இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

என்னதான் சிறு சிறு பட்ஜெட் படங்கள் வெளிவந்தாலும் பெரிய ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் மவுசும் சற்றும் குறைந்தபாடில்லை. இப்போது பாலிவுட் மற்றும் டோலிவுட்டுக்கு போட்டியாக கோலிவுட்டிலும் பல பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன. குறிப்பாக, வயதுக்கு ஏற்ற எதார்த்தமான மாஸ் கலந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் பல மூத்த நடிகர்கள் கவனமாக இருக்கின்றனர். இந்த வாரம் அதிகம் பேசப்பட்ட படங்களின் அப்டேட்ஸ் குறித்து பார்க்கலாம்.

ரஜினிக்கு ஜோடியாகும் கமல் நாயகி!

த.செ. ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இமயமலைக்கு விசிட் அடித்தார் ரஜினி. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ போன்றே இந்த படத்திலும் பிற மொழி நடிகர்கள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை அபிராமியை நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகி. சமீபத்தில்தான் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அபிராமி.


‘கூலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அபிராமி

இது அபிராமிக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் என்றாலும் இதுவரை ரஜினியுடன் அவர் ஜோடி சேர்ந்தது இல்லை. மேலும் ‘கூலி’ படம் எல்.சி.யு-வில் இல்லை என்பதால் பெண் கதாபாத்திரத்தை கொலை செய்யும் சீன் இருக்காது என்றாலும், லோகியின் படத்தில் எதையும் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ஒருவேளை ஸ்ருதியை கொலை செய்துவிடுவாரோ என சமூக ஊடகங்களில் ஒருபுறம் ஜாலியாக டிஸ்கஸ் செய்துவருகின்றனர். மற்றொருபுறம் ஸ்ருதி நடிக்கிறாரா என்றே தெரியவில்லை; அதற்குள் கொலைசெய்யும் அளவிற்கு போய்விட்டார்களே என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

நடிகை சுனைனாவிற்கு திருமணமா?

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. முதல் படத்திலேயே பெருமளவில் ரசிகர்களை பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு கோலிவுட் அவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து, ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ மற்றும் ‘சமர்’ போன்ற படங்களில் நடித்து ஓரளவு தனது மார்க்கெட்டை தக்கவைத்திருந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே கிடைக்காததால் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விஜய்யின் ‘தெறி’ போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்தார்.


திருமண அறிவிப்பு போன்று புகைப்படம் வெளியிட்டிருக்கும் நடிகை சுனைனா

அப்போது அவர் எடை கூடியிருந்ததாக ரசிகர்கள் கேலிசெய்த நிலையில், கொஞ்சம் எடையைக் குறைத்து ஹீரோயினை மையப்படுத்திய ‘ரெஜினா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சுனைனா தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கும் பதிவு ஒன்று ரசிகர்களிடையே கவனம்பெற்று வருகிறது.

அதில், ஒரு ஆணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு லாக் எமோஜி ஒன்றையும் கேப்ஷனாக பதிவிட்டிருக்கிறார். இதனால் விரைவில் சுனைனா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் ஆதங்கம்!

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ ஜூன் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “படத்தில் ஹீரோவை போலவே வில்லன் கதாபாத்திரமும் முக்கியமானது. ஆனால் ரசிகர்கள் வில்லன் கதாபாத்திரங்களை மதிப்பதில்லை. ‘மகாராஜா’ திரைப்படம் ‘பீட்சா’ படம் போன்று சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ மற்றும் ‘ஜவான்’ போன்ற படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருந்தார்.


தனது 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி

இந்நிலையில் இவர் தற்போது வில்லன் கதாபாத்திரம் குறித்து ஆதங்கப்பட்டு பேசியிருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி இப்போது ‘ட்ரெய்ன்’ என பெயரிடப்பட்டிருக்கும் தனது 52-வது படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் கலக்கிவருகிறார்.

தளபதி படம் குறித்து விசாரித்த ஏ.கே!

‘விடாமுயற்சி’யைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்துவருகிறார் அஜித். இடையிடையே ‘விடாமுயற்சி’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பிலும் கலந்துகொள்கிறார். இந்நிலையில் தற்போது விஜய்யின் கடைசிப்படம் எனக்கூறப்படும் ‘விஜய்69’ படத்தை இயக்க கமிட்டாகி உள்ளார் அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான ஹெச். வினோத். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ மற்றும் ‘வலிமை’ என மூன்று படங்களை இயக்கி அவரிடம் நல்ல நட்புறவை வளர்த்திருக்கிறார் ஹெச். வினோத். விஜய் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வினோத்தை போனில் அழைத்து பேசியிருக்கிறாராம் அஜித்.


‘விஜய் 69’ படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத்திடம் விசாரித்த நடிகர் அஜித்

மேலும் விஜய் படத்தின் நிலவரம் குறித்து விசாரித்ததுடன், அடுத்ததாக இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கூறியிருக்கிறாராம். இதனால் மீண்டும் அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் மற்றொரு படத்தை அடுத்து எதிர்பார்க்கலாம். இதுதவிர இயக்குநர் ஷங்கரிடமும் அஜித் படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கிடையே சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார்களை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்

தன்னுடன் எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும் அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பதில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஆர்வம் அதிகமாம். அப்படித்தான் ‘இந்தியன் -2’ படத்தில் 90 வயது தாத்தாவாக தனது அசாத்திய நடிப்பால் இயக்குநர் ஷங்கரையே மிரள வைத்ததாக யூனிட்டிலிருந்து தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பல்வேறு மொழிகளில் அமிதாப் பச்சன், பிரபாஸ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா மற்றும் பசுபதி ராஜேந்திர பிரசாத் என 5 பெரிய ஹீரோக்கள் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார்.


‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கமல்ஹாசன்

வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே இவர் அந்த படத்தில் தோன்றினாலும் மற்ற அனைத்து ஹீரோக்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டாராம். பல ஜாம்பவான்கள் நடித்திருக்கும் இப்படத்தில் கமல் கதாபாத்திரம் அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் எடுபடவில்லை என படக்குழுவில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிள்!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் எப்போதும் அரசியல் குறித்தும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்தும் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது எம்.பியாகியிருக்கும் கங்கனா, டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்குச் சென்றார். அங்கு பாதுகாப்பு சோதனை நடந்தபோது சிஐஎஸ்எஃப் பெண் காவலரான குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததுடன், அவரை திட்டியும் இருக்கிறார்.


கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்

இந்நிலையில் அந்த காவலர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், விவசாயிகளை தீவிரவாதி என கூறியதற்காக அறைந்ததாகவும், தான் விவசாயிகளை ஆதரிப்பதாகவும் கூறியிருக்கிறார். விமான நிலையத்தில் நடந்த அந்த சம்பவம் குறித்து கங்கனா வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், அந்த பெண் குறித்தும் பேசியிருக்கிறார். தொடர்ந்து பஞ்சாபில் அதிகரித்துவரும் தீவிரவாதத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என கவலையுடன் இருப்பதாகவும் கங்கனா தெரிவித்திருக்கிறார்.

Updated On 17 Jun 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story