இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

“இந்த உலகத்துக்கிட்ட ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்” என்று சிவகார்த்திகேயன் தான் தயாரித்த ‘கனா’ படத்தில் ஒரு வசனத்தை வைத்திருந்தார். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அந்த வசனத்தை இடம்பெறச் செய்த SK -விற்கு நன்றாகவே பொருந்தும். காரணம் திரையுலகில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று அவர் தொட்டிருக்கும் உச்சம் என்பது அபரிமிதமானது. சாதாரண ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது கலை வாழ்க்கையை தொடங்கியவர், இன்று எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வெள்ளித்திரையில் நுழைந்து நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல பரிமாணங்களை பெற்று சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்க்கு நிகராக பேசப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார். இந்த அசுர வளர்ச்சி தான் இன்று அவரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.வெற்றி, தோல்வி என்பது எல்லோரது வாழ்க்கையிலும் சகஜமான ஒன்றுதான்.அதுமாதிரியான நிகழ்வுகள் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையிலும் உள்ளன. அந்த வகையில் தற்போது நிதி சிக்கல் போன்ற பிரச்சினைகளால் ஆரம்பிப்பது, கிடப்பில் போடுவதுமாக இருந்த SK -வின் ‘அயலான்’ திரைப்படம், தற்போது நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவர உள்ளது. இந்த நிலையில், படம் உருவான விதம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றிற்கு பொருத்தமான நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், இன்றைய சூழலில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமான ஒருவராக பார்க்கப்படுவது என்றால் அது நிச்சயம் சிவகார்த்திகேயன் தான். எதிர்நீச்சல் போட்டு தன் கனவை நனவாக்கிக் கொண்டு, அதிக ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர், தயாரிப்பாளர்களின் ஆதர்ச நாயகனாகவும் விளங்கி வருகிறார். திரையில் அறிமுகமான முதல் படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும், அடுத்தடுத்து வெளிவந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'ரெமோ', 'வேலைக்காரன்', 'சீமராஜா', 'நம்ம வீட்டுப் பிள்ளை', 'டாக்டர்', அண்மையில் வெளிவந்த 'மாவீரன்' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி, இவரது சமகாலத்து நடிகர்களே பார்த்து வியந்து போகும் அளவிற்கு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ஒரு சில படங்கள் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், அவரின் பேமிலி ஆடியன்ஸ் பலத்தால் வசூல் ரீதியாக பெரிய பின்னடைவை சந்திக்காமல் தப்பித்துக் கொண்டார். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், அவர்களின் அசைக்க முடியாத இளவரசராகவும் தற்போது மாறியுள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றிய போது

தயாரிப்பாளர் அவதாரம்

தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன், அதோடு மட்டும் நின்று விடாமல், தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக மெருகேற்றிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்றார். அந்த வகையில், முதன் முதலாக தன்னோடு நீண்ட காலமாக அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று உடன் இருந்த தனது நண்பனின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில் ‘கனா’ என்ற படத்தை தயாரிக்க முன்வந்தார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வெற்றியை பெற்றது. இருப்பினும் தொடர்ந்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அடுத்த ஆண்டே விஜய் டிவி புகழ் ரியோ ராஜை கதாநாயகனாக முன்னிறுத்தி வெளிவந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தினையும் பிறகு 2021ல் பிரதீப் அந்தோணி நடித்து வெளிவந்த ‘வாழ்’ பத்தினையும் தயாரித்தார். ஆனால் இவ்விரு படங்களும் பெரிய அளவில் சோபிக்காமலே போய்விட்டது. இதனால் பொருளாதார ரீதியாக சிறிய சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், சற்று நிதானமாக யோசித்து கேஜேஆர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தான் நடித்து வெளிவந்த ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘டாக்டர்’ படம் வெளியான 25 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்தது. மேலும் இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையையும் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினி, விஜய், அஜித்திற்கு இணையாக வசூல் நாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.


சிவகார்த்திகேயன் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்

நீண்டகால தயாரிப்பில் இருக்கும் ‘அயலான்’

'பிரின்ஸ்', 'மாவீரன்' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. பின்னர் 2018 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி 2021 ஜனவரி வரை நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் 2022 நவம்பர் மாதத்தில் தொடங்கி நடைபெற்ற நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மேலும் படம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அதற்காக டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும், அக்டோபர் 6 அன்று அதை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அயலான் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ‘அயலான்’ படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


'அயலான்' பட டீசரில் ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன்

தாமதத்திற்கு காரணம் என்ன?

இயக்குனர் ஷங்கரின் எந்திரன், 2. O ஆகிய படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படமும் இடம்பெற உள்ளது. மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சி ஜி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பிரம்மாண்டம் கொண்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தயாரிப்பு தரப்பு இப்படத்திற்காக இதுவரை 70 கோடிக்கும் மேல் சிஜி-க்காகவே செலவிட்டுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இப்படம் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்பு தாமதமாக படப்பிடிப்பு தொடங்க முதற் காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். ஏனென்றால் இப்படத்தில் ஒப்பந்தம் ஆன போது அவர் ஏற்கனவே ‘சீமராஜா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு பின்னர் அயலானில் நடிப்பதாக இருந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ‘வேலைக்காரன்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படங்கள் வரிசையாக வரவே அப்படங்கள் அனைத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார். இதனால் மிகுந்த வருத்தமுற்ற 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பொருளாதார சிக்கலால் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகு கேஜேஆர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கைகோர்த்த சிவகார்த்திகேயன் 2020 ல் படத்திற்கான தலைப்பை அறிவித்தார். பின்னர் படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கி முடிந்து இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


'அயலான்' திரைப்பட போஸ்டர்

‘அயலான்’ குறித்து ஆஸ்கர் நாயகன்

தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதல் தற்போது வரை அனிருத், டி.இமான் போன்றவர்களுடன் அதிகமாக பணியாற்றிய சிகார்த்திகேயன், தற்போது முதல் முறையாக ‘அயலான்’ படத்தின் மூலம் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மானுடன் இணைந்துள்ளார். பின்னணி இசைக்காக படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ”நிச்சயம் இது சாதாரண தமிழ் படமே இல்லை. உலகத்தரம் வாய்ந்த அதே நேரம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாகவும் உள்ளது. அப்படி இருக்கும் போது இப்படத்திற்கு சாதாரணமாக வேலை செய்து விடக்கூடாது. இதற்கு கண்டிப்பாக நேரம் எடுத்து பொறுமையாகத்தான் வேலை செய்ய வேண்டும்” என்று கூறி மிகவும் சிரத்தை எடுத்து பின்னணி இசைக்கோர்ப்பில் ஈடுபட்டு வருகிறாராம். இதுமட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் நிச்சயம் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியானது என்று புகழ்ந்ததில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் நம்பிக்கையோடு படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.


'அயலான்' படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

Updated On 16 Oct 2023 7:07 PM GMT
ராணி

ராணி

Next Story