இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘தக் லைஃப்’ எப்படி இருக்கிறது? கமல்ஹாசனின் மன்னிப்பு விவகாரம், நடிகர் ரவி மோகனின் தயாரிப்பாளர் அவதாரம், டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவுக்கு இயக்குநர் தியாகராஜன் நன்றி, அட்லீ - அல்லு அர்ஜுனுடன் இணைந்த தீபிகா படுகோன், காதலியை கரம்பிடித்த நாகா சைதன்யா தம்பி அகில் அக்கினேனி, பிரபல ஹாலிவுட் நடிகை பயன்படுத்தும் குளியல் சோப் உள்ளிட்ட பல சுவாரஸ்ய தகவல்களை இந்த வார சினி பிட்ஸ் பகுதியில் பார்க்க இருக்கிறோம்...


தவறாக பேசினால்தான் மன்னிப்பு என திட்டவட்டமாக கூறிய கமல்ஹாசன்

தவறாக பேசினால்தான் மன்னிப்பு... புரிந்து கொண்டதற்கு அல்ல - கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாக குறிப்பிட்டார். இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் தெரிவித்தது. தொடர்ந்து கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தக் லைஃப்’ படம் மீதான தடையை நீக்கி, திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், கமல் ஒரு வரலாற்று ஆசிரியரா? மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. ஆனால் அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக, தவறாக பேசினால்தான் மன்னிப்பு; தவறாக புரிந்துகொண்டதற்கு அல்ல என கமல் திட்டவட்டமாக தெரிவித்து, மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.


‘தக் லைஃப்’ படம் ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் விமர்சனம்

கமல் - மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ கூட்டணி எப்படி?

இயக்குநர் மணிரத்னமும், நடிகர் கமல்ஹாசனும் 38 ஆண்டுகளுக்கு பின் இணைந்த படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் நாசர், அபிராமி, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 5ம் தேதி படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த சுவாரசியங்கள் படத்தில் இல்லை எனவும், படம் ஏமாற்றமே அளித்தது எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வசூலும் சுமார் என்றும், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் வெறும் ரூ.18 கோடியே வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


மாமியாருக்கு போட்டியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி?

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ஜெயம் ரவி!

அண்மைக் காலமாக இணையத்தில் வைரலாக இருக்கும் நடிகர் என்றால் அவர் ரவி மோகன்தான். அதற்கு காரணம் அவரின் மனைவி ஆர்த்தியுடனான மோதலும், தோழி கெனிஷாவுடனான நட்பும்தான். கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி அறிவித்தார். ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஆர்த்தி அறிவித்தார். மேலும் தன்னை ரவியின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனவும் ஊடகங்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில்தான் கெனிஷாவுடன், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இல்ல திருமணத்திற்கு ரவி சென்றிருந்தது கவனம் ஈர்த்தது. இதனையடுத்து ஆர்த்தி மற்றும் ரவி இடையே அறிக்கை மோதல் வெடித்தது. ஆளுக்கொரு அறிக்கையை வெளியிட்டு ஒருவரையொருவர் விமர்சிக்க தொடங்கினர். பின்னர் இதுதொடர்பாக ரவி வழக்கு ஒன்று தொடர, பொதுவெளியில் அறிக்கை வெளியிடுவதை இருதரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இவர்கள் தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோக்கள், செய்திகளை ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் திருப்பி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத அவதாரம் ஒன்றை ரவிமோகன் எடுத்துள்ளார். அது என்னவென்றால் நடிகர் ரவி தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ள ரவி, அதற்கு ‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ என பெயர் வைத்துள்ளார். இதன் லோகோவை வெளியிட்டு, தான் தயாரிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.


டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மம்பட்டியான் பாடல் வைத்ததற்கு தியாகராஜன் நன்றி!

நான்தான் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவுக்கு பணம் கொடுக்கணும்!

தற்போது எடுக்கப்படும் பல படங்களில் பழைய திரைப்படங்களின் பாடல்களை பயன்படுத்துவது ட்ரெண்டாகி வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களாக இருக்கும். இவ்வாறு பயன்படுத்தப்படும் தனது பாடல்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் மறுபக்கம் இளையராஜாவிற்கு ஆதரவும் கிடைத்தது. காரணம் அவரது அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை படத்தில் பயன்படுத்துவது தவறு என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ரூ.7 கோடி சம்பளம் பெறும் இசையமைப்பாளர், சிறந்த பாடலை தரமுடியவில்லையா என்று, குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்காக கங்கை அமரன் ஆதங்கத்துடன் பேசினார். இந்நிலையில் தனது பாடலை பயன்படுத்தியதற்கு தான்தான் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினருக்கு பணம் கொடுக்க வேண்டும் என இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் பேசியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் பட பாடல் இடம்பெற்றிருந்தது. படத்தில் மம்பட்டியான் பாடல் இடம்பெற்றது குறித்து பேசிய மம்பட்டியான் இயக்குநர் தியாகராஜன், “என் படத்தின் பாடலை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு என் வாழ்த்துகள். இதற்காக யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து இதை கண்டித்து வழக்கு தொடர சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். என் பட பாடல் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்கு சந்தோஷப்படுகிறேன். பணம் பார்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. நியாயமாக பார்த்தால் நான்தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என் பட பாடலை மீண்டும் ட்ரெண்டாக்கியதற்கு. படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினேன்” என தெரிவித்தார்.


நாகார்ஜுனா இளைய மகன் அகில் அக்கினேனி காதலியை கரம்பிடித்தார்

காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

தனது மூத்த மகன் நாக சைதன்யாவின் கல்யாணத்தை முடித்த கையோடு, தனது இளைய மகன் அகில் அக்கினேனியின் திருமணத்தையும் முடித்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. நடிகை சமந்தாவை கரம்பிடித்த நாக சைதன்யா சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனையடுத்து நடிகை சோபிதாவை அவர் கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடந்த நிலையில், தற்போது அவரின் தம்பி அகில் அக்கினேனி திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளது. ஹூரோவாக நடித்துவரும் அகில் அக்கினேனியும், ஜைனப் என்பவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்துவந்த நிலையில், ஜூன் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!

பெரிய பெரிய ஸ்டார்களை வைத்து படம் இயக்கிவரும் அட்லீ, தற்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை இயக்குகிறார். பான் வேர்ல்ட் படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கால்பதித்து வரும் அட்லீயின் இந்த பிரம்மாண்ட கூட்டணியில் தற்போது நடிகை தீபிகா படுகோனும் இணைந்துள்ளார். ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் திரை தோற்றம், இயக்குநர் அட்லீ, சன் பிக்சர்ஸ் நிறுவனம், எப்போதும் ரசிகர்களை தன்வசத்தில் வைத்திருக்கும் தீபிகா படுகோன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.


ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீரில் தயாரிக்கப்படும் சோப்!

பிரபல ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரிக்கப்படும் சோப்!

திரையுலகில் பல நடிகர், நடிகைகள் பிசினஸில் இறங்கி நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் பிரபல ஹாலிவுட் நடிகை அழகியல் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, ஆண்களுக்கான சோப்புகளை தயாரிக்கும் டாக்டர் ஸ்குவாட்ச் நிறுவனத்துடன் இணைந்து, சோப்புகளை தயாரிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வெறும் சோப்புதானே? இது ஏன் இவ்வளவு கவனம் பெறுகிறது? பேசுபொருளானது? என நாம் சிந்திக்கலாம். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்னவென்றால், அவர் அறிமுகப்படுத்திய சோப்புகள், அவர் குளித்த நீரிலிருந்து தயாரிக்கப்படுகின்றனவாம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலம் அவரே அறிவித்துள்ளார். பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருட்களின் கலவையுடன், சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து சோப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்புகள் ஜூன் 6 முதல் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு சோப்பின் விலை $8 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.685 ஆகும்.


கார் விபத்தில் காயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ

நடிகர் ஷைன் டாம் சாக்கோ கார் விபத்து.. சோகம்!

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தனது தந்தை சிபி சாக்கோ, தாய் மரியம் கார்மல் மற்றும் சகோதரர் ஜோஜோன் சாக்கோ என குடும்பத்துடன் சிகிச்சைக்காக கேரளாவிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்றார். பெங்களூரு நெடுஞ்சாலையில் தர்மபுரி பாலக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் நொருங்கியது. உடனடியாக டிரைவர் உட்பட காயமடைந்த ஐவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ஷைனை பிரபலங்கள் பலரும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On 10 Jun 2025 10:55 AM IST
ராணி

ராணி

Next Story