இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைப்படங்களில் வரும் சில கதாபாத்திரங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுவதுண்டு. அந்த வகையில் ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் கான்ட்ராக்டர் நேசமணி இரு தசாப்தங்களைக் கடந்தும் மீம்ஸ்கள் வழியே நம்முடன் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்தப் பாத்திரத்தைப் படைத்தவர் இயக்குநர் சித்திக். இவர் இன்று நம்மோடு இல்லை; ஆனால் அவர் நினைவுகள் என்றும் திரைப்படங்கள் மூலம் நிழலாடிக் கொண்டே இருக்கும். ஆம், இயக்குநர் சித்திக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திரைத்துறை அனுபவங்களைப் பற்றி நாம் இப்பதிவில் காண்போம்.


இயக்குநர் சித்திக்

சித்திக்-லால்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சித்திக், கலாபவன் நாடக்குழு மூலம் நாடகத்துறைக்குள் நுழைந்தவர். இயக்குநர் பாசில் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த சித்திக் பாசிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கலாபவன் நாடக்குழுவில் ஒன்றாக பணியாற்றிய லால் உடன் சேர்ந்து சித்திக் சினிமாவுக்கு கதை எழுதத் தொடங்கினார். இந்த சித்திக்-லால் கூட்டணி சில காலத்துக்கு மலையாள திரையுலகைப் புரட்டிப்போட்டது. இவர்கள் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் ‘பப்பன் பிரியபெட்ட பப்பன்’. இதை சத்தியம் அந்திக்காடு இயக்கினார். அப்போது அது பெரும் வெற்றிப் படமாக இல்லாவிட்டாலும் மலையாள திரையுலகிற்கு புதிய முயற்சியாக இருந்தது.


சித்திக் மற்றும் லால்

அவல நகைச்சுவை

கலை மற்றும் யதார்த்த வகை கதைகள் உலவிக் கொண்டிருந்த மலையாள திரையுலகில் புதிய வகை நகைச்சுவை பாணிகளில் கதை அமைத்தனர் இந்த ஜோடி. அவல நகைச்சுவைப் பாணியில் இந்த கூட்டணி எழுதிய ‘நாடோடிக் காற்று’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தமிழில் பாண்டியராஜன் நடிப்பில் ‘கதாநாயகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ திரைப்படம் சித்திக்-லால் கூட்டணிக்கு பெரும் திருப்புமுனையை உண்டாக்கியது. பிளாக் காமெடி பாணியில் அமைந்த இந்தப் படத்தின் மூலம் சித்திக் இயக்குநராகவும் அவதானித்தார். இந்தப் படம் பிரபு, ரேவதி நடிப்பில் ‘அரங்கேற்ற வேளை’ என தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பின்னாளில் இந்தப் படத்தை இந்தியில் ‘ஹேரா பேரி’ என்ற பெயரில் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்த கூட்டணியில் வெளியான மற்றொரு வெற்றிப்படம் ‘வியட்நாம் காலனி’. இந்தப் படம் தமிழிலும் அதே பெயரில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்தது.

இயக்குநர் அவதாரம்

லால் நடிப்பிலும் தயாரிப்பிலும் கவனத்தைச் செலுத்த, சித்திக் தொடர்ந்து இயக்கமும் கதையுமாக பயணித்தார். லால் தயாரித்த ‘பிரண்ட்ஸ்’ மலையாளப் படத்தை சித்திக் இயக்கினார். இந்தப் படத்தை அதே பெயரில் தமிழிலும் சித்திக்தான் இயக்கினார். மலையாளத்தைக் காட்டிலும் தமிழில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ இன்றளவும் மனதில் நிற்கும் பாத்திரமாகிவிட்டது. அதேபோன்று ‘குரோனிக் பேச்சிலர்’, ‘பாடிகார்டு’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என மலையாளத்தில் ஹிட் அடித்தப் படங்களையும் தமிழில் முறையே ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என இயக்கியிருந்தார் சித்திக். அதுமட்டுமின்றி ‘பாடிகார்டு’ திரைப்படத்தை அதே பெயரில் சல்மான் கானை வைத்து இந்தியில் இயக்கி பாலிவுட்டிலும் ஹிட் அடித்தார்.


ஃபிரண்ட்ஸ் படப்பிடிப்பில் சித்திக், சூர்யா மற்றும் விஜய்

காவியப் படைப்புகள் மட்டுமல்லாமல் நகைச்சுவை படைப்புகள் மூலமும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சித்திக்.

Updated On 21 Aug 2023 6:36 PM GMT
ராணி

ராணி

Next Story