இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் சினிமாவில் எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் திரையரங்க உரிமையாளர்கள் பழைய படங்களை மீண்டும் திரையிட ஆரம்பித்துள்ளனர். மக்களும் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருகின்றனர். ரீ ரிலீஸ் படங்களில் 'வாரணம் ஆயிரம்', '3' மற்றும் 'மின்னலே' போன்ற படங்கள் அதிக வசூலை பெற்றுள்ளன. பல பேர் இது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல என்று கூறி வருகின்றனர். இரண்டு மாதங்களில் ஐம்பதிற்கும் அதிகமான படங்கள் வந்துள்ளன. பெரிதும் எதிர்பார்த்த பல தமிழ் படங்கள் தியேட்டரில் சரியாக போகவில்லை. பெரிய ஹீரோக்களின் படங்களும் வந்துள்ளன. ஆனால் எந்த படமும் மக்களை கவரவில்லை. எந்தெந்த படங்கள் மக்களை ஈர்க்க தவறியது? வெற்றி பாதைக்கு திரும்புமா தமிழ் சினிமா என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம் .

பொங்கலில் வந்து மக்களை ஏமாற்றிய படங்கள்

அயலான்


'அயலான்' திரைப்படத்தில் ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் தோன்றும் காட்சிகள்

விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல்லிலிருந்து சிதறிய ஒரு பொருள் (ஸ்பார்க்) கார்ப்பரேட் வில்லனிடம் (ஷரத் கெல்கர்) கிடைக்கிறது. அவர் அதை வைத்து பூமியின் மையப் பகுதியைத் தோண்டி எரிபொருளுக்கான வளங்களை எடுப்பதற்கான திட்டத்தைத் தொடங்குகிறார். வேற்று கிரகத்தில் வசிப்பவர்கள், இந்தத் திட்டத்தால் பூமி அழிந்துவிடும் என்பதை உணர்ந்து தங்களில் ஒருவனை பூமிக்கு அனுப்புகிறார்கள். பூமிக்கு வரும் அந்த வேற்று கிரகவாசி வில்லனுடனான மோதலில் ஸ்பார்க்கை அபகரித்துக்கொண்டு தன்னை அழைத்துவந்த விண்கலத்தைப் பறிகொடுக்கிறார். கிராமத்தில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றில் அக்கறைகொண்ட விவசாயியான தமிழ் (சிவகார்த்திகேயன்) பிழைப்புக்காக சென்னைக்கு வருகிறார். வேற்றுகிரகவாசி, தமிழுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்கிறார். அதற்கு டாட்டூ என்று பெயர் வைக்கிறார் தமிழ். இருவரும் சேர்ந்து விண்கலத்தை மீட்க முயல்கிறார்கள். வில்லன், டாட்டூவிடமிருந்து ஸ்பார்க்கை மீட்க முயல்கிறார். இந்தப் போட்டியில் வெல்வது யார்? இதனால் தமிழுக்கு என்ன ஆனது? பூமி காப்பாற்றப்பட்டதா? என்னும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக் கதை. குழந்தைகளை கவரும் நோக்கில் மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகின. வேற்றுகிரகவாசி, நாயகன், அவர் நண்பர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகள், வில்லனுடனான மோதல்கள், நாயகனுக்கும் வில்லனின் அடியாட்களுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதே நேரம் கதை, திரைக்கதை வலுவற்றதாகவும் இயற்கை விவசாயம் போன்ற ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட விஷயங்களை மீண்டும் பேசுவதாகவும் கருத்து எழுந்தது. நாயகன், வில்லன், வேற்றுகிரகவாசி ஆகியோருக்கு வலுவான பின்னணிகள் இல்லாததும் படத்துடன் ஒன்றுவதை தடுப்பதாக கூறப்படுகிறது. 2018-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் 5 வருடங்கள் கழித்து வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற தவறிவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

கேப்டன் மில்லர்


'கேப்டன் மில்லர்' படத்தில் வெவ்வேறு காட்சிகளில் வரும் நடிகர் தனுஷ்

காலனி ஆட்சி காலத்தில், தென் தமிழக கிராமம் ஒன்றில் வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க சாதியினர் - பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் ஆகியோரின் ஒடுக்குமுறையால் அடிமைகள்போல் வாழ்கின்றனர். இந்த அடக்குமுறையிலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க விரும்புகிறான் அனலீசன் (தனுஷ்). அதற்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும் அவன், பின் ‘கேப்டன் மில்லர்’ என்ற ஆயுதப் போராளியாக மாறுகிறான். அவன் எப்படிப்பட்டப் போராளியாக விளங்கினான், தனது மக்களை அவனால் மீட்க முடிந்ததா என்பதைச் சொல்கிறது கதை. படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் திரைக்கதை வலுவாக இல்லை என்கின்றன விமர்சனங்கள். அதேபோல் படம் முழுக்கவே சண்டை காட்சிகள் நிரம்பி வழிவது சற்று சலிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

சைரன்


'சைரன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்

ஆயுள் சிறைக் கைதியான திலகன் (ஜெயம் ரவி), 14 வருடங்களுக்குப் பிறகு தன் அப்பாவைப் பார்க்க பரோலில் வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியின் அரசியல் பிரமுகர்களான மாணிக்கமும் (அழகம் பெருமாள்), அவர் கட்சியைச் சேர்ந்த அஜய்யும் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைத் திலகன்தான் செய்திருப்பார் என்று நம்புகிறார் காவல்துறை ஆய்வாளர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்). திலகன் கொலைகாரனா? கொல்லப் பட்டவர்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? திலகன் சிறை சென்றது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிக் கதை. துப்பறியும் காட்சிகள் மட்டுமே திரைக்கதை மீதான ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன. கொலைப்பழியைச் சுமக்கும் தந்தையை வெறுத்து ஒதுக்கும் மகள், பாசத்தைப் பொழியும் அம்மா, அன்புகாட்டும் உடன்பிறப்புகள் என எமோஷனல் காட்சிகளுக்கான கட்டமைப்பு இருந்தாலும் காட்சிகள் மெதுவாக நகர்ந்து பழமையின் வாடை வீசுவது ஏமாற்றம் தருவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வசூலில் படுமோசமாக சொதப்பியதால் சைரன் திரைப்படம் திரைக்கு வந்த இரண்டே நாளில் தியேட்டரைவிட்டு தூக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூர் சலூன்


'சிங்கப்பூர் சலூன்' படத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக வரும் ஆர்.ஜே.பாலாஜி

தன் வீட்டின் அருகிலிருக்கும் சலூனில் முடிதிருத்தம் செய்யும் சாச்சாவின் (லால்) அபாரத் திறமையைப் பார்த்து சிறுவயதிலேயே பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் கதிர் (ஆர்.ஜே.பாலாஜி). 'முடிதிருத்துவது வெறும் தொழில் அல்ல கலை' என அதன்மீது தீராக்காதல் கொள்கிறான். வழக்கமான தடைகளைக் கடந்து ஹீரோ எப்படி வெல்கிறான் என்பதே 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ஒன்லைன். டைமிங் ஒன்லைனர்களில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்தப் படத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. அவற்றில் டிஸ்டிங்க்ஷன் பெறவில்லையென்றாலும் கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்திப்போகிறார். ஆனால் அவருடன் நம்மை முழுவதுமாக ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது மிகவும் சாதாரணமாக எழுதப்பட்டிருக்கும் அவரது கதாபாத்திர வரைவு. நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. எப்போது படம் சீரியஸ் மோடில் பயணிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்தே தொடர் சறுக்கல்தான். மழை, வெள்ளம், டிவி ரியாலிட்டி ஷோ, வாழும் இடத்தை விட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்படும் மக்களின் வாழ்க்கை, அழியும் பறவைகளின் வாழ்விடங்கள், சமூக வலைதளப் புரட்சி எனக் கருத்துச்சொல்லும் தமிழ்ப்படங்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் ஒவ்வொன்றாக டிக் அடித்துச் சேர்த்திருக்கிறார்கள். இவற்றுள் ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் சிரத்தையுடன் எடுத்து பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்றிருந்தால் கூட அது போதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, நாயகனுக்கு இருக்கும் பிரச்னைகளுக்கு நடுவில் இத்தனை பிரச்னைகளைப் படத்தில் பேச வேண்டிய கட்டாயம் என்ன என்பது புரியவில்லை. முதல் பாதியிலிருந்த கலகலப்பும் இதனால் காணாமல் போய்விடுகிறது. விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. டான்ஸ் ரியாலிட்டி ஷோ, அந்தப் பகுதி இளைஞர்களின் பிரச்சினை போன்றவற்றை மேம்போக்காக, கதையின் சுவாரஸ்யத்துக்கு மட்டும் பயன்படுத்த நினைத்திருப்பது ஏமாற்றமே!. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ரீ- ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்கள்

இப்படி பல படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தமிழில் வெளியாகி இருந்தாலும், பெரிய அளவில் ஹிட் அடிக்காததால் தமிழ் சினிமாவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பெரிய ஹீரோக்களின் எந்த படமும் பெரிதாக போகவில்லை. மணிகண்டனின் லவ்வர் திரைப்படமும், அசோக் செல்வனின் ப்ளூஸ்டார் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றன. அதனால் திரையரங்குகளில் பழைய தமிழ் திரைப்படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புது படங்களை விட பழைய படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல என்று பலரும் கூறுகின்றனர். அத்துடன் அழுத்தமான திரைக்கதையுடன் எந்த திரைப்படமும் வெளியாவது இல்லை என்பது ரசிகர்களின் பெரும் ஏக்கமாக உள்ளது. இந்த வருடத்தில் 2 மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள மாதங்களில் மேலும் பல பெரிய படங்கள் வெளியாக காத்துள்ளன. எனவே தமிழ் சினிமா வெற்றி பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 11 March 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story