இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். விஜயகாந்திற்கு பிறகு அதிகமான போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த இவர், தன் அதிரடியான சண்டைகாட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து ஆக்சன் கிங் என்ற பட்டத்தையும் பெற்றார். மிகப்பெரிய சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்தவராக இருந்தும், பல வெற்றி தோல்விகளை சந்தித்துதான் இன்று வெற்றிகரமான நடிகர் என்ற நிலையை அடைந்திருக்கிறார். பழம்பெரும் நடிகரான ராஜன் - புஷ்பலதா தம்பதியரால் ‘நன்றி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்ட இவர், பின்னர் இயக்குநர் ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ஆகிய படங்கள் வாயிலாக அதிரடி நாயகனாக கொண்டாடப்பட்டார். பிறகு நடிகர் என்ற நிலையில் இருந்து தேசப்பற்று மிக்க படங்களை இயக்கி, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர், அதோடு நின்று விடாமல், அதே இளமை கொஞ்சும் துள்ளலோடு அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் தொடங்கி விஜய்யின் ‘லியோ’ வரை நெகட்டிவான வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார். தற்போது ரஜினியின் 170 படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரின் மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்தை கோலாகலமாக சமீபத்தில் நடத்தி முடித்துள்ளார். ஜூன் 10-ஆம் தேதி சென்னை போரூரில், நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமண விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை என்னென்ன என்பது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி காதல் மலர்ந்தது எப்படி?


நடிகர் விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’ படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் அறிமுகமானபோது

தந்தையை போலவே தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் நுழைந்து ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வர ஆசைப்பட்ட ஐஸ்வர்யா அர்ஜுன், தன் விருப்பப்படி நடிகர் விஷாலின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவருக்கு படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் கொஞ்சம் நேரம் எடுத்து மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தபோது தந்தை அர்ஜுனே மகளை கதாநாயகியாக வைத்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தினை எடுத்தார். தமிழ், கன்னடம் இரண்டிலும் வெளியான இப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த நேரத்தில்தான் திடீரென ஒருநாள் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை ஐஸ்வர்யா அர்ஜுன் காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், சினிமா ரசிகர்களும் இது எப்படி சாத்தியமானது? இவர்கள் இருவரும் எப்படி காதலித்தார்கள்? நடிகர் அர்ஜுனுக்கு ஏற்ற மருமகன்தானா உமாபதி? போன்ற எண்ணற்ற கேள்விகளை அள்ளி வீச ஆரம்பித்தனர். ஆனால், அதற்கான விடை யாருக்கும் கிடைக்காத நேரத்தில் இவர்களின் காதல் குறித்து பலரும் பலவாறு பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா - உமாபதியை சார்ந்தவர்களின் நேர்காணல்கள் இடம்பெற ஆரம்பிக்க அதன் மூலம் இவர்களின் அறிமுகம் எப்படி ஏற்பட்டது? நண்பர்களாக இருந்த இவர்கள் எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது.


நிச்சயதார்த்தத்தின் போது உமாபதி - ஐஸ்வர்யா ஜோடி

அது எப்படியென்றால், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதியில் இருந்து 91 நாட்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்கினார். இந்த போட்டியில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள், யூடியூபர்ஸ், மாடல்கள், சமூக ஆர்வலர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், உடற்பயிற்சியாளர்கள் என பல தரப்பில் இருந்து 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் மிக முக்கியமான ஒருவராக எல்லோரும் கொண்டாடியது உமாபதி தம்பி ராமைய்யாவைதான். இவரின் நேர்மையான விளையாட்டு பார்வையாளர்களை மட்டுமின்றி ஆக்சன் கிங் அர்ஜுனையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி மூலமாக அர்ஜுனுடன் நெருக்கமான உமாபதிக்கு அவரின் மகள் ஐஸ்வர்யாவுடனும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியுள்ளது. நாளடைவில் அந்த நட்பு இருவருக்குள்ளும் காதலாக மாற அதனை இருவரது வீட்டிலும் கூறியுள்ளனர். எப்போதும் மகளின் விருப்பங்களுக்கு தடை போடாத அர்ஜுனும், மகன் சுதந்திரத்தில் எப்போதும் தலையிடக்கூடாது என்று நினைக்கும் தம்பி ராமையாவும் தங்கள் பிள்ளைகளின் சந்தோஷம்தான் முக்கியம் என்று அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை


உமாபதி தம்பி ராமைய்யா - ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமண புகைப்படங்கள்

காதலர்கள் என்ற நிலையில் இருந்த ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழைய முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி, இவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் அர்ஜுன் சர்ஜாவுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஐஸ்வர்யா - உமாபதி இருவரும் ஒரே மாதிரியான லைட் ரோஸ் கலர் உடையில் தோன்றி தங்கள் அழகால் பலரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்வில் இருவீட்டு பெரியோர்கள், இரண்டு குடும்பத்துக்கும் நெருக்கமான உறவினர்கள் தவிர திரைத்துறையை சார்ந்த நடிகர் விஷால், இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட ஒருசில நண்பர்களும் கலந்து கொண்டனர். அப்போதே இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெறவும், அடுத்து திருமணம் எப்போது என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரின் திருமண தேதி அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் பத்திரிக்கைகள் வைக்கும் நிகழ்வு தொடங்கியது. திரைத்துறையை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சொன்னது போலவே, ஜூன் 10-ஆம் தேதி ஐஸ்வர்யா - உமாபதியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. நிச்சயதார்த்தம் நடைபெற்ற நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான அதே ஆஞ்சநேயர் கோயிலிலேயே திருமணமும் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யா - உமாபதி கேட்டுக்கொண்டதற்காக அவர்களின் விருப்பப்படியே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண வைபோகத்தை நடத்தி முடித்துள்ளனர். இதுதவிர, திரைத்துறை சார்பில் தம்பி ராமையாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி போன்ற ஒருசிலர் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்டுள்ள ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி தம்பதிக்கு அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். மேலும், சென்னை லீலா பேலஸில் ஐஸ்வர்யா - உமாபதி தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 14-ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தன்னுடைய மனைவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பசுமை கூடையை வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

புடவை மட்டுமா... கணவரும் தனித்துவம்தான்...

மகள்கள் எப்போதும் ஒவ்வொரு தந்தைக்கும் தேவதைகள் போன்றவர்கள்தான். அப்படி நடிகர் அர்ஜுனுக்கும் தனது இரண்டு மகள்களும் தேவதைகள்தான் என்றாலும், அவர் மிகவும் நேசிப்பது மூத்த மகளான ஐஸ்வர்யாவைத்தான். அப்படியொரு அழகு தேவதையான ஐஸ்வர்யா திருமணத்தின்போது இன்னும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அவரின் விருப்பப்படி அவருக்கான திருமண புடவையை பார்த்து பார்த்து வடிவமைக்க ‘பொன்னியின் செல்வன்’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஏகா லக்கானி என்பவரை நியமித்து வடிவமைத்துள்ளார். அதனால்தானோ என்னவோ திருமணத்தின்போது ஐஸ்வர்யா அணிந்துவந்த அந்த பட்டுச்சேலை திருமணத்திற்கு வந்திருந்தவர்களை மட்டுமின்றி பலரையும் கவனிக்க வைத்துள்ளது. பாரம்பரியம் மாறாமல் தமிழ் பெண்களுக்கே உரிய அழகில் ஐஸ்வர்யா உடுத்தியிருந்த அந்த சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கு மேட்சிங்காக சிவப்பு நிற ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட், வெள்ளை கல் பதித்த மாங்கா மாலை, சோக்கர், வளையல், நெத்தி சுட்டி போன்றவைகளையும் அணிந்திருந்தார். இவை அனைத்திலுமே தங்கம் மற்றும் வைரக்கல் பதியப்பட்டிருந்தது. மேலும் இந்த பட்டுச்சேலையில் காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய கோயில்களின் சுவர்களில் இடம்பெற்றிருக்கும் சிற்பங்கள் டிசைன் செய்யப்பட்டிருந்ததாகவும், ராமரின் முடிசூட்டு விழாவை சித்தரித்து நெய்யப்பட்டதாகவும் ஏகா லக்கானி தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டுள்ள பகிர்வில் தெரிவித்துள்ளார். மேலும் புடவை முழுவதும் தூய சர்தோசி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் பதிவில் கூறியுள்ளார்.


பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி வடிவமைத்த காஞ்சிபுரம் பட்டு சேலையில் கணவர் உமாபதியுடன் ஜொலிக்கும் ஐஸ்வர்யா

இப்படி திருமணத்தின்போது, தான் அணிந்த புடவையையே பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ள ஐஸ்வர்யா, தன் கணவரை மட்டும் வெகு சாதாரணமாக தேர்வு செய்திருப்பாரா என்ன? இதற்கு ஒரு சம்பவமே சாட்சி. ஐஸ்வர்யா அர்ஜுன் ‘பட்டத்து யானை’ படம் வெளியான சமயத்தில் நிறைய நேர்காணல்கள் கொடுத்து வந்தார். அப்படி அவர் கொடுத்து வந்த நேர்காணல் ஒன்றில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவருக்கே உரிய ஸ்டைலில் மூன்று பதில்கள் அளித்திருந்தார். அவர் சொன்ன அந்த பதிலில், நான் கொஞ்சம் டாமினேட் கேரக்டர். அதனால் எனக்கு வரும் கணவரை நான்தான் டாமினேட் செய்வேன், அதேபோன்று செல்ஃப் ரெஸ்பெக்ட் அதாவது சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். அது எனக்கு பிடிக்கும். அதை நான் சரியாக ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றால், என்னுடன் இருப்பவர்களும் அதற்கு ஏற்றார் போன்று நடந்துகொள்ள வேண்டும். மேலும் மூன்றாவதாக மிகவும் ஹானஸ்ட் அதாவது நேர்மையாக இருப்பேன். அதேபோன்று எனக்கு கணவராக வருபவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார். ஐஸ்வர்யா அர்ஜுன் கூறிய இந்த அனைத்து தகுதிகளுமே உமாபதி ராமையாவிடம் இருக்கிறது. உமாபதியும் ஒரு நேர்மையான அதே நேரம் மிகவும் அமைதியானவர். விட்டுக்கொடுத்து போகும் குணம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. அதை சர்வைவர் நிகழ்ச்சியிலேயே பலரும் பார்த்து தெரிந்திருப்பர். இதனாலேயே பழகிய குறுகிய காலத்தில் அவரின் இயல்பு பிடித்து நமக்கு ஏற்ற கணவர் இவர்தான் என்று ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நடிகர் அர்ஜுனும் - தம்பி ராமையாவும் இணைந்து பார்த்து பார்த்து நடத்தியுள்ள இருமனம் இணையும் இந்த திருமண வாழ்வில் ஐஸ்வர்யா - உமாபதி தம்பதி சிறகை விரித்து பறந்து இன்றுபோல் என்றும் காதல் மாறாமல் அதே அன்புடன் வாழ வாழ்த்துவோம்.

Updated On 24 Jun 2024 6:04 PM GMT
ராணி

ராணி

Next Story