இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த வாரத்தில் எந்தெந்த நடிகர்கள் எங்கு எப்போது ஓட்டு போட்டனர் என்ற டாப்பிக்குகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பட ரிலீஸ், டீசர், திருமணம், கொண்டாட்டங்கள் குறித்த தகவல்களும் அதிகளவில் ட்ரெண்டாகின. குறிப்பாக நடிகர் விஜய், அஜித் இருவருமே வெள்ளை சட்டை அணிந்துவந்து வாக்களிக்க, இருவரும் அடுத்த படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. பிற நடிகர்களும் ஜனநாயகத்தை வலியுறுத்தி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தங்கள் ரசிகர்களை கேட்டுக்கொண்டனர். கடந்த வாரத்தில் தேர்தல் பரபரப்புக்கு நடுவே ட்ரெண்டிங்கில் இருந்த சில சினிமா செய்திகளை பார்க்கலாம்.

தெறிக்கவிடும் ‘வீர தீர சூரன்’ டைட்டில் டீசர்

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய 62வது படமான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், படத்தின் டைட்டில் குறித்து சர்ச்சை எழலாம் என பேசப்படுகிறது. அதற்கு காரணம், 2015ஆம் ஆண்டு இதே டைட்டிலில் படம் தொடங்கப்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்த படத்தை ‘சகுனி’ பட இயக்குநர் சங்கர்தயாள் இயக்க, விஷ்ணு விஷால் கேத்தரின் தெரசா, சூரி மற்றும் பல நடிகர்கள் இணைந்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது. இந்நிலையில் அதே டைட்டிலில் விக்ரமின் 62வது பட டீசர் வெளியாகி இருக்கிறது.


விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வீடியோ போஸ்டர்

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் போன்றோரும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பட டீசரிலேயே ‘பாகம் 2’ என குறிப்பிட்டிருப்பதால், முதல் பாகம் இதற்கு பின்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் படத்திற்கு வைக்கப்பட்ட ‘வீர தீர சூரன்’ டைட்டிலை அப்படத்தின் தயாரிப்பாளர் ரினீவல் செய்யாமல் விட்டிருந்தால் மட்டுமே விக்ரம் படத்திற்கு அதே டைட்டிலை பயன்படுத்தி இருக்க முடியும் என்ற நிலையில் இது சர்ச்சையை கிளப்புமா என்பது விரைவில் தெரியவரும்.

இன்ஸ்டாவுக்கு பை-பை சொல்லிவிட்டாரா யுவன்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும் ஏனோ விசில் போடு பாடலில் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் யுவனின் இசை முன்புபோல் இல்லை என சமூக ஊடகங்களில் மீம்ஸ் போட்டும் கலாய்த்தனர். இந்நிலையில் மீம்ஸ் பார்த்து வருத்தப்பட்ட யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வருத்தப்பட்ட யுவனின் ரசிகர்கள் அவரிடம் சமூக ஊடக பக்கங்களில் மன்னிப்பு கேட்டனர்.


டீஆக்டிவேட் ஆன இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் டீஆக்டிவேட் ஆகிவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் யுவன். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஹே காய்ஸ், உங்களுடைய அக்கறையான மெசேஜ்களுக்கு நன்றி. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். என்னுடைய இன்ஸ்டா கணக்கை மீட்க எனது குழு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் வந்துவிடுவேன். லவ் ஆல்வேஸ்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் சங்கர் மருமகனின் விளக்கம்

பிரம்மாண்டத்துக்கு பெயர்போன இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 15ஆம் தேதி திருமணம் நடத்திவைத்தார். இது இரண்டாவது திருமணம் என்றாலும் பிரம்மாண்டம் சற்றும் குறையவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து திரையுலக முன்னணி நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். தனது மகளின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் ஷங்கர் தனது உதவி இயக்குநரையே மருமகனாக்குகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஷங்கரும் அவருடைய மருமகனும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.


இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமணப் புகைப்படம்

ஷங்கரின் மருமகன் தருண் கார்த்திகேயன் பேசியபோது, தான் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை எனவும், தனது தந்தையுடன் சேர்ந்து அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு ஐடி மேன் என தெளிவுபடுத்திக்கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும் இவர்களது திருமணம் காதல் திருமணம் எனவும், தருண், ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். ஐஸ்வர்யா - தருண் திருமண வரவேற்பில் இயக்குநர் அட்லீ, ரன்வீர் மற்றும் அதிதி ஆகியோர் ‘காவாலா’ பாடலுக்கு ஆடிய நடனம் சமூக ஊடகங்களில் படுவைரலாகி வருகிறது.

மீண்டும் திரையில் ஜோடி சேரும் சூர்யா - ஜோ!

சூர்யாவும் ஜோதிகாவும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் தொடங்கி, ‘பேரழகன், ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’ போன்ற படங்களில் சேர்ந்து நடித்தபோது காதல் உருவாகவே இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிறிதுகாலம் நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ திரைப்படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.


இயக்குநர் ஹலிதா ஷமீம், நடிகர் சூர்யா-ஜோதிகா ஜோடி

இந்நிலையில் சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் படுவைரலானது. அடுத்த படத்திற்குத்தான் இருவரும் தயாராகிவருகிறார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் திரையில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை மலையாள பட இயக்குநர் அஞ்சலி மேனன் அல்லது ‘சில்லு கருப்பட்டி’ பட இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடையில் சிக்கனம் காட்டும் பிரபல நடிகை - மிருணால் தாகூர்

சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே இந்தி, தெலுங்கு என முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உருவாகிவிட்டார் நடிகை மிருணால் தாகூர். குறிப்பாக, ‘சீதா ராமம்’ படத்திற்கு பிறகு அதிகளவில் தென்னிந்திய ரசிகர்களை பெற்றுவிட்டார். இந்நிலையில் தான் ஒருபோதும் தனது உடைகளுக்கு ரூ.2000க்கும் மேல் செலவழிக்க மாட்டேன் என்று கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் மிருணால். இதுகுறித்து அவர் பேசியபோது, “நான் சினிமா பின்னணி இல்லாமல் நடிப்புத்துறைக்கு வந்திருக்கிறேன். பல பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இதுவரை டிசைனர் உடைகள் என்று நான் வாங்கியதில்லை.


விலை அதிகமான ஆடைகளை வாங்குவதை வீண் செலவாக பார்ப்பதாக நடிகை மிருணால் தாகூர் கருத்து

என்னுடைய உடைகளுக்கு ரூ.2000க்கு மேல் செலவழிக்க மாட்டேன். விலை அதிகமான ஆடைகளை வாங்குவதை வீண் செலவாக பார்க்கிறேன். பார்ட்டி, விழாக்களுக்குக் கூட வாடகைக்குத்தான் ஆடைகள் வாங்கி உடுத்துகிறேன்” என்று கூறியிருந்தார். தனது ஆடைகள் குறித்து மிருணாலின் இந்த கருத்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது. நடிகை சாய் பல்லவியும் இதேபோல் காஸ்ட்லியான ஆடைகளில் விருப்பம் காட்டுவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார்.

கீர்த்தி சுரேஷ்க்கு திருமணமா?

தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். திரை பின்னனி கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், முதல் இரண்டு படங்கள் கீர்த்திக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தரவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனுடன் இவர் ஜோடி சேர்ந்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அதன்பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவரவே தமிழில், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா என ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவதுண்டு. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். மேலும் பிசினஸ் மேன் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் பேச்சுகள் அடிப்பட்டன.


நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வெளியாகி வரும் வதந்திகள்

இந்நிலையில் கீர்த்தி 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதாகவும் தற்போது செய்திகள் வைரலாகி வருகின்றன. மேலும் அந்த நபர் கீர்த்தியின் நண்பர்தான் எனவும், கல்லூரி காலத்திலிருந்தே இருவரும் காதலித்து வருவதாகவும், அவருக்கு கேரளாவில் பல்வேறு நகைக்கடைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான பிறகே தெரியும்.

Updated On 29 April 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story