இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கமல்ஹாசன் ‘அம்மா’வுக்கு தாதா சாஹேப் பால்கே விருது

‘விஸ்வரூபம்-2’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்தவர் வஹீதா ரஹ்மான். தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த இவர் எம்ஜிஆர் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் ‘சலாம் பாபு சலாம் பாபு’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இந்தப் படம் வெளிவரும் முன்பே அவர் தெலுங்கில் நடித்த ‘ரோஜுலு மாராயி’ என்ற திரைப்படம் வெளிவந்து விட்டது. அதன்பிறகு இந்தி திரையுலகுக்கு சென்ற வஹீதா தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ‘சிஐடி’, ‘பியாஸா’, ‘காகஜ் கீ பூல்’, ‘சாஹிப் பீவி ஒளர் குலாம்’, ‘கைடு’, ‘நீல் கமல்’, ‘காமோஷி’, ‘ரேஷ்மா ஒளர் ஷேரா’ ‘கபி கபி’ மற்றும் ‘திரிசூல்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ‘ரேஷ்மா ஒளர் ஷேரா’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பத்மஸ்ரீ (1972), பத்மபூஷண் (2011) விருதுகளை வென்றிருக்கும் இவருக்கு இந்தாண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்திருக்கிறார்.


நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

கிரிக்கெட் வீரருடன் திருமணமா?

தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்தவர் மீண்டும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்து விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவர் சல்மான் கானை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற விவரமோ, மற்ற தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. ஏற்கனவே கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக வெளியான செய்திகளை பூஜா ஹெக்டே மறுத்திருந்த நிலையில், இந்த தகவல் உண்மைதானா என்பதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


கிரிக்கெட் வீரருடன் கிசு கிசுக்கப்படும் நடிகை பூஜா ஹெக்டே

இளைய மகளுடன் பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

தமிழ்த் திரையுலகின் முன்னனி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு விஜய் ஆண்டனி ‘என் மகளோடு நானும் இறந்துவிட்டேன்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு அறிக்கை வெளியிட்ட நிகழ்வு பலரது மனதையும் கலங்கடித்தது. இந்தநிலையில், இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரத்தம் ’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. மகளின் மறைவில் இருந்து மீண்டு வர முடியாத நிலையிலும் தயாரிப்பாளரின் நலன் கருதி ப்ரோமோஷன் நிகழ்வுக்கு வந்திருந்த விஜய் ஆண்டனிக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். ‘ரத்தம்’ திரைப்படத்திற்காக நடந்தப் பிரஸ் மீட்டில் தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். அதுகுறித்து வெளியான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


'ரத்தம்' திரைப்படம் மற்றும் இளைய மகளுடன் தோன்றும் விஜய் ஆண்டனி

அக்டோபர் 4ல் தொடங்குகிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ எனத் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தில் அஜித்துடன் நடிகை திரிஷா, சஞ்சய்தத், பிக் பாஸ் ஆரவ், உட்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது விடமுயற்சி திரைப்பட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் தொடங்கவுள்ள இந்த முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் நடக்க உள்ள நிலையில், அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் ஹீமா குரேஷி கலந்து கொள்கின்றனர்.


நடிகர் அஜித்குமார் மற்றும் 'விடா முயற்சி' போஸ்டர்

வடிவேலுவின் ‘சந்திரமுகி 2’ படத்திற்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில், தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரானாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக தமிழ்த் திரையுலகின் முன்னனி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் நடிகர் வைகைப்புயல் வடிவேலு ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது.


‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு

‘இறைவன்’ திரைபடத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்த படம் இறைவன். தமிழ் சினிமாவில் ‘வாமணன்’, ‘மனிதன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அஹ்மத் என்பவர்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் போஸ், நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளிவருவதற்கு முன்பே டிரெய்லர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சைக்கோ திரில்லர் படமாக வெளிவந்துள்ள ‘இறைவன்’ படம் தற்போது பலவிதமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படம் வெளிவந்த முதல் நாளில் மட்டும் ரூ. 2.50 கோடியில் இருந்து 3 கோடி வரை மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.


'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி

‘அரண்மனை 4’ முதல் பார்வை வெளியீடு!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் முதன் முறையாக வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வெளியிட்டனர். இப்படங்களில் சந்தானம், சூரி, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், அரண்மனை 4-ஆம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'அரண்மனை 4' திரைப்படம், 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வௌியிட்டுள்ளது. படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.


‘அரண்மனை 4’ திரைப்பட போஸ்டர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி

Updated On 9 Oct 2023 6:57 PM GMT
ராணி

ராணி

Next Story