இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

( 15-1-1984 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

நான் காத்திருந்த பலன் வீணாகவில்லை, என் நம்பிக்கை என்னை ஏமாற்றவில்லை. இடைவிடாது படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு, அறையிலே சும்மா முடங்கிக் கிடப்பது என்றால், அது எவ்வளவு பெரிய தண்டனை! அந்தத் தண்டனையை நானாகத் தேடிக்கொண்டதும் இல்லை. ரசிகர்கள் அளித்ததும் இல்லை. எனக்கு ஒரு இடைவேளை. அப்படி நினைத்துக் கொண்டுதான் நான் சும்மா இருந்தேன். அந்த இடைவேளை சுமார் நான்கு, ஐந்து மாதங்கள் நீடித்தன. அப்போதும் நான் பொறுமையை இழக்கவில்லை. என்மேல் எனக்கு முழு நம்பிக்கை இருந்ததால், அமைதியாக இருந்தேன்.

காலம் வரும்

ஒரு காலம் வரும். அப்போது மீண்டும் ஒரு ஏற்றம் கிடைக்கும் என்று அமைதி பூண்டு இருந்தேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. அமைதிக்கு பின் தோன்றும் சூறாவளி போல் என் நிலைமை ஆகிவிட்டது. நான் மீண்டும் பிசியாகி விட்டேன். முன்பெல்லாம் சினிமாவில், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒருவரோ, இருவரோதான் "ஓகோ" என்று இருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்துக்குப் பிறகுதான் அடுத்தவர் வர முடிந்தது.

ஆனால், இப்பொழுது அப்படி அல்ல. ஒரே நேரத்தில் பலர் தோன்ற முடிகிறது; நிலைத்து நிற்கவும் முடிகிறது. அந்த அளவு சினிமா உலகம் விரிந்து பரந்து கிடக்கிறது!


இருவேறு தோற்றங்களில் நடிகர் விஜயகாந்த்

தனித்தன்மை

ஆனாலும், பத்தோடு பதினொன்றாக நான் இருக்க விரும்பவில்லை. எனக்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. அதன் அடித்தளத்திலேயே நான் நிலைபெற விரும்புகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இடத்தைப் பிடிக்கவோ, அல்லது நிரப்பவோ இனிமேல் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும் என்பது பரவலாகப் பேசப்படுகிறது. இது உண்மையிலும் உண்மை. அந்த அளவு, அவர் நடிப்பில் இமயமாக, யாரும் அசைக்க முடியாதபடி நிலைத்து நின்றார்; இப்பொழுதும் நின்று கொண்டு இருக்கிறார். அது அவருடைய தனித்தன்மை.

சினிமா உலகத்தில் அப்படி ஒரு தனித்தன்மையை அடைய வேண்டும் என்பதே எனது ஆசை!'

இந்தத் தனித்தன்மை படத்தின் எண்ணிக்கையைப் பொருத்து அமைவது இல்லை. காரணம், ஒரு மாதத்தில் பன்னிரெண்டு படங்களுக்கு பூஜைப்போட்டவர்கள் இப்போது இல்லை. ஒரு டஜன் படங்களுக்கு ஒப்பந்தம் ஆனவர்களும் கிடையாது. எனவே, எத்தனைப் படங்களில் நடிக்கிறோம் என்று இல்லாமல், எப்படி நடிக்கிறோம் என்பதில் முழுக் கவனம் செலுத்தப் போகிறேன்.


மிடுக்கான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் நடிகர் விஜயகாந்த்

அது போலவே ஒரு நடிகருக்கு பேரும் புகழும் சேர்ப்பது, அவர் நடிக்கும் படத்தின் எண்ணிக்கையும் அல்ல; அவர் வாங்கும் பணமும் அல்ல. நடிப்பில் அவருடைய பாணி, சிறந்த செயல்கள், நல்ல குணம் இவைதான் நடிகனை உயர்த்துவதும் தாழ்த்துவதும்! எம்.ஜி.ஆரின் பெருமைக்கும் புகழுக்கும், அவர் ஆட்சியைப் பிடித்ததற்கும் அவைதானே காரணம். இவற்றை நான் நன்றாகப் புரிந்துகொண்டு இருக்கிறேன்!

பொது வாழ்வு

ஏதோ வந்தோம்; நடித்தோம்; பணம் வாங்கினோம்; சென்றோம் என்று இல்லாமல், நடிகர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுதலும் அவசியம். தான் சார்ந்து இருக்கும் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்து செயல்படுவதும் முக்கியம்! நடிகர்கள் தனிப்பிறவி அல்லவே! அவர்களும் மக்களிடம் இருந்து வருபவர்கள் தானே!

என்னைப் பொருத்தமட்டில் நான் வெறும் நடிகனாக வாழ விரும்பவில்லை. மக்களில் ஒருவனாகவே நிலைத்து நிற்க விரும்புகிறேன். இதற்கு ரசிகர்களின் ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்லவற்றை வரவேற்பதில் தமிழ் ரசிகர்களுக்கு நிகர் யார் இருக்கிறார்கள்?

Updated On 18 March 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story