இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் காதலனுடன் தனது 37வது பிறந்தநாளை ரொமாண்டிக்காக கொண்டாடியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்திரையில் தோன்றுகிறார் இவர். மேலும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனால் பான் இந்தியா நடிகையிலிருந்து ஹாலிவுட் நடிகையாக உயர்ந்திருக்கிறார். அடுத்து ராஜ் கமல் இன்டர்னேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். நடிகை, பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட ஸ்ருதி ஹாசனின் திரை வளர்ச்சி, காதல்கள் மற்றும் தற்போதைய அப்டேட்ஸ் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

திரை அறிமுகமும் வளர்ச்சியும்

‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் செல்ல மகளான ஸ்ருதி, 2000ஆம் ஆண்டில் வெளியான ‘ஹே ராம்’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார். இசையின்மீது இருந்த ஆர்வத்தால் கலிபோர்னியா சென்று அங்கு இசை பயின்றார். பின்னர் நடிப்பு மீதிருந்த ஆர்வத்தால் சென்னைக்கு திரும்பினார். இருப்பினும் தனக்கென ஒரு இசைக்குழுவை அமைத்திருந்தார் ஸ்ருதி. அதன்பிறகு முதலில் பாடகியாக அடையாளம் காணப்பட்ட இவர், ஓரிரு இந்திப் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தோன்றியது 2011ஆம் ஆண்டு சூர்யாவுடன் ஜோடிசேர்ந்த ‘7ஆம் அறிவு’ திரைப்படத்தில்தான். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு வெளியான ‘எவடு’, 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ மற்றும் அதே ஆண்டு வெளியான ‘வெல்கம் பேக்’ போன்ற படங்களால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை ஒருசேர பெற்றார். இந்த படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றதால் ஃபிலிம்பேர் விருதுகள், SIIMA விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார் ஸ்ருதி. ஏற்கனவே பாடகி என்பதால், தான் நடித்த படங்களில் பெரும்பாலும் தனது சொந்த குரலில் பாடுவது மற்றும் எந்த மொழியாக இருந்தாலும் தானே டப்பிங் செய்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். இதற்கிடையே தனது சொந்த இசை ஆல்பங்களையும் தயாரித்து வெளியிட்டார்.


7 - ஆம் அறிவு - வெல்கம் பேக் - மூனு - ரேஸ் குர்ராம் திரைப்படங்களில் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசனின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘3’. இந்த படத்தில் தனது ஆழமான காதல் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பிறகு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ‘கபர்சிங்’ திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இது ‘தபாங்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு 2013ஆம் ஆண்டு பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ருதிக்கு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதன்பிறகுதான் ‘எவடு’ திரைப்படம் இவருக்கு கைகொடுத்தது. ராம் சரண், எமி ஜாக்சன் போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படத்தின் வசூல் 45 கோடியை தாண்டியது. அதன்பிறகு அல்லு அர்ஜூன், ரவி கிஷான் மற்றும் பிரகாஷ் ராஜுடன் ஸ்ருதியும் சேர்ந்து நடித்த ‘ரேஸ் குர்ராம்’ திரைப்படம் உலகளவில் 1150 தியேட்டர்களில் ரிலீஸானது. இதுவரை வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான SIIMA விருது ஸ்ருதிக்கு கிடைத்தது.

தமிழில் சிறு இடைவெளிக்கு பிறகு விஜய் ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பிறகு விஷாலுடன் ஜோடிசேர்ந்த ‘பூஜை’ திரைப்படம் ஓரளவு வெற்றிபெற்றது. அதன்பிறகு தெலுங்கு, இந்தி, தமிழ் என மாறிமாறி நடித்துவந்த ஸ்ருதிக்கு மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் 2018ஆம் ஆண்டு தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எந்த மொழியிலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் சற்று மன வருத்தத்தில் இருந்தார் ஸ்ருதி.


மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ஸ்ருதி ஹாசன்

8 ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்

அவ்வப்போது ஒருசில படங்களில் மட்டுமே தோன்றிய ஸ்ருதி, திடீரென தனது குண்டான உடல்வாகுடன் பொதுவெளியில் தோன்றவே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஒரு திரைப்படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கவேண்டி இருந்ததால் எடையை அதிகரித்ததாக விளக்கமளித்தார். அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் தனக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறியிருந்தார். தான் ஒரு உளவியல் மாணவியாக இருப்பதால் அதுகுறித்து தனக்கு நன்றாக தெரியும் என கூறிய ஸ்ருதி, சிறுவயதிலிருந்தே மனநல ஆலோசனைகளை பெற்றுவருவதாக கூறியிருந்தார்.

ஹைதராபாத்தில் தனது காதலனுடன் லிவிங் டுகெதரில் இருக்கும் ஸ்ருதி, ‘சலார்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி, மதுபழக்கத்திலிருந்து தான் எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதில், “என் வாழ்க்கையில் 8 ஆண்டுகள் நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். பெரும்பாலும் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது என்பது எனக்கு கடினம். நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதை நான் விரும்புவேன். ஆனால் நான் ஒருபோதும் போதைபொருட்களை பயன்படுத்தியது இல்லை. அப்போதெல்லாம் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதைபற்றி கவலைப்படுவதில்லை. என் வாழ்க்கையில் அதுவும் ஒரு கட்டம். பலரும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்” என்று பேசியிருக்கிறார். மேலும் தனது முன்னாள் காதல்கள் மற்றும் தற்போதைய காதல் வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்ருதி.


முன்னாள் காதலன் மைக்கேல் கோர்சல் மற்றும் தற்போதைய காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதி

ஸ்ருதியின் காதல்

ஆரம்பத்திலிருந்தே தமிழ், தெலுங்கு என பல ஹீரோக்களுடன் மாறிமாறி கிசுகிசுக்கப்பட்டார் ஸ்ருதி. காதல் நாயகனின் மகளாயிற்றே என்று பலரும் இவரை கிண்டல் செய்துவந்தனர். இதனிடையே ‘3’ படத்தில் நடித்தபோது தனுஷனுடன் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும் செய்திகள் பரவின. அதனாலேயே தனுஷிற்கும், அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை முற்றியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த உறவை சத்தமில்லாமல் முடித்துக்கொண்டார் ஸ்ருதி. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தார் ஸ்ருதி. இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனவும் பேசப்பட்டது. இதுகுறித்து மைக்கேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த இளம்பெண் எனது வாழ்க்கையின் முக்கிய, சிறந்த நண்பராக எப்போதும் இருப்பார்’ என்றும் பதிவிட்டிருந்தார். இருவரும் சேர்வார்கள் என நினைத்த ரசிகர்களுக்கு தங்கள் பிரிவை மறைமுகமாக உணர்த்தியுள்ளனர் என்பது பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம்திறந்த ஸ்ருதி, “நான் ரொம்ப கூல் மற்றும் எமோஷனல் டைப்பான பெண். அதனால்தான் என்னவோ என்னை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். நல்லவர்கள் சில நேரங்களில் மோசமானவர்களாகவும் மாறலாம்” என்று கூறியிருந்தார். மேலும் இந்த பிரிவால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும், நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.


திருமண வதந்தி குறித்து ஸ்ருதி மற்றும் சாந்தனு பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரீஸ்

அதன்பிறகு மீண்டும் காதலில் விழுந்தார் ஸ்ருதி. ஆந்திராவைச் சேர்ந்த ஓவியரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவரின் ஓவியத்தைப் பார்த்து மனதை பறிகொடுத்தாகவும், தானே காதலை முதலில் வெளிப்படுத்தியதாகவும் நேர்க்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். கடந்த ஓரிரு ஆண்டுகளாக மும்பையில் லிவிங் டுகெதெரில் வசித்துவரும் இவர்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பிரியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்திகள் பரவின. ஆனால் அவை அனைத்தும் வதந்தியே என இருவரும் தங்களது சமூக ஊடகங்களில் விளக்கம் அளித்திருந்தனர். ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டா பக்கத்தில், “எனக்கு திருமணமாகவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரிவிக்கும் ஒருவர் இதை ஏன் மறைக்கவேண்டும்? எனவே என்னைப் பற்றி தெரியாதவர்கள் தயவுசெய்து அமைதியாக இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் சாந்தனுவும், “நீங்கள் அனைவரும் அமைதியாக இருங்கள். எங்களுக்கு திருமணம் ஆகவில்லை. எங்களைப் பற்றி தெரியாதவர்கள் தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்!” என்று கேட்டுக்கொண்டார்.


சலார் பட காட்சி - பிறந்தநாள் கொண்டாட்டம் - லோகேஷுடன் புதிய பட அறிவிப்பு

பிறந்தநாள் கொண்டாட்டமும் புதிய படமும்

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது 38வது வயதில் அடியெடுத்து வைத்தார். பிறந்தநாளை கோஸ்ட் தீமில் மண்டை ஓடு கேக் வெட்டி காதலன் மற்றும் குடும்பத்தினருடன் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் பிருத்விராஜ், பிரபாஸுடன் இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்கமல் நிறுவனத்துடன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதே நிறுவனத்தின்கீழ் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாஸ் ஹிட்டடித்தது. அதனால் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக, ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த போஸ்டரில் Inimel Delulu is the New Solulu என்ற கேப்ஷனும் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இது திரைப்படமா? அல்லது ஸ்ருதி ஹாசனின் புது ஆல்பத்திற்கான ப்ரமோஷனா? ஸ்ருதியுடன் லோகேஷும் நடிக்கவிருக்கிறாரா? அல்லது LCU-வில் ஸ்ருதியா? என்பது போன்ற பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Updated On 19 Feb 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story