இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சின்னத்திரையில், தொலைக்காட்சி தொடர் மூலமாக திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சூரி, பின்னர் படிப்படியாக பெரிய திரையில் கால்பதித்து, நகைச்சுவை நடிகர், கதாநாயகன் என்ற நிலைக்கு உயர்ந்து தற்போது வெற்றிகரமாக பயணித்து வருகிறார். எப்போதும் ஒரு காமெடி நடிகர் ஒருவர் கதாநாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தால் முதலில் எல்லோரும் சொல்லும் வார்த்தை, பேசாமல் காமெடியனாகவே இருந்திருக்கலாம். ஹீரோவெல்லாம் இவருக்கு செட் ஆகுமா? என்பதுதான். அதற்கு நடிகர் சூரியும் விதி விலக்கல்ல. இருந்தும் எதிர்மறையாக வரும் விமர்சனங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தன் இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தவருக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாற ஆரம்பித்துள்ளது. அதற்கு உதாரணமாக ‘கொட்டுக்காளி’ என்ற இந்த ஒரு திரைப்படமே போதுமானது. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை எந்த ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கும் கிடைக்காத பெருமை நடிகர் சூரிக்கு கிடைத்துள்ளது. அதுகுறித்த ஒரு சுவாரஸ்யமான தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

நடிகர் சூரியின் ஆரம்பகால வாழ்க்கை


ஜல்லிக்கட்டு காளையுடன், தந்தையுடன் மற்றும் வித்தியாசமான தோற்றங்களில் காட்சியளிக்கும் நடிகர் சூரி

மதுரை அருகே ராஜாக்கூர் என்கிற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கை அரசி தம்பதிக்கு மகனாக 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி பிறந்தவர்தான் நடிகர் சூரி. தனது சொந்த கிராமத்திலேயே பள்ளி படிப்பை தொடர்ந்து வந்த சூரி, தன் குடும்ப வறுமையால் எட்டாம் வகுப்போடு பள்ளி கல்வியை முடித்து கொண்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பொதுவாகவே நடிகர் சூரியின் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்பதால், சூரிக்கும் சிறுவயதிலிருந்தே அந்த பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் நடிப்பிலும், நடனம் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சூரி, திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு 1996-ம் ஆண்டு மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார். அதுவரை சினிமாவில் எளிதாக நுழைந்து விடலாம் என்றிருந்த சூரிக்கு, இங்கு வந்த பிறகுதான் தெரிந்ததாம் தமிழ் சினிமாவில் காலூன்றுவது எவ்வளவு கடினம் என்று. இருந்தும் வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய், தோற்றால் பாடம், வென்றால் மகுடம் என்பதற்கு ஏற்ப முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்று சென்னை முழுவதும் சுற்றித் திரிந்து வாய்ப்புகள் தேடியுள்ளார். அந்த சமயம் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால், சினிமா வாய்ப்பு கிடைக்கும் போது கிடைக்கட்டும் என்று வேறு வழி இன்றி சிறிது காலம் மணல் டிப்பர் லாரியில் கிளீனராக பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு பிறகு, சினிமாவில் அரங்குகள் அமைக்கும் போது, அவற்றிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்து, பெயிண்டராகவும் பணியாற்றியுள்ளார்.

திரை அறிமுகம் நிகழ்ந்தது எப்படி?

எந்தவொரு வேலையையும், மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் செய்யும் பழக்கம் கொண்ட சூரி தனது பெயிண்டிங் பணியை மிகச்சிறப்பாக செய்து வந்த அதே வேளையில், சென்னையில் இருந்த நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அப்படி ‘மந்திரவாசல்’ என்கிற நாடகத்திலும், வீரப்பனின் கதையை மையமாக வைத்து போடப்பட்ட நாடகத்திலும் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார். அப்போது சூரியின் நாடகத்தைப் பார்த்த காவல்துறையினர் சிலர் ரூ.400 பரிசாக அளித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்களாம். இதனால் மேலும் உற்சாகம் அடைந்து தனது இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்த சூரி திரைப்படங்களிலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். அந்த முயற்சிக்கு பலனாக 1999-க்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ‘மறுமலர்ச்சி’, ‘சங்கமம்’, ‘ஜேம்ஸ் பாண்டு’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘வின்னர்’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்தார். இதேபோன்று, திரைப்படங்கள் என்றில்லாமல் ‘திருமதி செல்வம்’, ‘புஷ்பாஞ்சலி’, ‘மைதிலி’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.


வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் அப்புக்குட்டி மற்றும் ஹரி வைரவனுடன் சூரி

இத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் இன்னும் பெரிதான அங்கீகாரம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த போதுதான் ‘காதல்’, ‘தீபாவளி’, ‘ஜி’ போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அடையாளம் காணக்கூடிய வகையிலான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் 2005-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஜி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்த போதுதான், அப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுசீந்திரனின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த அறிமுகம்தான் ஒருநாள் நம்மை புகழின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகிறது என்பதை சூரி அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அந்த வகையில், 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் வாயிலாக சுசீந்திரன் இயக்குநராக அறிமுகமான போது அப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை சூரிக்கு கொடுத்து சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். இப்படத்தில் வரும் சூரியின் பரோட்டா காமெடி உலகம் முழுவதும் பிரபலமானதுடன், அன்றிலிருந்து பரோட்டா சூரி என்ற அடையாளப்பெயரும் கிடைத்தது.

சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் வெற்றிக்குப்பிறகு, ‘நான் மகான் அல்ல’, ‘களவாணி’, ‘தூங்கா நகரம்’, ‘குள்ளநரிக் கூட்டம்’ போன்ற திரைப்படங்களில் நடித்த சூரிக்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம்தான். இப்படத்தில் இருவரின் காமெடி காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுவதுடன், 2014-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தென்னிந்திய திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சூரிக்கு முதல் விருதினையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து, ‘பாண்டிய நாடு’, ‘ஜில்லா’, ‘அஞ்சான்’, ‘அரண்மனை 2’ போன்ற பிற நடிகர்களின் படங்களில் நடித்தாலும், சிவகார்த்திகேயனோடு நடித்த ‘மான் கராத்தே’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘டான்’, ‘பிரின்ஸ்’ போன்ற படங்கள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட அதே நேரம் கொண்டாடப்பட்ட படங்களாக அமைந்தன. மேலும் இப்படங்கள் அனைத்திலும் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் இணைந்து நகைச்சுவையில் சரவெடியாக வெடித்து சிரிப்பு மழையில் நம்மை மகிழ்வித்தனர்.


சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வெளிவந்த திரைப்படத்தின் காட்சிகள்

மீண்டும் இவ்விருவரும் இணையப்போகும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதுவும் வெற்றிமாறன் என்ற மிகப்பெரிய இயக்குநரின் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படத்தில் நடித்தார். அந்த சமயம் சூரி கதாநாயகனாக அறிமுகமாகப் போகிறார் என்ற தகவலை கேட்டதும், பலரும் வழக்கம் போல் பேசாமல் நகைச்சுவை நடிகராகவே இருந்துவிடலாம். இதெல்லாம் செட் ஆகுமா? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இருந்தும் சூரியின் நம்பிக்கை வீண்போகவில்லை. கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘விடுதலை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சூரிக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தை தந்தது. விஜய் சேதுபதி என்ற ஒரு மிகப்பெரிய நடிகன் அப்படத்தில் இருந்தும், சூரியின் நடிப்பு பெரியளவில் பாராட்டப் பெற்றது. இதனால் நகைச்சுவை நடிகர் என்ற இடத்தில் இருந்து, கதாநாயகன் என்ற நிலைக்கு உயர்ந்தார் சூரி.

பெர்லின் திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’

விடாமுயற்சி, காலத்திற்கு ஏற்றாற் போல் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் பண்பு போன்ற விஷயங்களை தாண்டி, எந்த சூழ்நிலையிலும், தான் கடந்து வந்த பாதையையும் மறவாத நடிகரான சூரி தற்போது தனது நெருங்கிய நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கூழாங்கல்’ பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பான இப்படத்தில் சூரியுடன், அன்னா பென் என்பவரும் நடித்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023 மார்ச் 10 அன்று படக்குழு சார்பில் வெளியானது. இதன் பிறகு, படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி சூரி மற்றும் அன்னா பென்னின் நடிப்பு அனைவரையும் ஈர்க்கும் படியாக இருந்தது. ‘விடுதலை’ படத்துக்கு பிறகு சூரி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. அழுத்தமான கதையை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து ஒரு படம் இப்படியானதொரு கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதுதவிர போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி தேர்வாகியுள்ளது.


கொட்டுக்காளி படத்தில் நடிகர் சூரி மற்றும் சூரியின் தனிப்பட்ட புகைப்படம்

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிவிட்டிருந்தார். அவரின் அந்த பதிவில், நமது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இத்திரைப்படத்தை உலகத்தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுகளும். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த் திரைப்படம் நமது கொட்டுக்காளி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இது தவிர தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி, அதிலும் கவனம் பெறுவார் என கூறப்படுகிறது. குறிப்பாக, இப்படம் சர்வதேச திரைப்பட விழா ராட்டர்டாமில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு சீன் நடிகராக, சீரியல் நடிகராக பின்னர் சிரிப்பூட்டும் கலைஞராக என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்த சூரி 'விடுதலை' படத்தை தொடர்ந்து தற்போது சீரியஸ் ஹீரோவாக, சர்வதேச கதாநாயகனாக,‘கொட்டுக்காளி’, ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் நம்மை மட்டுமல்ல உலக அரங்கிலும் நிச்சயம் அவர் கவனம் ஈர்ப்பார் என நம்பலாம்.

Updated On 1 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story