இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1960 மற்றும் 70-களில் திரையுலகில் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரமாக வலம்வந்த பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அறிமுகத்துடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்தான் தன்யா ரவிச்சந்திரன். தாத்தாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட தன்யா 2016-ஆம் ஆண்டு ‘பலே வெள்ளையத் தேவா’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். அணியும் உடைக்கே அழகு சேர்க்கும் பதுமையாக காட்சியளிக்கும் தன்யா, சசிகுமாரில் தொடங்கி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, உதயநிதி என்று முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களிலும் நடித்துள்ள நிலையில், இப்போது மாஸ்டர் பட புகழ் அர்ஜுன் தாஸுடன் இணைந்து 'ரசவாதி' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் தன்யாவின் நடிப்பு எப்படி இருக்கிறது… இதற்கு முன்பாக இவர் நடித்த சில படங்கள் சறுக்கல்களை சந்தித்தாலும் நம்பிக்கையூட்டும் நாயகியாக எப்படி பயணித்து வருகிறார்? இவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

தன்யாவின் ஆரம்ப காலம்


குழந்தையாக அம்மா லாவண்யாவுடன் மற்றும் பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது தங்கையுடன் தன்யா

அபிராமி என்ற இயற்பெயர் கொண்ட தன்யா ரவிச்சந்திரன் 1996 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி ஸ்ரீராம் - லாவண்யா தம்பதிகளுக்கு மகளாக சென்னையில் பிறந்தார். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திர நடிகராக வலம் வந்த ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி ஆவார். சிறு வயதில் இருந்தே தாத்தா ரவிச்சந்திரன் நடித்த படங்களை பார்த்து வளர்ந்ததால் அவருக்கு கலைத்துறையின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தீனி போடும் வகையில், ரவிச்சந்திரனின் மகளும், தன்யாவின் அம்மாவுமான லாவண்யா ஸ்ரீராம் தனது மகளுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுக்க முடிவு எடுத்தார். லாவண்யா ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருந்ததால் அதற்கு என்று குரு யாரையும் நியமிக்காமல் தானே தன் மகள்கள் இருவருக்கும் பரதநாட்டிய ஆசிரியராக, குருவாக களமிறங்கி கற்றுக்கொடுத்தார். தங்கள் அம்மாவிடமே பரத கலையை நன்கு கற்று தேர்ந்த சகோதரிகள் இருவரும், தங்களின் பதின் வயதில் சென்னையில் பல மேடைகளில் தங்கள் பரதநாட்டியத்தை அரங்கேற்றினர். இது ஒருபுறமிருக்க தனது பள்ளி படிப்பை சென்னையிலேயே தொடர்ந்தவர், மேற்கொண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு இளங்கலை வணிகவியல் பட்டத்தை பெற்ற அவர், தொடர்ந்து ஸ்கூல் ஆஃப் மெட்ராஸ் சோசியல் ஒர்க்ஸ் கல்லூரியில் முதுகலை வணிகவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். அந்நேரம் நடிகை சினேகாவுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தன்யா, அதன் மூலம் திரைப்பட வாய்ப்பையும் பெற்றார்.

சசிகுமாருடன் அறிமுகம்


‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக தன்யா

படிப்பை முடித்திருந்த தன்யா விளம்பர படங்களில் நடித்ததன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில்தான் 2016-ஆம் ஆண்டு நடிகர் மிஷ்கினின் இயக்கத்தில் நடிக்க கேட்டு வாய்ப்புகள் வர அவரும் ஒப்புக்கொண்டார். அதுவரை அபிராமி என்றிருந்த பெயரை தன்யா என மாற்றியதும் இயக்குநர் மிஷ்கின்தானாம். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை அப்படம் தள்ளிப்போக, பிறகு இயக்குநர் ராதா மோகனின் ‘பிருந்தாவனம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், தன்யாவிற்கு திரைக்கு வந்த முதல் வெளியீடாக அமைந்தது சசிகுமாருடன் நடித்து 2016-ஆம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படம்தான். கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவைத் திரைப்படமாக வெளிவந்த இதில் தனிக்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த தன்யாவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இரண்டாவதாக வெளிவந்த ‘பிருந்தாவனம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சந்தியாவாக படத்தில் வரும் தன்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், இத்திரைப்படத்தில் தன்யாவின் நடிப்பை பல பத்திரிகைகள் வெகுவாக பாராட்டி எழுதியிருந்தன.

கை கொடுக்காத 'கருப்பன்'


'கருப்பன்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தன்யா

‘பிருந்தாவனம்’ படத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினை தொடர்ந்து மூன்றாவது படத்திலேயே மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கருப்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தன்யா, இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மனைவியாக அன்புசெல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேணிகுண்டா இயக்குநர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து வெளிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுதவிர விஜய் சேதுபதியின் படத்தில் கதாநாயகிகளுக்கு எப்போதுமே நல்லதொரு ஸ்கோப் இருக்கும் என்பதால் இப்படத்தில் தன்யாவின் கதாபாத்திரமும் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போகும் படியாக படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது. அதற்காக தன்யாவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் வராமலில்லை. இந்த நேரம் தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்பு வர அங்கும் சென்று நடித்தார். அப்படி கார்த்திகேயா கும்மகொண்டா என்பவருடன் இணைந்து ‘ராஜா விக்ரமார்கா’ என்ற ஆக்சன் கலந்த திரில்லர் படத்தில் நடித்தவருக்கு அப்படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நேரம் மீண்டும் தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடிக்க அழைப்பு வரவே அப்படத்தில் அதிதி விஜயராகவனாக, உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து, சிபி சத்யராஜுடன் ‘மாயோன்’, அதர்வா முரளியுடன் ‘ட்ரிகர்’, ஜெயம் ரவியுடன் ‘அகிலன்’, தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ‘காட்பாதர்’ ஆகிய படங்களில் நடித்து தன்னை தொடர்ந்து நல்ல நாயகியாக அடையாளப்படுத்தி வந்தார். இருந்தும் நடிப்புக்கு தீனி போடும் படியான கனமான வேடங்களாக தன்யாவுக்கு அமையாதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. அந்த வருத்தத்தை தற்போது திரைக்கு வந்துள்ள ‘ரசவாதி’ திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது.

மீண்டும் நிரூபித்த தன்யா


‘ரசவாதி’ படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸுடன் தன்யா ரவிச்சந்திரன்

எப்போதும் புன்னகையான முகத்துடன் சிரிப்பழகி போன்று காட்சியளிக்கும் தன்யா தற்போது ‘ரசவாதி’ என்ற படத்தில் கனமான வேடத்தில் நடித்துள்ளார். மௌனகுரு, மகாமுனி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் மே 10ம் தேதி வெளிவந்துள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் தொடர்ந்து மலையாள சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சுஜித் சங்கர் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். எப்போதும் சினிமா விரும்பிகளை கவரும் வகையில் உணர்வுபூர்வமாகவும், யதார்த்தமாகவும் படம் எடுத்து வெற்றி காண்பதில் வல்லவரான சாந்த குமார் ஏற்கனவே இரண்டு படங்களை சிறந்த படைப்பாக கொடுத்திருந்ததால், மூன்றாவதாக வெளிவந்துள்ள ‘ரசவாதி’ படமும் அதேமாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படத்திலும் பூர்த்தி செய்திருக்கிறாரா சாந்த குமார் என்றால் நிச்சயம் ஆம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. கொடைக்கானலில் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் தாஸ், விடுதி மேலாளர் சூர்யாவாக வரும் தன்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இருவருக்குமே தனி தனி ஃபிளாஷ் பேக் இருக்கிறது. இதற்கிடையில் காவல்துறை ஆய்வாளராக பரசுராஜ் என்ற கதாபாத்திரத்தில் வரும் சுஜித் சங்கர், சதாசிவபாண்டியனாக வரும் அர்ஜுன் தாஸை அழிக்க நினைக்கிறார். அதனால் அர்ஜுன் தாஸ் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார் இந்த மூன்று பேருக்குள்ளும் நடப்பது என்ன என்ற பாதையில் கதை நகர்கிறது.

பழிவாங்கல் கதை போன்ற பாணியில் படம் நகர்ந்தாலும் எந்த இடத்திலும் ரத்தத்தை சிதறவிடாமல் காதல், நகைச்சுவை, திரில்லர் என்று மிகவும் சுவாரஸ்யமாக தன் முந்தைய படங்களைப் போலவே கதையை நகர்த்தி கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அதிலும் நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன் ஒவ்வொரு இடங்களிலும் நாயகன் அர்ஜுன் தாஸிற்கு நிகராக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் தன் வெட்கம் நிறைந்த சிரிப்பால் பலரையும் கட்டிப்போட்டு ரசிக்க வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘பிருந்தாவனம்’ படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றத்தை தந்துள்ள இப்படம் நிச்சயம் தன்யா ரவிச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்களில் மிக முதன்மையான படமாக அமைந்துள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Updated On 20 May 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story