சமீபகாலமாக சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ் இருந்து வருகிறார். அநீதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மை சம்பவமான ‘ரெபெல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளராக சினிமாத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராக, நடிகராக, தயாரிப்பாளராகவும் மிளிர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் ‘பென்சில்’, ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புரூஸ்லி’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகனாக மக்கள் மனதில் ஆழ்ந்த இடம் பிடிக்கவில்லை என்றாலும், இவர் இசையமைத்த பூக்கள் பூக்கும் தருணம், உன் மேல ஆசைதான், யாத்தே யாத்தே, காட்டு பயலே போன்ற பல பாடல்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக ஒரு தேசிய விருதும், தவிர மூன்று பிலிம்பேர் விருதுகளும் பெற்றிருக்கிறார்.


சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘டியர்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ரெபெல்’ என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த ‘ரெபெல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று (26. 10. 2023) மாலை நடிகர் சிலம்பரசனால் வெளியிடப்பட்டது. நிகேஷ் ஆர்.எஸ் இயக்கும் இத்திரைப்படத்தில் மமிதா பைஜு, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்ய பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “1980 ல் மூணாறு - பாலக்காடு பகுதியில் ஒரு கல்லூரியில் நடந்த உண்மையான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மை கதை இந்த திரைப்படம். இது ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு மைல் கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று வெளியான அந்த ஃபரஸ்ட் லுக்கிலேயே ஜி.வி. பிரகாஷின் தோற்றம் மாறுபட்டதாக ஆக்ஷன் கதாபாத்திரமாக காணப்பட்டது. நேற்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் பாயாக இருந்த ஜி.வி.பிரகாஷ் ஆக்ஷன் பாயாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் எப்படி நடித்துள்ளார்? எந்தவிதமான இசையைத் தந்திருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.

Updated On
ராணி

ராணி

Next Story