இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(2.01.1983 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

இந்தி நடிகர் அமிதாபச்சன் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துவிட்டார்.

அவர் விரும்பினாலும் சரி; விரும்பாவிட்டாலும் சரி; அவரை அரசியல் கட்டிலில் தள்ளிவிட பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்துவிட்டார்! தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்; ஆந்திராவில் என்.டி. ராமராவ்; கர்நாடகாவில் ராஜ்குமார் என்று மாநிலங்கள் தோறும் நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆகி, இ.காங்கிரசுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். இந்த சவாலை சமாளிக்க அமிதாபச்சனை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இந்திரா காந்தி தீர்மானித்துவிட்டார்!

குடும்ப நண்பர்

இந்திரா காந்தியின் குடும்ப நண்பர் அமிதாபச்சன். இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியும், அமிதாபச்சனும் நகமும் சதையும் போல இருந்தார்கள். அவ்வளவு நெருங்கிய நட்பு. அமிதாபச்சனும், ராஜீவ் காந்தியுங்கூட நண்பர்களே. அதிலும் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, அமிதாப்-ராஜீவ் நட்பு பலப்பட்டது.

படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அமிதாப் மரணத்துடன் போராடிக் கொண்டு இருந்தபொழுது, இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். ராஜீவ் காந்தி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, பம்பாய்க்கு திரும்பினார். அமிதாபச்சனின் அருகில் இருந்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டார். லண்டனில் இருந்து டாக்டர்கள் வர இந்திரா காந்தி ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பம்பாயில் அமிதாபச்சனைப் பார்த்தார்.


நடிகர் அமிதாபச்சன் மற்றும் மறைந்த பிரதமர் இந்திரா பிரியதர்சினி காந்தி

ஆசிய விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அமிதாபச்சனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு இந்தியில் ஒரு பாட்டு எழுதப்பட்டு இருந்தது. அந்தப் பாட்டை விளக்கி, அமிதாபச்சன் ஆங்கிலத்தில் பேசினார். திறப்பு விழாவில் இந்திரா காந்திக்கு அடுத்து ராஜீவ் காந்தியும், அவரை அடுத்து அமிதாபச்சனும் அமர்ந்து இருந்தார்கள். இந்தியா முழுவதும் காட்டப்பட்ட தொலைக்காட்சிகளில் (டி. வி.) அமிதாபச்சனுக்கு நல்ல விளம்பரம் கொடுக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமிதாபச்சன் பரிசுகள் வழங்கினார்.

அரசியல்

அமிதாபச்சனுக்கு இவ்வளவு விளம்பரம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் அவரை அரசியலுக்கு இழுக்கத்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது! சமீபகாலமாக அமிதாபச்சன் நடித்த படங்கள் தோல்வி அடைந்து வந்தன. இதனால் அவர் பெயர் மங்கியது. ஆனால், படப்பிடிப்பில் நடந்த விபத்து அவருக்கு விளம்பரமாக அமைந்துவிட்டது! இப்பொழுது மீண்டும் இந்தியாவின் “சூப்பர் ஸ்டார்" ஆகிவிட்டார்! அதே நேரம், மாநிலங்கள் தோறும் நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு, இ.காங்கிரசுக்கு எதிராகத் தலைதூக்குகிறார்கள். இந்த நிலையை சமாளிக்க அமிதாபச்சனை பயன்படுத்த இந்திரா காந்தி திட்டமிட்டுவிட்டார்!

திருப்பதி

அமிதாபச்சன் திருப்பதிக்கு வர இருக்கிறார். திருப்பதி தொகுதியில்தான் என்.டி. ராமராவ் போட்டியிடுகிறார். "சாமி கும்பிட வருகிறேன்" என்று அமிதாபச்சன் சொன்னாலும், அவரது அரசியல் நுழைவுக்கு திருப்பதியில் பிள்ளையார் சுழி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்படி அமிதாபச்சனை இ.காங்கிரசார் அழைத்து இருக்கிறார்கள்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இந்திரா காந்தியும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து கொண்ட தருணம்

சிவாஜி கணேசன்

என்.டி. ராமராவ் போட்டியிடும் திருப்பதி தொகுதியில் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் வசிக்கிறார்கள். ஆகவே, பிரசாரத்துக்கு திருப்பதிக்கு வரும்படி சிவாஜி கணேசனுக்கும் அழைப்பு வந்து இருக்கிறது. "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்! வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்! என்ற தந்திரம் தெரியாதவரா இந்திரா காந்தி!

Updated On 12 Feb 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story