இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா’..? இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு மிகச்சரியாக பொருந்தும். அவர்தான் தமிழ் சினிமாவில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, இன்றும் அதே புத்துணர்ச்சியுடன் 'யங் சூப்பர் ஸ்டாராக' வலம் வரும் எஸ்.டி.ஆர், அதாவது நடிகர் சிலம்பரசன். இவர் வெறும் நடிகர் என்பதோடு நின்றுவிடாமல் தந்தையை போலவே இயக்குநர், தயாரிப்பாளர், மிகச் சிறந்த நடன கலைஞர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று சினிமாவின் அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த நடிகரான சிலம்பரசனுக்கும், இன்று பாலிவுட், ஹாலிவுட் என்று பறந்து பறந்து வெற்றிக்கொடி நாட்டிவரும் நடிப்புலகின் அசுரனான தனுஷிற்கும் இடையேயான போட்டி என்பது இருவரும் சினிமாவில் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை கிட்டத்தட்ட அவரே இயக்கி முடித்திருக்கும் தருவாயில், நடிகர் சிம்புவும் தற்போது தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கிட்டத்தட்ட 17-ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கும் நடிகர் சிம்பு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

நடிப்பில் ஏற்பட்ட உரசல்!


நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ்

தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களுக்கிடையேயான போட்டி என்பது எம்ஜிஆர் - சிவாஜி காலம் தொடங்கி அஜித் - விஜய் காலம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், இவர்களுக்கு அடுத்தபடியாக போட்டி போட்டு பார்க்கப்பட்ட நடிகர்கள் என்றால் அது நடிகர் சிம்பு - தனுஷ்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் முதல் ஒற்றுமை என்னவென்றால் இருவருமே ஹீரோவாக அவரவர் தந்தையின் இயக்கத்தில் அறிமுகமானதுதான். இவற்றில் சிம்பு, டி.ஆரின் "காதல் அழிவதில்லை" படத்தின் மூலமும், தனுஷ் கஸ்தூரிராஜாவின் “துள்ளுவதோ இளமை” படத்தின் வாயிலாகவும் ஒரே ஆண்டில் அதாவது 2002-ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இதில் இவனெல்லாம் ஹீரோவா என்று கேலி செய்யப்பட்ட தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதேநேரம் ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த சிம்புவின் ‘காதல் அழிவதில்லை’ படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இங்கு ஆரம்பித்த இவ்விருவரின் போட்டியானது அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. அந்த வகையில், தொடர்ந்து நடிகர் சிம்பு ‘தம்’, ‘அலை’, ‘கோவில்’, ‘குத்து’, ‘மன்மதன்’, ‘தொட்டி ஜெயா’, ‘சரவணா’, ‘வல்லவன்’ என வரிசையாக சூப்பர் ஹிட் வெற்றி, சுமார் வெற்றி என மாறி மாறி கொடுக்க, தனுஷும் அதே போன்று தன் பங்கிற்கு ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’, ‘சுள்ளான்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘தேவதையை கண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘பொல்லாதவன்’ என வெற்றி, சுமார் வெற்றி என மாறி மாறி தனது பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்த நேரத்தில் இவ்விருவருமே பெரும்பாலும் தங்களது படங்களில் பன்ச் வசனங்கள் பேசும் போது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது போன்ற பிம்பம் தோன்றியதோடு, தங்கள் படத்தின் கதாநாயகி தேர்விலும் சில ஒற்றுமைகளையும், உரசல்களையும் காட்டி வந்தனர்.


விருது விழா மேடையில் நடிகர் தனுஷுடன் சிம்பு

இப்படி மாறி மாறி போட்டியை போன்று ஆரம்பித்த இவர்களின் சினிமா பயணமானது இருவரின் ரசிகர்கள் மத்தியிலும், உண்மையிலேயே இவர்கள் எதிரிகள்தான் போல என்ற மனநிலையை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றார் போன்று சிம்பு - தனுஷ் இருவரும் தங்களுக்குள் எப்படிப்பட்டதான உறவு இருக்கிறது என்பதை பெரிய அளவில் வெளிக்காட்டிக் கொள்ளாமலும் அந்த சமயம் இருந்தனர். இந்த நேரத்தில்தான் தனுஷ் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று இன்னும் முன்னேற, சிம்பு ‘காளை’, ‘சிலம்பாட்டம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘வானம்’, ‘ஒஸ்தி’ என வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். தனுஷ் அளவிற்கு அவரால் உச்சம் பெற முடியவில்லை என்றாலும், அவ்வப்போது சில படங்களில் சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து தன்னை நிலைநிறுத்தி வந்தார். இதற்கிடையில் தனுஷிற்கும், சிம்புவிற்கும் இடையே போட்டியில்லை, நட்புதான் உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக, மணிகண்டன் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘காக்க முட்டை’ படத்திலும் நண்பன் கேட்டுக்கொண்டதற்காக சிறப்புத் தோற்றத்தில் வந்து நட்பு பாராட்டினார் சிம்பு . மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் நடத்தப்படும் விருது விழாக்களில் தனுஷிற்காக, சிம்பு மேடையேறி விருதினை பெற்றுக்கொள்வதும், தனுஷ் தான் நேரடியாக வந்து விருது வாங்கும் பொழுது, அந்த விழாவில் சிம்பு இருந்தால், அவரை மேடைக்கு அழைத்து இருவரும் ஒன்றாக இணைந்து பேசுவதும் என பல நிகழ்வுகள் நடந்தேறியதன் மூலம் நிஜமாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் எப்பேர்ப்பட்ட நண்பர்கள் என்பதை பறைசாற்றி தங்களது ஆழமான நட்பை வெளியுலகத்திற்கும், தங்களது ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தினர்.

இயக்குநராக கலக்கிய சிம்பு , தனுஷ்


இயக்குநர், நடிகராக 'வல்லவன்' மற்றும் 'ப.பாண்டி' படத்தில் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ்

சிம்பு - தனுஷ் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இருவருக்கும் இடையேயான போட்டி என்பது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் அவதரிக்க வைத்தது. சிம்பு நடிகராக இயங்கி கொண்டிருந்த போதே, திடீரென 2004-ஆம் ஆண்டு ‘மன்மதன்’ என்ற படத்தினை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். காதலிப்பதாக சொல்லி ஆண்களை ஏமாற்றிவிட்டு போகும் பெண்களை கொலை செய்யும் மொட்டை மதன் மற்றும் மன்மதன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த கதை அப்போது சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட சில பெண்களை மனதில் வைத்துதான் அவர் எடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பெரிது படுத்தாமல் வெற்றி என்ற இலக்குடன் பயணிக்க ஆரம்பித்த நடிகர் சிம்பு அடுத்ததாக 2006-ஆம் ஆண்டு மீண்டும் ‘வல்லவன்’ என்றொரு படத்தினை இயக்கி நடித்தார். அப்படமும் ஓரளவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பிறகு, சிம்பு இயக்குநராக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நேரத்தில்தான் அவரது நண்பரான தனுஷ் ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தன் தந்தை கஸ்தூரி ராஜாவை போலவே முதல் படத்தினை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும், அதற்கு அச்சாரமாக இருந்த நடிகர் ராஜ்கிரணே இந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று யோசித்து அவரை வைத்து இயக்கிய இப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனால் பார்ப்பதற்கு இரு துருவங்கள் போன்று தெரிந்தாலும், வெளியில் நட்பு பாராட்டும் இந்த நண்பர்கள் இருவரும் எந்த துறையில் இறங்கி பணியாற்றினாலும், அங்கு தங்களின் வெற்றியை உறுதி செய்து விடுவார்கள் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்தது. இந்த நிலையில் நடிகர் தனுஷ், தனது இரண்டாவது படைப்பாக தன் 50 வது படத்தினை தானே இயக்கி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது அப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

'D50'யை தொடர்ந்து 'STR50'


'D50' படத்தின் போஸ்டர் மற்றும் இயக்குநர் தோற்றத்தில் நடிகர் தனுஷ்

'ப.பாண்டி' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் தனுஷ், ஏழு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக தனது 50 வது படத்தினை தற்போது இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான், எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும், நித்தியாமேனனும் இதில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வடசென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூழ்ந்த பெரிய கிராமம் ஒன்றையே பிரம்மாண்ட செட்டாக அமைத்து இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும். பெரும்பாலான காட்சிகள் அங்கேயே எடுக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷின் நண்பரும், சக போட்டியாளருமான நடிகர் சிம்புவும் அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


‘பத்து தல’ படத்தின் ஒரு காட்சியில் சிம்பு

‘மாநாடு’ வெற்றிக்கு பிறகு சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்ததில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்து வரும் சிம்பு, இப்படத்திற்காக செம ஃபிட்னெஸ்ஸோடு தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு எந்தவிதமான தகவலும் இப்படம் குறித்து சினிமா வட்டாரத்தில் கசியாமல் இருந்ததால், வழக்கம் போல சிம்புவின் இப்படமும் ட்ராப்பாகி விட்டதோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்து சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்த நேரத்தில்தான், சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சிம்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றி மிரட்டியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை அவர் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது சிம்புவின் 50வது படமான 'STR50'ஐ அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 'மன்மதன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், 'D50'ஐ போலவே முழு ஆக்சன் படமாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சிம்பு - தனுஷ் இடையே இருப்பது நட்புதான் என்பதை நிரூபிக்கும் விதமாக இருவருமே அவர்களது 50வது படத்தை தங்களது எண்ணத்தின் பிம்பமாக உருவாக்க நினைத்திருப்பது பாராட்டுக்குரியதே என்றாலும், அதற்குள்ளும் ஒரு போட்டி நிலவுவதை நம்மால் மறுக்க முடியாது.

Updated On 19 Feb 2024 6:20 PM GMT
ராணி

ராணி

Next Story