இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் 1970 மற்றும் 80 கால கட்டங்களில் பெண் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி அதிகமான திரைப்படங்கள் வெளிவந்தன. அதிலும் கே.பாலச்சந்தர் தொடங்கி பாலுமகேந்திரா, பாரதிராஜா, ருத்ரையா போன்றோர்களின் வருகைக்கு பின்னர் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் வலிமை பெற்றன. இப்படியான கதை போக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவும் அடுத்தடுத்து பெண் கதாநாயகிகளை முன்னிறுத்தி வந்த அத்தனை படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்து சரித்திர புகழ் பெறவும் தவறவில்லை. இருந்தும் 1990-களின் இறுதி தொடங்கி 2000-களுக்குப் பிறகு காதல், கமர்ஷியல், ஆக்சன் என்று கதைக்களங்கள் மாறி அதிரடி படங்களாக வர இங்கு கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் என்பது குறைய ஆரம்பித்தது. இருந்தும் கதாநாயகிகளை திரைப்படங்களில் வெறும் கிளாமருக்காக மட்டும் பயன்படுத்தும் போக்கை மாற்றிக்காட்ட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்கி அதில் வெற்றியும் காணும் ஒருசில இயக்குனர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் கோபி நயினார். புரட்சிகர இயக்குனர், உண்மையான போராளி என்று பலராலும் அறியப்படும் இவர் 2017-ஆம் ஆண்டு ‘அறம்’ என்றொரு படத்தின் வாயிலாக பெண் கதாநாயகிகளின் முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் அதிரடியான கதை சொல்லால் உடைத்து காட்டினார். அப்படி மீண்டும் பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘மனுசி’ என்றொரு படத்தினை இயக்கி உள்ளார். இப்படம் குறித்தும், இதில் கோபி நயினார் சொல்ல வருவது என்ன என்பது குறித்தும், இதற்கு முன்பாக இவர் இயக்கி வெற்றி கொடுத்த ‘அறம்’ திரைப்படம் எப்படியான தாக்கத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தது என்பது குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

யார் இந்த கோபி நயினார்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்று கூறி பிரபலமானவர்தான் கோபி நயினார். இவர் பிறந்தது மும்பையாக இருந்தாலும் 10 வயதிற்கு பிறகு படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையை அடுத்து உள்ள காட்டூரில்தான். சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்ட நபராக இருந்துள்ள கோபி நயினார் ஒரு வறுமையான குடும்ப சூழ்நிலையில்தான் வளர்ந்துள்ளார். இவர் இருந்த பகுதியில் ஆயிரம் பேருக்கு ஒரே ஒரு பஞ்சாயத்து டிவி மட்டுமே இருந்தபோதும், திரைப்படத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் 3 கி.மீ. தூரம் பயணித்து வந்து வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் போன்றவைகளை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அப்படி ஒருமுறை இயக்குனர் மகேந்திரனின் 'நண்டு' படம் பார்த்தவருக்கு தானும் இதை போன்ற ஒரு படம் எடுத்து இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதோடு, அதற்கான முயற்சியிலும் இறங்க துவங்கினாராம். அந்த நேரத்தில் கோபி நயினார் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரின் தந்தையும் இறந்து விட அவரது குடும்பம் மேலும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அந்த சமயம் அவரது உறவினர்களில் ஒருவர் இவருக்கு சில உதவிகள் செய்ததோடு, அவர் கம்யூனிஸ சித்தாந்தத்தை பின்பற்றிய நபராகவும் இருந்ததால் பல தோழர்களின் அறிமுகமும் கோபி நயினாருக்கு கிடைத்துள்ளது.


இயக்குனர் அவதாரம் எடுத்த பிறகு கோபி நயினார்

அவர்கள் மூலம் சமூக நீதி, சாதிய பாகுபாடு போன்ற விஷயங்களை தெரிந்து கொண்ட அவர், தோழர்கள் படிக்கக் கொடுத்த புத்தகங்களின் வாயிலாக இடதுசாரி கருத்தியல் கொண்ட நபராகவும் மாறத் துவங்கினார். குறிப்பாக டேனியல் செல்வராஜின் எழுத்துகள் மீதும், தலித் இலக்கியங்கள் மீதும் அதிக ஈர்ப்பு இவருக்கு ஏற்படவே தொடர்ந்து அது சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். பிறகு தனது சினிமா கனவையும் நிறைவேற்ற உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவரை பார்த்தவருக்கு அதில் பல தெளிவும் கிடைத்துள்ளது. அதிலும் அகிரா குரோசாவாவின் படங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் அதன் மூலம் ஒரு சினிமாவை எப்படி எடுப்பது என்பதையும் கற்றுக் கொண்டார். அப்போதுதான் ஒரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்து. அதனை தவறவிட்டவருக்கு கத்தி பட விவகாரம் மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தவே, ஒரு கட்டத்தில் சினிமாவைவிட்டே சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம். இது தவிர இவர் கதை எழுதிய கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளரும், பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' படத்தின் கதை கோபி நயினாருடையதுதான் என மற்றொருபுறம் குற்றஞ்சாட்ட அதை பெரிதாக கருதாத கோபி, மனதை தளரவிடாமல் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

'அறம்' சொன்ன அறம்

என்ன நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்த கோபி நயினார் தனது 42வது வயதில் இயக்குனர் ஆவதற்கான முழு முயற்சியில் இறங்கினார். அதற்காக ஒரு மாவட்ட ஆட்சியரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கு நெருக்கமான கற்பனை சம்பவத்தை கதையாக எழுதி, அதை படமாக எடுக்க ஒவ்வொரு தயாரிப்பாளராக அணுகினார். இருந்தும் ஒருவருமே வாய்ப்பு தரவில்லை. காரணம் அவர் எழுதிய கதை அரசு இயந்திரத்தை விமர்சிக்கும் வகையில் இருந்ததோடு, கத்தி விவகாரத்தில் மூத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக புகார் கொடுத்த நபர் என்பதாலும்தான். இருந்தும் தன் முயற்சியை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து ‘அறம்’ படத்தின் கதையை கூற, அவரோ இதில் ஒரு ஹீரோவை முன்னிறுத்தி கதையை எழுதியிருக்கிறீர்கள். அதை ஒரு பெண்ணுக்கான கதைக்களமாக மாற்றுங்கள், நானே தயாரித்து நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி கதையை மாற்றி நயன்தாராவை நடிக்க வைத்து படத்தினை எடுத்து முடித்தவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கோபி நயினார் அணுகிய அத்தனை ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் வேண்டாம் என மறுத்த ஒரு கதையை நயன்தாரா துணிச்சலுடன் தயாரித்து நடித்தது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது.


'அறம்' படத்தில் மதிவதனியாக வரும் நயன்தாரா

எந்த ஒரு அரசாங்கமும் மக்களுக்கு பெரிய அளவில் நல்லது செய்யாது என்பதனை புரிய வைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்படம் 2017-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நயன்தாரா, ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லக்‌ஷ்மி, விக்னேஷ், ரமேஷ், அனந்தகிருஷ்ணன் என பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். இதில் மக்களுக்குச் சேவை செய்வதையே தன் பணியாகக் கொண்டு நேர்மையான மாவட்ட ஆட்சியர் மதிவதனியாக வரும் நயன்தாரா நடிப்பில் மிரட்டியிருந்தார். அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளுக்கு மத்தியில், தான் கையில் எடுத்த பணியை எப்படி அறம் மாறாமல் சாதுர்யமாகவும், தைரியமாகவும் செய்து முடித்து வெற்றி பெறுகிறார் என்பதை மிக அழகாக சொல்லியிருந்த இப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது மட்டுமின்றி, படம் பார்க்க விரும்பாதவர்களையும் பார்க்க வைத்தது.


'அறம்' திரைப்படத்தில் காட்சி குறித்து விளக்கும் இயக்குனர் கோபி நயினார்

மேலும் நமது நாடு எவ்வளவோ வளர்ச்சியடைந்திருந்தாலும், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற சரியான உபகரணங்கள் இன்றி இருக்கும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் வரும் காட்சிகளும் சரி, அரசாங்கத்தின் உதவியின்றி ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை பொதுமக்களின் உதவியோடு காப்பாற்ற நயன்தாரா எப்படி போராடுகிறார் என்பதை சொன்ன விதத்திலும் சரி, மிக நேர்த்தியுடன் காட்சி படுத்தியிருந்த விதம் ஒட்டுமொத்த சினிமா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இப்படி எல்லா தரப்பினரின் பாராட்டைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது என அப்போதே கூறப்பட்டது. முதல் பாகத்தில் குழந்தை மீட்புக்கு பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நயன்தாரா எங்கே போனார்? என்ன செய்கிறார்? என்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளதாக இயக்குனர் கோபி நயினார் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

சமூக நீதி பேச வரும் 'மனுசி'

‘அறம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகை ஆண்ட்ரியாவை வைத்து ‘மனுசி’ என்றொரு படத்தினை இயக்க முடிவு செய்தார் இயக்குனர் கோபி நயினார். அதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் விதமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி ‘மனுசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. காரணம் வெற்றிமாறன் தனது ‘விடுதலை’ படத்தில் பிஸியானதால் இப்படம் தாமதம் ஆகி வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஈஸ்வரி ராவ் ஆகியோரை வைத்து இயக்குனர் கோபி நயினார் ‘கருப்பர் நகரம்’ என்றொரு படத்தினை இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 09-ஆம் தேதி அப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் ஏனோ தெரியவில்லை, அப்படம் வெளிவருவதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல், அதன் பிறகு அப்படம் குறித்த எந்த தகவலும் வராமல் அப்படியே நின்று போனது.


'மனுசி' திரைப்படத்தில் வரும் நடிகை ஆண்ட்ரியா

பிறகு மீண்டும் ‘மனுசி’ படத்தில் கவனம் செலுத்தி இயக்க ஆரம்பித்த கோபி நயினார் தற்போது இப்படத்தை முழுமையாக எடுத்து முடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் நாசர், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், தமிழ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நயன்தாராவின் 'அறம்' படத்தைப் போலவே, இந்த படமும் மிகவும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியானது. ட்ரெய்லர் ஆரம்பிக்கும் போதே நடிகை ஆண்ட்ரியா மற்றும் அவரது தந்தையாக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தீவிரவாதிகள் என்ற போர்வையில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது போல் காட்டப்படுகிறது.

மேலும் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த “எங்க பேற எங்க விருப்பப்படி எழுதவிட மாட்டீங்களா”, “அடிக்கிறது தப்புங்குற குற்றவுணர்வே இல்லாதவன் கூட எப்படி மேடம் வாழ முடியும்“, “ஒரு விளையாட்டுல வெறும் இந்தியனா எப்படி பதில் சொல்ல முடியும்”, “சாதிய உருவாக்குனவங்கதான் இந்தியாவை உருவாக்குனாங்க”, “கொஞ்சம் கொஞ்சமா சர்வாதிகாரியா மாறிட்டு வறீங்க” போன்ற கம்யூனிச சிந்தாந்த கொள்கைகளை முன்னிறுத்தி ஆண்ட்ரியா பேசியிருக்கும் வசனங்கள் ஒவ்வொன்றும் தெறிக்கவிடும் வகையில் அமைந்திருந்தது. அனல் தெறிக்கும் வசனங்களோடு ஆண்ட்ரியாவை சுற்றியே கதை நகருவதுபோல் காட்டப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லரில், அவரின் அழுத்தமான நடிப்பும் பாராட்டும்படியாக உள்ளது. ‘அறம்’ போலவே ‘மனுசி’-யும் துணிச்சலான அரசியல் பேசி வருவதால் பல மடங்கு எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஆழமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்று ட்ரெய்லரை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் அறத்தினை அறமாக சொல்லியது போலவே, முற்போக்கு பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள கோபி நயினாரின் மனுசி திரைப்படமும் ஆழமான சமூக நீதி பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக கோபி நயினார் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளதோடு, மீண்டும் ஒரு சரித்திரத்தை படைக்க நாம் வாழ்த்துவோம்.

Updated On 6 May 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story