இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர் விஜய் அரசியலில் இறங்கிவிட்டார்.. சூர்யா கிரிக்கெட் அணியை வாங்குகிறார்.. இளையராஜாவாகவே மாறிவிட்டார் தனுஷ்! லோகேஷ் கனகராஜ் இப்படி ரொமான்ஸ் செய்கிறாரே! இந்த 2024-இல் இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதோ என்று புலம்பி வருகின்றனர் இணையவாசிகள். இந்த மீம்தான் இப்போது ட்ரெண்டும்கூட. அப்படி என்னதான் நடக்கிறது நமது திரையுலகில் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வாரம் ட்ரெண்டான சில சினிமா செய்திகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

சமந்தா - தமன்னா மீட்-அப்!

நடிகை சமந்தாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பல்வேறு பிரச்சினைகளை தாண்டி மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்தவிருப்பதாக தெரிவித்துள்ள சமந்தா, நடிகை தமன்னாவை பின்னாலிருந்து கட்டிப் பிடித்திருக்கும் போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்தித்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோக்களில் இருவரும் நன்றாக சிரித்தபடி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமன்னாவின் காதலனும் நடிகருமான விஜய் வர்மா இந்த போட்டோக்களை எடுத்திருக்கிறார்.


ட்ரெண்டான சமந்தா - தமன்னா மீட்-அப் புகைப்படங்கள்

திரைப்படங்களிலிருந்து சற்று ப்ரேக் எடுத்திருந்த சமந்தா, வெளிநாட்டு பயணம், ஆன்மிக சுற்றலா என உலாவந்தாலும், ‘சிட்டாடல்’ என்ற இந்தி வெப் சீரீஸிலும் நடித்துவந்தார். அந்த சீரிஸின் அறிமுகவிழா மும்பையில் நடைபெற்றபோதுதான் தனது தோழியான தமன்னாவையும் சந்தித்திருந்தார். தனது இன்ஸ்டா போஸ்ட்டில், “நீண்ட நாட்களாக காத்திருந்த ஓர் சந்திப்பு அன்பு தமன்னாவுடன்...” என்று குறிப்பிட்டிருந்தார் சமந்தா.

ட்ரோல்களை வாங்கிக்கட்டும் லோகி!

‘லியோ’ பட வெற்றிக்குப் பிறகு தலைவர் 171 படத்தில் பிஸியாக இருப்பதாகவும், அதனாலேயே சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ‘இனிமேல் Delulu is The New Solulu' என்று குறிப்பிட்டு ராஜ்கமல் நிறுவனம் ஒரு போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அந்த போஸ்டரில் லோகேஷும், ஸ்ருதி ஹாசனும் எதிரெதிரே நின்ற புகைப்படமும் இடம்பெற்றிருந்ததால் ஸ்ருதி ஹாசனை வைத்து அடுத்த படம் இயக்குகிறாரா? அல்லது அவருடைய மியூசிக் ஆல்பத்தில் இணைகிறாரா? லோகேஷ் என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைத்து வந்தனர்.


லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதி ஹாசனின் ஆல்பம் பாடலின் டீஸர் காட்சிகள்

இந்நிலையில் அந்த போஸ்டர், ஆல்பம் பாடலுக்கானதுதான் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஆல்பம் பாடல் நேற்று (25.03.2024) மாலை 4.30 மணிக்கு வெளியானது. இது ஒருபுறம் இருக்கட்டும், ஆல்பம் பாடலை லோகேஷ் இயக்கியுள்ளாரா என்றால் அதுதான் இல்லை. அந்த பாடலில் ஸ்ருதியுடன் சேர்ந்து ரொமாண்ட்டிக்காக நடித்திருக்கிறார் லோகேஷ். வெறும் கத்தி, ரத்தம், துப்பாக்கி, போதைப்பொருள் என வரிசையாக படங்களில் காட்டிவந்த லோகேஷுக்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் இருக்கிறதா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காரணம், பாடலின் காட்சிகள் அப்படி! லோகேஷ், தலைவர் 171-இல் வேலைபார்ப்பார் என்றால் ஸ்ருதியுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருக்கிறார் என கலாய்த்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

நடிகை அஞ்சலிக்கு திருமணம்? - அதுவும் இவருடனா?

‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்ற அஞ்சலி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார். தமிழிலும் இவர் நடிப்பில் வெளியான ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘மங்காத்தா’, ‘கலகலப்பு’ போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான அஞ்சலி, திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இதனிடையே ‘சிங்கம் 2’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை. உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டான தோற்றத்துடன் இருந்த அவரை அனைவரும் கலாய்த்த நிலையில் உடல் எடையை குறைத்து ஓரளவு ஃபிட்டாகிவிட்டார். தற்போது திரைப்படங்களில் தன்னை பிஸியாக்கி வருகிறார் அஞ்சலி.


நடிகை அஞ்சலி நடித்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்பட போஸ்டர்

சமீபத்தில் ‘ஃபால்’ என்ற தெலுங்கு வெப் சீரிஸில் தோன்றிய இவர், அடுத்து தெலுங்கில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராம் இயக்கத்தில் இவர் அறிமுகமானதால் இந்த படம் மீண்டும் அவருக்கு கைக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அஞ்சலி. நடிகர் ஜெய்யுடன் இணைத்து பேசப்பட்டதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அஞ்சலி, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் கூறப்படுகிறது. திரைப்பட விழா ஒன்றில் இருவரும் சந்தித்தபோது பழக்கம் ஏற்பட்டு அதுவே பின்னாளில் காதலாக மாறியதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அஞ்சலியே விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ‘கான்’களும் ஒரே படத்தில்?

பாலிவுட் என்றாலே மூன்று ‘கான்’களின் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு அதிகமாக இருக்குமோ அதே அளவிற்கு அவர்கள் குறித்த வதந்திகளும் அதிகமாக இருக்கும். யார் அவர்கள் என்று கேட்பவர்களுக்கு, ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் என்பதுதான் பதில். இவர்களில் ஒருவர் மாறி ஒருவருக்கிடையே சண்டை ஏற்பட்டதாகவும், மனஸ்தாபம் இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு. அதேபோல் கான்களின் படங்களை ஒப்பிட்டு பார்ப்பதையும் ரசிகர்கள் தவறவிடுவதில்லை. ஆனால் இந்த மூவருமே எப்போது மேடையேறினாலும் ஒன்றாக பேசி சிரிப்பது, கலாய்ப்பது என செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.


அமீர்கானின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மூன்று ‘கான்’களின் நடனம்

இந்நிலையில் சமீபத்தில் அமீர் கான் தனது 59வது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், ‘ஷாருக் கான், சல்மான் கானுடன் சேர்ந்து நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்ப, “மூவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுகுறித்து நாங்கள் மூவரும் ஏற்கனவே பேசியும் இருக்கிறோம். நல்ல கதை கிடைத்தால் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார். சமீபத்தில் அம்பானி வீட்டு விழாவில் மூன்று கான்களும் மேடையில் ஒன்றாக சேர்ந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய நிலையில் தற்போது இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஒரு க்ளூ என்றுதான் தோன்றுகிறது. ஏற்கனவே சல்மான் கான் இந்த இருவருடனும் வெவ்வேறு படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் அமீர் - ஷாருக்கின் கூட்டணி என்பது இதுவரை அமையவில்லை. எனவே விரைவில் மூன்று பேரையும் ஒரே திரையில் எதிர்பார்க்கலாம்.

8 மாதங்களுக்கு பின் ஜப்பானில்...

கடந்த ஆண்டு வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான இப்படம் இரண்டாம் உலகப்போரின்போது முதல் அணு ஆயுதங்களை உருவாக்க உதவிய இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். நடிகர்கள் சிலியன் மர்பி, எமிலி ப்ளண்ட், மாட் டாமன், ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக் உள்ளிட்ட பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தனர். உலகளவில் ஏராளமான திரையரங்குகளில் ரிலீஸான இப்படம் சுமார் 960 மில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்திருந்தது. சமீபத்தில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த இப்படம் பல நாடுகளில் வெளியிடப்பட்ட போதிலும் ஜப்பானில் வெளியிடப்படவில்லை.


ஜப்பானில் வெளியாகவுள்ள ஓப்பென்ஹெய்மர் திரைப்படத்தின் போஸ்டர்

அதற்கு காரணம், அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்டதே ஜப்பான்மீதுதான். இது ஜப்பான் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பதால் அங்கு வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. ஜப்பானிய மொழியில் தலைப்பிடப்பட்ட இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரில் ஹீரோவுக்கு பின்னால் ஒரு டவர் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ஒரிஜினல் போஸ்டரில் அணுகுண்டு இருப்பதைப் போன்று இருக்கும். ஜப்பான் மக்களின் உணர்வுகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வருகிற 29ஆம் தேதி முதல் ஜப்பான் திரையரங்குகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரையிடப்படுகிறது.

Updated On 1 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story