இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழோ, தெலுங்கோ, மலையாளமோ எந்த மொழியாக இருந்தாலும் புது வரவு படங்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதிலும் தமிழ் திரையுலகில் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏதோவொரு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தி, வரவேற்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இறுதிவரை தமிழ் சினிமாவில் வெளிவந்து மாஸ் காட்டி வசூல் ஈட்டிய திரைப்படங்கள் மற்றும் மனதை தொட்டு வலியை உண்டாக்கிய படங்கள் எவை என்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

மாஸாக வசூல் ஈட்டிய திரைப்படங்கள்

2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகிய இருவரின் படங்களான ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ இரண்டும் ஒரே நாளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு 'வீரம்' மற்றும் 'ஜில்லா' படங்களுக்கு பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து வினோத் இயக்கத்தில், ஆக்சன் த்ரில்லர் படமாக 'துணிவு' திரைப்படமும், வம்சி இயக்கத்தில், குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கமர்சியல் படமாக 'வாரிசு' திரைப்படமும் வெளிவந்து இருவரின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இவ்விரு படங்களும் ஒரேமாதிரியான விமர்சனத்தை பெற்றது போலவே, வசூல் வேட்டையிலும் உலக அளவில் 200 கோடியை கடந்து சாதனை படைத்தன. அதிலும் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் சுமார் 310 கோடி ரூபாய் வசூலித்தது. மேலும் அந்த சமயம், விஜய்யின் இந்த படத்தை அதிக வசூல் செய்த படம் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.


‘வாரிசு’ விஜய், ‘துணிவு’ அஜித் மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ பட போஸ்டர்

இதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து மிக பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் மெகா ஹிட் படமாக அமைந்தது மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்தது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இப்படத்தில் குந்தவையாக நடித்திருந்த திரிஷா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அப்படிப்பட்ட இப்படம் முதல் பாகம் அளவிற்கு வெற்றிபெறாவிட்டாலும், அந்த ஆண்டில் வந்திருந்த வாரிசு, துணிவு படத்தை தாண்டி உலக அளவில் ரூ.345 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இதைதொடர்ந்து 3 மாதங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்த படமாகவும், மாஸ் ஹிட் திரைப்படமாகவும் அமைந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான 'தர்பார்', 2021ஆம் ஆண்டில் வெளியான 'அண்ணாத்த' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமானதொரு படமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் இப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பாக இயக்குநர் நெல்சன், விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி தோல்வியை தழுவியிருந்ததால், அவரின் அடுத்த படமான ஜெயிலரில் ரஜினி நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ரசிகர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி படம் வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட் ஆகி உலகளவில் ரூ.655 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்த தமிழ் படமாக இந்த வருடம் அமைந்தது. சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் பான்-இந்தியா வெளியீடாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி காவாலா என்ற ஒரு பாடலால் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


'ஜெயிலர்' படத்தில் துப்பாக்கியுடன் ரஜினி மற்றும் 'லியோ'-வில் மகளுடன் விஜய்

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக வெளிவந்ததுதான் ‘லியோ’ திரைப்படம். பார்த்திபன், லியோ என இறுமாறுபட்ட வேடங்களில் நடித்திருந்த விஜய்க்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் வட அமெரிக்காவில் 999 க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையும் இதற்கு கிடைத்தது. அன்பான மனைவியாக திரிஷா, வனச்சரகராக கவுதம் வாசுதேவ் மேனன், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களாக மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, சில காட்சிகளில் மட்டுமே வந்து உயிரைவிடும் ராமகிருஷ்ணன், ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வரும் அனுராக் காஷ்யப், லியோவின் சகோதரியாக மடோனா செபாஸ்டியன், கைதியாக மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் எல்.சி.யூ வரிசையில் வருமா என்ற பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலக அளவில் ரூ.620 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்திருந்தது.

வித்தியாசத்தில் வித்தைக்காட்டிய படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதையம்சம் இல்லாமல், காதல், காமெடி, கமர்சியல் இவற்றை தாண்டி டைம் டிராவல் போன்ற அறிவியல் பூர்வமான படங்களும் வருவதுண்டு. அந்த வகையில், இந்த 2023ஆம் ஆண்டில் கதையில் வித்தியாசம் காட்டி பல படங்கள் வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் முதலாவதாக இடம்பெறும் திரைப்படம் என்றால் அது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா இணையில் வெளிவந்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ‘மார்க் ஆண்டனி’ திரைப்படமாகத்தான் இருக்கும். டைம் டிராவல் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இதில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும், அவர் பேசும் சிலுக்கா! போன்ற வசனங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. 1995-க்கும் 1975-க்கும் மாற்றி மாற்றிப் பயணிக்கும் திரைக்கதையைக் குழப்பமில்லாமல் கலகலப்பாக கொண்டு செல்லும் இப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. விஷாலின் திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரு படம் 100 கோடியை கடந்து வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனிதான்.


'மார்க் ஆண்டனி' விஷால், 'மாவீரன்' சிவகார்த்திகேயன், 'போர்தொழில்' அசோக் செல்வன், 'பார்க்கிங்' ஹரிஷ் கல்யாண்

இதேபோன்று எப்போதும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல், காமெடி, பிறகு ஆக்சன் என வெற்றிப்படங்களாகவே இருந்தாலும் ஒரே மாதிரியான கதையில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், முதல் முறையாக சற்று வித்தியாசமாக வேறொரு பரிமாணத்தில் நடித்து ஒட்டுமொத்த தரப்பினரையும் கவர்ந்த படம்தான் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில், மக்கள் பிரச்சினையைப் பேசும் ஃபேன்டஸி படமாக வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வாய்ஸ் ஓவர் என்னும் ரகளையான ஐடியாவைக் கொண்டு விஜய் சேதுபதியின் குரல் வாயிலாக மேஜிக்கை நுழைத்து ரசிக்க வைத்தது மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் தனது வழக்கமான நடிப்பில் இருந்து வித்தியாசம் காட்டி கதைக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியான நடிப்பை வழங்கியிருப்பார். ஒவ்வொரு காட்சியிலும் கொஞ்சம் புதுமையும், கொஞ்சம் ரகளையுமாக வெளிவந்த இப்படம் இந்த ஆண்டில் பலரின் கவனத்தை ஈர்த்த மிகச்சிறந்த படமாக அமைந்தது. 35 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் 89 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

இதேபோன்று சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோரது நடிப்பில் கிரைம் திரில்லராக வெளிவந்த ‘போர் தொழில்’ படமாக இருக்கட்டும், சந்தானம் நடிப்பில் மனிதர்களும் பேய்களும் சந்திக்கும் தருணங்களை நகைச்சுவையின் வழியே கலகலப்பான கொண்டாட்டமாகக் கொடுத்திருந்த ‘டி டி ரிட்டர்ன்ஸ்’ படமாக இருக்கட்டும், சாதாரண பார்க்கிங் பிரச்சினையை வைத்து 2 மணிநேரம் ரசிகர்களை கவர்ந்த ‘பார்க்கிங்’ படமாக இருக்கட்டும், அனைத்துமே இந்த ஆண்டில் வித்தியாசத்தில் வித்தை காட்டிய படங்களாகத்தான் இருக்கின்றன.

மனதை தொட்ட திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நம் மனதை கவரும் படியான படங்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் சில படங்கள் வந்து நம்மை கலங்கடித்துள்ளன. இதில் முதலாவதாக இடம்பெறும் படம் ‘அயோத்தி’. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில், சசிகுமார், யாஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, அஞ்சு அஸ்ரானி என பலர் நடித்திருந்தனர். அயோத்தியில் வசிக்கும் இந்திக் குடும்பத்தையும், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலும், மதுரையிலும் வசிக்கும் தமிழர்களையும் இணைத்து மனிதத்தின் மீதும், மனித நேயத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கையை விதைக்கும் விதமாக உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.


‘அயோத்தி’ சசிகுமார், 'மாமன்னன்' வடிவேலு-உதயநிதி, 'டாடா' கவின், 'குட் நைட்' மணிகண்டன்-மீதா ரகுநாத், 'இறுகப்பற்று' ஸ்ரீ-சானியா ஐயப்பன்

இதேபோன்று ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்து கவனம் ஈர்த்த படம்தான் 'மாமன்னன்'. தேர்தல் அரசியலில் கட்சிகளுக்குள் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, தனித் தொகுதி குறித்த அரசியலை எடுத்துரைக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் வெளிவந்த இப்படம், ஒருபுறம் அரசியல் தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் வரை பல தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை அள்ளியது. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நடிகர் வடிவேலு, இப்படத்தில் வேறொரு பரிமாணத்தில் தோன்றி நடித்து, தன் நடிப்பால் பலரையும் கலங்க வைத்திருந்தார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பல இடங்களில் வடிவேலுவின் நடிப்பை பார்க்கும்போது இது உதயநிதியின் படமா? இல்லை வடிவேலுவின் படமா? என்ற கேள்விகளும் எழும் அளவிற்கு பாராட்டுப் பெற்றது.

இதுதவிர இதே ஆண்டில் விடலை வயதில் இருக்கும் இளைஞன், காதலில் விழுந்து, அதனால் தனித்து வாழ்வது, ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் பொறுப்பும் சுயசார்பும் மிக்க மனிதனாக எப்படி உருவெடுக்கிறான் என்பதை மையக்கருவாக கொண்டு வெளிவந்த பிக்பாஸ் கவினின் 'டாடா' படமாக இருக்கட்டும், குறட்டையால் வரும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த 'குட் நைட்' திரைப்படமாக இருக்கட்டும், வெவ்வேறு குடும்பப் பிண்ணனி, வளர்ப்பு முறை, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றைச் சேர்ந்த மூன்று தம்பதிகளை முன்வைத்து, திருமண வாழ்க்கையில் அவர்களுக்குள் வரும் சில பிரச்சினைகளைக் மையமாக கொண்டு வெளிவந்த ‘இறுகப்பற்று’ படமாக இருக்கட்டும் இவை அனைத்துமே இந்த ஆண்டில் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாக உள்ளன.

வலியை உண்டாக்கிய திரைப்படங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மூலக்கதையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம்தான் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில், அதுவரை திரையில் வெறும் நகைச்சுவை நாயகனாக மட்டுமே பார்த்து வந்த சூரியை ஒரு ஹீரோவாக பார்க்கும் போது நம்ம சூரியா இது? என்பது போன்ற உணர்வை கொடுத்திருப்பார். அதேபோன்று நாயகியாக வரும் ஜி.வி.பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ அறிமுக நாயகி என்று சொல்ல முடியாத அளவிற்கு பாசம், காதல், சோகம், துணிவு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் தன் நடிப்பால் நம்மை கலங்க வைத்திருப்பார். படத்தில் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வசனங்கள், ஒரு வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வர, அரசுக்கு எதிராக எழும் போராட்டங்கள், உலகம் முழுக்கவே வளர்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் மனித வேட்டையின் வாசம் போன்ற எண்ணற்ற விஷயங்களை வெற்றிமாறன் மிக அழகாக காண்பித்திருந்தது திரையில் பார்த்தவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியிருந்தது.


'விடுதலை' 1-ல் துப்பாக்கியுடன் சூரி, 'சித்தா'-வில் சித்தார்த், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' -ல் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

இதேபோல் சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'சித்தா' படமும் திரையரங்கிற்கு சென்று பார்த்த அனைவரையும் கலங்க வைத்திருந்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சித்தார்த் தொடங்கி, நாயகி நிமிஷா சஜயன், சுந்தரியாக வரும் குழந்தை என அனைவரும் தங்களது நடிப்பின் வழியாக படம் பார்க்கும் நமக்கு வலியை ஏற்படுத்திவிட்டு சென்றிருப்பர். இப்படிப்பட்ட 'சித்தா' படம் 2023-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த படமாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டப் பெற்றது.

இதேபோன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது, அடிமைத்தனம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு அறிமுக இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கூழாங்கல்' ஆகிய படங்களும் படைப்பின் வழியாக நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்திய படங்களாக கவனம் பெற்றுள்ளன.

Updated On 1 Jan 2024 6:28 PM GMT
ராணி

ராணி

Next Story