிய ஒரு சாதாரண குடிமகன் நான். ரசிகனாக பார்க்கும்போது ஏமாற்றம். குடிமகனாக பார்க்கும்போது எதிர்பார்ப்பு.

வளரும் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை?

நமக்கு என்ன மாடு கொடுக்கிறார்களோ அதை சிறப்பாக மேய்க்க வேண்டும். கிடைக்கும் மாட்டை விட்டுவிட்டு, பறக்கும் மாடுகளுக்கு பலரும் ஆசைப்படுகின்றனர். அடுத்து அந்த மாட்டைக் குறைகூறுவது. கிடைத்ததை சிறப்பாக செய்யுங்கள். அதை நன்றாக செய்ய செய்ய வாழ்க்கை நன்றாக இருக்கும். இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படாதீர்கள். நேரம் வரும்போது கிடைப்பது கிடைக்கும். கிடைப்பதை சிறப்பாக செய்யுங்கள்.


கசடதபற படத்தில் நடித்துள்ள ராஜ்கமல்

படங்களைபோல சீரியல்கள் எடுப்பது ஆரோக்கியமானதா?

கண்டிப்பாக நல்ல வளர்ச்சிதான். இவை எல்லாம் ஹிந்தி சீரியல்களின் தாக்கம்தான். ஏனென்றால் முன்னரெல்லாம் தமிழில் ஏவிஎம்போல அழகாக ஒரு வீட்டில் எடுப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அதை உடைத்து வெளியே வருகிறார்கள். ஏனெனில் இப்போதெல்லாம் ஹிந்தி சீரியல்களின் டப்பிங் சீரியல்கள் நிறைய வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு நாங்கள் இருக்கும்போது, எதற்கு டப்பிங் சீரியல் என்பது போல உள்ளது. மற்றொன்று நிறைய பேர் ஹிந்தியில் நிறைய போட்டி கொடுக்கிறார்கள். அப்படி ஒப்பீடு வரும்போது அந்த முறைகளை நாம் அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். அதனால் சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் வைக்கிறார்கள்.

தற்போது நான் நடிக்கும் ஒரு சீரியலில் கூட திருவிழா செட்டப்பிற்காக 300 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வைத்திருந்தார்கள். அதை பார்த்த என்னுடைய சினிமா மேனேஜர், என்னப்பா சினிமா போல் எடுக்கிறீர்கள் என்றார். இதை நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். அதிலும் ஜெய்சங்கர் வீட்டு பிள்ளையாக பார்க்கும்போது, அந்த 300 குடும்பங்களுக்கு அன்று வேலை கிடைக்கிறது அல்லவா. மறுபடியும் எங்கள் சினிமா வளர்கிறது அல்லவா. அன்னைக்கு ரூ.2000 அவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் வீட்டில் நல்ல சாப்பாடு கிட்டைக்கும் இல்லையா. அதனால் அந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சிதான்.

இந்த கதாபாத்திரத்தில் நான் இன்னும் நடிக்கவில்லையே என்று தோன்றியுள்ளதா?

இல்லை. ஓரளவு எல்லா கதாபாத்திரங்களிலும் மனநிறைவு அடைந்துகொண்டுதான் இருக்கிறேன். கசடதபற படத்தில் ஒரு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்தார்கள். வெங்கட்பிரபுவும், சுப்பு பஞ்சவர்ணாஜலமும்தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். கே.பி. சாரிடமும் ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பெரும்பாலும் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டுதான் வருகிறேன். எது கிடைக்கிறதோ அதை செய்வேன். கனவு கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை, கிடைப்பதை செய்வேன்.


மேல்நாட்டு மருமகன் படத்தில் நடிகர் ராஜ்கமல், நடிகை ஆண்ட்ரீனா

உங்களை அதிகம் உற்சாகப்படுத்துபவர்கள்?

கண்ணாடியை தினமும் காலையில் பார்த்தால் உற்சாகமாகிவிடுவேன். என்னை நானே பார்த்து உற்சாகப் படுத்திக்கொள்வேன்.

உங்கள் நடிப்பில் ஏதாவது திருத்தம் சொல்வார்களா லதாராவ்?

ரொமாண்டிக் சீன்கள் எல்லாம் சரியாக செய்யவில்லை என சொல்வார்கள். என்னிடம் நன்றாக ரொமான்ஸ் செய்கிறீர்கள். அங்கு செய்வதில்லை எனக்கூறுவார்கள். சண்டிக்குதிரை படத்தின்போதெல்லாம், எனக்கும் அப்படத்தின் ஹீரோயினுக்கும் இடையிலான சீன்களை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் எனக் கூறுவார்கள். மனைவியாக அல்ல சக நடிகையாக, ரசிகையாக இதை நன்றாக செய்திருக்கலாம் என்பது போன்ற ஆரோக்கியமான கருத்துக்களை பேசிக்கொள்வோம். இன்னொரு பெண்ணுடன் ரொமான்ஸ் செய்வது நடிப்பு என்பதை புரிந்துகொண்டதால்தான் இத்தனை வருடங்களை கடந்துவந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ் தெரியாத வெளிநாட்டு நடிகையுடன் எப்படி ‘மேல்நாட்டு மருமகன்’ படம்?

அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் எம்.எஸ். ஷாஜஹான்தான். அவர்தான் நடிகை ஆண்ட்ரினாவையும், என்னையும் ஒருவாரம் உட்கார வைத்து நண்பர்களாக பேசிக்கொள்ள சொன்னார். ஏனெனில் அந்தப் பெண்ணிற்கு துளிக்கூட தமிழ் வராது. நமக்கு ஆங்கிலம் என்பது டிவிங்கிள் டிவிங்கிள் ரைம்போலத்தான். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் பேசி ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். முழு பிரச்சனைகளையும், பொறுப்புகளையும் ஷாஜஹான் சார்தான் கையாண்டார். ஆண்ட்ரினாவை டயலாக் உச்சரிக்க வைப்பது, கையாள்வது என அனைத்தும் அவர்தான். அதற்கு பின் நல்ல நண்பர்களானோம். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

மக்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

செய்யும் தொழிலே தெய்வம். எந்த வேலையாக இருந்தாலும், தொழிலை மதித்து நடந்தோமானால் இறைவன் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். நன்றாக கவனித்துக் கொள்வார், நல்ல முன்னேற்றம் வரும் என்பது என்னுடைய ஒரு சிறிய ஆலோசனை. அறிவுரை எல்லாம் கிடையாது. ஏனெனில் பலரும் செய்யும் வேலை, பிடிக்காமல் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களை பார்த்தால், நாம் செய்யும் வேலை எவ்வளவு பெரியது என்பது அவர்களுக்கு தெரியவரும். நமக்கு வாய்ப்பு வரும். ஆனால் அதற்கு நாம் விதையை போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.


ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளும் நடிகர் ராஜ்கமல்

நீங்கள் பயங்கர கடவுள் பக்தி கொண்டவர் என கேள்விப்பட்டோம்?

எனக்கு பிடித்த சாமி என்றால் முதல் சாமி சினிமா. இரண்டாவது சாமி என் அம்மா. இந்த இரண்டு மாக்களும்தான் எனக்கு பிடிக்கும். எல்லோரும் என்னை பக்திமான், ஆன்மிகவாதி எனக் கூறுகிறார்கள். ஆனால் சத்தியமாக அப்படி கிடையாது. என்ன ஆனது என்றால்? அம்மா நிறைய கோயில்களுக்கு செல்வார். அவரை நான் அழைத்துச்செல்வேன். ஒருகட்டத்தில் வயதானவர்களுக்கு இயல்பாக வரக்கூடிய கால்வலி போன்ற பிரச்சனைகள் அம்மாவுக்கு வந்ததால், அவரால் கோயிலுக்கு போகமுடியவில்லை. அப்போது, அம்மா செல்லவேண்டும் என நினைத்த கோயில்களுக்கு நான் சென்று வீடியோ எடுத்துவந்து அவரிடம் காட்டினேன். அம்மா வீடியோவை பார்த்து நன்றாக இருக்கிறது எனக் கூறினார். அப்போது நான் யோசித்தது என்னவென்றால்...? ஒரு அம்மா முகத்திலேயே இவ்வளவு சந்தோஷம் வருகிறதே, இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் நிறைய அம்மாக்கள் பார்ப்பார்களே என்று சொல்லி ஆரம்பித்ததுதான் இந்த கோயில் பயணங்கள்.

Updated On 26 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story