
சினிமா உலகில் சில கலைஞர்கள் தங்கள் படைப்புகளால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விசு மிக முக்கியமானவர். குறிப்பாக 1980கள் மற்றும் 90களில், குடும்ப உறவுகளையும் அன்றாட வாழ்வின் யதார்த்தங்களையும் மையமாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஆரோக்கியமான பொழுதுபோக்குக்கு வித்திட்டவர். "குடும்பச் சித்திரம், குடும்பத்துடன் காண வேண்டிய திரைப்படம்" என்ற விளம்பரங்கள் அன்று சர்வ சாதாரணமாக இருந்தாலும், அதனைத் தன் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தைரியமாகப் பயன்படுத்தி, மக்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரவழைத்த பெருமை விசுவிற்கு உண்டு. ஒரு வீட்டில் எல்லா வயதினரும் ஒன்றாய் அமர்ந்து படம் பார்க்க வைப்பதையே தன் பாணியாக கொண்டு வெற்றி பெற்ற இயக்குநர்களில் ஒருவரான விசுவின் பிறந்தநாள் ஜூலை 1. அவரது பிறந்தநாளையொட்டி, தமிழ் திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும், குறிப்பாக 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் மூலம் அவர் கண்ட வெற்றியையும், அந்த படம் எப்படி உருவானது என்ற தகவலையும் விரிவாக இங்கே காணலாம்.
விசுவின் தனித்துவம்

குடும்ப படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த விசு
திரைப்படங்களில் கதாநாயகனை சுற்றியே கதை பின்னப்பட்ட காலகட்டத்தில், கதையை மட்டுமே முழுமையாக நம்பி களமிறங்கிய இயக்குநர்களில் விசு தனித்துவமானவர். அவரது படங்களில் கதையே கதாநாயகன் என்ற பாணியை மேற்கொண்டார். ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் நாடகக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய எம்.ஆர். விஸ்வநாதன் எனும் விசு, தனது எழுத்துத் திறமையால் தனித்துவமானதோர் அடையாளத்தைப் பெற்றார். அவரது கதைகளுக்கு உயிரூட்டியது அவரது வலுவான வசனங்களே. விசு தனது படங்களுக்கு நட்சத்திர நடிகர்களை நம்பியதில்லை. எஸ்.வி. சேகர், பிரதாப் போத்தன், திலீப், சந்திரசேகர், பாண்டியன், நிழல்கள் ரவி போன்ற நடிகர்களே அவரது படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களாக நடித்தனர். அதேபோல், அவரது கதைகளும் குறைந்த பட்ஜெட்டில் உருவானவை. ஆனால், அவற்றின் வசூல் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு இணையாக இருந்தது. கணவன்-மனைவி, தாய்-மகன், தந்தை-மகள், மாமியார்-மருமகள், அண்ணன்-தம்பி ஆகியோரிடையே நிகழும் அன்றாட குடும்பச் சிக்கல்களையே தனது படங்களின் மையக் கருவாக்கி, தனது மாயாஜால திரைக்கதையால் அந்த சிறிய பிரச்சனைகளையும் பெரிய வெற்றிகளாக்கினார் விசு. ஒரு கதையை எழுதுவது, அதற்கு வசனம் மட்டும் எழுதுவது, ஒரு கதையைச் செழுமைப்படுத்துவது என மூன்று துறைகளிலும் கலைஞானம், பஞ்சு அருணாச்சலம் போன்றோரை போலவே விசுவும் கைதேர்ந்தவர் என்பதால்தான் இது சாத்தியமானது எனலாம். இதனாலேயே ஏ. பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், பாக்யராஜ் போன்றோர் வரிசையில் மக்களின் மனங்களை புரிந்து படமெடுப்பதில் வல்லவராக புகழ் பெற்றார் விசு. இப்படிப் பல பெருமைகளை கொண்ட விசுவின் இயக்கத்தில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இன்றும் வைரமென ஜொலிக்கும் திரைப்படம் என்றால் அது ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம்தான்.
படம் உருவான கதை
விசுவின் திரைக்கதையில் உருவான 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக, ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஏவிஎம் சரவணன், விசுவுக்கு வழக்கமான சம்பளத்தை விட இருமடங்கு அதிகமாக கொடுக்க முன்வந்தார். ஆனால் விசு அந்த வாய்ப்பை மறுத்து, ஏவிஎம் பேனரில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கேட்டார். அச்சமயத்தில் விசு ஏற்கனவே எட்டு படங்களுக்கு ஒப்பந்தமாகியிருந்ததால், உங்களது தற்போதைய பட வேலைகளை முடித்த பிறகு தன்னை அணுகுமாறு சரவணன் கேட்டுக்கொண்டார். சில காலம் கழித்து, தனது மார்க்கெட் சற்றுக் குறைந்திருந்த நிலையில், விசு மீண்டும் சரவணனை சந்தித்து ஒரு முழு நீளப்படம் இயக்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சரவணன் கதை கேட்க, விசு மூன்று கதைகளைச் சொன்னார். ஆனால் அவை எதுவும் சரவணனுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த விசு, தனக்குப் படம் கொடுக்கும் எண்ணம் இல்லையென்றால் வெளிப்படையாகக் கூறிவிடும்படி கேட்டார். அதற்கு சரவணன், 'குடும்பம் ஒரு கதம்பம்' போன்ற ஒரு சிறந்த குடும்பப் பின்னணி கொண்ட கதையை எதிர்பார்த்ததாகவும், விசுவின் மற்ற கதைகள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் விளக்கினார்.

'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தின் முக்கியமான காட்சியில் மனோரம்மா மற்றும் கிஷ்மு
அப்போதுதான் விசு தனது நாடகமான 'உறவுக்கு கைகொடுப்போம்' கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த கதை சரவணனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும், அதே நாடகம் 1975-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்திருந்தது ஒரு தடையாக இருந்தது. ஆயினும், அதே கதையை படமாக்க முடிவு செய்த சரவணன், கதையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு விசுவைக் கேட்டுக்கொண்டார். மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையுடன் விசு திரும்பியபோது, சரவணன் மீண்டும் ஒருமுறை அந்தக் கதை ஏன் தோல்வியடைந்தது என்பதை ஆராய வேண்டும் என்றார். நடுத்தரக் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், நகைச்சுவை சரியான அளவில் இருந்தால் மட்டுமே அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்றும், விசுவின் நகைச்சுவை பாணி சாதாரண மக்களுக்கு புரியாமல் போகலாம் என்றும் தனது கருத்தை தெரிவித்தார். முதலில் சரவணனின் யோசனையை விசு ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக, விசு சரவணனின் ஆலோசனையை பின்னர் ஏற்றுக் கொண்டு, மனோரமா கதாபாத்திரத்தை கொண்டு கதையை மேலும் மெருகூட்டி, மிகச் சிறப்பான ஒரு முழுத் திரைக்கதையையும் உருவாக்கினார். இப்படியாக உருவானதுதான் 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம்.
ஏவிஎம் கண்ட மகத்தான வெற்றி
சொல்லப்போனால் 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் வெறும் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். ஆரம்பத்தில், இந்தப் படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை. அப்போது, ஏவிஎம் சரவணன் ஒரு நிபந்தனை விதித்தார்: "இந்தப் படத்தை வாங்கினால்தான் நான் தயாரிக்கும் ரஜினி அல்லது கமல் படங்களை உங்களுக்குக் கொடுப்பேன், இல்லையென்றால் கொடுக்க மாட்டேன்" என்று. இதனால் வேறு வழியின்றி விநியோகஸ்தர்கள் படத்தைக் வாங்கினர். ஆனால், படம் வெளியான பிறகு அவர்களுக்கு 10 மடங்கு லாபம் கிடைத்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற காரணம், இயக்குநர் விசுவும் அவரது சகோதரர் கிஷ்முவும் அர்ப்பணிப்புடன் உழைத்ததுதான். படபூஜை போடப்பட்டதிலிருந்து சென்சாருக்கு செல்லும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல், முழு உழைப்பையும் இந்தப் படத்திற்காகவே அர்ப்பணித்தனர் அவ்விருவரும். குறிப்பாக, படத்தில் சிதம்பரம், சிவா, பாரதி, சரோஜினி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களை மக்கள் மனதில் பதிய வைத்து, காவிரி, யமுனா, சரஸ்வதி எனப் பெயரிட்டு, கோதாவரி என்ற பெயரையும் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்திய பெருமை விசுவையே சேரும்.

தங்கப் பதக்கம் மற்றும் தேசிய விருது வென்ற 'சம்சாரம் அது மின்சாரம்'
பொதுவாக, படம் தொடங்கி கால் மணி நேரத்தில் அதன் கதை எதை நோக்கிச் செல்லும் என்று ரசிகர்களுக்கு புரிந்துவிடும். ஆனால், 'சம்சாரம் அது மின்சாரம்' இதில் விதிவிலக்காக அமைந்தது. விசுவின் காட்சிகள், காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வசனங்கள் மற்றும் அவரது ஆக்கிரமிப்பு நடிப்பு ஆகியவை சேர்ந்து ரசிகர்களை வேறு எதையும் யோசிக்க விடாமல் படத்துடன் ஒன்ற செய்த விதம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமான முறையில் அமைந்து, படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், "சரியான கிளைமாக்ஸ்" என்று கொண்டாடியது அன்று பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. காரணம் படம் கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் நேரத்தில் எல்லாம், பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸ், கிளைமாக்ஸ் இதற்கு மாறாக இருந்தும் அதிர்ச்சியடையவில்லை என்பதுதான். அதுவும் "இது சரியான முடிவுதான்" என்று கூறியவாறே கண்ணீரை துடைத்துக் கொண்டே ரசிகர்கள் வெளியே வந்தது, விசுவின் திரைக்கதை திறமைக்கு கிடைத்த மகுடம் என்றே சொல்லலாம். இதனாலேயே 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி கண்டது. அதேபோல் இது 1986-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதையும், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் பிரபலமான படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. மேலும், தங்கப் பதக்கம் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ஏவிஎம்மின் 'சம்சாரம் அது மின்சாரம்' பெற்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
மறக்க முடியாத தருணங்கள்
1986-ஆம் ஆண்டு வெளியான விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் வெற்றி விழாவிற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என இயக்குநர் விசுவும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனும் விரும்பினர். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த தயக்கங்கள் இருந்தபோதிலும், அவர் விழாவில் கலந்துகொள்ள சம்மதித்தார். படத்தில் பங்கேற்ற 184 கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரும் எம்.ஜி.ஆர். கையால் விருது பெற விரும்பினர். இந்த ஷீல்டுகள் கனமாக இருந்ததால், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்படுமோ என ஏவிஎம் நிறுவனம் யோசித்தது. எனினும், எம்.ஜி.ஆர். தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல், "நானே தருகிறேன்" என்று கூறி, 184 கலைஞர்களுக்கும் தன் கையால் ஷீல்டுகளை வழங்கினார். அவரது இந்தச் செயல் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியது.

'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்பட வெற்றி விழாவிற்கு வருகை தந்த எம்.ஜி.ஆர்
அதேபோல், இத்திரைப்படம் தேசிய விருது பெற்றதால் மகிழ்ச்சியடைந்த ஏவிஎம் சரவணன், விசுவிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்க, "டெல்லியில் நான் தேசிய விருது வாங்குவதை என் குடும்பத்தினர் பார்க்க வேண்டும்" என்று விசு கூறினார். உடனடியாக சரவணன், விசு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தார். ஆனால், சரவணன் எக்கனாமி கிளாஸில் அமர்ந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன விசு அவரிடம் சென்று கேட்க, உங்களது உழைப்பை கௌரவிக்கும் விதமாக "நீங்கள் பிசினஸ் கிளாஸில் இருக்கும் போது உங்கள் முதலாளி நான் இங்கு இருந்தால் தான் உங்களை உங்கள் குடும்பத்தினர் உயர்வாக நினைப்பார்கள். இதுதான் நான் உங்களுக்குக் கொடுக்கும் கௌரவம்" என்று கூறி விசுவை நெகிழ வைத்தார். இந்தச் சம்பவத்தை விசு வாழ்நாள் முழுவதும் பல இடங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

விசுவின் கனவை நனவாக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' படத்திலிருந்து ஒரு காட்சி...
இப்படி பல நினைவுகளோடு, மறக்க முடியாத தருணங்களுடன் உருவாகி வெற்றி கண்ட 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம், வெறும் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. கூட்டுக் குடும்ப வாழ்வையும், தனிக்குடித்தன சவால்களையும் சுட்டி காட்டிய ஒரு சமூக ஆவணம். ஜூலை 1-ஆம் தேதி விசுவின் பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது கலைப் பயணத்தையும், அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பையும், குறிப்பாக 'சம்சாரம் அது மின்சாரம்' மூலம் அவர் படைத்த நீங்காப் பதிவையும் நினைவு கூர்வது அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். காலம் கடந்து நிற்கும் கலைக்கு, விசு மட்டுமல்ல அவரது படங்களும் மிக சிறந்த உதாரணம். குறிப்பாக 'சம்சாரம் அது மின்சாரம்', இன்றும் பல தலைமுறைகளுக்கு குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு பாடமாகவே இருந்து வருகிறது.
