இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் பலரும் அவரவர் துறைகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அதிலும் ஆண்கள் மட்டுமே அதிகம் கோலோச்சி வந்த திரையுலகில், திரைக்கு முன் தோன்றும் பெண் நட்சத்திரங்களை விட, திரைக்கு பின்னால் இருக்கும் பெண் நட்சத்திரங்களின் பங்களிப்பு என்பது அபரிமிதமானது. அதிலும் குறிப்பாக, ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று சொல்லப்படும் இயக்ககத்துறையில் ஆண்களால் மட்டும் தான் வெற்றிகரமான படங்களை இயக்க முடியும் என்று கூறப்பட்டு வந்த நிலையை மாற்றி, இன்று பெண்களாலும் சமூக கருத்துள்ள வெற்றிகரமான படங்களை இயக்கி சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கி புஷ்கர் காயத்ரி, சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், கிருத்திகா உதயநிதி, அனிதா தீப் என எத்தனையோ பெண் இயக்குனர்கள் இன்று வெற்றிகரமாக பயணித்து வந்தாலும் இவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இன்று பார்க்கப்படுவது என்னவோ சுதா கொங்கராவைத்தான். காரணம் நடிகர் சூர்யாவை வைத்து எடுத்த ‘சூரரைப்போற்று’ என்ற ஒற்றை படத்தின் வாயிலாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க செய்ததால்தான். இப்படி இவர் ஆரம்பித்து வைத்த இந்த வெற்றிப்பயணம் தான் இன்று பல பெண்களை இயக்ககத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மாற்றம் ஏற்படுத்திய சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவுடன் இணைத்துள்ள புதிய படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்…

துரோகியால் தொடக்கத்தில் சறுக்கல்

இயக்குனர் சுதா கொங்கரா, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் இவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில், வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த இவர், பின்னர் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, 7 ஆண்டுகள் ஸ்கிரீன் பிலே ரைட்டர் அதாவது திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். இதற்கிடையில், 2002 ஆம் ஆண்டு ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மேலும் அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான 49 வது தேசியத் திரைப்பட விருதை இப்படம் பெற்றது.


ஆரம்ப காலங்களில் சுதா கொங்கரா பணியாற்றிய திரைப்படங்கள்

பின்னர், 2008 ஆம் ஆண்டு ஆந்திர அந்தகாடு என்ற படத்தினை தனது தாய்மொழியான தெலுங்கிலேயே இயக்கி, ஒரு இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை. இருப்பினும், தனது முயற்சியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று, முதல் முறையாக ‘துரோகி’ என்றொரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால், பூர்ணா, பூனம் பஜ்வா ஆகியோர் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த, இப்படமும் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தான் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்து விட்டதே என்று கலங்கி நின்ற போதுதான் விடாமல், மிகவும் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் மீண்டும் போராட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அப்படி தமிழில் இரண்டாவது படமாக அமைந்தது தான் ‘இறுதி சுற்று’.


‘துரோகி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் இடம்பெறும் போஸ்டர்

முதல் வெற்றி தந்த 'இறுதி சுற்று'

குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதிய சுதா கொங்கரா, அந்த கதையை நடிகர் மாதவனை வைத்து எடுக்க முடிவு செய்து, அதை அவரிடம் நேரில் சென்று கூறியுள்ளார். சுதா சொன்ன கதையால் வெகுவாக ஈர்க்கப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுடன் மட்டுமின்றி படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவினாராம். அப்படி இருவரது கூட்டணியிலும் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, தமிழ் சினிமாவில் நன்கு அடையாளம் பெற்ற இயக்குனர்களில் ஒருவராக மாறிப்போனார் சுதா கொங்கரா. ஆனால் இப்படம் இந்த அளவிற்கு உருவாக சுதாவிற்கு தூண்டுகோலாக இருந்த ஒரே நபர் மாதவன் மட்டும்தானாம். அன்று அவர் மட்டும் இல்லையென்றால் என்றோ தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருப்பார் சுதா. ஏனென்றால், 2013ஆம் ஆண்டு ‘இறுதி சுற்று’ படத்தின் கதையை முடிவு செய்து மாதவன் நடிக்க சம்மதம் எல்லாம் கூறிய பிறகு, ஏற்கனவே இரண்டு தோல்விப் படங்களை கொடுத்தவர் என்ற முறையில் சுதாவின் இப்படத்தை தயாரிக்கவும், மாதவனுடன் இணைந்து நடிக்கவும் யாரும் முன்வரவில்லையாம். இதனால் மிகவும் மனமுடைந்து போய் இந்த கதையை உனக்கு தருகிறேன். நீ யாராவது ஒரு நல்ல இயக்குனரை வைத்து எடுத்துக்கொள். நான் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என சுதா மாதவனிடம் கூறியிருந்தாராம்.


'இறுதி சுற்று' படப்பிடிப்பு தளத்தில் மாதவனுடன் சுதா கொங்கரா

ஆனால் மாதவனோ உன்னை தவிர வேறு யாருடனும் சேர்ந்து இப்படத்தை பண்ண எனக்கு விருப்பம் இல்லை. நீ மிகச் சிறந்த சினிமாவை உருவாக்குகிறாய். அதனால் உன் மனம் சொல்வதை மட்டும் கேள். எதுவாக இருந்தாலும் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று மாதவன் கொடுத்த உற்சாகம் தான் 4 ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு திரைப்படமாக வெளிவந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. அதற்கு உதாரணம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை கூட சொல்லலாம். அது என்னவென்றால் ‘இறுதி சுற்று’ படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு முறை சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ளது. திரையிடலின் போது மழை பெய்ததையும் பொருட்படுத்தாது முழு படத்தையும் நனைந்தபடியே ரசிகர்கள் நின்று பார்த்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இப்படம் எப்படியான போராட்டங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது என்ற உருக்கமான பதிவையும் போட்டிருந்தார் சுதா கொங்கரா.


'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் மற்றும் மாதவன்

விருதுகளை குவித்த 'சூரரைப் போற்று'

‘இறுதி சுற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய 'சூரரை போற்று' திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையும் இவர் பக்கம் திருப்பி பார்க்கவைத்த படமாக அமைந்தது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளை பெற வேண்டும் என்ற நோக்கில் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 2020 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் 68 வது தேசிய திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், சிறந்த படம் ஆகிய 6 பிரிவுகளில், 6 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இது தவிர 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும், 'சூரரைப் போற்று' திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்தது.


'சூரரைப் போற்று' பட காட்சிகள்

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்த நடிகர் சூர்யா, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அப்படத்தை தற்போது தயாரித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கராவே இயக்கியுள்ள இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராதிகாவும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருக்கின்றனர். 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்தாண்டு அதாவது வருகிற 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.


'சூரரைப் போற்று' படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் மற்றும் சூர்யாவுடன் சுதா கொங்கரா

தொடரும் வெற்றிக் கூட்டணி…

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ‘ஜெய்பீம்’,'எதற்கும் துணிந்தவன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘கங்குவா’ படத்தில், இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது . ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் பாலிவுட் முதல் மலையாள சினிமா வரை பல்வேறு நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்களாம். குறிப்பாக மலையாளத் திரையுலகை சேர்ந்த நடிகர் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்திலும், பாலிவுட்டை சேர்ந்த விஜய் வர்மா வில்லன் கதாபாத்திரத்திலும், தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக தலை காட்டாமல் இருந்த நடிகை நஸ்ரியா, மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளதால் படத்திற்கான லொகேஷன், நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


‘சூர்யா 43’-யில் மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணையும் சுதா கொங்கரா

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கும் ஜி. வி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார். இது ஜீவியின் நூறாவது படமாக அமைய உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, சூர்யா இயக்குனர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்ததை போன்று, இப்படத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக சூர்யா தன்னுடைய உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட காலங்களுக்கு பிறகு கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Updated On 30 Oct 2023 6:46 PM GMT
ராணி

ராணி

Next Story