இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர் நடிகைகளாக இருப்பதில் எந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைக்கிறதோ அதே அளவிற்கு அவர்களுடைய தனிப்பட்ட மற்றும் அந்தரங்க வாழ்க்கையும்கூட பொதுவெளிகளில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் காதல், திருமணம் மட்டுமே விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நடிகைகளின் கர்ப்பம் குறித்தும் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் ஓரிரு நடிகைகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதால் அவர்களுடைய உடல்நல பிரச்சினைகளை கருத்தில்கொள்ளாமல் மோசமான கமெண்டுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கினர். அதையும் தாண்டி இப்போது சில நடிகைகள் கர்ப்பமடைந்தாலும் அதுவும் பொய்யென சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அப்படி சமீபத்தில் கடுமையாக விமர்சிக்கப்படும் நடிகைகளில் ஒருவர்தான் பாலிவுட் குயின் என்று அழைக்கப்படும் தீபிகா படுகோன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது கர்ப்பத்தை சமூக ஊடகம்மூலம் அறிவித்தார். அதன்பின்னும் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியானதால் அவர் கர்ப்பமாக இல்லை எனவும், வாடகைத்தாய் மூலம்தான் குழந்தை பெற்றுக்கொள்கிறார் எனவும் பேசிவந்தனர். ஓரிரு மாதங்களில் அவர் பொதுவெளியில் தலைகாட்டிய போதிலும் உண்மையிலேயே கர்ப்பம் இல்லை அது போலியான baby bump என சமூக ஊடகங்களில் காரசார விவாதாங்களிலேயே ஈடுபட்டனர். இருப்பினும் அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றிவருகிறார் தீபிகா. சமீபத்தில் இவர் நடித்திருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையே தனது காஸ்மெட்டிக் பிசின்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவரும் தீபிகா பற்றி சுழலும் சர்ச்சைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இந்தியாவின் டாப் ஸ்டார் தீபிகா!

பிரபல பேட்மிட்டன் ப்ளேயர் பிரகாஷ் படுகோனின் மூத்த மகளான தீபிகா படுகோன் பெங்களூருவைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே தந்தையைப் போலவே பேட்மிட்டன், நாடகங்கள் மற்றும் மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்த தீபிகா, கல்லூரி முதலாமாண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர மாடலிங்கில் இறங்கினார். அதற்காக தனது பெற்றோரிடம் அனுமதி வாங்கி தனியாக மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு பல போராட்டங்களுக்கு பிறகு மாடலிங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, பல்வேறு விருதுகளை பெற்று, லிரில், டாபர் லால் பவுடர், லிம்கா மற்றும் குளோஸ் அப் டூத்பேஸ்ட் போன்ற விளம்பரங்களில் தோன்றினார். அதனையடுத்து முதலில் ஒரு ஆல்பம் பாடலில் நடித்த தீபிகா, 2006ஆம் ஆண்டு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டே ஃபாரா கானின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்தார்.


‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன்

தீபிகாவை விளம்பரங்களில் பார்த்து இம்ப்ரஸ் ஆன ஷாருக்கான்தான் இவரை அந்த படத்தில் நடிக்க பரிந்துரைத்தாராம். அப்படம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றிபெற்றதுடன் 2007ஆம் ஆண்டு அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இப்படம் தீபிகாவிற்கு அடுத்தடுத்த வழிகளை திறந்துகொடுத்தது. தொடர்ந்து பாலிவுட்டில் பிஸியாக ஓடிய தீபிகாவுக்கு, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘லவ் ஆஜ் கல்’, ‘காக்டெய்ல்’, ‘ரேஸ்-2’ ‘யே ஜவானி ஹை திவானி’ போன்ற படங்கள் திருப்புமுனையாக அமைந்தன. அதனையடுத்து ஷாருக்கான் ஜோடியாக ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ திரைப்படத்தில் தமிழ்ப்பெண் மீனலோச்சினியாக நடித்தார். இப்படம் இவரை இந்தியா முழுக்க பிரபலமாக்கியதுடன் தமிழ்ப்பட வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது. ரஜினிகாந்த் ஜோடியாக 3டியில் வெளியான ‘கோச்சடையான்’ படம்மூலம் தமிழ் திரையிலும் அறிமுகமானார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. தீபிகாவின் கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம் என்றால் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா’. சஞ்சய் லீலா பான்சாலி இயக்கிய இப்படத்தில் தீபிகாவின் நளினம் மற்றும் உணர்ச்சிமிக்க நடிப்பால் பாலிவுட் குயின் என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து ‘பிகு’, ‘பத்மாவத்’ போன்ற படங்களில் நடித்த தீபிகா இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மேலும் 2016-17ல் நாட்டில் அதிக வரி செலுத்தும் நபர்களில் ஒருவராக வலம்வந்தார். இதற்கிடையே ஹாலிவுட்டிலும் நடித்தார். கடந்த ஆண்டு தீபிகா நடித்திருந்த ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ போன்ற படங்கள் வசூல்ரீதியாக சாதனை படைத்தன.


ரன்வீர் சிங் - தீபிகா படுகோனின் காதல் திருமண புகைப்படம்

காதல் திருமணமும் விவாகரத்து வதந்திகளும்

முதலில் நடிகர் ரன்பீர் கபூரும் தீபிகாவும் காதலித்து வந்த நிலையில் விருது விழாக்கள் மற்றும் பொதுவெளிகளில் ஜோடியாக சுற்றி பலரின் கவனத்தையும் ஈர்த்தனர். அந்த ஜோடி திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்பீர், நடிகை கத்ரீனா கைஃபை டேட்டிங் செய்ய ஆரம்பத்தார். இதனால் இவர்களுடைய காதல் முறிந்து, தீபிகா பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளானார். குறிப்பாக, மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தீபிகா, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்தார். அதனால் மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாடு முழுவதும் ‘live laugh love’ என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்திவருகிறார். அதன்பிறகு நடிகர் ரன்வீர் சிங்குடன் காதலில் விழுந்த தீபிகா பல ஆண்டுகள் அவரை டேட்டிங் செய்தார். குறிப்பாக, ‘ராம் - லீலா’, ‘பாஜிராவ் - மஸ்தானி’, ‘அலாவுதீன் கில்ஜி - பத்மாவதி’ போன்ற ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் இந்த ஜோடிக்கு கைகொடுத்தது. 2018ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாகினர். திருமணமாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இந்த தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளாததால் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக வதந்திகள் பரவின. இருப்பினும் விருது விழாக்கள் மற்றும் பொதுவெளிகளில் அவ்வப்போது ஒன்றாக தோன்றி வதந்திகளை ஓரம்கட்டி வந்தனர் தீபிகா - ரன்வீர் தம்பதி. ஒருவழியாக தற்போது தீபிகா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகி விவாகரத்து வதந்திகளுக்கு முழுவதுமாக முற்றிப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


82°E என்ற நிறுவனத்தைத் தொடங்கி காஸ்மெட்டிக் பிசினஸில் கலக்கும் தீபிகா

பிசினஸில் பிஸி!

பல முன்னணி பிராண்டுகளின் அம்பாசிடராக வலம்வந்த தீபிகா ஏற்கனவே KA எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் மூலதன நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின்மூலம் சிறுதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஸ்டார்ட்-அப் முதலீடானது வழங்கப்படும். இப்படி தொடங்கப்பட்ட ப்ளூஸ்மார்ட், மொகோபரா, டிஜிட்டல் பெட்-கேர் பிளாட்ஃபார்ம், நுவா மற்றும் காபி பிராண்ட் ப்ளூ டோகாய் போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் ஆரம்பத்தில் தீபிகாவே தோன்றி அதனை ப்ரமோட் செய்தார். இப்படி ஒருபுறம் பிசினஸில் வளர்ந்துகொண்டே திரைப்படங்களையும் தயாரித்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் டாப் ஹீரோயின் என்ற பெயரை தக்கவைத்திருந்த தீபிகா, 2022ஆம் ஆண்டு 82°E என்ற பெயரில் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின்மூலம் பல்வேறு சரும பராமரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தியதுடன், தொடங்கிய சில மாதங்களிலேயே அதனை சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள்மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்தினார். சரும பராமரிப்பை எளிதாக்குவதே தனது நோக்கம் என்று கூறும் தீபிகா, தனது பிராடக்ட்ஸை சக நடிகர்களுக்கும் அறிமுகப்படுத்துவடன், அவர்களுடன் சேர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு ப்ரமோட் செய்துவருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் தீபிகா, தொடர்ந்து தனது நிறுவனத்தின்மூலம் புதுபுது ப்ராடக்ட்ஸை அறிமுகம் செய்வதிலும் அதனை விளம்பரப்படுத்துவதிலும் ஆர்வம்காட்டி வருகிறார்.


‘சிங்கம் அகெய்ன்’ படத்தில் தீபிகாவின் லேடி போலீஸ் கெட்டப்

கர்ப்பம் குறித்த சர்ச்சை

தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மூலம் அறிவித்தார். திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து தீபிகா கர்ப்பமானதால் அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு முன்பே அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட தீபிகா கர்ப்பமாக இருப்பதாகக்கூறி புகைப்படங்கள் வைரலான நிலையில், அவர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது கர்ப்பத்தை உறுதிசெய்தார். இதனிடையே ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில் போலீஸ் உடையில் இருக்கும் தீபிகாவிடம் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், எனவே அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கிளப்பிவிட்டனர். மேலும் கர்ப்பமாக இருந்தால் எப்படி சண்டைக்காட்சிகளில் நடிக்கமுடியும் என்றும் கேள்வி எழுப்பினர். இப்படி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது கணவர் ரன்வீருடன் வந்தார் தீபிகா. கர்ப்பமாக இருந்த தீபிகாவை பொதுவெளியில் பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்தாலும் சிலர் 5 மாதங்களில் அவ்வளவு பெரிய baby bump வர வாய்ப்பில்லை எனவும், தீபிகா கொஞ்சம்கூட எடை அதிகரிக்கவில்லை, எனவே அது செயற்கையான baby bump எனவும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் சமீபகாலமாக தொடர்ந்து தனது கணவர் மற்றும் அம்மா உஜ்ஜாலாவுடன் ஹோட்டல்களுக்கு வந்துபோகிறார். இன்னும் மூன்று மாதங்களில் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கும் தீபிகாவின் நடிப்பில் அடுத்து ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.


‘கல்கி 2898 AD’ -யில் கர்ப்பிணியாக vs ரியல் லைஃபிலும் கர்ப்பிணியாக தீபிகா

ரீல் டூ ரியல் கர்ப்பம்!

‘ஜவான்’ திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடித்த தீபிகா எப்போது நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாகப் போகிறார் என கேள்வி எழுந்த நிலையில், தனது கர்ப்பம் குறித்து அறிவித்தார். இப்போது நிஜ வாழ்க்கையில் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா ‘கல்கி 2898 AD’-யிலும் கர்ப்பிணியாக நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், விஜய் தேவரகொண்டா போன்ற பல பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சுமார் 800 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கர்ப்பிணியாக தோன்றியிருக்கும் தீபிகாவின் நடிப்பு கட்டாயம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கல்கி 2898 AD’ வருகிற ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

Updated On 24 Jun 2024 6:05 PM GMT
ராணி

ராணி

Next Story