இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பண்டிகைகள் என்றாலே எப்போதும் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதிலும் தீபாவளி என்றால் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சிதான். காரணம் ஒருபுறம் புத்தாடைகளும், வாண வேடிக்கைகளுமாக ஒரே திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் எந்த ஹீரோவின் படங்கள் வெளிவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டு ஒவ்வொரு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இது இன்று நேற்று அல்ல எம்ஜிஆர் - சிவாஜி காலம் தொடங்கி ரஜினி - கமல், விஜய் - அஜித் என தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் இன்றோ இந்த நிலை சற்று மாறி பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் விருப்பப்பட்ட தேதியில் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த நாளே திருவிழா போல் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தும் நம் பழைய நினைவுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத படி இன்றும் பண்டிகை நாட்களில் புது படங்கள் ரிலீஸ் ஆவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’, ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, உள்ளிட்ட 4 திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது… எந்தெந்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போன்ற தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்…

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு, காவேமிக் யு . ஆரி ஒளிப்பதிவு செய்திருந்தார். மதுரையை கதைக் களமாக வைத்து தனது பாணியில் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதையை கூறியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் போன்ற நடிகர் நடிகைகளை முன்னிறுத்தி 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற படத்தினை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 1973 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெறும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அள்ளியஸ் சீசர் என்ற கதாபாத்திரப் பெயரில் படத்தின் நாயகனாக வரும் ராகவா லாரன்ஸ் மதுரையில் ஜிகர்தண்டா என்ற ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் குரூப்பை வழிநடத்தி வருகிறார். இதுதவிர சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட ராகவா லாரன்ஸ்க்கு தமிழ் சினிமாவின் முதல் கருப்பு கதாநாயகனாக தான் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கிறது.


‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் வெவ்வேறு காட்சிகளில் தோன்றும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

இதற்கு நடுவில் கார்மேகம் என்ற கதாபாத்திரத்தில் வரும் இளவரசு, காவல்துறையில் இருக்கும் தனது தம்பியின் உதவியுடன் தான் முதலமைச்சராக வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். மிகப்பெரிய ரவுடியாக வலம் வரும் ராகவா லாரன்ஸை பிடிக்க காவல்துறை தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு உதவும் வகையில் கிருபை ஆரோக்கியராஜ் என்ற கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா ஒரு சினிமா இயக்குனர் வேடத்தில் சென்று பிடிக்க முயற்சிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் படம் எடுப்பதுதான் முக்கிய கதை களமாக இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் தனித்துவம்பெறுகிறது. காடு, மலை சார்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, இறுதியில் ஒரு நல்ல கருத்து என கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல், சமூக அக்கறையுள்ள படமாகவும் வெளிவந்து பாராட்டை குவித்து வருகிறது.


ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

குறிப்பாக, இப்படத்தில் ராகவா லாரன்ஸ் தனது சிறப்பான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி பலரையும் கலங்க செய்திருக்கிறார். மேலும் லாரன்ஸின் தோற்றம், நடை, உடை, உடல் மொழி, நடனம் ஆகியவை மட்டுமின்றி சண்டை காட்சிகளிலும் அசர வைத்துள்ளார். அதேபோன்று இன்னொரு நாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் எப்போதும் வெளிப்படுத்தும் மிகை நடிப்பை இதில் காட்டாமல் மிகவும் எதார்த்தமாக போட்டிபோட்டுக் கொண்டு நடித்துள்ளதோடு, தொடை நடிங்கியாகவும், படம் எடுக்கும் இயக்குநராவும் வந்து அனைவரையும் கவனிக்க வைத்துள்ளார். இவற்றையெல்லாம் தாண்டி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராகவா லாரன்ஸும், எஸ்.ஜே.சூர்யாவும் இணையும் காட்சியில், இவருமே நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படங்களிலேயே ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம்தான் திரையில் சரவெடியாய் வெடித்து ரசிகர்களின் பாராட்டை பெரும் படமாக இருந்து வருகிறது.

கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் ‘ஜப்பான்’

நடிகர் கார்த்தி முதல் முறையாக ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகனுடன் இணைந்து ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார். இதுவரை எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தி படம் எடுத்து வந்த ராஜு முருகன் முதன்முறையாக கமர்ஷியலாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்துள்ள இப்படம் திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் போதே கோவையில் ஒரு பிரபலமான நகைக்கடையில் ரூ.200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போவதாக காட்டப்படுகின்றது.திருட்டுப்போன அந்த நகை கடை உள்துறை அமைச்சராக வரும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சொந்தமானது என்பதால் பதறிப்போய் திருடியது யார் என்பதை கண்டறிய காவல்துறையை முடுக்கி விடுகின்றனர்.


‘ஜப்பான்’ திரைப்படத்தில் வாகை சந்திரசேகர் மற்றும் கார்த்தி

அப்போது பல ஆண்டுகளாக யாராலுமே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் ஜப்பான் மீது அதாவது கார்த்தி மீது காவல்துறைக்கு சந்தேகம் வருகிறது. காவல்துறை தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமல், தான் கொள்ளையடித்த பணத்தில் படம் தயாரிப்பது, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது என இருக்கும் ஜப்பானான கார்த்தி இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்தியின் நடிப்பை பொறுத்தவரை, இதுவரை எந்த படத்திலும் காட்டாத ஸ்டைலையும், டயலாக் டெலிவரியையும் வித்தியாசமான முறையில் முயற்சி செய்திருந்தாலும் அவை பெரியளவில் ரசிக்கும் படியாக இல்லை. குறிப்பாக படத்தில் அவர் பேசிய வசனங்கள் பல இடங்களில் புரிந்துக் கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியது. மேலும் படத்தில் சில இடங்களில் கற்பனைக்கும் எட்ட முடியாத சில காட்சியமைப்புகள் இடம் பெற்று இது ராஜு முருகனின் படம் தானா என்ற சந்தேகத்திற்கும் இடமாக்கியுள்ளது. பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் தங்களது 25வது, 50வது மற்றும் 100வது படங்களை தேர்வு செய்யும் போது மிக கவனமாக இருப்பார்கள். ஆனால் இந்த படத்தைப் பார்க்கும் போது கார்த்தி அந்த விஷயத்தில் தனது 25வது படத்தை தேர்வு செய்ததில் சில தடுமாற்றங்கள் தெரிகிறது. இருப்பினும் படத்தில் தற்போதைய அரசியல் மற்றும் உலக அரசியல் குறித்த சில வசனங்கள் இடம் பெற்று கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், கார்த்தி ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.


ஜப்பானாக நடிகர் கார்த்தி

அதிரவைத்த விக்ரம் பிரபு - கரைய வைத்த காளி வெங்கட்

இந்த தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படங்கள் தவிர விக்ரம் பிரபு நடிப்பில் 'ரெய்டு', காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கிடா' படங்களும் வெளிவந்து பலரின் கவனம் பெற்றுள்ளது. இதில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்துள்ள 'ரெய்டு' படத்தை புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் முத்தையாவின் தங்கை மகன் ஆவார். இதனாலேயே இப்படத்திற்கு இயக்குனர் முத்தையாவே வசனங்கள் எழுதி படத்திற்கு பக்கபலமாகவும் இருந்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த படத்தின் ரீமேக் ஆன இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும் அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை என்று பார்த்தால் போலீசுக்கும், ரவுடி கும்பலுக்கும் இடையே நடக்கும் வழக்கமான முட்டல் மோதல் தான். இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு மிடுக்கான தோற்றத்தில் நம்மை கவர்ந்தாலும், படத்தின் கதையை நான் லீனியர் முறையில் சொல்ல முயன்ற விதம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிகப்படியான பஞ்ச் வசனங்களும், தேவையற்ற இடங்களில் எமோஷனல் காட்சிகளும் இடம் பெற்று படத்தின் வேகத்தை மேலும் குறைத்துள்ளது. இருப்பினும் படத்தின் சண்டை காட்சிகள் மிகச்சிறப்பாகவே அமைக்கப்பட்டிருந்ததால் ஆக்சன் பிரியர்களுக்கு இப்படம் ஆறுதல் அளித்துள்ளது.


'ரெய்டு' படத்தில் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ஸ்ரீ திவ்யா

இந்த தீபாவளிக்கு இத்தனை படங்கள் வெளிவந்திருந்தாலும், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வாழும் மனிதர்களின் தீபாவளிக் கொண்டாட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்வு பூர்வமாக பதிவு செய்துள்ள படம் தான் 'கிடா'. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று, ஏராளமான விருதுகள் வென்ற படமான இதில் காளி வெங்கட், பூ ராமு, மாஸ்டர் தீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீப ஒளி திருநாளுக்கு ஏற்றார் போல் தீபாவளியையே படத்தின் கருப்பொருளாக வைத்து, கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கையை இயல்புடன் படம் பிடித்துக் காட்டி இயக்குனர் ரா வெங்கட் மிகுந்த கவனம் பெற்றுள்ளார். படத்தின் கதை என்று பார்த்தால், ஏழை விவசாயியான பூ ராம், தனது அரவணைப்பில் வளரும் தன் பேரனுக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க முடியாததால், கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட தனது பேரன் அன்பாக வளர்க்கும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால், அதை வாங்கினால் சாமி குற்றம் ஆகிவிடும் என பலர் வாங்க மறுக்கின்றனர். இன்னொரு புறமோ, கறிக்கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட் தனது முதலாளி மகனுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறி, தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை திறக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், பணம் இல்லாததால் காளி வெங்கட் ஆடு வாங்க முடியாமல் திணறுகிறார். ஒரு கட்டத்தில் இவ்விரு மனிதர்களும் சந்தித்து ஒரு முடிவுக்கு வரும்போது ஆடு திருடப்பட்டு விடுகிறது.


'கிடா' திரைப்பட போஸ்டர்

இந்நிலையில், பொழுது விடிந்தால் தீபாவளி என்ற சூழலில் திருடிய ஆட்டை பூ ராம் மற்றும் காளி வெங்கட் தரப்பினர் கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் கதை. படத்தில் கிராமத்து மனிதர்களுக்குள் இருக்கும் ஈரத்தையும், வெப்பத்தையும் மிக எதார்த்தமாக காட்டியுள்ள இயக்குனர், சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக எதையும் திணிக்காமல், முழு படத்தையும் இயல்பாகவும், பாசிட்டிவ்வாகவும் வழங்கியிருந்த விதம் பாராட்டும்படியாக இருந்தது. குறிப்பாக காளி வெங்கட், பூ ராமு, தீபன், பாண்டியம்மா, விஜயா உட்பட சின்ன சின்ன கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்து கவனம் பெறுகின்றனர். ஆர்ப்பாட்டமான, பிரம்மாண்டமான படங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ள இப்படம் விமர்சனத்தில் கடைசியாக சொல்லப்பட்டாலும், கலை விரும்பிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்ற வரிசையில் முதல் இடம் பெறுகிறது.

Updated On 20 Nov 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story