இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(19-07-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

சாவித்திரிக்காக அபிபுல்லா சாலையில் கட்டிய புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தை தடபுடலாகச் செய்தோம். முதல் அழைப்பிதழை சாவித்திரியின் பெரியப்பா சவுத்திரிக்குக் கொண்டுபோய் கொடுத்தோம். "இப்போதாவது என்னை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?" என்று நான் கேட்டேன். நானும் சாவித்திரியும் இணைந்ததில் இருந்து சவுத்திரி பேசாமல் இருந்தார்.

எங்களைக் கண்டதும் சவுத்திரியின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. என்னை (ஜெமினி) அப்படியே அணைத்துக்கொண்டு, "நீ மாப்பிள்ளை அல்ல; தெய்வம்" என்று வாழ்த்தினார். தென்னிந்திய திரை உலகத்தை சேர்ந்த அத்தனை பிரமுகர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள். பம்பாயில் இருந்து நடிகை மீனாகுமாரி போன்ற சிலரும் வந்து இருந்தார்கள்.

சாவித்திரி பூரிப்பு

புது வீடு திருமண வீடு போல, அமர்க்களப்பட்டது. அப்போது, எங்கள் குடும்ப நண்பரும், நல்ல ஆலோசகருமான வைத்தியநாதன் என்னை தனியே அழைத்தார். கணேஷ்! நீ பாப்ஜிக்கு (முதல் மனைவி) இப்படி ஒரு பங்களாவைக் கட்டிக் கொடுத்துவிட்டு அல்லவா சாவித்திரிக்கு கட்டியிருக்க வேண்டும். எனக்கு என்னவோ இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சலித்துக் கொண்டார்.

"மாமா! நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனக்கும் பாப்ஜிக்கும் ஏற்கனவே சொந்த வீடு இருக்கிறது. சாவித்திரி இதுவரை வாடகை வீட்டில் இருந்தாள். தஞ்சம் அடைந்த பெண்ணுக்கு முதலில் தங்க இடம் அமைப்பது தவறு அல்ல. நீங்களும் மற்றவர்களும் இப்படி சொல்லுவீர்கள் என்பதற்காகத்தான், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் பாப்ஜிக்கு இன்னொரு வீடு கட்ட ஏற்பாடு செய்து இருக்கிறேன்" என்று சொல்லி, வைத்தியநாதனின் வாயை அடைத்தேன். அடுத்த சில நாளில் நுங்கம்பாக்கம் வீட்டுக்கு அடிக்கல் நாட்டினோம். எந்தவித சலனமும் சஞ்சலமும் இல்லாமல் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டு இருந்தது. சாவித்திரி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்!. தாய்மையும் அடைந்தாள்!.


ஜெமினி கணேசனை நாயகனாக வைத்து தனது முதல் படத்தை இயக்க முன்வந்த ஸ்ரீதர்

எனக்காக கதை எழுதிய ஸ்ரீதர்

ஒருநாள் வீனஸ் பிக்சர்சின் பங்குதாரர்களான கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராசன், ஸ்ரீதர் மூவரும் வீட்டுக்கு வந்தார்கள். "பிரதர்! உங்களுக்கு என்றே ஓர் அருமையான கதை எழுதி வைத்து இருக்கேன். நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார், ஸ்ரீதர். "டைரக்டர் யார்?" என்று நான் கேட்டேன். "ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில், முதல் தடவையாக இந்தப் படத்தை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்" என்றார், ஸ்ரீதர்.

"வெரிகுட்! நன்றாகச் செய்யுங்கள். கதாநாயகி யார்? சாவித்திரியா, பத்மினியா?” என்று வினவினேன். (அப்போது வீனஸ் பிக்சர்சுக்கு சாவித்திரியும், பத்மினியும்தான் நிரந்தர கதாநாயகிகள்.) உடனே கிருஷ்ணமூர்த்தி குறுக்கிட்டு சாவித்திரிக்கு ஒரு பிரமாதமான வேடம் இருக்கிறது. என்ன செய்வது? நீர்தான், அதற்குள் சாவித்திரிக்கு பிள்ளையார் வேடம் போட்டுவிட்டீரே! இரண்டு ரிலீஸ்களும் ஒண்ணு போல ஆகிவிடும் போல இருக்கே! பிறகு எப்படி சாவித்திரியைப் போடமுடியும் என்றார்.

"பிரதர்! நாங்கள் ஒரு முடிவு செய்து இருக்கோம். இந்தப் படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளுக்கும், வேறு இரண்டு நடிகைகளை போடப் போகிறோம்! ஒரு தொல்லை இருக்காது. சாவகாசமாக பிளான் பண்ணி படத்தை முடிக்கலாம், பாருங்க..." என்று இழுத்தார், கோவிந்தராசன்.

கல்யாணப்பரிசு திரைப்படம்


கல்யாணப்பரிசு திரைப்படத்தின் நாயகிகளான விஜயகுமாரி, சரோஜாதேவி

"ஜெமினி என்ன அவளைப் போடுங்க... இவளைப் போடுங்க என்று பேசுகிறவரா? நாம் என்ன மரப்பாச்சியையா கதாநாயகியாகப் போடப்போகிறோம்! அழகான பெண்ணைத்தான், அவருக்கு ஜோடியாக பிடித்திருக்கிறோம்" என்று அடுக்கினார், கிருஷ்ணமூர்த்தி.

"நீங்கள் எப்படி முடிவு செய்தாலும் சரி! ஸ்ரீதர் பிரதர்! நீங்கள் நகத்தைக் கடிக்காமல், (ஸ்ரீதர் எப்போதும் நகம் கடிப்பவர்) பேனாவைப் பிடித்து, வசனம் எழுதத் தொடங்குகள்" என்றேன், நான். அம்மா, எஸ். டி. சுப்புலட்சுமி. அவருடைய மகள்களாக விஜயகுமாரியும், சரோஜாதேவியும் நடிக்க, ரேவதி ஸ்டூடியோவில் "கல்யாணப்பரிசு" படம் வளரத் தொடங்கியது.

"டைபாய்டு" காய்ச்சலில் படுத்தேன்

அப்போது நான் பம்பாயில், உள்ள எம். வி. ரேவதி ஸ்டூடியோவில், "கொஞ்சும் சலங்கை" படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அங்கு சரியான மழை!

படப்பிடிப்பு முடிந்து திரும்பியதும், 9-7-1953 அன்று நான் "டைபாய்டு" காய்ச்சலில் படுத்தேன். நண்பர்களும், பட உலகப் பிரமுகர்களும் வீட்டுக்கு படையெடுத்தார்கள்.

எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் வி.என்.ராமகிருஷ்ணன், "ஒரு மாதம் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது" என்று என்னை பயமுறுத்தினார்.

"கல்யாணப்பரிசு" படக் குழுவினர் வீட்டுக்கு வந்து சாவித்திரியிடம் இரகசியம் பேசினார்கள். வேறு நடிகரைப் போட்டு படத்தை முடிக்கக் கேட்கிறார்களோ என்று, என் மனம் குழம்பியது.


ஓய்வே இல்லாமல் நடிக்கத் தொடங்கிய ஜெமினி - சாவித்திரி

அதனால், நானே தயாரிப்பாளரை அழைத்து "கிருஷ்ணமூர்த்தி சார் உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது. வேறு ஒருவரைப் போட்டு "கல்யாணப்பரிசு" படத்தை முடித்து விடுங்கள். நான் அடுத்த படத்தில் பண்ணுகிறேன்" என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னேன்.

உடனே கிருஷ்ண மூர்த்திக்குக் கோபம் வந்துவிட்டது! "ஏங்க நான் "பிசினெஸ்மேன்" தான். இந்த யோசனை எனக்குத் தெரியாதோ!. இந்த வேடத்துக்கு உம்மை விட்டா, வேறு ஆள் கிடையாது. என் தலையெழுத்து, அடுத்த ஆண்டு என்றாலும், உம்மைப் போட்டுத்தான் படத்தை முடித்தாகணும். நீரு நல்லா ஓய்வு எடும். நான் போட்ட செட்டை கலைத்து விடுகிறேன். படத்தை மெள்ள எடுத்தாப்போதும்" என்று அடித்துப்பேசினார். மகிழ்ச்சியால், என் கண்கள் குளமாயின.

மீண்டும் காய்ச்சல்

நான் வீட்டில் காய்ச்சலால் படுத்து இருந்தபோது, சாவித்திரிக்கு ஓய்வு இல்லாத வேலை. தமிழ், தெலுங்கு படங்களில் இராப்பகலாக நடித்துக்கொண்டு இருந்தாள். வயிற்றில், குழந்தை வேறு. லொங்கு லொங்கு என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டே, என்னையும் விழுந்து விழுந்து கவனித்தாள்.

ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு, நான் தெம்பாக எழுந்தேன். இரண்டு பேருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத படப்பிடிப்பு. சாவித்திரிக்கு "மாதம்" ஆகுமுன், அவள் நடித்த எல்லாப் படத்தையும் முடிப்பதில் டைரக்டர்கள் போட்டி போட்டார்கள்.

அதில் ஒன்று, பெரியவர் பி. புல்லையா டைரக்டு செய்த ‘அதிசயத் திருடன்' என்ற படம், அந்தப் படத்தின் முக்கியமான காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தபோது, எனக்கு மீண்டும் "டைபாய்டு" காய்ச்சல் வந்தது!

(தொடரும்)

Updated On 20 May 2025 2:57 PM IST
ராணி

ராணி

Next Story