
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட கதாநாயகர்களில் ஒருவராகவும், ரூ.100 கோடி வசூல் நாயகனாகவும் மாறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யாவிற்கு எப்படி தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ, அதேபோல இந்த உயரத்தை அடைந்த சிவகார்த்திகேயனிற்கும் தற்போது தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒருவர் உச்சத்திற்கு சென்றாலே அவர் தொடர்பான கிசுகிசுக்களும், சர்ச்சைகளும் எழ ஆரம்பிக்கும். அப்படி திரையில் வளர்ந்துவரும் சிவகார்த்திகேயன் குறித்து சமீபகாலமாக எழுந்துவரும் பேச்சுதான் ‘அடுத்த தளபதி’, ‘திடீர் தளபதி’. கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் கிளைமாக்ஸ் சீன் ஒன்றில் சிவகார்த்திகேயன் தோன்றியிருப்பார். அந்தக் காட்சியில் இருவருக்கும் இடையே இருந்த வசனங்கள்தான் இந்த விவாதத்திற்கு வழிவகுத்தன. ஆனால் அதற்கு அமரன் படபணிகளின்போதே விளக்கமளித்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அந்த பேச்சு தொடர்ந்து கொண்டுதான் வந்தது. இந்நிலையில் மதராஸி பட புரமோஷன் விழாவில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். காமெடி பாணியில் அவர் அளித்த விளக்கத்தை காணலாம்.

மெரினா மற்றும் அமரனில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் திரைப்பயணம்...
1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் அப்பா ஒரு காவல் அதிகாரி. சிவகார்த்திகேயன் பிறந்தது சிவகங்கை என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சிதான். படிக்கும்போதே கலையின் மீது அதீத ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன், மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி உள்ளிட்டவற்றை செய்து வந்தார். இதனால் கல்லூரியில் சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்துள்ளது. அப்போதே நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களிலும் நடித்து வந்தார். கல்லூரி முடிந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்த சிவகார்த்திகேயன், ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து 2008ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அதே ஆண்டு அஜித்தின் ஏகன் திரைப்படத்திலும் சிறுவேடத்தில் தோன்றியிருப்பார். இப்படி... கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தவறாமல் அழகாக பயன்படுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஆறு வருடங்கள் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், விமலின் ‘வாகை சூட வா’ பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவரது நகைச்சுவை திறனை பார்த்து வியந்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். பின்னர் சிவகார்த்திகேயனை கூப்பிட்டு ஒரு பெண்ணிடம் பேச சொல்லி பார்த்துள்ளார். அதையும் நன்றாக செய்ய, ‘மெரினா’ படத்தின் கதாநாயகன் வாய்ப்பை சிவகார்த்திகேயனுக்கு வழங்கினார். இப்படித்தான் சினிமாவில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமானாலும் அடுத்து 3 படத்தில் கிடைத்த காமெடி கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். அதன்பின் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா, கில்லாடி ரங்கா என்ற படத்தில் விமலுடன் இணைந்து நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

மதராஸி மற்றும் பராசக்தியில் சிவகார்த்திகேயன்
தொடர்ந்து எதிர்நீச்சலில் சோலோவாக களமிறங்கினார் சிவகார்த்திகேயன். இதுவும் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ என தொடர் வெற்றிப்பயணம். பின்னர் வந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கடைசியாக வந்த அமரன் உலகளவில் ரூ.300 கோடி வசூலித்து ரூ.100 கோடி வசூல் நாயகனாவும் சிவகார்த்திகேயனை மாற்றியது. அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்துள்ளார்.
தயாரிப்பாளர் அவதாரம்
இதனிடையே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் சிவகார்த்திகேயன். கனா, டான், டாக்டர் என தனது நடிப்பில் வெளியாகும் படங்களை தானே தயாரித்து வெளியிட்டார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மதராஸி. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். அமரன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி இன்னும் பெரிய வெற்றி படமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோட் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனம் குறித்து விளக்கமளித்த சிவகார்த்திகேயன்
திடீர் தளபதி!
இந்நிலையில் அண்மைக்காலமாக தளபதி ரசிகர்களால் பெருமளவில் ட்ரோல் செய்யப்பட்டும், கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்கு காரணம் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோட் திரைப்படம். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என நடிகர் சிவகார்த்திகேயனிடம் விஜய் சொல்வது போன்ற வசனம் இடம்பெற்றிருக்கும். அதற்கு, ‘நீங்க வேற ஒரு முக்கியமான வேலையா போறீங்க, நீங்க அத பாருங்க சார், நான் இத பாத்துக்குறேன்’ என சிவகார்த்திகேயன் சொல்லியிருப்பார். இந்த வசனங்களை ரசிகர்கள், விஜய்யின் அரசியல் பயணத்துடன் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தை தொடர்ந்து, சினிமாவை விட்டு விலகி முழுமையாக அரசியலுக்கு விஜய் செல்வதால், சிவகார்த்திகேயன் கையில் சினிமாவை காப்பாற்ற கொடுக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்த வதந்திகள் அனைத்திற்கும் கடந்தாண்டு அமரன் பட புரமோஷன்களின்போதே விளக்கமளித்திருந்தார் சிவகார்த்திகேயன். முன்னர் இதுகுறித்து பேசியிருந்த அவர், "அடுத்த தளபதி என்றெலாம் கிடையாது... தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரே ஒரு தளபதிதான், ஒரே ஒரு தலதான், ஒரே ஒரு உலகநாயகன்தான், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர்களுடைய நடிப்பை பார்த்து சினிமாவைக் கற்றுக் கொண்டவன் நான். அவர்களைப் போல கடினமாக உழைத்து, அவர்களைப் போல நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே ஆக நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு” எனப் பேசினார்.
விமர்சனங்களுக்கு பதிலடி...
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக.24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சார் கூட அந்த சீன் நடித்ததற்குப் பிறகு நிறைய பேருக்கு சந்தோஷம். இதை இன்னும் நல்லா பண்ணு என அவர் தட்டிக் கொடுத்ததாகத்தான் நான் பார்த்தேன். ஆனால் ஒருசிலர், இவர் அடுத்த தளபதி, குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நான் அப்படி நினைக்கும் ஆளாக இருந்திருந்தால், அவர் என்னிடம் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார். நானும் வாங்கியிருக்க மாட்டேன். அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். இதை இந்த மேடையில் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நிறைய இடத்தில் சொல்லிப் பார்த்தேன். சிலர் அதைவிடுவதாக இல்லை. இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், விஜய் இடத்தை நான் பிடிக்க பார்க்கிறேன் என்று. அப்படி எல்லாம் யாருடைய ரசிகர்களையும் யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். விஜய் சார், தனது கடைசிப் படம் குறித்து அறிவித்து அரசியலுக்கு சென்றவுடன், அவருடன் நிற்கிறார்கள் அவரது ரசிகர்கள். தல அஜித், மன்றத்தை கலைத்து நிறைய வருடங்கள் ஆகிறது.

யாருடைய ரசிகர்களையும் யாராலும் பிடிக்க முடியாது - சிவகார்த்திகேயன்
ஆனால், நீங்கள் மன்றத்தை கலைத்தாலும் நாங்கள் உங்களுடன்தான் இருப்போம் என அஜித் ரசிகர்கள் நிற்கிறார்கள். மற்றொரு பக்கம் கமல் சாரின் வெற்றி, தோல்வியை கணக்கில் கொள்ளாமல் என்னுடைய நாயகன் என அவருடன் நிற்கிறார்கள், அவரது ரசிகர்கள். மற்றொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 50 வருடமாக அவரது ரசிகர்கள் நிற்கிறார்கள். இதுபோலத்தான் சிம்பு, சூர்யா, தனுஷ் எல்லோருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது ரசிகர்களை நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நம் ரசிகர்களை நாம் சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வலிமைக்கு நான் கொஞ்ச பேரை சம்பாதித்துள்ளேன். இதுபோல ஆயிரம் விமர்சனங்கள் வரும். நல்ல விமர்சனங்கள் வந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதுபோல புது படங்கள் வந்தால், அந்த குழுவினரை அழைத்து பாராட்டினால் விமர்சிக்கிறார்கள். நல்லது செய்ய நாங்க ஏண்டா யோசிக்கணும்..." என அதிரடியாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். தன் மீதான விமர்சனங்களுக்கு வெளிப்படையாகவே சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்துள்ளது, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
