இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

விஜய் ஆண்டனி, தமிழ்த் திரையுலகில் தனித்தன்மையுடன் மிளிரும் ஒரு பன்முகக் கலைஞர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் என பல தளங்களில் தன் திறமையை நிரூபித்து உள்ள இவரது பயணம், மற்ற நடிகர்களின் பாதையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது, வணிக வெற்றியை மட்டும் மையப்படுத்தாமல், சமூகப் பொறுப்புணர்வையும், ஆழமான அரசியல் கருத்துகளையும் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறது. சில நடிகர்கள் நேரடியாக அரசியல் களத்தில் குதித்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வேளையில், விஜய் ஆண்டனி தனது திரைப்படங்களின் திரைக்கதைகள் மூலமாகவே சமூகத்தின் அவலங்களையும், அரசியல் அமைப்பின் கோளாறுகளையும் நுட்பமாகப் பதிவு செய்கிறார். இவ்வாறு அவரது திரைப்படங்கள் பேசும் அரசியல், தற்செயலானதா அல்லது திட்டமிட்டதா? என்பது ஒருபுறம் இருந்தாலும் தற்போது அதில் உச்சபட்சமாக விஜய் அண்டனியின் 25 வது படமாக வெளிவரவுள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் முழு அரசியலை பேச வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்டுரை, விஜய் ஆண்டனியின் அரசியல் பார்வை குறித்தும், அவரது திரைப்படங்களில் வெளிப்படும் சமூக அக்கறை குறித்தும் விரிவாக அலசுகிறது.

ஆரம்பமே அரசியல் தான்

ஒரு கலைஞனின் படைப்புகள் அவனது உள் மனதின் பிரதிபலிப்பு என்று கூறுவதுண்டு. அந்த வகையில், விஜய் ஆண்டனி தனது பேட்டிகளில், "எனக்கு அரசியல் தெரியாது" என்று பணிவுடன் கூறினாலும், அவரது திரைப்படங்கள் அதற்கு நேர்மாறாக வேறு கதையைச் சொல்கின்றன. 'நான்', 'சலீம்' போன்ற அவரது ஆரம்பகாலப் படங்கள் கூட, சமூகத்தில் நிலவும் குறைகளையும், அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தையும் தைரியமாகக் கேள்வி கேட்டன. இது, அவரது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே அவர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதை களங்களைத் தேர்ந்தெடுத்ததை உறுதிப்படுத்துகிறது. சமகால நடிகர்களான விஜய், விஷால் போன்றோர் வெளிப்படையாக அரசியல் ஈடுபாட்டைக் காட்டினாலும், விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் பேசும் அரசியல் மிகவும் ஆழமானது. ஒரு சாதாரண மருத்துவன் ('சலீம்') மருத்துவ மாஃபியாவை எதிர்ப்பது, அரசியல்வாதிகளின் வாரிசுகளின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவது, ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ('திமிரு புடிச்சவன்') இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் போராடுவது எனப் பல உதாரணங்கள் அவரது அரசியல் ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றன.


விஜய் ஆண்டனியின் சலீம் மற்றும் பிச்சைக்காரன் படக் காட்சிகள்

இந்த வரிசையில் 'பிச்சைக்காரன்' திரைப்படம், ஏழைகளின் வாழ்க்கைப் போராட்டத்தையும், பணத்தின் மதிப்பையும், மக்களின் துன்பத்தைப் புரிந்து கொள்ளாத செல்வந்தர்களின் அறியாமையையும் ஒரு பிச்சைக்காரனின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியது. இது, சமூக சமத்துவமின்மை குறித்த ஆழமான அரசியல் பார்வையை முன்வைக்கிறது. இதில் குறிப்பாக தன் துவக்க காலத்திலேயே விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருந்த 'யமன்' திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத அரசியல் சூழ்ச்சிகளை பற்றி ஆழமாகப் பேசியது. ஒரு சாதாரண மனிதன், எப்படி அரசியலில் நுழைந்து, அதிகார மையங்களை வீழ்த்தி, படிப்படியாக உயர்கிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. ஒரு மாநில முதல்வரின் மர்ம மரணம், அரசியல் சதுரங்க ஆட்டங்கள், சந்தர்ப்பவாதக் கூட்டணிகள், ஊடகங்களின் பங்கு எனப் பலவற்றை, ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் போல இப்படம் சித்தரித்தது. வணிக ரீதியில் இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், அரசியல் குறித்த அதன் துணிச்சலான பார்வை, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

அழுத்தமான அரசியல் படங்கள்

விஜய் ஆண்டனி படங்களிலேயே மிகவும் வெளிப்படையாக அரசியல் பேசிய படம் என்றால் அது 'கோடியில் ஒருவன்' திரைப்படம்தான். இதில், ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக, படிப்படியாகப் போராடி, உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அரசியலின் அனைத்து மட்டங்களிலும் போட்டியிடும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். அரசியல் என்பது குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது அல்ல, ஒவ்வொரு சாமானியனும் அரசியலில் நுழைந்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நேர்மறையான அரசியல் செய்தியை இப்படம் அழுத்தமாகப் பேசியது. இதேபோல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 'திமிரு புடிச்சவன்' திரைப்படம் , சமூகத்தில் பெருகிவரும் இளைஞர் ரவுடிசத்தைப் பற்றிப் பேசியது. இப்படத்தில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி, குற்றவாளிகளைப் பிடிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் வேர்களிலேயே புரையோடிப் போயிருக்கும் சமூகப் பிரச்சனைகளைச் சரி செய்வதுதான் சட்டம்-ஒழுங்கைக் காப்பது என்ற அழுத்தமான அரசியல் கருத்தை வலியுறுத்தினார். அதேபோல் விஜய் ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த 'பிச்சைக்காரன் 2' வெறும் சமூகப் படமாக மட்டுமல்லாமல் பண அரசியல், கருப்புப் பணம், பணக்காரர்கள் எப்படி ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுகின்றனர் எனப் பல பொருளாதார அரசியல் விஷயங்களை, அறிவியல் புனைகதை வடிவில் பேசியிருந்தது.


அரசியல் பேசிய விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' மற்றும் 'காளி'

மேலும், 'காளி' திரைப்படம், சாதி அரசியலையும், கிராமப்புற சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளையும் நேரடியாகச் சாடியது என்றால், ‘ரத்தம்’ திரைப்படம், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களையும், அவற்றின் மூலம் பரவும் பொய் செய்திகளையும், அதன் பின்னால் இயங்கும் அரசியலையும் பேசியது. அதேபோல் ‘ஹிட்லர்’ திரைப்படம் 'ஜென்டில்மேன்' பட பாணியில், வழக்கமான பழிவாங்கும் கதை களத்தை கொண்டிருந்தாலும், சமூகத்தில் நிலவும் ஊழல், குற்றங்கள் போன்றவற்றை ஒரு தனிமனிதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் புதிய பாணியில் காட்டி, அரசியல் அதிகாரத்தின் தவறான பயன்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியது. ஏன் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ‘மார்கன்’ திரைப்படம் கூட ஒரு திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருந்தாலும், அதிலும் நிற அரசியல் பேசப்பட்டிருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அரசியலில் அடுத்த கட்டம்

விஜய் ஆண்டனி படங்களில் மட்டும் அல்ல, சமூகம் சார்ந்த பல விஷயங்களிலும் தனது தனிப்பட்ட கருத்துக்களை அழகான அரசியல் கலந்தே இதுவரை பதிவு செய்துள்ளார். இது தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா? என்பது ஒருபுறம் இருந்தாலும் தற்போது அதில் அடுத்தகட்டமாக விஜய் ஆண்டனியின் 25-வது படமான 'சக்தி திருமகன்' திரைப்படம் ஒரு முழு அரசியல் படமாக வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'அருவி' மற்றும் 'வாழ்' போன்ற மாறுபட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் சமகால அரசியல் தலைவர்கள் செய்யும் பண மோசடி, அவர்கள் இளைஞர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதிகாரத்திற்காக அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள், தற்போதைய சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் போன்றவற்றை தைரியமாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'சக்தி திருமகன்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் தோற்றம்

சமீபத்தில் 'சக்தி திருமகன்' படத்தின் முன்னோட்ட நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, இப்படத்தின் கதை தனக்காகவே எழுதப்பட்டதா என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாகவும், ஆனாலும் அருண் பிரபுவின் மீதான நம்பிக்கையால் படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படத்தின் முதல் பாதி கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், ஆனால் இரண்டாம் பாதி கதை சுத்தமாகப் புரியவில்லை என்றும் கூறினார். ஏனெனில், அதில் நிறைய அரசியல் வசனங்கள் இருந்ததாகவும், தனக்கு அரசியல் தெரியாததால் அதில் ஏதேனும் குறியீடுகள் இருக்கிறதா என சந்தேகம் எழுந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் விஜய் ஆண்டனியின் திரைப்படங்களில் அரசியல் பேசுவது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு இல்லை.

விஜய் ஆண்டனியின் படங்களைப் பார்க்கும்போது, அவருக்குள் ஒரு அரசியல்வாதிக்கான பார்வை தெளிவாகத் இருக்கிறது என்பது நம்மால் உணர முடியும். ஆனால் தனக்கு அரசியல் தெரியாது என அவர் கூறுவது வேடிக்கையான ஒன்றுதான். ஏனெனில் அவர் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தன் படங்களில் சமூகத்தின் அரசியல் நிலையைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதே இதற்கு சான்று. விஜய் ஆண்டனி நேரடியாக அரசியலில் நுழைவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது என்றாலும், அவரது திரைப்படங்கள் பல அரசியலைப் பேசியுள்ளன என்பதை மறுக்க முடியாது. மேலும், அவரது பேட்டிகளில் அவர் பேசும் உத்வேகமான பேச்சுகள், அவருக்குள் ஒரு நல்ல அரசியல்வாதிக்கான திறமை உள்ளதை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை, எதிர்காலத்தில் அவர் நேரடி அரசியலில் நுழைந்தால், அது அவரது திரைப்படங்களின் நீட்சியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Updated On 16 Sept 2025 12:38 AM IST
ராணி

ராணி

Next Story