இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தேர்தல் பரபரப்பு ஒருபுறம் இருக்க அடுத்து என்ன சினிமா ரிலீஸாகப்போகிறது? யார் யாரை காதலிக்கிறார்கள்? யார் யாருக்கு திருமணம்? என்பது போன்ற சினிமா உலகம் குறித்த பரபரப்பும் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்படங்கள் குறித்து கடந்த வாரம் ட்ரெண்டான சில செய்திகளை ஷார்ட்டாக பார்க்கலாம்.

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை திருமணம் செய்யும் டாடா ஹீரோயின்!

தமிழில் ‘பீஸ்ட்’ மற்றும் ‘டாடா’ படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவருக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மூலம் பிரபலமான தீபக் பரம்போலுக்கும் வருகிற 24ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. மலையாள நடிகையான அபர்ணா, தீபக்குடன் ‘மனோகரம்’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்களுடைய திருமண பத்திரிகை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.


நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்யவிருக்கும் நடிகர் தீபக் பரம்போல்

பல வருடங்களாக காதலித்து வரும் இவர்களுடைய திருமணம் கேரளாவிலுள்ள வடக்கஞ்சேரியில் நடைபெறவிருக்கிறது. அபர்ணா தாஸ் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவரும் சூழலில் திருமணத்திற்கு பின்பும் நடிப்பை தொடர்வாரா என ரசிகர்கள் கேள்வியில் உள்ளனர். தீபக்கும் இதுவரை 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.

ரிலீஸுக்கு தயாராகும் இந்தியன் -2

28 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியானது ‘இந்தியன்’ திரைப்படம். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதுடன் கமலுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் கமலுடன் இணைந்துள்ளனர். பிரம்மாண்டத்துக்கு பெயர்போன ஷங்கர் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.


கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் - 2 திரைப்பட போஸ்டர்

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ‘இந்தியன் 2’ திரைப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. குறிப்பாக மே 24ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் ஜூன் மாதம் திரையரங்குகளில் ‘சேனாபதி’யை காண தயாராகுங்கள் என படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரடக்‌ஷன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ஸ்ரீதேவி பயோபிக் - எதிர்ப்பு தெரிவித்த போனி கபூர்

பிரபல நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது என்பது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது. அப்படித்தான் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கபில் தேவ், நடிகை சில்க் ஸ்மிதா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோரின் வாழ்க்கையானது படமாக்கப்பட்டது. அதேபோல் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு உயிரிழந்த புகழ்பெற்ற இந்திய நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூரிடம் கேட்கப்பட்டது.


மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விடமாட்டேன் என கணவர் போனி கபூர் திட்டவட்டம்

அதற்கு அவர், நான் உயிரோடு இருக்கும்வரை அதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஸ்ரீதேவி எப்போதும் தனிப்பட்ட நபராகத்தான் இருக்க விரும்புவார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கவேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாகாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதற்கு அனுமதிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

வைரலாகும் டாப்சி திருமண வீடியோ

‘ஆடுகளம்’ படத்தின்மூலம் தமிழ் ரசிகர்ளிடையே பிரபலமானவர் நடிகை டாப்சி பன்னு. முதல் படமே மெகா ஹிட்டடித்ததால் தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘ஆரம்பம்’ மற்றும் ‘காஞ்சனா 2’ போன்ற ஓரிரு படங்களே வெற்றிபெற்ற நிலையில் வாய்ப்புகள் படிப்படியாக குறைந்தன. அதனால் இந்தி பக்கம் சென்ற டாப்சி, அங்கு சில ஹிட் படங்களைக் கொடுத்தார். இந்நிலையில் இவர் டென்மார்க்கை சேர்ந்த மத்யாஸ் போ என்ற பாட்மிண்டன் வீரரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவர்களது திருமணம் குறித்த பேச்சு அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டது இந்த ஜோடி. ரகசியம் என்றால் வெளியுலகிற்கு தெரியாமல் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது இவர்களது திருமணம்.


சமூக ஊடகங்களில் பரவிய நடிகை டாப்சி - பாட்மிண்டன் வீரர் மத்யாஸ் போவின் திருமண புகைப்படங்கள்

தனது ஒரு திருமண புகைப்படத்தைக்கூட டாப்சி சமூக ஊடகங்களில் பதிவிடாமல் இருந்த நிலையில், இவர்களது திருமண வீடியோ க்ளிப் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. தனது திருமண வீடியோவை தனியார் சேனல்களுக்கு விற்று பணம் பார்க்க திட்டமிட்டிருந்தாராம் டாப்சி. ஆனால் அது சொதப்பிவிட்ட நிலையில் அப்செட்டில் இருக்கிறாராம்.

பாஜகவில் இணைந்தாரா பிரகாஷ்ராஜ்?

அரசியலில் நாட்டமுடைய நடிகர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். தென்னிந்திய நடிகரான இவர் வெளிப்படையாக அரசியல் கட்சிகளை விமர்சிப்பது வழக்கம். குறிப்பாக பாஜக என்றால் இவருக்கு ஆகவே ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் சமூக பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வரும் இவர் 2019ஆம் ஆண்டு பெங்களூரு சென்ட்ரலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


பாஜகவில் இணைந்ததாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே பாஜகவையும் மோடியையும் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக “அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஆனால் என்னை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள் போல” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மகளுக்காக கோடிகளை செலவிடும் நட்சத்திர ஜோடி!

பாலிவுட்டின் முன்னணி ஜோடிகளில் ஒன்றாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட். இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு கடந்த ஆண்டு ராகா என்ற பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்காக மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்ட சொகுசு பங்களா ஒன்றை கட்டிவருகின்றனர்.


மகளுக்காக புதிய சொகுசு கார் வாங்கியிருக்கும் ரன்பீர் - ஆலியா தம்பதி

இந்நிலையில் இந்த தம்பதி தற்போது ரூ. 6 கோடி மதிப்பிலான புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறதாம். ஏற்கனவே கணவன் - மனைவி இருவருரிடமும் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் டஜன் கணக்கில் இருக்கின்ற நிலையில் தற்போது Bentley Continental GT V8 என்ற சொகுசு காரும் இணைந்திருக்கிறது. இவை அனைத்தும் அவர்களது ஒரு வயது மகளுக்காகத்தான் என்கின்றன பாலிவுட் வட்டாரங்கள்.

இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பேட்மேன் நடிகர்

‘பேட்மேன்’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானவர் பென் அஃப்லெக். ஹாலிவுட் நடிகரான இவர் சமீபத்தில் நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நியூயார்க்கில் தீவிரமாக வீடு தேடிக்கொண்டிருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த இஷா அம்பானிக்கு சொந்தமான பெரிய பங்களாவை அஃப்லெக் விலைகொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


லாஸ் ஏஞ்சல்ஸிலிருக்கும் இஷா அம்பானியின் வீட்டை வாங்கிய பென் அஃப்லெக் - ஜெனிபர் லோபஸ் தம்பதி

ரூ. 494 கோடி மதிப்புள்ள அந்த பங்களாவில் 12 பெட்ரூம்கள், 24 பாத்ரூம்கள், டென்னிஸ் பால் கோர்ட், பெரிய ஸ்விம்மிங் பூல், ஜிம், ஸ்பா என பல வசதிகள் இருக்கிறதாம். பெவெர்லி ஹில்ஸில் கிட்டத்தட்ட 5.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறதாம் இந்த மிகப்பெரிய சொகுசு பங்களா.

Updated On 15 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story