இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(14.01.1968 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

அண்ணாவுக்கு ஆசையோடு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், நடிகை ஜெயலலிதா!

நம் முதலமைச்சரான அறிஞர் அண்ணா மீது எனக்கு என்றுமே தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. மற்ற தலைவர்களிடம் இல்லாத தனி பற்றும், பாசமும் அண்ணாவிடம் எனக்கு உண்டு.

அண்ணா வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல. அவர் ஒரு கலைஞருங்கூட. ‘கலைஞர்கள் அரசியலில் ஈடுபடலாமா?’ என்பதே ஒரு பிரச்சினையாக இருந்த பொழுது, அரசியல்வாதிகள் கலைஞர்களாகவும் இருக்கலாம் என்று செயலில் காட்டியவர், அண்ணா. அரசியலுக்குக் கலையும் ஒரு கருவி என்று கண்டவர், அண்ணா. கலை மீதும், கலைஞர்கள் மீதும் அவருக்குத் தனி அன்பு உண்டு. அவர் மீது எனக்குத் தனி மதிப்பு ஏற்பட இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.

‘ராணி’ கட்டுரை


இருவேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் அறிஞர் அண்ணா

நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுதே அண்ணாவைப் பற்றி அறிவேன். (இப்பொழுதும் நான் சிறு பிள்ளைதான்!) பள்ளிக்கூடத்தில் படித்த பொழுதே நான் அண்ணாவைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அண்ணாவைப் பற்றி ‘ராணி’யில் திருமதி ராணி அண்ணாதுரை எழுதிய ‘என் கணவர்’ என்ற கட்டுரையை நான் ஆசையோடு படித்தேன். அதன் மூலம் அண்ணாவைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். ‘இல்லஸ்டட்வீக்லி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையிலும் அண்ணாவைப்பற்றி படித்தேன். அது முதல் அண்ணாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.

முதல் சந்திப்பு

அண்ணா முதலமைச்சராக ஆன பின்புதான் அவரைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தீ விபத்து நிதிக்காக சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நானும் கலந்து கொண்டு நடனம் ஆடினேன். இந்நிகழ்ச்சிக்கு அண்ணாவும் வந்திருந்தார். அப்பொழுதுதான் நான் முதல் முதல் அண்ணாவைப் பார்த்தேன். அன்பும் அறிவும் பொங்கும் அவருடைய அழகிய முகத்தை ஆசைதீரப் பார்த்தேன். பார்த்தது மட்டுமல்ல; அந்தப் பேரறிஞருக்கு மலர் மாலை அணிவித்து என் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டேன்.

காவல்காரன்


மறைந்த செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணா

சமீபத்தில் ‘காவல்காரன்’ 100-வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலைஞர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. அண்ணாதான் இந்தப் பரிசை வழங்கினார். நானும் பரிசு பெற்றேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ! கறுப்பு சிவப்பு நிற ரிப்பனில் கோர்க்கப்பட்ட தங்கப்பதக்கத்தை அண்ணா கையில் இருந்தே பரிசாக நான் பெற்றேன். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சி, இது. இதை மாபெரும் அதிர்ஷ்டமாக எனது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இவ்விழாவுக்கு ‘அண்ணி’யும் (அண்ணாவின் மனைவி), அண்ணாவின் மருமகளும் வந்திருந்தார்கள். அவர்களை சந்திக்கவும், எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இவரே என் தலைவர்

தமிழகத்தின் முதலமைச்சராக இதற்கு முன் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கலையைப்பற்றி கவலைப்பட்டதே கிடையாது. அண்ணாவோ ஒரு கலைஞர். கலை வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். கலைஞர்களிடம் அன்பு பாராட்டுகிறவர். சிறந்த திரைப்படங்களுக்கு பரிசு வழங்கி கலைக்கும் கலைஞர்களுக்கும் பெருமை தேடித்தரப் போகிறார். அண்ணாவின் ஆட்சியில் அழகு தமிழ் பழகி தமிழாக வளர்ந்து வருவதை அனைவரும் அறிவார்கள். அண்ணாவின் ஆட்சிக் காலம் தமிழுக்கும், கலைக்கும் ஒரு பொற்காலம் ஆகும். ஆகவே, அவரை ‘என் தலைவர்’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்.


அறிஞர் அண்ணாவை, தன் தலைவராக ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட தருணம்

ஆசை நிறைவேறுமா?

அண்ணா விஷயத்தில் எனக்கு ஒரே ஒரு கவலை உண்டு. அண்ணா எத்தனையோ நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவரே நாடகங்களில் நடித்திருக்கிறார். படங்களுக்கும் கதைவசனம் எழுதியிருக்கிறார். அவர் வசனங்களில் கருத்தும் இருக்கும்; கனிவும் இருக்கும். அவர் கதை வசனம் எழுதிய நாட்களில், நான் சிறுமியாக இருந்தேன். நான் நடிகையாக இருக்கும் இப்பொழுது, அண்ணா முதலமைச்சராக இருக்கிறார். இப்பொழுது கலைப் பணிக்கு அவருக்கு நேரம் இருக்குமா?

ஆனாலும் எனக்கு ஓர் ஆசை! அண்ணா கதை வசனம் எழுத வேண்டும்! அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும்! அவரது தேன்தமிழ் வசனங்களை நான் வாய் மணக்கப் பேச வேண்டும்! என் ஆசை நிறைவேறுமா?

Updated On 18 Dec 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story