இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோலிவுட்டில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் அடுத்தடுத்த விவாகரத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்துவருகின்றன. இந்நிலையில் தனது மனைவியை பிரியப்போவதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்திருக்கிறார். மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷும் - ஐஸ்வர்யாவும் பிரிவது என உறுதியான முடிவை எடுத்திருக்கின்றனர். ஆனால் பிரிந்து வாழ்ந்தாலும் தாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக ஜி.வி. பிரகாஷ்குமாரும் சைந்தவியும் சேர்ந்து பாடி அசத்திவருகின்றனர். இந்த வாரம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட உறுதி தகவல்களும் வதந்திகளும் சுற்றிவருகின்றன. அவற்றில் சுவாரஸ்யமான சிலவற்றை பார்க்கலாம்.

விஜய்க்கு வில்லியாகும் நடிகை!

முழுநேர அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ஐ ஹெச். வினோத் இயக்கும் நிலையில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். விஜய்யின் கடைசிப்படம் என்பதால் கதை என்னவாக இருக்கும் யார் யாரெல்லாம் படத்தில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும் நிலையில், இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


விஜய்யின் கடைசி படத்தில் இணையவிருக்கும் வரலட்சுமி சரத்குமார்

பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர், ஏற்கனவே விஜய்க்கு வில்லியாக நடிக்க ஆசை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், அது பெரும்பாலும் வில்லி ரோலாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கிவிட்டாலும் தனது கடைசிப்படத்தில் அரசியல் இருக்கவே கூடாது என விஜய் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டதால் இப்படம் முழுக்க முழுக்க கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என்று இயக்குநர் ஏற்கனவே சொல்லிவிட்டார்.

இணைய வாய்ப்பில்லை!

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரியப்போவதாக 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இரு குடும்பத்தாரும் இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் சேர்ந்து வாழ மறுத்துவிட்டனர். இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் இதுவரை ஒருமுறைகூட இருவரும் ஆஜராகாததால் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


விவாகரத்தை உறுதிசெய்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி

அதனை உறுதிசெய்யும் விதமாக ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பதிவுகளுக்கு தனுஷ் லைக் போட்டார். இருப்பினும் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 21ஆம் தேதி தனுஷும் ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி தாங்கள் பிரிந்துவாழவே விரும்புவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு 27ஆம் தேதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அமரனால் மாணவனுக்கு வந்த சோதனை

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ஜோடியாக நடித்து அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘அமரன்’. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் வாகீசன் என்ற இன்ஜினீயரிங் மாணவர் ஒருவர், இப்படத்தால் தனக்கு மன வேதனை ஏற்பட்டிருப்பதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.


இந்து ரெபேக்கா வர்கீஸ் போன் நம்பரால் நொந்துபோன மாணவர்

இந்த படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸின் செல்போன் எண் ஒரு காட்சியில் காட்டப்பட்டிருக்கும். அந்த எண்தான் சாய் பல்லவியின் உண்மையான போன் நம்பர் என நினைத்து பலரும் அந்த எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருப்பதாகவும், ஆனால் உண்மையில் அந்த எண் தன்னுடைய எண் என்பதால் தன்னால் எந்த வேலையையும் செய்யமுடியவில்லை என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். தன்னை இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ‘அமரன்’ படக்குழுவினரிடம் ரூ.10 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார் வாகீசன்.

ஜிவியுடன் சைந்தவி!

தனது பள்ளிக்கால தோழியும் பாடகியுமான சைந்தவியை காதலித்து வந்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013ஆம் ஆண்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் ஹிட்டான நிலையில், திருமணத்திற்கு பின்பும் பல ஹிட் பாடல்களை கொடுத்தனர். இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இருவரும் பிரியப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.


விவாகரத்துக்கு பிறகும் சேர்ந்து பணியாற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் - சைந்தவி

விவாகரத்து பெற்ற பல ஜோடிகள் எலியும் பூனையுமாக வலம்வரும் நிலையில், திருமண பந்தத்திலிருந்து மட்டும் விலகியிருப்பதாகவும் மற்றபடி தங்களுக்கிடையேயான நட்பு தொடரும் என்றும் இருவருமே கூறியிருந்த நிலையில், ‘பனங்கருக்கா’ படத்தில் இருவரும் ஒரு பாடலை சேர்ந்து பாடினர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் மியூசிக் கான்சர்ட்டில் தான் பாடவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சைந்தவி. இதுகுறித்து அவருடைய வீடியோ வெளியானதிலிருந்து ‘divorce couple goals' போடும் அளவிற்கு இருவரும் நாணயமாக நடந்துகொள்வதாக பாராட்டிவருகின்றனர் நெட்டிசன்கள்.

சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி கூட்டணி!

‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தனது 23வது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘புறநானூறு’ படத்திலிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகிக்கொள்ள அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும் என்று சொல்லப்படும் நிலையில், இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாகும் ஜெயம் ரவி

‘பொன்னியன் செல்வன்’ திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியை சந்தித்ததால் இந்த கதாபாத்திரத்தை ஜெயம் ரவி தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ‘புறநானூறு’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அவர் ஓகே சொல்லவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நிவின் பாலியிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் யார் வில்லன்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநராகும் ‘கிங் கான்’ மகன்!

நடிகர் நடிகைகளின் வாரிசுகளும் நடிகர்களாகத்தான் வருவார்கள் என்னும் ஸ்டீரியோடைப்பை உடைத்து தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். முன்பே சில ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்கியிருக்கும் இவர் தற்போது இயக்கவிருக்கும் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் நிலையில் சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் அனிருத்தை இசையமைக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தமன் கமிட்டாகி இருக்கிறார்.


இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்

இப்படி கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரத்தின் மகன் இயக்குநரான நிலையில், பாலிவுட்டின் கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இயக்குநராக உருவெடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நெட் ஃப்ளிக்ஸில் ஒரு தொடரை எழுதி இயக்கவிருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் இந்த வரவை பாராட்டி இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.

Updated On 2 Dec 2024 12:46 PM GMT
ராணி

ராணி

Next Story