இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒருபக்கம் 2கே கிட்ஸ் அடுத்து யார் நடிப்பில் என்ன படம் ரிலீஸாக போகிறது? என கேட்டால், மற்றொரு பக்கம் நாங்க பார்த்து ரசித்து கொண்டாடிய படத்தில் எந்த படம் அடுத்து ரீரிலீஸ் ஆகப்போகிறது? என கேட்கின்றனர் 90ஸ் கிட்ஸ். இரு தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்விதமாக சூப்பரான மற்றும் சுவாரஸ்யமான அப்டேட்ஸ்கள் இந்த வாரம் வெளியாகி இருக்கின்றன. அவற்றுடன் சில பிற தகவல்களையும் சேர்த்து தெரிஞ்சிக்கலாம்!

கோட் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கோட்’. இப்படத்தில் விஜய் 3 கெட்-அப்களில் நடிப்பதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானதிலிருந்தே ஒவ்வொரு அப்டேட்டுக்காவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் 2’, ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ போன்ற படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில், ‘கோட்’ எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கோட்’ திரைப்பட போஸ்டர்கள்

இந்நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம். இதுகுறித்து ஏஜிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தளபதி விஜய் சார்க்கு விசில் போடு. கோட் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து அப்டேட்ஸ் வரும்” என குறிப்பிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, ஜூனில் ‘இந்தியன் 2’, செப்டம்பரில் ‘கோட்’, அக்டோபரில் ‘வேட்டையன்’ என முன்னணி ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இந்த வரிசையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’யும் இணையலாம் என பேசப்படுகிறது.

ட்ரெண்டாகும் ரீரிலீஸ் கலாசாரம்!

என்னதான் புதுபுது படங்கள் ரிலீஸானாலும் சில பழைய படங்கள் என்றுமே உணர்வுகளுடன் கலந்திருக்கும். அதுபோன்ற படங்களை மீண்டும் ரீரிலீஸ் செய்து வசூல் பார்த்து வருகின்றன சில திரையரங்குகள். முதன்முதலில் ரீரிலீஸ் கலாசாரத்தை கொண்டுவந்தது சென்னையிலிருக்கும் கமலா தியேட்டர்தான். அதைத்தான் தற்போது பல திரையரங்குகள் பின்பற்றி வருகின்றன. அதிலும் ரீரிலீஸ் படங்கள் என்பதால் டிக்கெட் விலையும் குறைவு. அப்படி சமீபகாலமாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டடித்த ‘3’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மயக்கம் என்ன’, ‘போக்கிரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘சிவா மனசுல சக்தி’ போன்ற படங்களை காண ரசிகர்கள் குவிந்தனர். ரீரிலீஸ் படத்திற்கே இத்தனை மவுசா என கேட்கும் அளவிற்கு ஸ்கிரீனில் பிடித்த பாடல்கள் வரும்போது தியேட்டர் முழுவதும் ரசிகர்கள் கூட சேர்ந்து ஆடி அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு மேலும் டிரெண்டாக்கிவிட்டனர்.


‘கில்லி’ பட போஸ்டர் - ரீரிலீஸ் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வைத்த கமலா தியேட்டர்ஸ்

இதனால் பல தயாரிப்பு நிறுவனங்களும், நடிகர்களும் தங்களது படத்தை ரீரிலீஸ் செய்து மீண்டும் கொஞ்சம் காசு பார்க்கலாம் என அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அப்படித்தான் ‘பையா’ படத்தின் ரீரிலீஸை முன்னிட்டு அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி நடிகை தமன்னாவை நேரில் சந்தித்து ஸ்வீட் அனுபவங்களை பரிமாறிக்கொண்டார். இதை தமன்னா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பையா’ திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் 2004ஆம் ஆண்டு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20 ரீரிலீஸாகவுள்ளது.

ஸ்ரீதேவி மகளுக்கு விரைவில் திருமணம்

பாலிவுட் ஹீரோயினும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், திருமணத்துக்கு தயாராகி வருவதாக செய்திகள் உலா வருகின்றன. ஜான்வியும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனுமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் பொதுவெளிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக பாலிவுட் திரையுலகில் பேச்சு அடிபடும் நிலையில், ‘மைதான்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை காண வந்திருந்த ஜான்வி ‘ஷிகு’ என பெயர்கொண்ட நெக்லஸை அணிந்திருந்தார்.


பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் - நடிகர் ஷிகர் பஹாரியா

இதனால் விரைவில் ஜான்வி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றன பாலிவுட் வட்டாரங்கள். ஏற்கனவே போனி கபூர் இவர்களது காதலை உறுதி செய்திருந்தார். ஷிகர் குறித்து அவர் கூறுகையில், “எனக்கு அவரை(ஷிகர்) ரொம்ப பிடிக்கும். ஜான்வி அவரை சந்திக்கும் முன்பே நான் அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். அவர் ஒருபோதும் எனது மகளின் முன்னாள் காதலராக மாறமாட்டார் என நம்பினேன்” என கூறியிருந்தார். ஏற்கனவே ஜான்வி தனது திருமணம் திருப்பதி கோயிலில்தான் நடக்கும் என கூறியிருந்த நிலையில், இவர்களது திருமணம் ஆந்திராவில் வைத்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மனைவியை பிரியும் தனுஷ்

நடிகர் தனுஷும், அவரது மனைவியும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, தாங்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தனர். அதற்கு முன்பே இருவருக்குமிடையே பல மன கசப்புகள் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்துசெல்வதாக முடிவெடுத்ததாக பேசப்பட்டது. அதற்கு தனுஷ், பல நடிகைகளுடன் வைத்திருந்த தொடர்புதான் காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்களது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சேர்ந்து வாழுமாறு, தனுஷின் அப்பாவும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவும், ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினியும் இருவரையும் அழைத்து புத்திமதிகள் சொல்லியிருந்தனர்.


இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் விவாகரத்து

இதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்யப்போவதில்லை எனவும் அறிவித்தனர். ஆனால் இதுவரை தனுஷிடம் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18 வருட குடும்ப வாழக்கை முடிவுக்கு வருவதை நினைத்து இரு குடும்பத்தினரும் சோகத்தில் உள்ளனராம். விவாகரத்துக்கு பிறகு மகன்கள் இருவரும் அம்மாவுடன்தான் இருப்பார்களாம். அதற்கு தனுஷும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

விஜயை தொடர்ந்து ரஜினியுடன் மோகன்

‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றதுமே படத்தின் கதை எப்படியிருக்கும்? இதுவும் மற்றொரு LCU-வா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவிருக்கிறது. படம் அக்டோபரில் வெளியாகும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் ‘தலைவர் 171’ படப்பிடிப்பானது ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இந்த படத்தில் மைக் மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கவிருக்கும் நடிகர் ‘மைக்’ மோகன்

நீண்ட நாட்களாக ஹீரோவாகத்தான் நடிப்பேன் என வாய்ப்பு தேடிவந்த மைக் மோகன் தனது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு விஜய் படத்தில் இணைந்தார். தொடர்ந்து தற்போது ரஜினிக்கும் வில்லனாக நடிக்கவிருக்கிறார். குறிப்பாக, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடிக்கவிருக்கிறாராம். இதனால் ‘தளபதி’க்கு பிறகு மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்க்க ஆர்வமுடன் இருக்கின்றனர் ரசிகர்கள். லோகேஷ் படம் என்றாலே கேமியோ இல்லாமல் எப்படி? ஷாருக்கான் அல்லது ரன்வீர் சிங் இந்த படத்தில் கேமியோ ரோலில் தோன்றவிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

கடைசி நிமிடத்தில் இணைந்த மனீஷா கொய்ராலா

கமல் ஹீரோ, ஷங்கர் இயக்கம், லைகா நிறுவனம் தயாரிப்பு, அனிருத் இசை என்றால் யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது. அப்படி எப்போது ரிலீஸாகும் என காத்திருக்க வைத்திருக்கும் திரைப்படம்தான் ‘இந்தியன் 2’. தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்த ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலேயே எதிர்பார்ப்பு எக்கசக்கமாக அதிகரித்தது. இப்போது படத்தின் படபிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. படமும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஷங்கர் மும்பைக்கு சென்றபோது ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?’ என ரசிகர்களின் நெஞ்சில் நின்ற மனீஷா இல்லாமலா இரண்டாம் பாகம் என்று தோன்றியிருக்கிறது.


‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இணைந்திருக்கும் நடிகை மனீஷா கொய்ராலா

எனவே இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதனையடுத்து கமல் - மனீஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் ஷூட் செய்து படத்தில் இணைத்து ஏற்கனவே அறிவித்த தேதியிலேயே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. ஏற்கனவே படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் நிலையில் தற்போது மனீஷாவும் அதில் இணைகிறார்.

Updated On 22 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story