இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(13.06.1982 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"உடனே புறப்படவும்" என்று மாடர்ன் தியேட்டர்சின் அழைப்பைக் கூறி நின்றது, தந்தி. மாடர்ன் தியேட்டர்சை விட்டு விலகி பத்து நாட்களிலேயே மீண்டும் அங்கு இருந்து அழைப்பு!

“விலகுங்கள்; பிறகு அழைக்கப்படுவீர்கள்” என்று டைரக்டர் கே.சோமு சொன்னது சரியாக இருந்தது. “கன்னியின் காதலி”க்கு நான் பாடல்கள் எழுதி இருக்கும் செய்தி இவ்வளவு சீக்கிரத்தில் அவர்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால்தான் நம்மை அழைத்து இருக்கிறார்கள். மகிழ்ச்சியோடு, தன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டு, மீண்டும் சேலத்துக்குப் பயணமானார் கவிஞர். கையில் பணம் கொஞ்சம் கணிசமாக இருந்தது. கவிஞர் முதல்முறையாக ரெயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். மாடர்ன் தியேட்டர்சில் கவிஞர் பணிபுரிந்தபோது, ஒத்திகை விடுதியில்தான் தங்கி இருந்தார். இப்போது ஒரு ஒட்டலில் கவிஞருக்கு அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். புதிய அனுபவம். கவிஞருக்கு உற்சாகம் அதிகம் ஆயிற்று. குளித்துவிட்டு மிகவும் ஆனந்தமாக ஒத்திகை விடுதிக்குச் சென்றார் கவிஞர். முதலாளியைச் சந்தித்தார். அவர் கதை இலாகாவுக்கு அனுப்பினார். அப்போது “மாயாவதி” என்ற படம் தயார் ஆகிக்கொண்டு இருந்தது. அதற்கு நகைச்சுவைப் பகுதிகளை எழுதச் சொன்னார்கள். பாடல் எழுதலாம் என்ற நம்பிக்கை வீணாயிற்று. ஆனாலும் பணம் கிடைக்கிறதே!


சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பின்னணியில் கண்ணதாசன்

கவிஞர் அறிமுகம்

கவிஞர் தங்கி இருந்த ஓட்டலில் கவிஞரின் அறைக்குப் பக்கத்து அறையில் எம்.ஜி.சக்கரபாணி தங்கி இருந்தார். நடிக நண்பர்களில் முதல் நண்பர் கவிஞருக்கு, சக்கரபாணிதான். ‘அபிமன்யு’ படம் பார்த்த பிறகு கவிஞருக்கு கலைஞர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. அதற்கும் சக்கரபாணிதான் காரணம். எப்படியாவது கலைஞரை மாடர்ன் தியேட்டர்சுக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று இருவரும் திட்டம் போட்டார்கள். சேலத்துக்கு வந்த கலைஞரை, சக்கரபாணி, கவிஞருக்கு அறிமுகப்படுத்தி வைத்த விதமே அலாதியானது. “இதோ உங்கள் காதலர்” என்று, கலைஞரை கவிஞருக்கும், “இதோ உங்கள் காதலி” என்று கவிஞரை கலைஞருக்கும் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் கவிஞர், கலைஞரை தனது காதலியாகக் கொண்டு ஒரு கவிதை பாடினார். அதில், “அன்றொரு காலம் இந்த அழகிய கொங்கு நாட்டில் தென்றல் வந்தூஞ்சல் ஆடும் சேலத்தில் நானிருந்தேன் அன்றில்போல் இளைய மங்கை அங்கெங்கோ தானிருந்தாள் சென்றொரு தூது சொல்லிச் சேர்த்தவர் சக்கரபாணி!” என்று சக்கரபாணி சேர்த்து வைத்ததைப் பாடி மகிழ்ந்தார்.


‘கவிஞர்’ கண்ணதான் உடன் ‘கலைஞர்’ கருணாநிதி

முதல் நாள் சந்திப்பே இருவரின் மனதிலும் புது உணர்ச்சிகளை ஏற்படுத்திற்று. கருணாநிதி சிரித்தார். என் மனதில் ஏதோ புது உற்சாகம். இருவரும் எனது அறையிலேயே அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த உணர்ச்சியையும், அன்பையும் நினைக்கும் போது பின்னர் வந்த பெரும் திருப்பங்களெல்லாம் இன்றைக்குத் திகைப்பாகத் தோன்றுகின்றன. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்பதுபோல ஒரே நாள் நட்பு உணர்த்தியது. சாதாரணமாக ஒரு புதிய நண்பரைச் சந்திக்கும் போது நீண்ட உணர்ச்சிகள் தோன்றுவதில்லை. பழகப் பழகத்தான் அது வளரும். ஆனால், எனக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட நட்பு போன ஜென்மத்தின் தொடர்ச்சி போலவே இருந்தது.

முத்தான முதல் சந்திப்பையும், அது வனப்புற வளர்ந்து, சிறந்து, சிதைந்து போனதையும் நினைக்கையில், கவிஞர் மிகவும் நொந்து போவார். கலைஞரைப் போலவே அவரது தாயாரும், சகோதரிகளும் மிகவும் கவிஞரின் மேல் பாசம் கொண்டவர்கள். கலைஞரின் தாயார்; கவிஞரை தனது இரண்டாவது மகனாகவே கருதினார்கள் சகோதரிகளும் தங்கள் தம்பியாகவே கருதினார்கள் கவிஞர், கலைஞரின் விருந்தாளியாகப் பலமுறை திருவாரூர் சென்று தங்கியது உண்டு. கமலாலயத்தின் கரையில் அமர்ந்து கொண்டு கவிஞரும், கலைஞரும் தங்கள் எதிர்காலம் குறித்துப் பலவாறு திட்டமிட்டது உண்டு. ஒருமுறை சேலத்தில் கவிஞருக்கு “டைபாயிடு காய்ச்சல்” வந்துவிட்டது. அப்போது கலைஞர் குடும்பத்தோடு சேலத்தில் இருக்கிறார். செய்தி அறிந்ததும், கலைஞர் ஓடிவந்து கவிஞரை வற்புறுத்தித் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். கலைஞரின் தாயார்தான் வைத்தியம் செய்து கவிஞரைக் குணப்படுத்தினார்கள். “அஞ்சுகத்தம்மாள் மட்டும் இல்லையென்றால். நான் சேலத்து மண்ணில் காய்ச்சலில் கருகிச் செத்து இருப்பேன்” என்று நினைவு கூர்வார் கவிஞர்.

அரசியல்

கலைஞரின் நட்பு, கவிஞரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கவிஞருக்கு அரசியலை அறிமுகம் செய்தது கலைஞரின் நட்புத்தான். தோல்விகளாலும், அவமானங்களினாலும் கவிஞர் விரக்தியுற்றிருந்த நேரத்தில் கலைஞரின் தொடர்பு ஏற்பட்டது. தெய்வ பக்தி நிறைந்த கவிஞரின் மனதில், நாத்திகச் சிந்தனைகள் மெல்ல அரும்புகட்டத் தொடங்கின தி.மு.கழகம் தொடங்கிய அன்றே, அந்த மேடையிலேயே உறுப்பினர் ஆனார். கட்சி பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு கலைஞர் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். உடன் கவிஞரும் சென்றார். அப்போது, கோவை மாவட்ட தி.மு.கழகத்தின் செயலாளராக கோவை செழியன் இருந்தார். கவிஞரை, கோவை செழியனுக்கு, "சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறார்; கவிஞர் கண்ணதாசன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார் கலைஞர். அன்று முதல் கவிஞரின் கடைசிக் காலம் வரை செழியன், கவிஞரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பராகத் திகழ்ந்தார். தனது துறையில் முன்னேறிப் புகழ்பெற்ற பிறகு, சினிமா தொழிலைப் பற்றி ஒன்றுமே தெரியாத செழியனை அழைத்து வந்து தனது கூட்டாளியாக்கி, திரைப்படத் தயாரிப்பாளராக்கினார் கவிஞர்.


கோவை செழியன் உடன் கவிஞர் கண்ணதாசன்

முதல் பேச்சு

அன்று பொள்ளாச்சியில் கூட்டம். பாலு என்பவரும், ராமானுஜம் என்பவரும் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கோவை செழியன் தலைமை; பிரதானப் பேச்சாளர் கலைஞர். மேடையில் கலைஞரோடு கவிஞரும் சென்று அமர்ந்தார். கவிஞர், தி.மு.கழகத்தில் சேர்ந்திருந்தாலும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் அணியும் பழக்கத்தை விட்டுவிடவில்லை. அன்றும் அப்படியே மேடையில் காட்சியளித்தார். தலைமை உரையை நிகழ்த்தி முடித்த செழியன், கலைஞரைத் திரும்பிப் பார்த்தார். கலைஞர், கவிஞரை பேசச் சொல்லும்படி செழியனுக்குச் சைகை செய்தார். உடனே செழியன், “அடுத்து கவிஞர் கண்ணதாசன் பேசுவார்” என்று அறிவித்துவிட்டார். இதனைச் சிறிதும் எதிர்பாராத கவிஞர், அதிர்ந்து தடுமாறிப் போனார்.


நெற்றியில் விபூதி குங்குமத்துடன் ‘கவிஞர்’ கண்ணதாசன்

கவிஞருக்கு சொற்பொழிவு மேடை என்பது புதிதல்ல; அரசியல் மேடை என்பதுதான் புதிது. தனது பதினேழு வயதில் திருச்சி வானொலியில் முதன் முதலாக காளமேகத்தின் கவிதைகள் பற்றிப் பேசினார். அடுத்து பெரியகுளத்தில் ஒரு இலக்கிய மாநாட்டில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியார், அ. சரவண முதலியார் ஆகியவர்களோடு கவிஞரும் சொற்பொழிவாற்றினார். ஆனால், பொள்ளாச்சியில் நடந்தது அரசியல் மேடை ஆயிற்றே! நெற்றியில் சைவத் திருக்கோலம்; கையில் கொத்துச் சாவி. நிற்பது தி.மு.கழக மேடை துணிச்சலாக மைக்கைப் பிடித்தார் கவிஞர். “செட்டி நாட்டில் இருந்து வந்த நான், இன்றுதான் முதன் முதலாக மேடை ஏறுகிறேன். இதுவரை நான் நெற்றியில் அணிந்திருந்த திருநீறையும் பொட்டையும் இப்போதுதான் அழிக்கிறேன்” என்று பேசி அவற்றை வலது கையால் துடைத்துக் கொண்டார் கவிஞர். தனது முதல் அரசியல் சொற்பொழிவை காளமேகத்தின் கவிதைகளைப் போல் ஆரம்பித்தார். 1950-ல் தொடங்கி 1972 முடிய அரசியல் பேச்சிலும், எழுத்திலும் கவிஞர், காளமேகமாகத் தான் விளங்கினார். இந்த முதல் மேடை ஏற்றம் பற்றிக் கவிஞர் மிகவும் பெருமைப்படுவார். காரணம், “அப்போது நான் ஐந்து சினிமாப் பாட்டுத்தான் எழுதி இருந்தேன். படமும் வெளியாகவில்லை; பத்துப் பதினைந்து கவிதைகள்தான் எழுதி இருப்பேன்; அதுவும் பிரபலம் இல்லாத பத்திரிகைகளில். இந்த நிலையில் கலைஞர் என்னை ‘கவிஞர்’ என்று ஏற்றுக்கொண்டு, செழியனுக்கு அறிமுகப்படுத்த, செழியன் என்னை ‘கவிஞர் கண்ணதாசன்’ என்று மேடையிலே அறிமுகப்படுத்தி விட்டார். இப்போது சரி; அப்போது அந்தப் பட்டத்திற்கு நான் தகுதியானவன்தானா...?” என்று கேள்விக் குறியோடு நிறுத்திச் சந்தோசப்படுவார், கவிஞர்.

Updated On 4 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story