இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ என்ற படம் ஏன் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியது? யார் இந்த ஓபென்ஹெய்மர்? ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்புக்கு இவருக்கும் என்ன சம்மந்தம்? இதுகுறித்த ஓர் விரிவான தொகுப்பை பார்க்கலாம்.

ஓபென்ஹெய்மர் திரைப்படம் கடந்த 21ஆம் தேதியன்று உலக திரையரங்குகளில் வெளியானது. சில்லியன் மர்பி, எமிலி ப்ளண்ட், மேட் டாமன், புளோரன்ஸ் புஹ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் உலகளவில் இன்டெர்ஸ்டெல்லர், டெனட், இன்செப்ஷன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. நோலனுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஓபென்ஹெய்மர் இவருடைய 12வது படம் என்றாலும் யுனிவர்சல் பிக்ஸருடன் கைகோர்க்கும் முதல் படம். அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளரான ஜெ.ராபர்ட் ஓபென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படம் இது என்பதால் வெளியாவதற்கு முன்பே அறிவியல் ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியிருந்தது என்றே சொல்லலாம்.


ராபர்ட் ஜெ. ஓபென்ஹெய்மர்

யார் இந்த ஓபென்ஹெய்மர்?

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனையின் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் இந்த ஓபென்ஹெய்ம்ர். இவர் 22 ஏப்ரல் 1904ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். இவரின் தந்தை ஆடை இறக்குமதி செய்பவர். தாய் ஓவியக் கலைஞர். இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலியாக இருந்துள்ளார். இவர் 1925 ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் தாமதமாக சேர்ந்ததால் பலதரப்பட்ட படிப்புகளை படிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதுவே இவருக்கு மனச்சோர்வை உண்டாக்கியது. ஒரு கட்டத்தில் இவர் தனது ஆசிரியரை கொலைசெய்யக்கூட யோசித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இவர் வேதியலிலிருந்து இயற்பியலுக்கு மாறிவிட்டார். மேற்படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். 1927 ஆம் ஆண்டு தனது 23வது வயதில் பி.எச்டி படிப்பை ஜெர்மனியிலுள்ள கோட்டிகென் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். இவருக்கு மனசோர்வு அதிகம் இருந்த காரணத்தால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். இருந்தபோதிலும் இவர் தனது 36 வது வயதில் முழுநேர பேராசிரியராக பணியாற்றினார். இவரின் அறிவு திறன் எப்படிப்பட்டது என்றால் நெதர்லாந்திற்கு சொற்பொழிவாற்ற செல்வதற்காக வெறும் எட்டு நாட்களில் ஒரு புதிய மொழியை கற்றுக்கொண்டாராம். இதுவே இவரின் அறிவுத்திறனுக்கு சிறந்த உதாரணமாகக் கூறப்படுகிறது. இவருக்கு குவாண்டம் கோட்பாடு மேல் அதீத ஆர்வம் இருந்ததனால் அறிவியல் நிபுணர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு கீழ் பணிபுரிந்துள்ளார். இவருக்கு பகவத் கீதை மேலும் பெரும் நாட்டம் இருந்தது. 1940ஆம் ஆண்டு நவம்பரில் கேத்ரின் பியூனிங் ஹாரிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஓபென்ஹெய்மர்.


ஹிரோஷிமா - நாகசாகியில் அணுகுண்டு வெடிப்பு

ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு வெடிப்புக்கும் ஓபன்ஹெய்மருக்கும் என்ன சம்பந்தம்?

ஓபென்ஹெய்மருக்கு முதல் குழந்தை பிறந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது. அப்போது அமெரிக்கா தனது முழு சக்தியை காட்டுவதற்காக அணுகுண்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்தது. அதற்காக யாருக்கும் தெரியாமல், மன்ஹாட்டன் என்ற திட்டத்தை லெஸ்லி க்ரூவ்ஸ் தலைமையில் தொடங்கியது. இந்த திட்டத்தில் பங்கேற்ற புத்திசாலிகள் அனைவரையும் வழிநடத்தும் ஆளுமைகொண்டவராக ஓபென்ஹெய்மர் விளங்கினார். இந்நிலையில் ராணுவ பயணத்திற்காக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற விதியை அமெரிக்கா அமல்படுத்தியது.

ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு லாஸ் அலமோஸில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு ஓபென்ஹெய்மர் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்காக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு ரகசியமாக வழிநடத்தப்பட்டு வந்தது. 4 ஆண்டுகளுக்கு மேல் இந்த அணு ஆயுத திட்டம் நடந்து கொண்டிருந்தது. இவர் மும்முரமாக அணு ஆயுத திட்டத்தை நடத்திக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில் ஓபென்ஹெய்மருக்கு 1944ல் இரண்டாவது குழந்தை பிறந்தது. அடுத்த ஒரு வருடத்தில் ஓபென்ஹெய்மர் தலைமையில் நடந்த திட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. அதாவது முதல் அணுகுண்டு வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இந்த முதல் அணு ஆயுத சோதனை 16 ஜூலை 1945 அன்று அலமகோர்டோவில் நடந்தது. அந்த சோதனைக்கு `டிரினிட்டி சோதனை’ (Trinity Test) என்று பெயரிட்டார் ஓபென்ஹெய்மர். சோதனைக்குச் சென்ற அணுகுண்டை `கேட்ஜெட்’ என்று குறிப்பிட்டார்.


அணுகுண்டு சோதனை

அணுகுண்டின் தந்தை

கேட்ஜெட் அணுகுண்டை ஒரு டவரின் மேல் ஏற்றி வெடிக்கச் செய்தனர். அது வெடித்து சூரியனைவிட மிக அதிகமான வெளிச்சத்தை உமிழ்ந்தது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களையும் உலகமே மறக்காது. அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்த நாட்கள் அவை. ஏனெனில் அந்த இரண்டு நாட்களில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மேல் அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. அதன் விளைவு 2,26000 பேரின் உயிரை காவு வாங்கியது. பலரின் வாழ்வாதாரம் அழிந்து போனது. அந்த கதிர்வீச்சினால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டன. பிறக்கும் குழந்தைகள் கூட குறைபாடுகளுடன் பிறந்தது. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக ஜப்பான் இன்றுவரை பாடுபட்டு வருகிறது.

செப்டம்பர் 2, 1945 இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்தது. ஜப்பான், நாஜி வீழ்ந்தது. அமெரிக்காவிற்கு வெற்றி கிடைத்தது. அணு ஆயுதத்தை பயன்படுத்தி வெற்றிபெற்றதால் ஓபென்ஹெய்மருக்கு `அணுகுண்டின் தந்தை’ (Father of Atomic Bomb) என்ற பட்டத்தை அமெரிக்கா சூட்டியது.


அணுகுண்டு ஆராய்ச்சி மையம் - லாஸ் அலமோஸ்

ஹெய்மர் மீது விழுந்த பழி

ஆனால் ஜப்பான் பேரழிவிற்கு நானும் ஒரு கருவியாக இருந்துவிட்டேன் என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளானார் ஓபென்ஹெய்மர். அவரின் நிலையை உணர்த்தும்விதமாக பகவத் கீதையில் வரும் வரியினை "I am become death, the destroyer of worlds" என்று ஆங்கிலத்தில் கூறினார். மிகவும் குற்றவுணர்ச்சிக்கு ஆளான அவர், அக்டோபர் 1945 தனது வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பினை தொடங்கினது அமெரிக்கா. ஏற்கனவே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருந்த ஓபென்ஹெய்மர் அதை எதிர்த்தார்.

பொதுவாக கம்யூனிச சித்தாத்தங்களை எதிர்க்கும் நாடு அமெரிக்கா. ஹெய்மர் இதனை எதிர்த்த காரணத்தினால் கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்த்திருக்கிறார்; சோவியத் யூனியன் சொல்வதை கேட்டு இங்கு வேலை செய்கிறார் என்று ராணுவ பாதுகாப்பினரால் அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பின்னர் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டார். 1963ல் அமெரிக்கா அரசால் `என்ரிகோ ஃபெர்மி’ பட்டம் அளிக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தனது 62 வயதில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் ஓபென்ஹெய்மர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக பார்க்கப்பட்ட மனிதருக்கு நேர்ந்த அவல நிலை இது.


ஓபென்ஹெய்மர் பயன்படுத்திய பகவத் கீதை வரிகள்

ஓபென்ஹெய்மர் திரைப்படம்

ஓபென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவான இந்த திரைப்பட அறிவிப்புக்கு பிறகுதான் ஓபென்ஹெய்ம்ர் என்பவர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டது. அதிலும் கிறிஸ்டோபர் நோலன் இந்த கதையை கையில் எடுத்தவுடன் எதிர்பார்ப்பை அடக்கமுடியவில்லை. உலக திரையரங்குகளில் வெளியான இந்த படம் IMAX என்ற கேமிராவை கொண்டு எடுக்கப்பட்டது. கோட்டாக் நிறுவனம் இதற்கென்றே பிரத்யேகமாக கருப்பு - வெள்ளை ஃபிலிமை உருவாக்கியது. IMAX-லேயே கருப்பு - வெள்ளை படமாக உருவான முதல்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஓபென்ஹெய்மர்.

இந்த படத்தில் முடிந்தவரை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து, அணுகுண்டு வெடித்த இடங்களில் மட்டுமே VFX காட்சிகளை பதிவுசெய்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் எடுக்கும் முதல் சுயசரிதை படம் இது. இந்த படம் உலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Updated On 8 Aug 2023 4:34 AM GMT
ராணி

ராணி

Next Story