இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஹீரோவாகும் விஜய் சேதுபதியின் மகன்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து அங்கும் தனக்கான முத்திரையை பதித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் ‘பீனிக்ஸ்'(வீழான்) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்குகிறார். இதன் மூலம் அவரும் தமிழ் திரையுலகில் முதன் முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் சூர்யா சேதுபதிக்கு ஜோடியாக 'அயலி' என்ற வெப் தொடரில் நடித்து கவனம் பெற்றிருந்த அபி நக்‌ஷத்ரா நடிக்க, இவர்களோடு காக்கா முட்டை விக்னேஷ், வர்ஷா, பூவையார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த 24ஆம் தேதி அன்று தொடங்கியது. இதையொட்டி படத்தின் இயக்குநரான அனல் அரசு மற்றும் சூர்யா இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.


‘பீனிக்ஸ்' படத்தின் போஸ்டர் மற்றும் சூர்யா சேதுபதியுடன் அனல் அரசு

அப்போது பேசிய படத்தின் இயக்குநரும், சண்டை பயிற்சியாளருமான அனல் அரசு, “இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. விஜய் சேதுபதி மலேசியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தும் வீடியோகாலில் வந்து அவரது மகனுக்கும், எங்களுக்கும் வாழ்த்து சொன்னார்” என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சூர்யா சேதுபதி “ஒருநாள் அப்பாவின் படப்பிடிப்பு ஒன்றிற்கு அவருக்கு உணவு எடுத்துச் சென்றிருந்தேன். அப்போது அனல் அரசு மாஸ்டரின் சண்டை பயிற்சி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனக்கு சண்டை காட்சி என்றால் பிடிக்கும் என்பதால் நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அனல் அரசு மாஸ்டரின் கண்ணில் பட்டுவிட்டேன். அதன் பிறகுதான் அவரது கதைக்கு நான் சரியாக இருப்பேன் என்று என்னை ஓகே செய்தார். இந்த படத்தின் போஸ்டரில் எனது பெயர் வெறும் சூர்யா என்றுதான் இடம்பெற்றுள்ளது. நான் வேறு, அப்பா வேறு. அவரின் அடையாளத்தை வைக்க வேண்டாம் என்றுதான் சூர்யா விஜய் சேதுபதி என போடாமல் வெறும் சூர்யா என்று போட்டுள்ளனர்” என தெரிவித்தார். சூர்யா ஏற்கனவே தனது தந்தையுடன் இணைந்து ‘நானும் ரவுடிதான்’, ‘ஜூங்கா’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளை தங்கத்தால் அலங்கரித்த நடிகை ராதா


நடிகை ராதா மகள் கார்த்திகாவின் திருமண புகைப்படம்

தமிழ் திரையுலகில் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ராதா. இவர் 1980 மற்றும் 90களில் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் 200 படங்களுக்கும் மேல் நடித்து புகழ் கொடி நாட்டியது மட்டுமின்றி அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். நீண்ட காலம் சினிமாவில் பயணித்த இவர் திடீரென திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆனார். இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சமீபத்தில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோஹித் மேனன் எனபவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு 80-களில் நடிகை ராதாவுடன் இணைந்து பணியாற்றிய தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் அவர்கள் கலந்துகொண்ட திருமண புகைப்படத்தை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கேரள முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவை கிலோ கணக்கிலான தங்கத்தால் அலங்கரித்து மன மேடையில் நிற்க செய்திருந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கச் செய்தது. இதனை தொடர்ந்து, புகுந்த வீட்டிற்கு சென்ற மகளை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த நடிகை ராதா, மகளுக்கு 500 பவுன் நகையும், ஒரு நட்சத்திர ஹோட்டலையும் சீர்வரிசையாக கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் பிரமிக்க வைத்துள்ளார்.

தன் கதையை வீரப்பனே விவரிக்கும் புதிய வெப் தொடர்


சந்தன கடத்தல் வீரப்பன்

சந்தன மரக்கடத்தல், யானைகளின் தந்தம் விற்பனை என தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் குடைச்சல் கொடுத்து காட்டுப் பகுதிக்குள் தனி ராஜாங்கமே நடத்தி வந்த வீரப்பன் பற்றிய பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் இதுவரை பலராலும் எடுக்கப்பட்டு வெளியாகி உள்ளன. அதற்கு உதாரணமாக விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தினையும், 'சந்தனக்காடு' என்ற தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றையும் சொல்லலாம். அதன் பிறகு பல குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவந்திருந்தாலும், கடைசியாக 'தி ஹண்டிங் வீரப்பன்' என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு நீண்ட காலம் வீரப்பன் பற்றி எந்த ஒரு தொடரோ, ஆவணப்படமோ வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது தீரன் புரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற புதிய வெப் தொடர் ஒன்று தயாராகி உள்ளது. ஷரத் ஜோஷி இயக்கி உள்ள இந்த தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி அன்று தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் zee5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வீரப்பனின் கதையை வீரப்பனே கூறினால் எப்படியிருக்குமோ, அந்த கோணத்தில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதால், இத்தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடர் குறித்து zee5 யூ-டியூபில் கடந்த 23ஆம் தேதி வெளியான டிரெய்லர் வீடியோவை நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் நேரடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளதோடு, கடத்தலில் வீரப்பனுடன் இருந்தவர்கள், அதிகாரிகள், நக்கீரன் கோபால், சீமான், நடிகை ரோகினி ஆகியோர் வீரப்பன் பற்றி அவரவர் கருத்தினையும் பேசி உள்ளனர். இறுதியாக பேசும் வீரப்பன் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை நானே சொல்றேன். இது என்னுடைய தப்பா.. இல்ல அரசாங்கத்துடைய தப்பா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கூறும் ஒரிஜினல் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை வீரப்பன் பற்றி எத்தனையோ தொடர்கள் வெளிவந்திருந்தாலும், இந்த தொடர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


'குட் நைட்' நாயகி மீதா ரகுநாத்துக்கு திருமணம்


நாயகி மீதா ரகுநாத் நிச்சயதார்த்த புகைப்படம்

கடந்த 2022 ஆம் ஆண்டு ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நாயகி மீதா ரகுநாத். இப்படத்திற்காக 3 ஆயிரம் நடிகைகள் ஆடிஷனில் கலந்துகொண்ட நிலையில், இவர் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு குறட்டையால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளிவந்த ‘குட்நைட்’ படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானது மட்டுமின்றி மேக்கப் போடாமல் தனது இயல்பான நடிப்பால் பலரின் மனங்களையும் கவர்ந்து பாராட்டுப் பெற்றார். இந்த நிலையில், மீதா ரகுநாத்துக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு, அண்மையில் அவரது சொந்த ஊரான ஊட்டியில், நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பாரம்பரிய புடவையில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் கணவர் குறித்த முழு விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் மீரா ரகுநாத்துக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் அதே வேளையில், அவர் நடிப்பதை நிறுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் எடுக்கும் புது அவதாரம்


இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகும் நயன்தாரா புகைப்படம்

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா அண்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘மாயா’, ‘அறம்’, ‘கனெக்ட்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீசுக்காக காத்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நடிப்போடு சேர்த்து தனது சொந்த பிசினஸிலும் ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தோடு சேர்த்து , "புதிய தொடக்கத்தின் மேஜிக்கை நம்புங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய சூர்யா... ரசிகர்கள் செய்த வேலை..?


நடிகர் சூர்யாவிற்காக கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கங்குவா’. முதல் முறையாக சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி அன்று ‘கங்குவா’ படத்தின் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கியதோடு, மாற்று திறனாளி குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கியுள்ளனர். இதனை அறிந்த சூர்யா கடந்த 23 ஆம் தேதி அன்று “நலமுடன் இருக்கிறேன்”... விரைவில் குணமடைய வேண்டி எனது அன்பான ரசிகர்கள் அனைவரும் எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களின் இந்த அன்பிற்கு எப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Updated On 6 Dec 2023 7:36 AM GMT
ராணி

ராணி

Next Story