இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிறுத்தி வெளிவருகிற படம் என்பது அன்றைய சாவித்திரி, விஜயகுமாரி காலம் தொட்டு இன்றைய நயன்தாரா, திரிஷா காலம் வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக 70-களின் பிற்பாதியில் நாவல்களை தழுவி வெளிவந்த பெரும்பாலான படங்கள் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வெளிவந்தன. அந்த சமயத்தில்தான் கே.ஆர். விஜயா, லட்சுமி, லதா, ஸ்ரீவித்யா போன்ற அனுபவம் நிறைந்த நடிகைகளின் முழு திறமை வெளிக்கொண்டு வரப்பட்டது மட்டும் அல்லாமல், ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீப்ரியா, படாப்பட், சரிதா, சுமித்ரா, ஷோபா, பிரமீளா, அஸ்வினி போன்ற அப்போதே அறிமுகமான நடிகைகளின் திறமைகளும் அடையாளம் காணப்பட்டன. இதன் பிறகு 80-களின் இறுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பெண் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி வெளிவரும் படங்களின் வரவு குறைந்த நிலையில்தான், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின் வெளிவந்த ‘இறுதிச் சுற்று', 'அருவி', ‘அறம்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்கள் மீண்டும் புதிய அலையை உருவாக்கின. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் பெண்களை முன்னிறுத்தி வெளிவந்த படங்களில் மறக்க முடியாத பெண் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்


‘ஃபர்ஹானா’ திரைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக தோன்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இஸ்லாமியர்களை பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்டு நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமாக கடந்த மே மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் ‘ஃபர்ஹானா’. ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் சென்னை ஐஸ்ஹவுஸின் நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக ஃபர்ஹானா என்ற கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கணவரான ஜித்தன் ரமேஷ் நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் கைகொடுக்காததால் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஃபர்ஹானாவான ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப பொருளாதார சூழல் முன்னேற்றம் அடைகிறது. இதற்கிடையில், தனது குழந்தைக்கு உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட ஐஸ்வர்யா ராஜேஷ் செய்வதறியாது தவிக்கிறார். அதற்காக அவர் வேலை செய்யும் கால் சென்டரில் 3 மடங்கு அதிகம் இன்சென்டிவ் கொடுக்கும் வேறொரு பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொள்கிறார். அந்த வேலை ஃபர்ஹானாவான ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. அழுவது, எழுவது, பிரச்சினையை எதிர்கொள்ள போராடுவது, தனியொரு பெண்ணாக குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது என ஐஸ்வர்யா ராஜேஷை மறக்கடித்து திரை முழுவதும் ஃபர்ஹானாவாக வாழ்ந்து நம்மை கவர்ந்திருந்த ஐஸ்வர்யா, படம் முழுவதும் பல இடங்களில் நம்மை சீட் எட்ஜிர்க்கே கொண்டு செல்லும் படியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்.


'ரன் பேபி ரன்', ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான தோற்றங்கள்

இதனை தொடர்ந்து, இதே ஆண்டில் ஜியென் கிருஷ்ணகுமார் என்பவரது இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து 'ரன் பேபி ரன்' படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் மிளிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தை கண்ணாடியாய் காட்டி முகத்தில் அறையும் படைப்பாக, ஏற்கனவே மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜியோ பேபி இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் பதிப்பில் நடித்திருந்தார். இப்படத்தில் திருமணத்திற்கு பிறகான ஒரு பெண்ணின் மணவாழ்க்கை எப்படியாக இருக்கிறது என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ், சமைத்தல், துவைத்தல், பாத்திரம் கழுவுதல், படுக்கையறைக்கு செல்லுதல் போன்ற காட்சிகள் வாயிலாக தன் பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்திருப்பார். மேலும் தனது இயல்பான முகபாவனைகளின் வழியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே கதை முழுவதும் நகர்வதால், இதில் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தின் வலியை எளிதாக நமக்கு கடத்திவிடுகிறார். இதன்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'சொப்பன சுந்தரி' படமும் நகைச்சுவையில் கலக்கியதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

நிமிஷா சஜயன்

பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகி என்றால் அழகாக, நல்ல நிறமாக, ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த அழகு என்கிற கட்டமைப்புகளை எல்லாம் உடைத்து எத்தனையோ நாயகிகள் தங்கள் திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்துள்ளனர். இதில் அப்போதைய சரிதா தொடங்கி தற்போதைய ஐஸ்வர்யா ராஜேஷ் வரை எத்தனையோ நாயகிகள் உள்ளனர். இவர்கள் எல்லோருமே கருப்புதான் என்றாலும், அவற்றையெல்லாம் கடந்து தங்களின் நடிப்புத்திறமையால் பலரையும் கவர்ந்து சாதித்துள்ளனர். அந்த வரிசையில், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்கிற மலையாள படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது முத்திரையை பதித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான 'சித்தா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன இவர், ஒரு துப்புரவு தொழிலாளியாக சக்தி என்னும் கதாபாத்திரத்தில், வெகு இயல்பாக நடித்து பலரின் மனங்களையும் வென்றிருப்பார். செல்போனுக்கு பிள்ளைகள் அடிமையாவது, பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருப்பதால் என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வருகிறது என்பதை மிக அழகாக காட்சிபடுத்தியிருந்த இப்படத்தில் நிமிஷா, நாயகனுக்கு ஆதரவாக தோள்கொடுப்பது, கழிவறையை சுத்தம் செய்யாதவரை மிரட்டுவது என நடிப்பு ராட்சசியாக வந்து பல இடங்களில் ரசிக்க வைத்திருந்தார்.


இருவேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும் நிமிஷா சஜயன்

மேலும் இப்படத்தில், தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையை மனதிற்குள் மறைத்துக்கொண்டு வாழும் நிமிஷா சஜயன், ஒரு கட்டத்தில் உடைந்து அழும் காட்சியில் மிக எமோஷனலாக நடித்து நம்மையும் கண் கலங்க வைப்பதோடு, ஒரு பாலியல் வன்முறை குற்றத்தை பெண் எப்படிப் பார்க்கிறாள், ஆண் எப்படி அணுகுகிறான் என்ற தெளிவான பகுப்பாய்வை வீரியத்துடன் வெளிப்படுத்துகிற வகையில், நிமிஷாவின் வசனங்களும் நடிப்பும் அதில் இடம் பெற்றிருந்த விதம் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக அவரை மாற்றி ஆண்களின் கோபத்தை கேள்வி கேட்க வைக்கும் விதமாக அமைந்திருக்கும். அப்பேற்பட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திலும் நாயகியாக நடித்திருந்த நிமிஷா, இதில் மலையரசி எனும் கதாபாத்திரத்தில் தோன்றி தனது சிறந்த நடிப்பால் பலரை ஆச்சரியப்படுத்தியிருப்பார்.

திரிஷா, நயன்தாரா

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகிகளாக மட்டுமே நடித்து வருபவர்கள்தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் இன்று வரை முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்திலேயே பயணித்து வருகின்றனர். இவ்விருவரும் தங்களது ரீ என்ட்ரிக்கு பிறகு தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் மற்றும் தங்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா இந்த வருடம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ மற்றும் ‘லியோ’ஆகிய பெரிய படங்களில் மட்டுமின்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'தி ரோட்' படத்திலும் நடித்து மீண்டும் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்று படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் தோன்றி உலக சினிமா அரங்கையே திரும்பி பார்க்க வைத்த இவர், இந்த ஆண்டு அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ பாகம் இரண்டு படத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் மிளிர்ந்து பலரையும் ரசிக்க வைத்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா என மூன்று நாயகிகள் மெஜாரிட்டியாக இருந்தாலும் குந்தவை என்ற பாத்திரத்தில் வரும் திரிஷா மட்டும் பெரிய அளவில் கவனம் பெற்றார். இதற்கு பிறகு, இயக்குநர் அருண் வசீகரன் என்பவரது இயக்கத்தில் சாலை விபத்தால் பாதிக்கப்படும் பெண், துணிச்சலாகப் போராடி விபத்துகளின் பின்னால் உள்ள மர்மத்தைக் கண்டறிந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்குகிறார் என்ற பரபரப்பான பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த 'தி ரோடு' படத்தில் மீராவாக வந்து நடிப்பில் மிரட்டியிருந்த திரிஷா, தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, கமலுடன் ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


‘லியோ’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ மற்றும் 'தி ரோட்' ஆகிய படங்களில் திரிஷா

இதேபோன்று ‘அறம்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு பெண் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகை நயன்தாராவும் இந்த ஆண்டு ஷாருக்கானுடன் 'ஜவான்' , ஜெயம் ரவியுடன் 'இறைவன்' ஆகிய படங்களில் நடித்திருந்த போதிலும், சமீபத்தில் வெளிவந்த 'அன்னபூரணி' திரைப்படம் பலரின் கவனத்தையும் பெரியளவில் ஈர்த்தது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கேட்டரிங் துறையைக் கதைக்களமாகக் கொண்டு வெளிவந்த இப்படத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் சூழலில், செஃப் என்ற வேலை, பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு மட்டும் எப்படி அந்நியமாக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்த விதம் பாராட்டும்படியாக இருந்தது. இதில் கடவுளுக்கு சேவை செய்வதையே பாக்கியமாகக் கருதும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா, யாருக்கும் தெரியாமல் தனக்கு மிகவும் பிடித்த கேட்டரிங் துறையை தேர்ந்தெடுத்து படிப்பது, அசைவம் சமைப்பது, பின்னர் செஃப் ஆனந்தாக வரும் சத்யராஜிடம் பணியாற்ற விரும்பி சென்னைக்கு வருவது என்று படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன் எதார்த்தமான நடிப்பால் வழக்கம்போல் ஸ்கோர் செய்திருப்பார். இந்த ஆண்டு இறுதியில் நயன்தாராவின் 75-வது படமாக வெளிவந்த 'அன்னபூரணி' திரைப்படம் நயன்தாராவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாகவே பார்க்கப்படுகிறது.


'அன்னபூரணி' படத்தில் இருவேறு பரிமாணங்களில் நடிகை நயன்தாரா

சீனியர்ஸை மிஞ்சிய ஜூனியர்ஸ்

என்னதான் இந்த ஆண்டு நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நிமிஷா சஜயன் என சீனியர் நடிகைகள் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பலரின் பாராட்டை பெற்றிருந்தாலும், இந்த 2023 ஆம் ஆண்டு, பல புதிய பெண் திறமைசாலிகளை தமிழ் சினிமாவில் அடையாளம்கான உதவிய ஆண்டாகத்தான் அமைந்தது. குறிப்பாக 'விடுதலை' பாகம் 1 படத்தில் அறிமுகமான பவானி ஸ்ரீ, 'அயோத்தி' படத்தில் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி, 'டாடா' படத்தில் கவனம் பெற்ற அபர்ணா தாஸ், 'குட் நைட்' படத்தில் அறிமுகமான மேதா ரகுநாத் ஆகிய நடிகைகள் தங்கள் கதாபத்திரங்களை உணர்ந்து நடித்து பலரின் பாராட்டையும் பெற்றனர். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படத்தில் தமிழரசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பவானி ஸ்ரீ, இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள மலைவாழ் பெண்ணாக நடித்து பலரின் கவனம் பெற்றிருந்தார்.


'விடுதலை' பாகம் 1 படத்தில் அறிமுகமான பவானி ஸ்ரீ, 'அயோத்தி' படத்தில் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி

குறிப்பாக படத்தின் முதல் பாதியில் குமரேசனாக வரும் சூரியிடம் சூசகமாக தனது காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் ரசிக்க வைத்தவர், படத்தின் க்ளைமாக்சில் போலீஸ் டார்ச்சர்களுக்கு ஆளாகி சித்திரவதைகளை அனுபவிக்கும்போது அவர் படும் துயரங்கள், நமக்குள்ளும் வலியை ஏற்படுத்தி நம் மனங்களை ரணமாக்கும் விதமாக இருக்கும். அதேபோல் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த 'அயோத்தி' படத்தில் நடித்திருந்த ப்ரீத்தி அஸ்ரானி இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக, நடிகையாக என பிற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்திருந்த போதும், 'அயோத்தி' திரைப்படம் கூடுதல் வரவேற்பை பெற்று தந்திருந்தது. இதில் ஷிவானி எனும் கதாபாத்திரத்தில் வரும் இவர் பெரும்பாலும் எமோஷனல் காட்சிகளில் நடிக்க வேண்டிய தேவை இருந்தும், அழுகையை மட்டுமே வெளிப்படுத்தாமல் அதை திறம்பட கையாண்டு, தேவையான உணர்ச்சிகளை அதே அழுத்ததுடன் கடத்தும் விதத்தால் தேர்ந்த நடிப்பை பிரதிபலித்து பாராட்டை பெற்றிருந்தார்.


'டாடா' அபர்ணா தாஸ், 'குட் நைட்' மேதா ரகுநாத், 'கண்ணகி' அம்மு அபிராமி மற்றும் 'இறுகப்பற்று' சானியா ஐயப்பன்

இவர்களை போலவே 'டாடா' படத்தில் கவினுக்கு ஜோடியாக சிந்து எனும் கதாபத்திரத்தில் வரும் அபர்ணா தாஸும் படம் முழுவதுமே எமோஷனல் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டையும் பெற்றார். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தன் மகனை அடையாளம் கண்டு கண்ணீர்விடும் போது நம் மனங்களையும் சேர்த்தே கரைய வைத்திருப்பார். அதேபோல் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து குறட்டையை மையப்படுத்தி வெளிவந்த 'குட் நைட்' படத்தில், அனு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மேதா ரகுநாத் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கவனம் பெற்றார். அதிர்ந்து பேசாத, கணவர் சொல்வதை மட்டுமே கேட்கும் ஒரு அமைதியான கதாபாத்திரமான அனு, தன் மனதுக்குள் பல வலிகள் இருந்தும் தன் கணவருக்கு இருக்கும் குறட்டை பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அன்பு காட்டும்போது பல ஆண்களின் மனதை வென்றிருந்தார். இப்படங்கள் தவிர 'இறுகப்பற்று' படத்தில் வரும் மித்ரா, பவித்ரா, திவ்யா கதாபாத்திரங்கள், சமீபத்தில் வெளிவந்து பலரின் பாராட்டை பெற்றுள்ள 'கண்ணகி' படத்தின் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன், ஷாலின் ஜோயா ஆகியோரின் கதாபாத்திரங்கள் என இந்த ஆண்டு வெளிவந்த பல படங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாத்திர படைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டும்படியாகவே இருந்தது. இது போலவே வருகிற 2024 ஆம் ஆண்டும் சினிமாவில் பெண்களுக்கான அடுத்தக்கட்ட பயணமாக அமைய வாழ்த்தலாம்.

Updated On 1 Jan 2024 6:27 PM GMT
ராணி

ராணி

Next Story