சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் பெயரிடப்படாத ‘விஷால் 34’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷாலின் மாறுபட்ட நடிப்பில், இவன் துப்பறிவாளன் என்று படத்தில் ஒரே ஒரு பாடலை கொண்டு 2017, செப்டம்பர் 14 வெளியான திரைப்படம் தான் ‘துப்பறிவாளன்’. ஆக்‌ஷன் த்ரில்லரான இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்யராஜ், சிம்ரன் போன்ற பிரபல நடிகர்களும் நடித்து படத்தை சிறப்பாகியுள்ளனர். ‘துப்பறிவாளன்’ முதல் பாகத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்த நிலையில், சில பல காரணங்களால் இயக்குநர் மிஷ்கின் இந்த திரைப்படத்தை இயக்க போவதில்லை என்று கூறி விலகிக்கொண்டார். இவர் விலகிய நிலையில் நடிகர் விஷாலே இந்தத் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போது வரை இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.


3 இயக்குநர்களுடன் நடிகர் விஷால்

இந்த நிலையில் நடிகர் விஷால் பெயரிடப்படாத தனது அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘விஷால் 34’ விஷாலை ஹீரோவாக வைத்து ஹரி இயக்கும் மூன்றாவது திரைப்படமாகும். பிரியா பவானி சங்கர் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கிய நிலையில், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படத்தை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து “ஒரே புகைப்படத்தில் மூன்று பன்முகத் திறமையான இயக்குநர்களுடன் நிற்பது அரிதானது மற்றும் எப்போதும் வைத்திருக்க வேண்டிய ஒன்று” என்றும் ட்வீட் செய்துள்ளார். சமுத்திரக்கனி அரசியல்வாதி கதாபாத்திரத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் தொழிலதிபர் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக அந்த புகைப்படம்மூலம் தெரிகிறது. இன்னும் யார் யார் இந்த படத்தில் இணைய போகிறார்கள் போன்ற பல அப்டேட்டுகளை காத்திருந்து பார்ப்போம்.

Updated On 17 Oct 2023 11:42 AM GMT
ராணி

ராணி

Next Story