
தமிழ் திரையுலகில் ஒரு சில படைப்பாளிகள் மட்டுமே தங்களின் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள். கதை சொல்லும் நேர்த்தி, கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதம், நடிப்பில் தனித்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை கையாளும் மெருகேறிய திறன் என ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தனி முத்திரை பதிக்கும் கலைஞர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில், இயக்குநராகவும் நடிகராகவும் தனது பன்முகத் திறனை நிரூபித்து, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர் எஸ்.ஜே. சூர்யா. 'வாலி', 'குஷி', 'நியூ' போன்ற தனது ஆரம்பகால படைப்புகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராக உருவெடுத்து, 'இறைவி', 'ஸ்பைடர்', 'மெர்சல்', 'மாநாடு', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்களில் தனது மாறுபட்ட நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். வெகுநாட்களாகவே ஒரு சிறப்பான படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தி வந்த சூர்யா, தற்போது 10 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து, 'கில்லர்' என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கி வருகிறார். 'கில்லர்' திரைப்படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும்? எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கம் மற்றும் நடிப்புத் திறன்கள் இத்திரைப்படத்தில் எவ்வாறு வெளிப்படும்? என்பது வெளியீட்டிற்குப் பிறகே தெரியவரும். இருப்பினும், அவரது கடந்தகாலப் படைப்புகளின் பின்னணியில் இந்த புதிய முயற்சிக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? அவர் கடந்து வந்த பாதைகளில் கண்ட வெற்றிகள் என்னென்ன? 'நடிப்பு அரக்கன்' எனப் புகழப்படும் அளவுக்கு அவரது நடிப்புத் திறன் எவ்வாறு மெருகேறி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது போன்ற தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கும் திறமை
எஸ்.ஜே. சூர்யா நடிகராக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், இயக்குநராகவே தனது பயணத்தைத் தொடங்கினார். 1999-ல் வெளிவந்த அவரது முதல் படமான 'வாலி'யில், அஜித் குமாருக்கு இரட்டை வேடங்கள் அளித்து, சகோதரப் பாசத்தையும் ஒருதலைக் காதலையும் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தப் படம், தமிழ் சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் முறைகளை உடைத்து, சூர்யாவின் தனித்துவமான இயக்கத் திறமைக்கு சான்றாக அமைந்தது. குறிப்பாக, இதில் கதாபாத்திரங்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம், உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் பாடல்களில் கதை சொல்லும் நுட்பம் ஆகியவை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து, 2000-ம் ஆண்டில் வெளியான 'குஷி', காதல் கதைகளுக்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தது. விஜய் மற்றும் ஜோதிகா நடித்த இந்தப் படம், ஆண்-பெண் உறவில் எழும் ஈகோ சார்ந்த நுணுக்கமான சிக்கல்களை நகைச்சுவையுடனும் யதார்த்தத்துடனும் சித்தரித்த விதத்தால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற கூர்மையான வசனங்களும், அற்புதமான காட்சிகளும் 'குஷி' திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் மாபெரும் வெற்றியடையச் செய்தன. பின்னர், அடுத்தக்கட்ட முயற்சியாக 2004-ல் வெளியான 'நியூ' திரைப்படம், எஸ்.ஜே. சூர்யாவின் தனித்துவமான சிந்தனைக்கும், புதுமையான முயற்சிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது.
எஸ்.ஜே.சூர்யாவின் 'வாலி' மற்றும் 'குஷி' திரைப்படக் காட்சிகள்
சிறுவன் பெரியவனாக மாறும் ஒரு கற்பனைக் கதையை அறிவியல் புனைக்கதை அம்சங்களுடன் கலந்து, வணிகரீதியாகவும் சமூகத்திற்கு ஒரு சின்ன செய்தியையும் சொல்லும் விதமாக அவர் உருவாக்கிய விதம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் இந்தப் படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், தமிழ் சினிமாவில் புதிய கதைக்களங்களை அறிமுகப்படுத்தும் சூர்யாவின் துணிச்சலை ஆழமாக நிரூபித்தது. பிறகு, 2005-ல் வெளியான 'அன்பே ஆருயிரே' காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும், பிரிவுகளையும், அதன் உளவியல் தாக்கங்களையும் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியது, ஆனால் இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது. அதன்பின், 2015-ல் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான 'இசை' திரைப்படத்தில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என அவரது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியதுடன், இசைத்துறைக்குள் நிலவும் போட்டி, உறவுச் சிக்கல்கள் மற்றும் மனித மனதின் விசித்திரமான அம்சங்களை ஆழமாக ஆராய்ந்தது பலரால் பெரியளவில் ரசிக்கப்பட்டது. எனினும் இந்தப் படமும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றபோதிலும், வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. இவ்வாறு, இத்தனை ஆண்டுகளில் எஸ்.ஜே. சூர்யா சில படங்களையே இயக்கி இருந்தாலும், அவற்றில் மூன்று படங்களே வெற்றி பெற்றிருந்தாலும், புதுமையான கதைக்களங்கள், வலுவான கதாபாத்திர வடிவமைப்பு, தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் மற்றும் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைக்கும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களால் தொடர்ந்து நட்சத்திர இயக்குநராகவே பார்க்கப்பட்டு வருகிறார். அதனால்தான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்க வந்துள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதோடு, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகவும் இன்றும் திகழ்கிறார்.
ஹீரோவும் நானே! வில்லனும் நானே!
இயக்குநராகப் பெரும் வெற்றி பெற்ற எஸ்.ஜே. சூர்யா, தனது நடிப்பு ஆசையை ஒருபோதும் கைவிட்டதில்லை. இதன் காரணமாகவே ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ போன்ற படங்களை தானே இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால், ஒரு நடிகராக அவர் பெற்ற வெற்றி, இயக்குநராக அவர் அடைந்த புகழுக்கு ஈடாக துவக்கத்தில் இல்லை. காரணம் அடுத்தடுத்து அவர் கதாநாயகனாக நடித்த ‘கள்வனின் காதலி’, ‘திருமகன்’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததே ஆகும். இருந்தும் இந்தக் காலகட்டத்தில், 2012-ல் வெளியான ‘நண்பன்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த உத்வேகத்துடன் 2015-ல் ‘இசை’ படத்தைத் தானே இயக்கி, இசையமைத்து, நடித்த போதும், அது விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால், இயக்குநராகப் பெற்ற புகழை நடிகனாக தக்கவைத்துக்கொள்வது எஸ்.ஜே சூர்யாவிற்கு தொடக்கத்தில் சவாலாகவே இருந்தது. இந்த அனுபவம் அவருக்கு ஒரு கற்றல் காலகட்டமாகவும், தனது நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.
'இசை' மற்றும் 'டான்' திரைபபடங்களில் எஸ்.ஜே.சூர்யா
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ‘இறைவி’ படத்திற்குப் பிந்தைய எஸ்.ஜே. சூர்யாவின் பயணம், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் அவருக்குப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2017-ல் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் ஒரு சைக்கோ வில்லனாக அவர் வெளிப்படுத்திய மிரட்டலான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிரித்த முகத்துடன் கொடூரமான செயல்களில் ஈடுபடும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா வெளிப்படுத்திய நடிப்பு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவருக்குப் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. பிறகு அதே ஆண்டில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, தனது பன்முகத் திறனை மீண்டும் நிரூபித்தார். குறிப்பாக இவ்விரு படங்களிலும், நாயகனுக்கு நிகராக வில்லனை வலுவாகக் காட்டி, கதைக்கு விறுவிறுப்பை சேர்த்ததில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு முக்கியப் பங்காற்றியது.
பிறகு இதற்கு நேர்மாறாக, 2019-ல் வெளியான ‘மான்ஸ்டர்’ படத்தில் அஞ்சனம் அழகிய பிள்ளை என்ற வெகுளித்தனமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தவர், 2021-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ராம்சே என்ற சைக்கோ கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 2022-ல் வெளிவந்த ‘டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பூமிநாதன் என்ற ஆசிரியராக, ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் பலரையும் கண்கலங்க வைத்தவர், பிறகு அதே ஆண்டில் ‘கடமையை செய்’ படத்தில் அசோக் மௌரியனாக மீண்டும் கதாநாயகனாக நடித்தார்.
நடிப்பு அரக்கனாக எஸ்.ஜே. சூர்யா
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2016-ல் வெளியான ‘இறைவி’ திரைப்படம். இப்படத்தில், சுயநலமும் கோபமும் கொண்ட, அதே சமயம் அன்பையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கும் அருள் என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக முகபாவனைகள் மற்றும் உடல்மொழி மூலம் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம், ஒரு கணவனின் இயலாமை, கோபம், ஆழ்மனதில் புதைந்த பாசம் ஆகியவற்றை அப்பட்டமாகப் பிரதிபலித்தது. அதிலும் படத்தின் கிளைமாக்சில் ஆண் பெண் தொடர்பான நீண்ட நெடிய காட்சி ஒன்றில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் பேசிய வசனங்களும் ஒரு இயக்குநராக இருந்து நடிகனாக மாறியவர் என்பதை மறந்து, ஒரு சிறந்த நடிகராகவே எஸ்.ஜே. சூர்யாவை அடையாளம் காட்டியது.
‘இறைவி’ படத்தின் மூலம் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து, எஸ்.ஜே. சூர்யா தனது இயக்குநர் பணியை சிறிது காலம் ஒதுக்கி வைத்துவிட்டு, நடிப்புக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு வந்த கதாபாத்திரங்கள் மாறுபட்டவையாகவும், சவாலானவையாகவும் இருந்தன. பின் வில்லனாக, ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்தாலும் இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு திறனுக்கு ஒரு சிகரமாக அமைந்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம். டைம் லூப் கதையில் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாகவும் டிஜிபி தனுஷ்கோடியாக இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டதோடு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்திய அளவில் கவனத்தை பெற்று தந்தது. குறிப்பாக ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டபோதும், சலிப்பு தட்டாத நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்த விதம், அவரது நடிப்பு திறமைக்கு சான்றானது. அதிலும் சிம்புவுடன் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வில்லனுக்கே ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு பெரும் பாராட்டை பெற்றது.
நடிகர், வில்லன் என்று நடிப்பு அரக்கனாக வலம் வர தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா...
பின்னர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புத் திறனுக்கு மற்றுமொரு உச்சகட்ட உதாரணமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த இரட்டை வேடங்களான தந்தை மகன் ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மையை கொடுத்து, ரசிகர்களை வெகுவாக ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக, ஜாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழி, வசன உச்சரிப்பு, தனித்துவமான நடிப்பு ஆகியவை அவர் ஒரு நடிகராக அடைந்துள்ள வளர்ச்சியை தெள்ளத்தெளிவாக நிரூபித்தது. இதனாலேயே 'மார்க் ஆண்டனி' வெறும் விஷால் படம் மட்டுமல்ல, அது எஸ்.ஜே. சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பின் களம் என்ற அடையாளத்தை பெற்றது. இப்படத்தில் அவர் திரையில் தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் ஒருவித எலக்ட்ரிக் அதிர்வை உணர வைத்ததோடு, "ஏண்டா... உனக்கு பொம்பள சோக்கு கேக்குதா?" போன்ற வசனங்களின் மூலம் கவனத்தை ஈர்த்து கை தட்டல்களை அள்ளி இருப்பார். இதன் பின்னர் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திலும் ஒரு நடிகராகவும், வில்லனாகவும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளை பெற்ற எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து 'ராயன்', 'பொம்மை', 'கேம் சேஞ்சர்' மற்றும் "வீர தீர சூரன்" போன்ற படங்களிலும் ஹீரோ, வில்லன் என இரு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து தனது நடிப்புத் திறமையை பறைசாற்றினார்.
மீண்டும் இயக்குநராக சாதிப்பாரா?
தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள எஸ்.ஜே. சூர்யா, தனது அபாரமான நடிப்புத் திறனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இருப்பினும், தான் ஒரு படத்தை இயக்கி கதாநாயகனாக மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்த எஸ்.ஜே. சூர்யா, தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் தொப்பியை அணிந்து, 'கில்லர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோகுலம் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா நாயகனாக நடிப்பதோடு, இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார். நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகும் 'கில்லர்', காதல் கலந்த ஆக்ஷன் படமாக பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக பல ஆண்டுகளாக கதை எழுதி வருவதாகவும், இது தனது கனவுப் படம் என்றும் அவரே கூறியுள்ளார். இப்படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா ஒரு பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளாராம்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கில்லர்' பட போஸ்டர் காட்சிகள்
ஏற்கனவே ‘இந்தியன் 3’, ‘சர்தார் 2’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ போன்ற படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என நடித்து முடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு, ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படங்களுடன் தற்போது இணைந்துள்ள ‘கில்லர்’ அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே. சூர்யாவின் கலைப் பயணம் வித்தியாசமானது. எடுத்த எடுப்பிலேயே இயக்குநராக உச்சத்தைத் தொட்டு, இடையில் பல தடுமாற்றங்களை சந்தித்து, மீண்டும் நடிகராக உச்சத்தில் இருக்கும் ஒரு தனித்துவமான கலைஞர் அவர். இதுவரை அவர் சந்தித்த வெற்றி, தோல்விகளின் பாடம், நடிப்பில் கண்டுள்ள உச்சம் ஆகியவை இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள எஸ்.ஜே. சூர்யா, ‘கில்லர்’ படத்தின் மூலம் தனது இயக்குநர் முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிப்பாரா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை நிச்சயம் எஸ்.ஜே சூர்யா காப்பாற்றுவார் என நம்புவோம்.
