இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எஸ்.ஜே சூர்யா - இந்த பெயரை கேட்ட உடனேயே இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வருவது அவரின் தனித்துவமான நடிப்புத் திறனும், அவர் பேசிய வித்தியாசமான வசனங்களும்தான். ஆனால் அன்றைய 90-களை கடந்து வந்த இளைஞர்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒரு இயக்குனராக அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகள் குறித்து. தனது படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாக நம்மோடு பயணித்து வரும் எஸ்.ஜே சூர்யா, தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. அந்த வகையில் அவர் சந்தித்த சிக்கல்கள், செய்த சாதனைகள் குறித்து ஒரு சின்ன டைம் டிராவல் மூலம் பின்னோக்கி சென்று காணலாம்...

ஆரம்ப கால வாழ்க்கை...

ஜஸ்டின் செல்வராஜ் என்ற இயற்பெயர் கொண்ட எஸ்.ஜே சூர்யா 1968-ஆம் ஆண்டு, ஜுலை 20-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ,வாசுதேவநல்லூரில் சம்மனசு பாண்டியன், ஆனந்தம் தம்பதியருக்கு பிறந்த மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டி மகனாக பிறந்தவர். தந்தை சம்மனசு பாண்டியன் அந்த ஊரிலேயே செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகவும், அம்மா ஆனந்தம் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒட்டுமொத்த குடும்பமும் நன்கு படித்து விட்டு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் வேலை பார்த்து வந்த நிலையில், எஸ்.ஜே சூர்யாவுக்கு மட்டும் சினிமா ஆசை துளிர் விட ஆரம்பித்தது. அந்த ஆசையை வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் “என்னை யாரும் தேட வேண்டாம். நான் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்கிறேன்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த அறியாப் பருவத்தில் சென்னை வந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டு வாசல் கதவை தட்டியவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதன் பிறகுதான் சினிமாவில் ஒரு நடிகராக வேண்டும் என்றால் நிறைய போராட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த எஸ்.ஜே.சூர்யா ஊருக்கே திரும்பிச் சென்று பெற்றோரின் விருப்பப்படி தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.


சிவாஜி கணேசன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு போட்ட ஆட்டோகிராப்

சினிமா பயணம் துவங்கியது எப்படி?

மேற்படிப்பிற்காக சென்னை வந்து லயோலா கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் மிகவும் சின்சியராக படித்துவிட்டு , வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் சினிமாவில் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் போன்ற யாராவது ஒருவரிடம் எப்படியாவது உதவி இயக்குனராக சேர்ந்துவிட வேண்டும் என்று வாய்ப்பு தேடி சென்று விடுவாராம் . அப்படி சென்ற போது தான் முதன் முறையாக துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1988-ஆம் ஆண்டு வெளிவந்த பாண்டியராஜன் படமான ‘நெத்தியடி’ படத்தில் கிராமத்து இளைஞனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்தவருக்கு, சில ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜாவின் படமான ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் சிறிது நேரம் வந்து போகும் படியான கேமியோ அப்பியரன்ஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, மாட்டு பயிற்சியாளராக வந்து நடித்திருந்தார். இந்த நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா சற்று நின்று நிதானமாக இப்படியே துணை நடிகர் என்ற நிலையிலேயே தனது வாழ்க்கை பயணிக்க ஆரம்பித்தால், எப்படி அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்று யோசித்து அதற்கான அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார். அப்போது ஒரு சில தனியார் உணவகங்களில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே, இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித்தின் ‘ஆசை’ படத்தில் பணியாற்றியவர், பிறகு மீண்டும் அவருடன் உல்லாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.


இயக்குனர் வசந்த் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஆரம்பகால படங்கள்

நடிகர் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட நெருக்கமும், முதல் பரிசும்

3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘உல்லாசம்’ படத்தில் அஜித்தை சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது அஜித் நீ ஒரு கதை ரெடி பண்ணு, அதில் நானே நடிக்கிறேன் என்று சொன்னவுடன், நாக்கு வறண்டவன் கையில ஜிகிருதண்டாவை கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்ததாம் சூர்யாவிற்கு. உடனே எஸ்.ஜே. சூர்யா களத்தில் இறங்கி ஒரு கதையை எழுதி அஜித்திடம் சொல்ல அந்த கதையும் அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்படி உருவானதுதான் ‘வாலி’ திரைப்படம். இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிவடைந்து, அதன் முதல் பிரதியை பார்த்த அஜித் ரொம்பவே சந்தோஷமாகி, படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சூர்யாவுக்கு போன் செய்து உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு வெள்ளை கலர் சான்ரோ கார் ஒன்றை கிப்ட்டாக வாங்கி பரிசளித்தார். படம் திரைக்கு வந்து வெற்றி பெரும் முன்பே ஒரு நடிகர் இயக்குனருக்கு கார் பரிசளித்த நிகழ்வு என்பது ‘வாலி’ படத்தில் இருந்து தான் ஆரம்பித்தது.


எஸ்.ஜே.சூர்யா, அஜித் இணைந்து பணியாற்றிய 'வாலி' திரைப்படம்

இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த படத்திற்கான அழைப்பு ஏ.எம்.ரத்தினத்திடம் இருந்து தானாகவே தேடி வந்தது. அந்த படம்தான் விஜய், ஜோதிகா நடித்து வெளிவந்த ‘குஷி’ திரைப்படம். இப்படத்திற்கான கதையை எஸ்.ஜே.சூர்யா, விஜய்யிடம் சென்று கூறிய போது, கதை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி , அவரது முகத்தில் ஒரு ரியாக்சனும் காட்டவில்லையாம். இதனால் குழம்பிப்போன சூர்யா, விஜய்யிடம் உங்களுக்கு கதை பிடிக்கலன்னா வேற கதை வேணுன்னா சொல்லட்டுமா என்று கேட்ட பிறகுதான், ஏ இந்த கதையே நல்லா இருக்கு, இதையே எடுத்துடலாம் என்று சொன்னாராம். இப்படித்தான் சூர்யா ,விஜய் இருவருக்குமான அறிமுகம் என்பது நிகழ்ந்துள்ளது. இதற்கு பிறகு படத்தின் வேலைகள் ஆரம்பமாகி, தமிழ் சினிமாவில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜோதிகாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்து, மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. அதுமட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எடுத்து அங்கும் தனது வெற்றி முத்திரையை பதித்தார். அஜித், விஜய் என தமிழ் சினிமாவில் இருபெரும் ஜாம்பவான்களையும் வைத்து இயக்கிய இவ்விரு படங்களிலுமே தேவாவின் இசையில் இடம்பெற்ற நிலவை கொண்டு வா ,ஹோ சோனா ,ஏப்ரல் மாதத்தில், மேகம் கருக்குது, மேக்கோரீனா, ஒரு பொண்ணு ஒன்னு நா பாத்தேன், மொட்டு ஒன்று, கட்டி புடி கட்டி புடி டா போன்ற பாடல்கள் அனைத்தும் அன்று பட்டிதொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கிய பாடல்களாக அமைந்து ரசிகர்களிடத்தில் பெருத்த வரவேற்பை பெற்றன.


விஜய், எஸ்.ஜே.சூர்யா பணியாற்றிய 'குஷி' திரைப்படம்

இயக்குனரில் இருந்து நடிகர் அவதாரம்… முதல் சர்ச்சை…

தொடர்ந்து சூர்யா இயக்கிய முதல் இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், அடுத்து சூர்யாவே சொந்தமாக இயக்கி, தயாரித்து, நடித்து வெளிவந்த படமாக ‘நியூ’ திரைப்படம் அமைந்தது. 2004-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் கதைக்களம் சற்று வித்தியாசமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். இதனாலயே இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நிறைய பிரச்சனைகளையும், பலரின் கெடுபிடிகளையும் சந்தித்தது. இருந்தும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன எஸ்.ஜே.சூர்யா ஒரே குஷியாகி, மீண்டும் ஒரு வாரம் கழித்து, படத்தில் மார்க்கண்டேயா என்ற கிளாமர் பாடலை புதிதாக ஒளிப்பதிவு செய்து இணைத்து போஸ்டரும் ஒட்டவே, அதற்காவும் ஒரு கூட்டம் திரையரங்கை நோக்கி வர ஆரம்பித்தது.

அதே வேளையில், படத்தில் பெண்களை தவறாக காட்டியுள்ளதாகவும், இரட்டை அர்த்தம் மற்றும் கிளாமர் காட்சிகள் அதிகமாக உள்ளதாகவும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மகளிர் சங்கங்கள் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா எந்த அளவிற்கு மகிழ்ச்சியான சூழலுக்கு சென்றாரோ, அதே அளவிற்கு மன உளைச்சலுக்கும் ஆளாகி நிறைய பிரச்சனைகளை சந்தித்தார். அதுமட்டுமின்றி எஸ்.ஜே.சூர்யாவின் நிலையை கண்டு அவரது குடும்பத்தினரும் மனதளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை கொடுத்தது.


'நியூ' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா

முழுநேர நடிகராக மாறியது எப்படி?

தொடர்ந்து படம் இயக்குவது, தயாரிப்பது ஆகியவற்றை நிறுத்திவிட்டு, முற்றிலும் தனக்கு பிடித்த நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தார் சூர்யா. அதன்படி பல இயக்குனர்கள் அவரை வைத்து படம் இயக்க முன்வரவே ‘கள்வனின் காதலி’, ‘திருமகன்’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என ஹீரோவாகவே நடித்தவர் திடீரென நடிப்புலகிலும் இருந்து காணாமல் போனார். பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் சிறிது நேரம் வந்து போகும் படியான பஞ்சவன் பாரிவேந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தானும் தமிழ் திரையுலகில் இருப்பதை ரசிகர்களுக்கும், திரை உலகினருக்கும் நினைவு படுத்திக்கொண்டார் . இப்படத்தை தொடர்ந்து சூர்யாவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வர ‘pizza டூ’, ‘வை ராஜா வை’, ‘இசை’, ‘யட்சன்’, ‘இறைவி’, ‘மெர்சல்’, ‘ஸ்பைடர்’, ‘மான்ஸ்டர்’,என நடித்தவருக்கு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இறைவி’ படம் அவரது திரை வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்சை தொடங்கி வைத்த படமாக அமைந்தது. இதற்கு பிறகு தளபதி விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக நடித்தவர், ‘ஸ்பைடர்’ படத்தில் இன்னும் அதிரடி வில்லனாகத் தோன்றி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.


எஸ்.ஜே.சூர்யா ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்கள்

இசையமைப்பாளராக அறிமுகம்

எஸ்.ஜே.சூர்யா, ஏர்.ஆர்.ரகுமானிடம் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்ததால் அவர் கொடுத்த உற்சாகத்தில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்று, தனக்கென்று ஒரு இசை ஆசிரியரை ஏற்பாடு செய்து, ஆறு மாத காலம் இசை பயிற்சி எடுத்துக் கொண்டாராம். பின்னர், அந்த இசைக்கு என்று ஒரு கதையை எழுதி, அதை அவரே இயக்கி, நடித்து, அதற்கு இசையும் அமைத்து மிகுந்த எதிர்பார்ப்புகளோடு 2015-ஆம் ஆண்டு ‘இசை’ என்ற பெயரிலேயே படத்தை வெளியிட்டார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நபராக மாறினார்.


எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை' திரைப்படம்

குழந்தைகளின் நாயகன்

இதனை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தவருக்கு, அதே ஆண்டில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத மைல்கல் படமாக மாறிப்போனது. படத்தில் டி.ஜி.பி தனுஷ்கோடியாக வரும் எஸ்.ஜே.சூர்யா மிகச்சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் அவர் பேசியிருந்த “வந்தா சுட்டா போனா ரிப்பீட்டு, முடியல தலைவரே முடியல” என்ற வசனம் தென்னிந்திய முழுவதும் வைரலாகி புகழ்பெற்றது. இதன் பிறகு, குழந்தைகளின் விருப்ப நாயகனாக, அவர்களது மனங்களில் நிரந்தரமாக குடியேறினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் நடித்தவர், பிறகு 'பொம்மை' படத்திலும் தனது சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தி இருந்தார்.


'மாநாடு' படத்தில் டி.ஜி.பி தனுஷ்கோடியாக வரும் எஸ்.ஜே.சூர்யா

மார்க் ஆண்டனி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி வெளிவந்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு மற்றுமொரு வெற்றி மகுடமாக மாறியுள்ளது. இப்படத்தில் மார்க் மற்றும் ஆண்டனியாக வரும் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 70களில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கேங்ஸ்டர்களாக, ஜாஸ்ஸி ஆடைகளை அணிந்து கொண்டு எதிரிகளை ஸ்டைலாக பந்தாடும் ட்ரைலரை பார்த்த போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, அவர் பேசும் வசனங்கள் ஆகியவை இன்னும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கற்பனை காதலியை பற்றி பேசி பேசியே புதிய காதலை மலர வைப்பது (வாலி), இவர்கள் தான் எதிர்காலத்தில் இணைய போகிறார்கள் என்பதை குழந்தை பருவத்திலேயே காட்டி பின்பு கதையை துவங்குவது (குஷி), 8 வயது சிறுவன் இளைஞன் ஆனால் என்னாகும் என்ற வில்லங்கமான கதை களத்தை படமாக எடுப்பது (நியூ) என தனது முதல் மூன்று படங்களிலேயே புதிய முயற்சியை மேற்கொண்டு ஹாட்ரிக் வெற்றி கண்ட எஸ்.ஜே சூர்யா எனும் இயக்குனர், இன்றும் ஒரு நடிகனாக மாறிய பிறகும் பல வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அவர் இன்னும் எட்டி பிடிக்க வேண்டிய உயரங்கள் அதிகமாகவே இருக்கிறது. சாகும் வரை சினிமாதான் என் உயிர் மூச்சு என்று, ஒரு நடிகனாக அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இன்னும் பல உயரங்களை தொடுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


மார்க் ஆண்டனியில் எஸ்.ஜே.சூர்யா

Updated On 25 Sep 2023 6:46 PM GMT
ராணி

ராணி

Next Story