இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் நல்ல படங்களே வெளியாகாதா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு ஒருபுறம் ரீரிலீஸ் கலாசாரம் ட்ரெண்டாகி கொண்டிருக்க, மற்றொருபுறம் மலையாள படங்களை கொண்டாடித் தீர்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள். திரையுலகில் நடக்கும் சுவாரஸ்யங்கள் குறித்தும், ரிலீஸுக்கு தயாராகும் படங்கள் குறித்தும், அடுத்து எதிர்பார்ப்பை கிளப்பும் ரீரிலீஸ் படங்கள் குறித்தும் இந்த பகுதியில் ஷார்ட்டாக காணலாம்.

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும்...

மெகா ஹிட்டடித்த பழைய படங்களை ரீரிலீஸ் செய்யும் ட்ரெண்ட் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே 1ஆம் தேதி ‘மங்காத்தா’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் இப்படத்தை ரீரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் ‘மங்காத்தா’ ரீரிலீஸ் ஆகவிருக்கிறது. பொதுவாகவே விஜய் - அஜித் ரசிகர்களுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. ‘மங்காத்தா’ படத்தை வைத்து, ‘கில்லி’ ரீரிலீஸ் வசூல் சாதனையை முறியடிக்கலாம் என திட்டமிட்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.


ரீரிலீஸ் செய்யப்படவுள்ள ‘மங்காத்தா’ திரைப்படத்தின் போஸ்டர்கள்

இருப்பினும் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக அஜித்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான ‘பில்லா’ படத்தை மே 1ஆம் தேதி ரீரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்றாலும் அப்போதே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வசூல் வேட்டையாடும் மலையாளப் படங்கள்

மலையாள திரையுலகை பொருத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதனாலேயே கடந்த சில வருடங்களில் மலையாளப் படங்கள் உலகளவில் பேசப்படுகின்றன. குறிப்பாக, முன்பெல்லாம் தமிழ்ப்படங்கள்தான் கேரளாவில் வெளியிடப்படும் என்ற நிலை மாறி தற்போது நிறைய மலையாளப்படங்களை தமிழ்நாட்டிலும் ரிலீஸ் செய்கிறார்கள். தமிழ்ப்படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை காட்டிலும் சில மலையாள படங்கள் இங்கு அதிக வரவேற்பை பெறுகின்றன. அப்படி இந்த ஆண்டு தொடங்கி 4 மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில், மோலிவுட்டில் வெளியான 4 படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்ததுடன் ட்ரெண்டிங்கிலும் இருக்கின்றன.


வசூல் சாதனை படைத்திருக்கும் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ‘ஆவேசம்’ திரைப்படங்கள்

அந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பது ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’. நண்பர்கள் மற்றும் குணாக்குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 248 கோடி வசூல் சாதனை படைத்தது. அதனையடுத்து, இந்த கால காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘பிரேமலு’ 136 கோடிகளையும், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ 156 கோடிகளையும், ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் 104 கோடிகளையும் வசூலித்திருக்கிறது. இந்த லிஸ்ட்டிலேயே மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ படமும் இணையும். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த படங்கள் ஒவ்வொன்றுமே வெவ்வேறு பாணியில் வித்தியாசமான கதைக்களங்களில் எடுக்கப்பட்டவை.

விஷால் படத்திற்கு போட்டியாக இறங்கும் படங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காரணமாக பல படங்கள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த லிஸ்ட்டில் விஷாலின் 34-வது படமான ‘ரத்னம்’ திரைப்படமும் ஒன்று. இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹரி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமான இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே படத்தின்மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. படக்குழுவும் தொடர்ந்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வந்த நிலையில், இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.


‘ஒரு நொடி’ மற்றும் ‘ரத்னம்’ திரைப்படங்களின் போஸ்டர்கள்

இந்நிலையில் இந்த படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ‘ஒரு நொடி’ என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இப்படத்தால் ‘ரத்னம்’ படத்தின் வசூல் குறையலாம் என்று கூறப்படுகிறது. இவற்றுடன் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ மற்றும் ‘தொலைதூரம்’ என இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்போது எதிர்பாராத விதமாக புதுமுகங்கள் நடிக்கும் படங்களும் ஹிட்டாகும் நிலையில் இது எந்த அளவிற்கு ‘ரத்னம்’ படத்தின் கலெக்‌ஷனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழில் ஸ்ரீலீலாவின் முதல் படமே இவருடனா?

தெலுங்கில் சென்சேஷனல் ஹீரோயின் என்ற பெயரை பெற்றவர் ஸ்ரீலீலா. இளம்வயது நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா தனது நடனத்திறமையால் பலரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துவருகிறார். ‘குர்ச்சி மடதாப்பெட்டி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானதை அடுத்து இவர் விரைவில் தமிழ் திரையில் தோன்றுவார் என்று கூறப்பட்டது. எந்த ஹீரோவுடன் ஜோடி சேருவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தில் ஸ்ரீலீலா கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கும் நடிகை ஸ்ரீலீலா

தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் மிகவும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில்தான் ஸ்ரீலீலாவும் நடிக்கவிருக்கிறாராம். ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த படத்தில் ஸ்ரீலீலாவின் நடனத்திறமையை வெளிக்காட்டும் விதமாக குத்து பாடல் ஒன்று இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

மம்மூட்டியை புகழ்ந்த வித்யா பாலன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காதல் தி கோர்’. இந்த படத்தில் மம்மூட்டி ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தார். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படியொரு கதாபாத்திரத்தை துணிச்சலாக ஏற்று நடித்தது குறித்து அப்போதே பரவலாக பாராட்டப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மம்மூட்டியை புகழ்ந்திருக்கிறார். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், “காதல் தி கோர் திரைப்படத்தில் மம்மூட்டி நடித்த கதாபாத்திரத்தில் இங்குள்ள எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது. கேரள மக்கள் எல்லா படங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.


‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்ததற்கு மம்மூட்டியை பாராட்டிய நடிகை வித்யா பாலன்

அதேசமயம் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மட்டுமில்லாமல் அப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதைவிடவும் பெரிய ஆதரவு தன்பாலினத்தவர்களுக்கு இருக்குமா என்ன? ஆனால் துரதிர்ஷடமாக இந்தியில் இதுபோன்ற கதைகளை எடுக்கமாட்டார்கள்” என்று கூறினார். மேலும் இதுகுறித்து துல்கர் சல்மானுக்கு மெசேஜ் செய்ததாகவும் கூறியிருந்தார். வித்யா பாலன் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருடைய பூர்விகம் கேரளாதான். குறிப்பாக, நன்றாக தமிழ் பேசக்கூடிய ஓரிரு பாலிவுட் நடிகைகளில் இவரும் ஒருவர்.

சிக்கலில் சிக்கிய தமன்னா

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் போட்டிகளில் ஒன்று ஐபிஎல் கிரிக்கெட். இந்த விளையாட்டில் நடிகர் நடிகைகளும் சம்பந்தப்படுவதுண்டு. தற்போது இந்த ஆண்டு 17வது ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நேரலை உரிமையை பெறுவதில் பெரிய பெரிய நிறுவனங்களிடையே கடும்போட்டி நிலவும். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கிறது வியாகாம் நிறுவனம்.


ஃபேர்ப்ளே செயலியால் சிக்கலில் சிக்கிய நடிகை தமன்னா

இந்நிறுவனம் தங்களுடைய ஜியோ சினிமா செயலியில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு செய்துவரும் நிலையில், ஃபேர்ப்ளே என்ற சூதாட்ட செயலியும் நேரலை செய்தது. சட்டப்படி உரிமை பெறாமல் இச்செயலியில் ஐபிஎல் போட்டிகள் நேரலையாக்கப்பட்டதாகக்கூறி வியாகாம் வழக்குத் தொடர்ந்தது. இதில் ஏற்கனவே பலர் கைதான நிலையில் ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய தமன்னாவும் விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் தற்போது தமன்னாவும் மாட்டியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On 6 May 2024 6:16 PM GMT
ராணி

ராணி

Next Story