இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நடிகர் ஜெயம் ரவி, சிறுவயதில் இருந்து சொந்த வீட்டில் இருந்த தான் தற்போது வாடகை வீட்டில் வசிப்பதாக, 3 BHK பட நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவரிடமா காசு இல்லை? எத்தனை கோடிக்கு வாடகைக்கு இருக்கிறார்? என இணையவாசிகள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவ்வாறு திரிஷா - விஜய் சர்ச்சை, மணிரத்னம் மன்னிப்பு, பாஜகவில் இணையும் மீனா என இந்த வாரம் சினிமா வட்டாரத்தில் நடந்த சுவாரஸ்ய தகவல்களை சினி பிட்ஸ் பகுதியில் காணலாம்.


இயக்குநர் மணிரத்னம் - தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு

மன்னிப்பு கோரிய மணிரத்னம்... காரணம் என்ன?

கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம்- கமல் கூட்டணியில் ‘தக் லைஃப்’ திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்ததால் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. கமல், அபிராமி, சிம்பு, திரிஷா என பெரும் நடிகர் பட்டாளமே இதில் நடித்திருந்தது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடியிருந்த ‘முத்தமழை’ பாடல் இணையத்தை ஆக்கிரமித்தது. இதனிடையே கன்னட மொழி சர்ச்சையில் சிக்கினார் கமல்ஹாசன். இதனால் கர்நாடகவை தவிர்த்து இந்தியா முழுவதும் ஜூன்.5ஆம் தேதி தக் லைஃப் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் ஆன்லைன் விமர்சனங்களால் இன்னும் அடிவாங்கியது. ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை.

இதனால் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு பேசி வருகிறது. இந்நிலையில் படம் தொடர்பாக ரசிகர்களிடம் இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கோரியுள்ளார். தக் லைஃப் குறித்து பேசிய அவர், “நானும், கமல்ஹாசனும் இணைந்து மற்றொரு ‘நாயகனை’ கொடுப்போம் என எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். நாயகனுக்குத் திரும்புவது எங்கள் நோக்கம் அல்ல. முற்றிலும் வித்தியாசமான ஒன்றை வழங்கவே நினைத்தோம். ஆனால், நாங்கள் வழங்கியதைவிட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதனால், ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட தக் லைஃப் படம் வேறொன்றாகவே இருந்திருக்கிறது” என தெரிவித்தார்.


நடிகர் கமல்ஹாசன் - ஆயுஷ்மன் குரானா

ஆஸ்கர் குழுவில் கமலுக்கு அழைப்பு...

நடிப்பு, தயாரிப்பு, பாடல் பாடுவது, எழுதுவது என சினிமாவின் அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யக்கூடியவர் கமல்ஹாசன். சினிமாவைத் தொடர்ந்து அரசியலில் கால்பதித்து தற்போது எம்பியாக உள்ளார். அரசியலுக்கு வந்தபோது, சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகிய கமல்ஹாசன், லோகேஷின் விக்ரம் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். இடையே பிரபல தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கினார். விக்ரம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்தார். ஆனால் இந்தியன் -2 படம் கடும் விமர்சனத்தையும், ட்ரோல்களையும் சந்தித்தது.

அதனைத்தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைஃப், இந்தியன் -2 போலவே சொதப்பியது. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் ஐ.ஏ.என்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்தியாவில் இருந்து கமல்ஹாசன், இந்தி நடிகர் ஆயுஷ்மன் குரானா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கமலுக்கு கிடைத்த கௌரவம் என திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திரிஷா வீட்டில் நடிகர் விஜய்

தீயாய் பரவிய புகைப்படம்... பதிலடி கொடுத்த த்ரிஷா!

தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 51வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதர்வா, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதில் ிதரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷின் வாழ்த்துக்கள் பெரும் கவனம் பெற்றன. மேலும் பல தவறான கருத்துகளும் பகிரப்பட்டன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். அதில்,“நீங்கள் அன்பால் நிறைந்திருக்கும்போது, ​​அது அசிங்கமான எண்ணங்கள் கொண்டவர்களை குழப்பிவிடும்” என பதிவிட்டிருந்தார்.

அண்மைக்காலமாகவே விஜய், திரிஷா குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. சில கட்சிக் கூட்டங்களில் கூட விஜய் மற்றும் திரிஷாவை சேர்த்துவைத்து பேசிய மோசமான சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் திரிஷாவின் இந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவு கவனம் ஈர்த்தது. அதற்கு தகுந்த பதிலடியும் திரிஷா வழங்கியுள்ளார்.


நடிகர் டி.ஆர். ராஜேந்தருக்கு மகளின் திருமண அழைப்பிதழை அளித்த கிங்காங்

மகளின் திருமணத்திற்கு பிரபலங்களை அழைத்த கிங்காங்...

அதிசய பிறவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான காமெடி நடிகர் கிங்காங் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விவேக், வடிவேலுடன் இணைந்து நடித்து கவனம் ஈர்த்த இவர், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் ஷங்கர் ஏழுமலை. கிங்காங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதால் அதே பெயரில் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார். சினிமா மட்டுமின்றி தனியாக தொழிலும் நடத்தி வருகிறார். சினிமாவில் நல்ல பீக்கில் இருந்தபோது போலு கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார் கிங்காங்.

ஜூலை 10ஆம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் உள்ள எம்பிகே மஹாலில் திருமணம் நடைபெறுகிறது. மகளின் திருமணத்தையொட்டி திரை பிரபலங்கள் பலரையும் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகிறார் நடிகர் கிங்காங். அந்த வரிசையில் நடிகர் சங்கத்தலைவர் விஷால், துணைத்தலைவர் கார்த்தி, டி.ஆர்.ராஜேந்தர் உள்ளிட்டோருக்கு பத்திரிக்கை வழங்கினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் நடிகை மீனா சந்திப்பு

பாஜகவில் இணையும் மீனா... க்ரீன் சிக்னல் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருப்பார். இச்சூழலில் கடந்த 2022ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் பிரச்னை காரணமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து மீனா தனது மகளுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடிகை மீனா துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து மீனாவிற்கு பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நிறைய பேர் இதுபோல கட்சியில் சேர்வதற்கு வருகிறார்கள். வந்தால் நாங்கள் வரவேற்போம். எல்லோரையும் வரவேற்போம் என கூறியுள்ளார். இதனிடையே அரசியல் பாதுகாப்புக்காகதான் மீனா பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. கணவர் இறந்ததிலிருந்து மீனா தனது சொத்துக்களை பார்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மேலும் தொழிபதிபர்களால் பொருளாதார அழுத்தமும் மீனாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஒரு சமூகத்தில் பெண் தனியாக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பதாலும் மீனாவிற்கு அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது என கூறப்படுகிறது.


நடிகர் ஜெயம் ரவி

வாடகை வீட்டில் வசிக்கும் ஜெயம் ரவி!

நீண்ட நாள் தோழியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் ஜெயம் ரவி, 18 ஆண்டுகளுக்கு பின் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். நல்லா இருந்த குடும்பத்தில் திடீரென என்ன ஆனது? என இந்த அறிவிப்பு ஜெயம் ரவி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். ஆனால் தனது விருப்பம் இல்லாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆர்த்தி அறிவித்தார். மேலும் தன்னை யாரும் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார். ஜெயம் ரவியை அடிமைப்போல நடத்தியது, அவரது பணத்தை எல்லாம் தானே கையாண்டது போன்ற காரணங்களால்தான் ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரிந்தார் என செய்திகள் வெளியாகின.

இதற்கு பதிலளித்த ஆர்த்தி, பிடிக்காத வாழ்க்கையில் ஏன் இத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். இப்படி சென்று கொண்டிருக்கையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி வந்தார். இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தது, கெனிஷாவின் கையை ரவி பிடித்து சென்றது போன்றவையெல்லாம் பெரும் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து ஆர்த்தி உடனான விவாகரத்து முடிவுக்கு கெனிஷாதான் காரணம் என இணையவாசிகள் பலரும் அவரை வருத்தெடுக்க தொடங்கினர். ஆனால் அதற்கெல்லாம் அசையாத கெனிஷா, அனைவரின் கேள்விகளுக்கும் பதிலடி கொடுத்தார். இதனிடையே தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில் சிறுவயதில் இருந்து சொந்த வீட்டில் இருந்த தான் தற்போது வாடகை வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 3 BHK பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இப்போது வாடகை வீட்டில் இருப்பதால், அதன் வலி எனக்கு தெரியும். அதனால் இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது" எனக் கூறினார். இதனைக்கேட்ட பலரும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவரிடமா பணம் இல்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மகள் இனியாவுடன் தேவயானி - மகள் ஜோவிகாவுடன் வனிதா

என்னையும், என் மகளையும் தேவயானி, தேவயானி மகளுடன் கம்பேர் செய்வதா?

தமிழ் திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வனிதா, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர், நடன இயக்குநர் ராபர்ட் உடன் நடித்துள்ள திரைப்படம்தான் மிஸ் & மிஸ்டர். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகாதான் தயாரித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னையும், தனது மகளையும் தேவயானி மற்றும் அவரது மகள் இனியாவுடன் ஒப்பிட வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "ஒருவரை ஒருவருடன் கம்பேர் செய்வது, என்னையும் தேவயானியையும் கம்பேர் செய்வது; என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்து என்னுடைய மகளையும், தேவயானி மகளையும் கம்பேர் பண்ணி பேசுவது; முதலில் ஜோவிகாவையே என்னுடன் கம்பேர் பண்ணாதீர்கள்” என தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா இருந்தபோதே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை, படித்திருந்தால் ஒழுங்காக நடந்து கொண்டிருப்பார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொன்னம்பலம்

மீண்டும் மருத்துவமனையில் பொன்னம்பலம்!

1990, மற்றும் 2000 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை வில்லன்களாக ஆட்டிப் படைத்தோர் ஆனந்தராஜ், பொன்னம்பலம் போன்றோர். அவர்களை பார்த்தாலே பயமாக இருக்கும். தனது மிரட்டலான நடிப்பில் ரசிகர்களையே ஆட்டிப்படைத்த பொன்னம்பலம்தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், கடந்த 2020ம் ஆண்டு சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். அப்போது நடிகர்கள் பலரும் அவருக்கு பண உதவி செய்தனர். இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, புறநோயாளிகள் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பேசி உருக்கமான ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு உதவி செய்த சரத்குமார், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி போன்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக வேண்டிக்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்றும் கூறியுள்ளார். உடல் சீராக இன்னும் இரண்டரை மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

Updated On 1 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story