இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவின் அடையாளம் என்றாலே அது நாங்கள்தான் என்று தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக அதிகமான தோல்வி படங்களை கொடுத்து சறுக்கலை மட்டுமே சந்தித்து வந்தது. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தன. அந்த நேரம் தென்னிந்திய திரையுலகில் இருந்து வெளியான 'ஆர்.ஆர்.ஆர்', 'காந்தாரா', 'கேஜிஎஃப் 2', 'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்று, 'விக்ரம்' போன்ற பெரும்பாலான திரைப்படங்கள் தங்களது வெற்றி சரித்திரத்தை படைத்தன. இதனால், மீண்டும் தாங்கள் யார் என்பதை காண்பித்தாக வேண்டும் என்று பாலிவுட் திரையுலகத்தினர் போராடி வந்த நேரத்தில்தான், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வந்து மாபெரும் வெற்றியை பதிவு செய்தது ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம். இதன்பிறகு தொடர்ந்து பாலிவுட் தேசத்தில் வந்த ஒவ்வொரு படமும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்து வெற்றி என்ற கதவைத் தட்டின. இதேபோன்று, இந்த ஆண்டின் இறுதியிலும் பல விமர்சனங்களோடு வெளிவந்து வசூல் ஈட்டி வரும் 'அனிமல்' படத்தை தொடர்ந்து, இரண்டு முறை வசூலில் சாதனை நிகழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் டோலிவுட் நட்சத்திரமான 'பிரபாஸ்' ஆகிய இருவரின் படங்களும் திரைக்கு வந்துள்ளன. சமீபகாலமாக ஹிந்தி படங்கள் vs தென்னிந்திய படங்கள் என்ற போக்கு மாறி மாறி நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது நேரடி மோதலாக வெளிவந்துள்ள இந்த இரண்டு நட்சத்திரங்களின் படங்களும் எப்படியான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம்.

புதுமை விரும்பி ராஜ்குமார் கிரானி

2003 ஆம் ஆண்டில், சஞ்சய் தத், அர்ஷத் வர்சி, போமன் இரானி, கிரேசி சிங் மற்றும் சுனில் தத் நடிப்பில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமான 'முன்னா பாய் எம்பிபிஎஸ்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் ராஜ்குமார் கிரானி. இவர் தன் முதல் படத்திலேயே இந்திய அளவில் கவனம் பெற்றதோடு, பல மொழிகளிலும் இவரது 'முன்னா பாய் எம்பிபிஎஸ்' திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு பாராட்டுகளை குவித்தது. தமிழிலும் கமல்ஹாசன் நடிப்பில் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட இப்படம் இங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை அள்ளிக் குவித்ததனால் கடந்த 2006 ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'லகே ரஹோ முன்னா பாய்' என்ற பெயரில் எடுத்து அதிலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் பெற்றார். இந்த சூழலில்தான் 2009 ஆம் ஆண்டு '3 இடியட்ஸ்' என்கிற மெகாஹிட் படத்தை எடுத்தார் ராஜ்குமார் கிரானி. அதன் மூலம் இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டார். இன்றைய கல்வி முறையில் மாற்றங்கள் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெளிவந்த இப்படத்தில் அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஷி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றனர். இப்படத்தில் மாணவர்களை கவலைக்கிடமாக்கும் கல்வி முறையின் அவலங்களை தனக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் திரைக்கதை அமைத்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருந்த இயக்குநர் கிரானி, ஒரு கட்டத்தில் இந்த கல்வி சிஸ்டமே தவறு என்பதை அழுத்தமாக பதிவு செய்து அதற்கு மாற்று வழியை திரைக்கதையோடு பிணைத்து காட்டியிருந்த விதம் பலரால் அன்று பாராட்டப்பட்டது.


இயக்குநர் ராஜ்குமார் கிரானி

இதனால் இப்படமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட வரிசையில் தமிழிலும் தளபதி விஜய் நடிப்பில் 'நண்பன்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் அமீர்கானுடன் கூட்டணியமைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு 'பிகே' என்கிற படத்தை எடுத்த ராஜ்குமார் கிரானி, இதில் மக்களின் மூடநம்பிக்கையை நகைச்சுவையோடு கேள்விக்குள்ளாக்கிய விதம் பலரால் ரசிக்கப்பட்டது. அதிலும் படத்தில் வேற்று கிரகத்திலிருந்து பூமியை பற்றி அறிந்துக்கொள்ள வரும் அமீர்கான் கதாபாத்திரம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சிரிக்கும் படியாகவும், சவுக்கடியாகவும் பளீர் என எழுதப்பட்டிருக்கும். இந்த படமும் வசூல் ரீதியாக மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சஞ்சு' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதன் பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்ட கிரானி, தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து 'டங்கி' படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்துள்ளார். ஏற்கனவே '3 இடியட்ஸ்' படத்தின் போதே இவ்விருவரும் இணையப்போவதாக கூறப்பட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின் இணைந்துள்ள இக்கூட்டணி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மாஸ் மகராஜா பிரசாந்த் நீல்

கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ஸ்ரீ முரளி நாயகனாக நடித்து வெளிவந்த 'உக்ரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்ற பிரசாந்த் நீல், தன்னுடைய வித்யாசமான கதை சொல்லல் மூலம் தனது முதல் படத்திலேயே பலரிடமும் பாராட்டை பெற்றவர் ஆவார். பிறகு 4 ஆண்டு இடைவேளை எடுத்துக் கொண்ட அவர், 7 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து பலரை சந்தித்து உருவாக்கிய திரைப்படம்தான் 'கேஜிஎஃப்'. ஹம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் யாஷ், ராக்கி பாயாக நடித்து மாஸ் மசாலா படமாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த 'கேஜிஎஃப்' இந்தியளவில் கவனம் பெற்றது. மும்பையிலிருந்து கேஜிஎஃப்-க்கு ஒரு கொலை செய்ய வந்து அங்கு அடிமையாக வேலை செய்யும் ராக்கி, இறுதியாக அந்த கூட்டத்தின் தலைவனை கொன்று தங்க கோட்டைக்கே எப்படி தலைவனாகிறான் என்பதுதான் படத்தின் கதை. அன்னையின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாஸ் படமாக வந்த 'கேஜிஎஃப்' படத்தின் முதல் பாகமே பெரிய வசூலை ஈட்டியிருந்தாலும், 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகமோ முந்தைய பக்கத்தையே மிஞ்சியபடி 4 மடங்கு வசூலை ஈட்டி சுமார் 1200 கோடிக்கு மேல் கலெக்சன் செய்து சாதனைப் படைத்தது. குறிப்பாக கன்னட திரையுலகின் புதிய மைல் கல்லாக மாறிய இந்த 'கேஜிஎஃப் 2', இந்திய சினிமாவிற்கும் ஒரு புதிய ட்ரெண்ட் செட்டை உருவாக்கி கொடுத்தது.


'கேஜிஎஃப்' நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல்

ஆக்சன் படம் என்றால் இனி இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற புதிய சிந்தனையை விரிவுப்படுத்திய பிரசாந்த் நீல், இந்த ஒற்றை படத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராகவும் மாறி போனார். பின்னர் ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸுடன் கூட்டணியமைத்த பிரசாந்த், தற்போது 'சலார்' என்கிற மற்றொரு மாஸ் படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார். இப்படம் பிரசாந்த் நீலின் முதல் படமான 'உக்ரம்' படத்தின் அட்வான்ஸ் வெர்ஷன் என கூறப்படுகிறது.

டமார் ஆன 'டங்கி'

2023 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல்தான் அவரது திரைப்பயணம் அமைந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த ஷாருக்கானின் 'பதான் ' மற்றும் தமிழ் இயக்குநரான அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 'ஜவான்' ஆகிய இரண்டு படங்களும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தலா 1000 கோடிக்கு மேல் வசூலித்ததன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்தது மட்டுமின்றி, ஒரே ஆண்டில் இரண்டு முறை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய ஹீரோ என்ற பெருமையும் கிடைத்தது. இந்த நிலையில், அடுத்ததாக தோல்வியையே சந்தித்திராத இயக்குநர் என்ற பெயர் பெற்ற ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் இணைந்து ‘டங்கி’ என்ற படத்தில் நடித்துள்ள ஷாருக்கானுக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், ஷாருக்கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் ‘டங்கி’ திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது. 'டங்கி' என்பது பஞ்சாபி மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சொல். அதாவது சட்ட விரோத குடியேற்றம் என்பதுதான் இதன் பொருள். இதனை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன், டாப்ஸி பன்னு மற்றும் விக்கி கௌஷல், போமன் இரானி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவையோடு கூடிய ஒரு திரைப்படமாக எடுத்து வெற்றி காணும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, 'டங்கி' படத்திலும் காமெடி, எமோஷனல், சென்டிமென்ட், சோஷியல் மெசேஜ் என வழக்கம்போல் தனது பாணியை கையாண்டு படத்தை இயக்கியுள்ளார்.


ஷாருக்கானின் 'டங்கி' பட போஸ்டர்

குறிப்பாக படத்தில் சட்டவிரோதமாக லண்டனுக்கு பயணம் செய்ய முயற்சிக்கும் மனு, சுகி, புக்கு, பாலி ஆகிய 4 பேர், அதற்காக ஆங்கிலத் தேர்வு எழுத முயற்சித்து ஃபெயில் ஆகிவிடுவார்கள். அப்போது ஆங்கில அறிவிற்காக நடத்தப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் கலந்துக் கொள்ளும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக இருக்கும். மேலும், கதையின் நாயகனாக ஹர்தி சிங் எனும் கதாபாத்திரத்தில் வரும் ஷாருக்கானின் உதவியுடன் எப்படி லண்டனுக்குச் செல்வதை சாத்தியமாக்க அந்த 4 பேரும் போராடுகின்றனர். அவர்கள் என்னவெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்பதை சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாக உள்ளது. அதிலும் இடைவேளை காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்வு, இரண்டாம் பாகத்திற்கான கதை என்னவென்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் நாட்டின் எல்லை தாண்டிய சட்டவிரோதக் குடியேற்றத்தில் எவ்வளவு சிரமங்களும், ஆபத்துகளும் இருக்கின்றன என்பதை சில காட்சிகள் மூலம் காட்டியிருக்கும் விதம் பார்ப்பவர்களை வியக்க வைத்திருந்தது. படத்தில் விக்கி கௌஷல் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போலவே, நாயகியாக வரும் டாப்ஸி பன்னும் ஷாருக்கானுடன் இணைந்து கிடைக்கின்ற கேப்களிலெல்லாம் அடிக்கும் காமெடி லூட்டிகள் நன்றாகவே ரசிக்க வைத்துள்ளன. படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் அளவிற்கு இரண்டாம் பாதி இல்லையோ என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஃபீல் குட் படமாக வந்துள்ள இந்த 'டங்கி' திரைப்படம் நல்ல கருத்துள்ளப் படமாக நமக்கு தோன்றினாலும், ராஜ்குமார் ஹிரானியின் '3 இடியட்ஸ்', 'பிகே' அளவுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கு உதாரணம்தான் இப்படத்திற்கு கிடைத்துள்ள முதல் நாள் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன். ஷாருக்கானின் முந்தைய படங்களான 'பதான்' முதல் நாளில் 57 கோடியும், 'ஜவான்' 75 கோடியும் கலெக்‌சன் செய்திருந்த நிலையில், 'டங்கி' முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது ஷாருக்கானை பொறுத்த வரையில் மிக குறைவான வசூல் என்றே சொல்லப்படுகிறது. இனி அடுத்தடுத்து வரும் நாட்களிலும் வசூல் அள்ளுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியாகினும் படம் ஷாருக்கான் மற்றும் ஹிரானி ஆகிய இருவரது ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பளார் விட்ட 'சலார்'

நீண்ட நாட்களுக்குப் பிறகு, 'பாகுபலி' நட்சத்திரம் பிரபாஸ் மற்றும் 'கேஜிஎஃப்' இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் 'சலார்'. இந்த ஆண்டின் இறுதிப்படமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 'டங்கி' படத்துடன் திரைக்கு வந்து போட்டி போட்டுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸுடன், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, ஸ்ரியா ரெட்டி என பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்குகிறார் என்ற காரணத்திற்காகவே கன்னட ரசிகர்கள் மத்தியில் 'சலார்' படத்திற்கென்று அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வந்த அதே வேளையில், 'கேஜிஎஃப்' இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதனால் இந்திய அளவிலும் இப்படத்திற்கு கவனம் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் கதை என்று பார்த்தால், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் படத்தின் நாயகியான ஆத்யா கிருஷ்ணகாந்த், மிக நெருக்கடியான சூழலில் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த கும்பலிடம் இருந்து தேவா என்ற கதாபாத்திரத்தில் வரும் நாயகனான பிரபாஸால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலையில், அவரோ அசாமில் ஒரு தொலைதூர கிராமத்தில் தன் தாயுடன் (ஈஸ்வரி) வசித்து வருகிறார். தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்தால், தன் கண்முன் அநியாயம் நடந்தாலும் அதை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறார். இருந்தும் பிரபாஸ் இவற்றையெல்லாம் கடந்து சிக்கலில் இருக்கும் ஸ்ருதிஹாசனை எப்படி காப்பாற்றுகிறார்? படத்தில் வரதா என்னும் கதாபாத்திரத்தில் வரும் பிரித்விராஜ் - பிரபாஸ் இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்படும் நிகழ்வு, முதல் பத்து நிமிடத்தில் முடிந்துவிட்டாலும், பின்னர் இருவரும் சந்திக்கும் போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி பிரசாந்த் நீல் காட்டியிருந்த விதம் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.


பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இடம்பெற்ற 'சலார்' பட போஸ்டர்

மேலும் வன்முறையின் மொத்த உருவமாய் வரும் பிரபாஸின் நடிப்பும் சரி, பிரபாஸின் நண்பனாக வரும் பிருத்விராஜின் நடிப்பும் சரி ஒருவருக்கொருவர் தங்களது நடிப்பில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரியின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மிக சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் டோசாக இருந்தது. குறிப்பாக இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை கான்சார் உலகிற்கு அழைத்துச் செல்லும் இயக்குநர் அங்கு விஷுவலாக ட்ரீட் கொடுத்திருந்தாலும் அங்குள்ள மக்கள், அந்த அரசியலமைப்பு மற்றும் உறுதிமொழிகள் போன்றவை தெளிவாக சொல்லப்படாதது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஆக்சன் காட்சிகள் வரும் போதெல்லாம் 'சும்மா அதிருதில்ல' என்ற நம் தலைவர் ரஜினியின் வசனத்தை போலவே உள்ளது என்றாலும் முந்தைய 'கேஜிஎஃப்' அளவிற்கு இல்லை என்ற சிந்தனையும் அவ்வப்போது வந்து செல்கிறது. படத்தின் முதல் பாதியையும் சரி, இரண்டாம் பாதியும் சரி, மிகவும் விறு விறுப்புடனும், அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்புடனும் இயக்குநர் கொண்டு சென்றிருந்த விதம் பிரபாஸ் மற்றும் நீலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இருப்பினும் கொஞ்சம் ட்ராமாவை குறைத்து, பில்டப்புகளை கத்தரித்து கதையில் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருந்தால் படம் மேலும் நன்றாக வந்திருக்கலாம்.

Updated On 1 Jan 2024 6:29 PM GMT
ராணி

ராணி

Next Story