இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(08.01.1978 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

சிவாஜி கணேசனுக்கு ஒரு புது ஜோடி கிடைத்து இருக்கிறார். அவர்தான், இலங்கை நடிகை மாலினி பொன்சேகா. இந்தியா- இலங்கை கூட்டுத் தயாரிப்பான "பைலட் பிரேம்நாத்" என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக மாலினி நடிக்கிறார்.

தெய்வ மகன்

"சிவாஜி கணேசன் ஒரு சிறந்த நடிகர். அவரோடு சேர்ந்து நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன்" என்று மாலினி சொன்னார். "தெய்வமகன்" என்ற படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து மெய்மறந்து போனேன்” என்றும் மாலினி கூறினார். சமீபத்தில் "16 வயதினிலே" படம் பார்த்தேன். பிடித்து இருந்தது" என்று மாலினி தெரிவித்தார். "தமிழ் நடிகைகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்" என்று கூறும் மாலினி, சென்னையில் நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, ஸ்ரீதேவி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.


நடிகை மாலினி பொன்சேகா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நீச்சல்

மாலியின் பொழுதுபோக்கு கார் ஓட்டுதல், நீச்சல் அடித்தல். கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த கார் ஓட்டும் போட்டியில் 2-வது பரிசு பெற்றார் மாலினி. “நடிகைகள் உடல் கட்டை அழகாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி அவசியம்" என்று கூறும் மாலினி, தன் உடலை அளவோடு வைத்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டாக, மாலினி சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 70 படங்களில் நடித்து இருக்கிறார்.

திருமணம்


திருமண கோலத்தில் நடிகை மாலினி பொன்சேகா

“நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, “இனிமேல்தான். ஒரு தமிழ் வாலிபரை நான் காதலித்து மணந்து கொண்டால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று சிரித்தார் மாலினி. மாலினி கதாநாயகியாக நடித்த, “நுவன் ரெய்னு", “சாஷீஸ்”, "கம்மிஸ் ஆப் ஏஜ்” ஆகிய சிங்களப் படங்களை இப்போது சென்னையில் நடைபெறும் உலகப் பட விழாவில் காட்டுகிறார்கள்.

Updated On 8 April 2024 6:26 PM GMT
ராணி

ராணி

Next Story