சித்தார்த்தின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த ‘சித்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் பெற்றதைத் தொடர்ந்து ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சித்தா’. சித்தார்த்தின் நேர்த்தியான நடிப்பும் சமூக அக்கறையும் கொண்ட இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் ‘சந்திரமுகி 2’, ‘இறைவன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் பட்ஜெட் மற்றும் பிரமோஷன்களின் அடிப்படையில் முன்னிலைப்படுத்திப் பேசப்பட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எட்டியது என்னவோ ‘சித்தா’ தான்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். இவர் ‘சேதுபதி,’ ‘சிந்துபாத்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற வெவ்வேறு கதைகளம் கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘சித்தா’ திரைப்படத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதன் கட்டாயம் குறித்து மிகத் தெளிவாக விளக்குவதோடு பெற்றோர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான கதையோட்டத்திலும் இயக்கியிருக்கிறார். மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தபோதிலும், வசூல் ரீதியில் ‘சித்தா’ பெரும் வெற்றியை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்தகட்டமாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது ‘சித்தா’.


’சித்தா’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. 15 கோடி ரூபாயில் ’சித்தா’ திரைப்படத்தை வாங்கிய நிலையில் அடுத்த வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த மாதமே விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே திரையரங்கு மற்றும் ஓ.டி.டி யில் திரைப்படத்தை தவறவிட்டவர்கள் எளிமையாக தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கலாம். ஏனென்றால் ’சித்தா’ அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு சமூக அக்கறை கொண்ட படமாகும்.

Updated On 23 Oct 2023 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story