முன்னரெல்லாம் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். இரவு 8 மணி ஆச்சா, ‘போடுங்கப்பா சீரியல’ என்று குடும்பத்துடன் அனைவரும் டிவியின் முன்பு அமர்ந்துவிடுவோம். ஆனால் இப்போதெல்லாம் பெரியவர்கள் மட்டும்தான் இந்த சீரியல்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதுடையோர் மத்தியில் பெரும்பாலும் வெப் சீரிஸ்கள்தான் பரிட்சயமாகி உள்ளன. வலைதொடர்களும், தொலைக்காட்சித் தொடரை போல அத்தியாய வடிவில் இணையத்தில் வெளியிடப்படும் ஒரு காணொளிக் காட்சிதான். ஆனால் தொலைக்காட்சித் தொடர்கள், படங்களைவிட அவை நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. இதற்கு காரணம் வலைதொடர்கள் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் கொடுக்கப்படுவதுதான் என கூறியுள்ளார் நடிகர் கலைதரன். இதுதொடர்பாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.
சினிமா ஆசைகுறித்து குடும்பத்தினர் கூறியது என்ன?
சொந்த வீடு கட்டிவிட்டேன். நான் காதல் திருமணம் செய்துகொண்டேன். என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். வீட்டில் எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டு, என்னுடைய ஆசைகளுக்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன். 45 வருடமாக குடும்பத்திற்காக வாழ்ந்தேன். ஐந்து வருடம் சினிமாவிற்காக எனக் கூறிவிட்டுதான் சென்னை வந்தேன். அவர்களும் என்னை எதுவும் சொல்லமாட்டார்கள். குடும்பத்தை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். என்ன, நான் இங்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும்போது தனியாக கஷ்டப்படுவோம். சந்தோஷமாக இருக்கும்போது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வரலாம். உழைப்பும், முயற்சியும் எனது தனிப்பட்ட முறையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
உங்களை பாராட்டிய இயக்குநர், நடிகர் யார்?
லட்சுமி தொடரின் இயக்குநர் டென்ஷனாக இருந்தார். சரியாக நடித்துவிடுவாயா? என என்னிடம் கேட்டார். கரெக்டா பன்னிடுவாரா? என துணை இயக்குநரிடம் கேட்டார். ஏனெனில் நான் நடித்து அவர் பார்த்தது இல்லை. ஓகே சார் எனக் கூறினேன். டேக் முடிந்தபின், ‘யோவ் நல்லா பண்றாரு அவரு’ எனக்கூறினார். அவர் பெயர் என்ன, அவரிடம் நம்பர் வாங்கிக்கோ, அடுத்த தொடரில் நாம் அழைக்கலாம். எனக் கூறினார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதுபோல நான்கைந்து படங்களில் இயக்குநர்கள் பாராட்டி உள்ளனர். யூனிட்டிலும் நிறையபேர் சொல்லியுள்ளனர். ஆனால் இதெல்லாம் பத்தாது. இன்னும் நிறைய செய்யவேண்டும் என்ற ஆர்வம்தான் உள்ளது. அதற்கான முயற்சிகளிலும் ஈடுப்பட்டு வருகிறேன்.

வில்லன்களில் பிரகாஷ் ராஜ், கதாநாயகன்களில் அஜித் பிடிக்கும் - கலைதரன்
படம் மற்றும் தொடர்களில் சாப்பிடும் காட்சியில் உண்மையில் சாப்பிடுவார்களா?
பெரும்பாலும் சாப்பாடு, காஃபி என எல்லாம் இருக்கும். டேக் அதிகமானால் மீண்டும் மீண்டும் செய்யமுடியாது என்பதற்காக சாப்பிடுவதுபோல் நடிப்பார்கள். யாராவது ஒரு ஆளாவது ஒரு தவறு செய்வார்கள். அப்போது இன்னொரு டேக் எடுக்கும்போது மீண்டும் தயார் செய்ய முடியாது இல்லையா. அதனால் சாப்பிடுவதுபோல் நடிப்போம். ஆனால் பெரும்பாலும் சாப்பாடுகள் இருக்கும்.
மிகவும் பிடித்த வில்லன்கள் யார்?
ஒன்றா, இரண்டா. நிறைய பேர் இருக்கிறார்கள். நம்பியார், அசோகன், ரகுவரன். இப்போது பிரகாஷ்ராஜ். பிரபலங்களை தாண்டியும் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து வியந்துள்ளோம். சமீபத்தில் ஒரு புதுப்படம் பார்த்தேன். அதில் வில்லன் மிரட்டலாக நடித்திருப்பார். இதுபோல நிறைய படங்களில் நிறையபேர் உள்ளனர். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது.

விஜயின் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவார்களா என்பதை காலம்தான் சொல்லும் - நடிகர் கலைதரன்
நீங்கள் விரும்பும் கதாநாயகன்?
நம்பிக்கை நாயகன் அஜித். ஏனெனில் எந்தவித பின்புலமும் இல்லாமல் வந்தவர். இதெல்லாம் நமக்கு ஒரு உத்வேகம். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவரை பிடிக்கும். சூர்யா, தனுஷ், விஜய், ரஜினி, கமல் என ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்று பிடிக்கும்.
விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
அவரவர் விருப்பம். வேலையில்லாமல் அவர் வரவில்லை. சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வரவில்லை. நிறைய சம்பாதித்துள்ளார். நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார். அதையெல்லாம் விட்டுவிட்டுதான் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளார். இது என்ன ஆகும் என்பதை காலமும், மக்களும்தான் கணிக்கவேண்டும். அரசியல் அனுபவம் என்று ஒன்று உள்ளது. இளைய தலைமுறையினரின் செல்வாக்கு உள்ளது. அது ஓட்டாக மாறுமா என்பதை காலம்தான் சொல்லும்.

மாரீசனில் நடிகர் ஃபகத்துடன் முதல் காட்சியிலேயே தோன்றுவேன் - நடிகர் கலைதரன்
ஒரு தொடர் இத்தனை வருடம் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுமா?
அந்த முடிவுகளை எல்லாம் தொலைக்காட்சிதான் எடுக்கும். மக்களிடத்தில் ஒரு தொடர் எந்தளவு வரவேற்பை பெறுகிறதோ அதற்கேற்றவாறு வருடங்களை கடக்கிறது.
சீரியலுக்கும், சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பல வருடங்கள் ஓடினாலும் சீரியல் என்பது வேறு. ஆனால் சினிமாவில் இரண்டரை மணிநேரம் ஒருவரை உட்காரவைக்கவேண்டும். இன்று ஊடகங்களுக்கு மிகப்பெரிய பவர் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தை ஆராய்ந்து பார்க்கிறார்கள். எடிட்டிங், இசை என எல்லாத்துறையையும் பிரித்து பார்க்கும் அளவிற்கு உள்ளனர். படம் பார்ப்பதற்கு முன்பே விமர்சனங்களை பார்ப்பதால், அவர்களை திருப்திபடுத்தி ஒரு படத்தில் உட்கார வைக்கவேண்டுமென்றால் நிறைய சிரமம் உள்ளது. அதையெல்லாம் தாண்டிதான் ஒருபடத்தை திரைக்கு கொண்டுவருகிறார்கள். எல்லோரும் எளிதாக ஒரு படத்தை விமர்சனம் செய்துவிடுவார்கள். ஆனால் அதற்கு பின் நிறைய உழைப்பு இருக்கிறது.
சீரியல், சினிமா ஹீரோயின்களில் பிடித்தவர்கள் யார்?
த்ரிஷா எத்தனையோ வருடமாக திரைத்துறையில் இருக்கிறார். அவரும் எங்களைப்போல துணை கதாபாத்திரமாக நடிக்க வந்தவர்தான். இத்தனை வருடங்கள் கடந்தாலும், தற்போதும் அழகாக இருக்கிறார். வயது அதிகரிக்க அதிகரிக்க அழகாகிக் கொண்டே இருக்கிறார். இதுபோல நிறையபேர் உள்ளனர்.
யாருடன் நடிக்கவேண்டுமென்று ஆசை?
எனக்கு எல்லோருடனும் நடிக்கவேண்டுமென்று ஆசை உள்ளது. ரஜினி, கமல் உடன் நடிக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசை. அதுபோல ஆசை இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். மாரீசன் படத்தை எல்லாம் கடவுள் கொடுத்த பரிசாகத்தான் பார்க்கிறேன். படத்தின் தலைப்புக்கு முன்னரே ஃபகத் ஃபாசில் உடனான எங்களுடைய என்ட்ரி சீன்தான் வரும். இது இறைவனும், இயற்கையும் கொடுத்த பரிசு என்றுதான் சொல்லவேண்டும். நடிப்பு அரக்கன் என பெயர் எடுத்தவர் ஃபகத். அவருடன் சேர்ந்து நடிக்கிறேன், முதல் காட்சியில் வருகிறேன் என்றால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதுபோல ரஜினிசார், கமல்சாருடன் கொடுக்கவேண்டும். கார்த்தி உடன் ஜப்பான், வாத்தியார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.
நடிகர் குணாபாபு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நல்லத்தம்பி. மாரீசன் படத்தின் ஆடிஷனின்போதுதான் இருவருக்கும் பழக்கம். முதல்முறையாக அங்குதான் சந்தித்தேன். திருக்குறள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே படத்தில் நானும் நடித்திருந்தேன். நன்கு வளர்ந்து வருகிறார். இப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுபோல நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். நட்புதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. நிறைய திரைத்துறை நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிறைய நல்லதும் பார்த்துள்ளேன். கெட்டதும் பார்த்துள்ளேன்.
திருக்குறள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெறாதது ஏன்?
அப்படி சொல்லமுடியாது. இப்போது பொன்னியின் செல்வன் நன்றாகத்தானே சென்றது. பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப்புனைவு. அதைத்தான் ஒரு படமாக எடுத்தனர். தமிழ் திரைத்துறை இன்று எவ்வளவோ நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தையும் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தனர். ரசனையோடு எடுத்தால் மக்கள் பார்க்கிறார்கள். மக்களை குறை சொல்லமுடியாது. திருக்குறள் திருவள்ளுவரின் ஒருவாழ்க்கை பகுதியை மையமாக கொண்டு எடுத்தார்கள். ஆனால் அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. சில தவறுகள் எங்கு நடந்தது என தெரியவில்லை. ஆனால் மக்களை குறைசொல்ல முடியாது. இன்றெல்லாம் சின்ன சின்னப் படங்கள்கூட நல்ல வரவேற்பை பெறுகின்றன.
சீரியலை விட வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெறக் காரணம் என்ன?
ஃபிளாட்பார்ம்தான் காரணம். பேன் இந்தியா என்பதால் அனைத்து மொழிகளிலும் செல்கிறது. திரைப்படங்களைவிட அதிகமாக வெப்சிரீஸ் எடுக்கிறார்கள். நான் இரண்டு நாட்களுக்கு முன்புகூட வதந்தி-2 வெப்சீரிஸ்களில் நடித்தேன். இப்போது அதிகமாக வெப்சீரிஸ்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் நிறையபேருக்கு வேலைவாய்ப்புகளும் அமைகின்றன. நான் 4 வெப்சிரீஸ்களில் நடித்துள்ளேன். குற்றம் புரிந்தவன் என்ற தொடரில் தற்போது நடித்து முடித்துள்ளேன். இன்னும் இதன் தலைப்பு முறையாக வெளியிடப்படவில்லை. ஆனால் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்த மாதம் ரிலீஸாகும்.
பிடித்த சீரியல் இயக்குநர் யார்?
நான் முதலில் நடித்த காற்றுக்கென்ன வேலி சீரியல் இயக்குநர் எனக்கு பிடிக்கும். நான் முதன்முதலில் கேமராவை பார்க்கிறேன். அப்போது அவர் ஒரு வார்த்தைக் கூறினார். கோயம்புத்தூரில் இருந்து வந்த எனக்கு சென்னை பாஷையில் அவர் சொன்ன வார்த்தையை எப்போதும் மறக்கமுடியாது. அப்போது அது ஒருமாதிரியாக இருந்தாலும், அடுத்தடுத்து அதுதான் எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. அடுத்தடுத்த ஷாட் டக் டக்குன்னு எடுத்தோம். அந்த வார்த்தை என்னை பாதித்தது என்று சொல்லமுடியாது. செதுக்கியது எனக்கூறலாம். முதலில் திட்டினார். பின்னர் பாராட்டினார். அந்த தொடர் எனக்கு நிறைய அனுபவத்தை கொடுத்தது. அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அரவணைக்கவும் செய்தார். அடிக்கவும் செய்தார். அவரை மறக்கமுடியாது.
யாருடைய நடிப்பை மறக்கவே முடியாது?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மிரட்டியுள்ளனர். ரகுவரன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அல்டிமெட். அதுபோல ஒவ்வொருவரை ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். அஜித் சாருடன் துணிவில் நடிக்க வாயப்பு கிடைத்தது. ஆனால் அது தவறிவிட்டது. அடுத்த மாதம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அருள்நிதி நடித்துள்ள ஒரு படத்தில் நடித்துள்ளேன். அது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. கராத்தே பாபு படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளேன். ஜெய், விக்ரம் பிரபு உடன் நடித்துள்ளேன். இதுபோல நிறைய படங்களில் நடித்துக்கொண்டு வருகிறேன்.

ரகுவரனின் நடிப்பை மறக்கவே முடியாது - நடிகர் கலைதரன்
கதாபாத்திரங்களை ஸ்பாட்டில்தான் சொல்வார்களா?
கதாபாத்திரங்களை முன்கூட்டியேக் கூறினால் உள்வாங்கி நடிக்க நன்றாக இருக்கும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் முன்னரே சொல்லிவிடுவார்கள். சின்ன சின்ன நடிகர்கள் என்பதால் நிறைய இடத்தில் அவை சரியாக நடப்பதில்லை. அந்த வருத்தம் நிறைய இருக்கிறது. நிறைய படங்களில் கதையே சொல்லமாட்டார்கள். திடீரென்று சொல்லி ஒரு பதட்டத்தை உருவாக்குவார்கள். அந்த பதட்டத்தில் ஒன்றை செய்துவிட்டு வந்து, பின்னர் நன்றாக செய்திருக்கலாமே என நிறையமுறைத் தோன்றியிருக்கிறது.
