இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு மற்றும் கேரளா, இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட பெரிதும் வேறுபடும். இதில் மிகவும் குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம் நெப்போட்டிசம். திரைப்பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது மும்பையில் வேறு விதமாக இருக்கும். அதுவே தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வேறு விதமாக இருக்கும். ஒரு பிரபலத்தின் வாரிசு என்பதால் அவர் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. இது பலரும் அறிந்ததே. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் எவ்வளவு பெரிய ஜாம்பாவன்களாக இருந்தாலும், திறமை இருந்தால் மட்டுமே அவர்களின் வாரிசுகள் இங்கு கொண்டாப்படுவார்கள்.

இங்கு ஒரு பிரபலத்தின் வாரிசுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது எளிதான ஒன்று. ஆனால் வெற்றிப் பெறுவது என்பது அரிதாகவே உள்ளது. இதற்கு பலபேரை உதாரணமாகக் கூறலாம். இவர்களின் இந்த தோல்வியில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. காரணம், வெளியிலிருந்து வரும் நடிகர்கள் படிப்படியாக மேலே வரலாம். ஆனால் வாரிசு நடிகர்கள் முதல் படத்திலேயே ஹிட் கொடுக்க வேண்டும். பெரிய நடிகர் என்றால் அவரிடம் உள்ள அனைத்தும் அவரின் வாரிசிடமும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்கு அதிகம் உள்ளது. இதனாலேயே பிரபலங்களின் வாரிசுகள் பலரும் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியாமல் போனது. இதில் சிலருக்கு திறமை இல்லை என்பது எப்படி உண்மையோ, சிலர் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போகின்றனர் என்பதும் உண்மை. இந்நிலையில், “நான் சாந்தனு பாக்கியராஜ் இல்லை, வெறும் சாந்தனு மட்டும்தான்” என நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனு பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்ளூ ஸ்டார் படத்திற்கு விருதுவென்ற சாந்தனு

நடிகர் சாந்தனு...

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு, கடந்த 2008ஆம் ஆண்டு ‘சக்கரகட்டி’ படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். கலைப்புலி தாணு படத்தை தயாரித்திருந்தார். படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தாலும், படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து அமைந்த அடுத்தடுத்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் கிடைத்த சில நல்லப் படங்களின் வாய்ப்புகளையும் தவறவிட்டார். ஆனாலும் தொடர்ந்து தனக்கென ஒரு தனி இடம் கிடைக்க போராடி வருகிறார். இதனிடையே தொகுப்பாளர் கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ப்ளூ ஸ்டார். இதில் அசோக் செல்வனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடித்ததற்காக தற்போது சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். தற்போது மலையாளத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்த பல்டி படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. இது கண்டிப்பாக சாந்தனுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதால் அதற்கான அழுத்தம் தன்மீது போடப்பட்டதாகவும், தான் எப்போதும் சாந்தனு பாக்கியராஜாக இருக்க விரும்புவதில்லை எனவும், தனக்கு சாந்தனுவாக மட்டுமே இருக்க விருப்பம் என்றும் அவர் பேசியிருப்பது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.


பல்டி படத்தில் சாந்தனு

“சாந்தனு பாக்யராஜ் இல்லை... சாந்தனுதான்”...

பல்டி திரைப்படம் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாந்தனு, “சாந்தனு, சாந்தனு பாக்யராஜ் என்பதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் வொர்க்கவுட் ஆகாது. ஆனாலும் என்மீது ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. நான் ஆசைப்படவில்லை, இவருக்கு (இயக்குநர் பாக்யராஜ்) பிறக்கவேண்டும் என்று. அது நடந்துடுச்சு. அது என் விதி. ஆனால் அதன் காரணமாகவே, எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளன. நான், சிவகார்த்திகேயனாகவோ, மணிகண்டனாகவோ பிறந்திருக்கலாம்...

எல்லோரும் ஒரே உழைப்பைதான் போடுகிறோம். நான் எப்போதும் சாந்தனுவாக எல்லாவற்றையும் முயற்சிக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். நான் எங்கேயும் சாந்தனு பாக்யராஜாக முயற்சியை எடுத்ததில்லை” எனத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இதனை பார்க்கும் பலரும் கே.பாக்யராஜ் ஒரு சாதாரண நடிகன் இல்லை. நடிப்பை தாண்டி திரைக்கதை, இயக்கம், நகைச்சுவை என எல்லாவற்றிலும் பேர் பெற்றவர், அவருடைய மகன் என்று வரும்போது எதிர்பார்ப்புகள் என்பது இருக்கத்தான் செய்யும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


பாக்யராஜ் மகன் என்பதால்தான் சக்கரக்கட்டி வாய்ப்பு கிடைத்தது - சாந்தனு

அப்பாவால்தான் முதல் வாய்ப்பு கிடைத்தது!

நான் பாக்யராஜ் மகன் என்பதாலேயே முதல் படமான சக்கரகட்டி வாய்ப்பு கிடைத்தது. சக்கரகட்டி ரிலீஸுக்கு முன்பு இப்போது இருக்கும் ஒரு நான்கைந்து தயாரிப்பாளர்கள் எனக்கு முன்பணம் கொடுத்திருந்தார்கள். படம் ரிலீஸாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றபோது எல்லோரும் பணத்தை திரும்ப பெற்றார்கள். அப்போது மீண்டும் அப்பாதான் எனக்கு உதவி செய்யவந்தார். அதுதான் சித்து+2. ஆனால் அதுவும் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. அடுத்த மூன்று நான்கு வருடங்கள் ஏதோ தவறாக செல்கிறது என நினைத்தேன். அதை புரிந்துகொள்வதற்கான ஒரு பக்குவம் வருவதற்குள் நான் சரிந்தேன். எனக்கான மார்க்கெட் போய்விட்டது. சரியான படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அப்போது அப்பாவிடம் சொன்னேன், வெற்றியோ, தோல்வியோ அது என்னை சார்ந்ததாக இருக்கவேண்டும் எனக்கூறிவிட்டு, அனைவரையும் உற்றுநோக்க ஆரம்பித்தேன்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இன்ஸ்பிரேஷன்...

“2014, 15க்கு பிறகு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இப்போது மணிகண்டன் போன்றோரின் வளர்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய்சேதுபதி எல்லாம் கூட்டத்தில் நின்றவர். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார். இவர்களெல்லாம் படிப்படியாக வளர்ந்தார்கள். அடிமட்டத்திலிருந்து ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டார்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் நான் சிலவற்றை கற்றுக்கொள்ளவில்லை என்று. ஆரம்பத்திலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களிடம் தெரிந்துகொண்டேன். அப்போதுதான் முடிவெடுத்தேன் மக்கள் என்னை அவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டுமென்று.


“விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனை பார்த்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன்” - சாந்தனு

இந்த காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் இதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படிப்படியாக உயர வேண்டும் என முடிவெடுத்தேன். அப்போதுதான் தங்கம் கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. நாம் ஹீரோவா என்பது முக்கியமில்லை. படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் போதும். இதன்மூலம் நாம் ஜெயித்தால் தானாக ஹீரோ கதாபாத்திரங்கள் கிடைக்கும்” என தெரிவித்தார். தொடர் தோல்வியால் தற்போது ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாவது போல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று சாந்தனு முடிவெடுத்திருக்கிறாராம். இந்தப் புதிய சிந்தனையின் வெளிப்பாடுதான், அவர் நடித்த புளூ ஸ்டார், தங்கம், அண்மையில் வெளிவந்த பல்டி படமும்.


ஃபோட்டோ ஷூட் ஒன்றில் நடிகர் சாந்தனு

சுப்பிரமணியபுரம், காதல் போன்ற படங்களை இழந்த வருத்தம்...

சக்கரகட்டி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், சுப்பிரமணியபுரம், காதல் போன்ற பட வாய்ப்புகளை சாந்தனு பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த கதைகள் சாந்தனுவுக்கு பொருத்தமாக இருக்காது என அவரின் அப்பா பாக்கியராஜ் மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய சாந்தனு, “நிறையமுறை யோசித்துள்ளேன். நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கும்போது நிறையமுறை அவற்றை ஏன் தவறவிட்டோம் என யோசித்துள்ளேன். யார் யோசிக்காமல் இருப்பார்கள்? அந்த படங்கள் வெற்றியடைந்ததால்தான் அதைப்பற்றி பேசுகிறோம். ஒருவேளை அவை வெற்றிப்பெறவில்லை என்றால், என்னை யாரும் குத்தம் சொல்லமாட்டார்கள். என் அப்பா மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் வந்தன. இதுகுறித்து நிறைய இடங்களில் பேசிவிட்டேன். எனக்கு அந்த கவலை நிறைய இருந்துள்ளது. உங்களுக்கு எது எப்போது நடக்கவேண்டுமோ அது அப்போது நடக்கும். ஒருவேளை நான் அந்தப் படத்தில் நடித்து அது நன்றாக போகாமல் இருந்திருந்தால்...? அந்த கதாபாத்திரத்தை நான் சரியாக கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால்...? அதனால் எனக்கு ஒரு பக்குவம் வந்துள்ளது. எப்போதும் வீழ்வேன். மறுநாள் தட்டிக்கொடுத்துக்கொண்டு நானே எழுந்துகொள்வேன்” என சாந்தனு தெரிவித்துள்ளார்.

Updated On 30 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story