இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமா குறித்த கிசுகிசுக்களும் செய்திகளும் யாருக்குத்தான் போரடிக்கும்? சொல்லுங்க! தமிழ் சினிமா முதல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை ட்ரெண்டுல இருக்க சில செய்திகளை சற்று விரிவா பார்க்கலாம் வாங்க!

அஜித்துக்கு என்ன ஆச்சு?

அசர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பானது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதனிடையே முதற்கட்ட படபிடிப்பு முடிந்து சற்று ஓய்வு கிடைத்திருப்பதால் சென்னை வந்திருந்தார் நடிகர் அஜித். திடீரென அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அஜித் ஒரு நடிகர் என்பது மட்டுமில்லாமல் சிறந்த பைக் ரைடரும்கூட. ஏற்கனவே பலமுறை அடிபட்டு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தனது விடாமுயற்சியால் அவை அனைத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கிறார் அஜித்.

தற்போது தனது 62வது படமான ‘விடாமுயற்சி’க்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஏதேனும் அடிபட்டிருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அது வழக்கமான உடல் பரிசோதனைதான் என்றும், வேறு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறின.


நடிகர் அஜித் - ‘விடாமுயற்சி’ திரைப்பட போஸ்டர்

ஆனால் அவருடைய மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலம் பெற்று அஜித் வீடு திரும்பியுள்ளார் என அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.

I’m lost - அதிர்ச்சியளித்த நயன்தாரா ஸ்டோரி

தென்னிந்திய பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். சமூக ஊடகங்களே வேண்டாமென இருந்த நயன்தாரா, தனது இரண்டு குழந்தைகளுடனும் ஸ்டைலாக போஸ்ட் போட்டு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். அதிலிருந்து மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது ‘ஃபெமி9’ மற்றும் ‘9skin' ப்ராடக்ட்ஸ் புரொமோஷன்ஸ் குறித்தும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கூடவே தனது குடும்பம் குறித்த அப்டேட்ஸையும் கொடுக்க தவறுவதில்லை. மேலும் விக்கி - நயனின் புரொடக்‌ஷன் நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ கீழும் இருவரும் படங்களை தயாரித்து வந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான நயனின் 75வது திரைப்படமான ‘அன்னபூரணி’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஆர்வம்காட்டி வருகிறார்.


தனது குழந்தையுடன் நடிகை நயன்தாரா மற்றும் சர்ச்சையை கிளப்பிய அவருடைய இன்ஸ்டா ஸ்டோரி

பெரும்பாலும் தனது கணவருடன் இன்ஸ்டாவில் collab போஸ்ட்டுகளையே பதிவிட்டு வந்த நிலையில், திடீரென தனது கணவரை இன்ஸ்டாகிராமில் நயன்தாரா அன்ஃபாலோ செய்துவிட்டார் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது உண்மை இல்லை என்பதை உணர்த்தும்விதமாக இருவரும் மாறி மாறி ஃபாலோ செய்துவருகின்றனர். இருப்பினும் தனது குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட நயன்தாரா, அடுத்து ‘umm... I’m lost!' என ஒரு ஸ்டோரியையும் போட்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே மீண்டும் புயலை கிளப்பியது. எதை அவர் இழந்துவிட்டதாக குறிப்பிடுகிறார்? நயன் விக்கியை பிரிவது உறுதியாகிவிட்டதா? என்பது போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் எழுப்பி வந்தனர். நடிகர் நடிகைகளிடையே விவாகரத்து குறித்த வதந்திகள் அவ்வப்போது வருவது சகஜம்தான் என்றாலும், நயனின் ஸ்டோரி எதைப் பற்றியதாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கணவன் - மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளுடன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

குறிப்பாக, மகளிர் தினத்துக்கு, தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்க, அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நயன். இப்படி இருவரும் மாறி மாறி இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

சஞ்சய் இயக்கத்தில் துருவ்

நடிகர் விஜய் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், அவரது கடைசி படத்தின் இயக்குநர் யார்? என்ற கேள்வி எந்த அளவிற்கு எழுகிறதோ? அதே அளவிற்கு அவருடைய மகனான ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார்? என்ற கேள்வியும் உலா வருகிறது. பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாகத்தான் வருவார்கள். ஆனால் ரஜினியின் மகள்களுக்கு அடுத்து, விஜய்யின் மகனும் தனக்கு டைரக்‌ஷனில்தான் ஆர்வம் இருப்பதாகக்கூறி தமிழ் சினிமாவில் இயக்குநராக உருவெடுக்கிறார். இவருடைய முதல் படத்தையே லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாக பகிரப்பட்டன.


தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் ஜேசன் சஞ்சய் - நடிகர் துருவ் விக்ரம்

விரைவில் இப்படத்திற்கான படபிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அவரையடுத்து விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சஞ்சய் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே அவ்வப்போது அப்பாவுடன் சேர்ந்து ஆடி மாஸ் காட்டிய சஞ்சய், அவரைப்போலவே ஹீரோவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை போன்று இயக்குநராகவுள்ளார். உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்களுக்கே தயாரிப்பாளர்கள் கிடைப்பது மிகவும் கடினம் என்ற சூழலில் லைகா புரடக்‌ஷன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனம் தனது முதல் படத்தை தயாரிப்பது சஞ்சயின் லக் என்றே பேசப்படுகிறது.


வருங்கால கணவர் மேத்யாஸ் போவுடன் நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸிக்கு திருமணம்

தமிழை விட்டு இந்தி பக்கம் சென்ற நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ரகுல் ப்ரீத் சிங் திருமணம் சமீபத்தில் நடந்துமுடிந்த நிலையில், தமன்னாதான் அடுத்து திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வரிசையில் முந்திவிட்டார் டாப்ஸி. ‘ஆடுகளம்’ படத்தின்மூலம் தமிழில் நடிகையான இவர், தொடர்ந்து ‘காஞ்சனா -2’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களால் தமிழ் திரையுலகில் தனது பெயரை நிலைநிறுத்திக்கொண்டார். தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்திவந்த இவர், டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மேத்யாஸ் போ என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், இவர்களது திருமணம் மார்ச் மாத இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் வைத்து நடக்கவிருக்கிறது. நடிகர், நடிகைகள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் இரு மதத்தின்படியும் திருமணம் செய்வது சமீபகாலமாக ட்ரெண்டில் இருக்கிறது. அதுபோல், இவர்களது திருமணமும் சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


குழந்தை ஓரியுடன் நடிகை கால் கடோட்

4-வது குழந்தைக்கு தாயான வொண்டர் வுமன்!

ஹாலிவுட் படங்கள் என்றாலே, குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கென்றே ரசிகர்கள் இருப்பர். அப்படி, தனக்கென உலகளவில் ரசிகர்களை சம்பாதித்த கதாபாத்திரங்களில் ஒன்றுதான் டிசி காமிக்ஸால் உருவாக்கப்பட்ட ‘வொண்டர் வுமன்’. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘பேட்மேன் vs சூப்பர்மேன்’, ‘வொண்டர் வுமன்’, ‘வொண்டர் வுமன் 1984’ மற்றும் ‘ஜஸ்டிஸ் லீக்’ போன்ற படங்களில் வொண்டர் வுமனாக நடித்தவர் கால் கடோட். 38 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நான்காவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கடோட், தனது குழந்தைக்கு ‘ஓரி’ என பெயர்சூட்டி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஓரி என்றால் எபிரெய மொழியில் ‘என்னுடைய ஒளி’ என்று அர்த்தம். “எங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டுவந்த உனக்கு, ‘ஓரி’ என பெயரிட்டுள்ளோம். எங்கள் இதயம் நன்றியால் நிறைந்திருக்கிறது. பெண்கள் நிறைந்த நம்முடைய வீட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கடோட்டினின் இந்த பதிவிற்கு நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் வின் டீசல் போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர். கடோட் தற்போது ‘ஸ்னோ ஒயிட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

Updated On 18 March 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story