இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் இரண்டு நட்சத்திரங்கள் நட்பு பாராட்டுவதும், பின்னர் திடீரென்று இருவரும் பிரிந்து சண்டை போட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வதும் காலம் காலமாக நடைபெறும் நிகழ்வுதான். ஆனால், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சில நடிகர்கள் எப்போதுமே இரு துருவங்களாகவும், அவரவர்களுடைய கருத்தில் முரண்பட்டவர்களாகவும் இருப்பர். அந்த வரிசையில், தமிழ் சினிமாவில் முதன்மையானவர்களாக பார்க்கப்படுபவர்கள்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் - சத்யராஜும். காரணம் கருத்தியல் ரீதியாகவும், அரசியல் சார்ந்தும் இவ்விருவருடைய பார்வையும் வெவ்வேறுவிதமாக இருக்கும் என்பதால்தான். அதற்கு உதாரணமாக இவ்விருவருக்கும் இடையில் பல நிகழ்வுகள் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்துள்ளன. எது எப்படி இருந்தாலும் திரையுலக வாழ்க்கையில் தங்கள் பயணத்தை ஒரே மாதிரியாக தொடங்கிய இந்த இருதுருவங்களும் 38 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு' என்ற வடிவேலுவின் காமெடி போன்று சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளாத நடிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுபோல்தான் தற்போது ரஜினியும் - சத்யராஜும் இணையும் நிகழ்வு பார்க்கப்படுகிறது. வில்லன் நடிகர்களாக திரையுலகில் அறிமுகமான இவர்கள் பின்னாளில் நல்ல நண்பர்களாக மாறி, பின்னர் என்ன காரணத்திற்காக எதிரி பாராட்டிக்கொண்டார்கள்? தற்போது ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற போவது எப்படி? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.

இணைந்து கலக்கிய படங்கள்


தனது விலை உயர்ந்த பைக்கில் வாய்ப்பு தேடி அலைந்த தருணத்தில் நடிகர் சத்யராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம்

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட சத்யராஜும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்கள். இருவருமே தங்களின் துவக்ககாலத்தில் வில்லனாக வலம் வந்து பின் கதாநாயகர்களாக உயர்ந்தவர்கள். இருவரின் பயணமும் வேறு வேறு மாதிரிதான் என்றாலும் அவர்கள் கடந்துவந்த பாதை என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதிலும் சத்யராஜ் கோயம்புதூரில் இருந்து சென்னை வந்து தங்கி வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும் சமயங்களிலேயே ரஜினியுடன் அறிமுகம் ஏற்பட்டு பக்கத்து பக்கத்து ரூம்களில் தங்கி பழகியவர்கள் என்பதால் இருவருக்குமான தொடக்க கால நட்பு என்பது மிகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அதிலும் சத்யராஜ் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ரஜினி ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்திருந்ததால், தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கும் அளவுக்கு நட்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. கமல்ஹாசனின் ‘சட்டம் என் கையில்’ படத்தில் சத்யராஜ் விக்கி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், தன் நண்பனுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ரஜினி அப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த ‘மூன்று முகம்’ படத்தில் சத்யராஜிற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தாடி என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ்.


'மிஸ்டர் பாரத்' படத்தில் "என்னம்மா கண்ணு சௌக்கியமா" பாடலில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ்

இதனை தொடர்ந்து சிவகுமார், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரின் படங்களில் சிறு சிறு வேடங்களில் சத்யராஜ் நடித்தாலும், ரஜினியின் ‘பாயும் புலி’, ‘நான் மகான் அல்ல’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ போன்ற படங்கள் நல்ல அடையாளத்தை பெற்று தந்தன. இதில் ரஜினியின் ‘பாயும் புலி’ படத்தில் நடிகை ராதாவின் டீ கடையில் வந்து தகராறு செய்யும் கேங்ஸ்டர்களில் ஒருவராக வந்து ரஜினியுடன் சண்டையிட்டு போவார். இதேபோன்று, ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஜெகன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு, மிகப்பெரிய வில்லன் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘நூறாவது நாள்’ திரைப்படம்தான். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகும் சத்யராஜ் பழசை மறக்காமல் நண்பர் ரஜினி கேட்டுக்கொண்டதற்காக ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராமன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியின் படங்களில் சத்யராஜ் சிறுசிறு வில்லன் வேடங்களில்தான் நடித்திருந்தார் என்றாலும் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார் சத்யராஜ். அதுதான் 1986 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம். இதில் 'என்னம்மா கண்ணு' என அப்போதே ரஜினிக்கு சவால் விடும் தோரணையில் கோபிநாத் என்ற கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனது நக்கலான பேச்சினாலும், நடிப்பினாலும் பலரை கவர்ந்திருப்பார்.

நட்பும் - மோதலும்


'மிஸ்டர் பாரத்' படத்தில் தந்தையாக வரும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியுடன் நடிகர் ரஜினிகாந்த்

‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்ததற்கு பிறகு நெருங்கி பழக ஆரம்பித்த ரஜினியும், சத்யராஜும் நல்ல புரிதல் உள்ள நண்பர்களாக இருந்து வந்த நேரத்தில் திடீரென சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட ஆரம்பித்தன. இதனால் பின்னாளில் ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதையே தவிர்த்து வந்தது மட்டுமின்றி ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்ளும் அளவுக்கு பகையுணர்வை வளர்த்துக் கொண்டனர். இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது அப்போது திரைத்துறையில் இவர்களுடன் பயணித்த சிலருக்கு மட்டுமே தெரியும். இருந்தும் இவர்களின் சண்டையை திரைத்துறையை சேர்ந்த யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஒருமுறை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட அமைதி போராட்டத்தில் கலந்துகொண்ட சத்யராஜ் தமிழ் உணர்வையும், தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பது பற்றியும் பேச தொடங்கி அந்த மேடையில் நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ரஜினியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இந்த நிகழ்வு அன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், அதே மேடையில் ரஜினியின் முகமும் மிகவும் வாடிப்போனது. அதே போல் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் பயணம் துவங்கவுள்ளதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்த போதும் சத்யராஜ் அதனை கடுமையாக விமர்சித்து நக்கலடிக்கவும் செய்திருந்தார். இவர்கள் இந்த அளவுக்கு உரசிக்கொள்ள அப்படி இருவரின் வாழ்க்கைக்குள்ளும் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விகள் ஒருபுறம் எழுப்பப்பட, இன்னொரு புறம் சத்யராஜ் ரஜினியின் மீதுள்ள பொறாமையில்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், சத்யராஜ் இந்த அளவுக்கு கோபம் கொள்வதற்கு ரஜினியின் குசும்புத்தனமான பேச்சுகள்தான் காரணம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.


காவிரி நதிநீர் பிரச்சினைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய தருணம்

அது என்னவென்றால், 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் நடிக்கும்போதே சத்யராஜ் ‘நூறாவது நாள்’ படத்தின் மூலமாக நன்கு அடையாளம் பெற்றிருந்தார். ஆனாலும், அந்த படத்தில் நடித்த நாயகியான மாதவிக்கு சத்யராஜ் பற்றி எதுவும் தெரியவில்லையாம். இதனால் மாதவி ரஜினியிடம், சத்யராஜை கைக்காட்டி இவர் யார் என்று கேட்க, எப்போதும் கிண்டல், கேலி என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் ரஜினி மாதவியிடம் இவரா… இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். எப்போதாவது இப்படி வந்து நடித்துவிட்டு போவார் என்று நக்கலடித்து சொன்னதாகவும், மாதவி அதனை உண்மை என்று நம்பி சத்யராஜிடம் சென்று ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க, சத்யராஜ் பதறிப்போனதாக சொல்லப்படுகிறது. பின்னர் இது ரஜினி பார்த்த வேலை என்பது சத்யராஜுக்கு தெரியவர அங்கிருந்துதான் இருவருக்குமான ஈகோ தொடங்கியது என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஈகோ ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் நடிக்கும்போது மோதலாக மாறியது எப்படி என்பதையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்தபோது இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் படத்தின் நீளம் கருதி சத்யராஜ் இடம்பெற்றிருந்த பெரும்பாலான காட்சிகளை எடுத்துவிட்டதாகவும், இதுபற்றி சத்யராஜ், இயக்குநரிடம் கேட்டபோது படத்தில் கதாநாயகன்தான் முக்கியம். அவர் இடம்பெறும் காட்சிகளை நீக்க முடியாது என்று சொல்ல கடுப்பாகி, ரஜினி கூட இப்படி செய்ய சொல்லி இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அதோடு ரஜினியுடன் இணைந்து நடிப்பதை சத்யராஜ் தவிர்த்து விட்டார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இரு துருவங்கள்?

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தும் அவருடைய போர்ஷனுக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார். இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தது போல் லோகேஷின் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படம் குறித்த போஸ்டர் ஏற்கனவே மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ள நிலையில், படத்தில் சத்யராஜ் இணைந்திருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஜினியின் 171-வது படமான இதில் தானும் இணைந்திருப்பதாக நடிகர் சத்யராஜும் அண்மையில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சூசகமாக தெரிவித்திருந்தார்.


ரஜினியின் 171-வது படமான கூலியில் இணையப்போகும் நடிகர் சத்யராஜ்

இந்த தகவல் ரஜினி மற்றும் சத்யராஜ் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளபோதும், இது உண்மைதானா என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் எல்லோர் மனதிலும் எழுப்பியுள்ளது. காரணம் ஏ.வி.எம் தயாரிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவான 'சிவாஜி' படம் எடுக்கப்பட்ட சமயத்திலேயே ரஜினிக்கு நேரெதிர் கதாபாத்திரமான ஆதிகேசவன் ரோலில் நடிக்க சாத்யராஜிடம் கேட்டு அணுகியபோது அதனை தூக்கி எறிந்தவர், இப்போது எப்படி ஒப்புக்கொண்டார் என்பதால்தான். எந்த ஒரு வலிக்கும், பகைக்கும் காலமே மருந்து என்பதாக, இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு துருவங்களாக பார்க்கப்பட்டுவந்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சத்யராஜ் இருவரும் 38-ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகையை., கோபத்தை மறந்து ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் எதிர் எதிர் ரோல்களில் இல்லாமல் நண்பர்களாக நடிக்கவுள்ளதாக கூறப்படுவது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் பழைய நண்பர்கள், மீண்டும் புதிதாக இணைந்து புதிய சரித்திரத்தை படைக்க வாழ்த்துவோம்.

Updated On 15 Jun 2024 12:04 PM GMT
ராணி

ராணி

Next Story